Posts

Showing posts from 2017

ரகசியம்

Image
ஏன் இத்தனை பயம் கொள்ளச் செய்கிறது இந்த உடல் .... உஷ்ணம் விரவிப் பரவி கருகச் செய்யும் கணத்தில் நீர் ஊற்றி ஊற்றி அணைத்து தடுக்கிறேன் ஏனோ அதிகதிகமாக ஒளிகின்றேன் எதிலோ நகர நகர உதிர்ந்து விழுகின்றது உடல் அதில் உடைந்து தெறிக்கிறது நான் எனும் நான் சிதறிய கூறுகளை சேகரித்து இணைக்கின்றேன் ஒட்டப்பட்ட உதிர்வுகளின் விரிசல்கள் யாருக்கும் தெரியக்கூடாது என்றே வெவ்வேறு வண்ணங்களை படரச்செய்கின்றேன். அடர் வண்ணங்களில் விரிசல்கள் தெரியவில்லை மகிழ்ச்சி இதுவரை ... ஆனால் யாரும் பார்த்தால் ??? உற்றுப்பார்க்கும் கண்களின் ஊடுருவலில் ரகசியம் தெரிந்தால் ? என்செய்வேன் ?                                                                    

பேரன்பு ❤

Image
பனி தேசத்தின் பாலை நிலத்தின்  நீண்ட தெருவின் மருண்மாலைப்பொழுது ஓரிடம்  உனக்கும் எனக்குமான  எதிரெதிர் ஒற்றை இருக்கை நிறுத்திவைக்கப்பட்ட ஒற்றைச்சைக்கிள் பூக்களற்ற புற்சாலை நம்மை சிறு புள்ளியாக மாற்றிச் சிரிக்கும் தூரத்தே தெரியும் மாமலைகள் வெயில் விரட்டும் குளிர்காற்று நட்சத்திரங்களின் வருகைக்காக காத்திருக்கும் இரவுக்கு முந்தைய பொழுதில் பாதை தீர்மானிக்கா பயணக்காரனுக்கும் பாதையின் கைதியானவளுக்கும் அதிசயங்களின் கூறாய் அந்தச்சந்திப்பு அயராத பயணத்தின் எதிர்பாரா இளைப்பாறல் எனக்கு முரண் மொழி பகிரும் மகிழ் குழந்தை நான் உனக்கு யட்சத்தில் எதிரினில் எரிகின்ற நான் நிகழாத கடந்த காலம் எதிர்காலம் கானல் நேரங்கள் வரம்மரித்த தவம்  😇 நகரும் நேரத்தோடு தொடரும் பயணம் ஆரம்பிக்க முன்னர்... இந்த பெருநிமிட இடைவெளியில் மௌனமாய் நிரம்புகின்றது பேரன்பு  ❤

தேடலற்ற கனவுலகம் - இலங்கை தமிழ்சினிமாவின் எதிர்காலம்

Image
ஒரு தேசத்தின் உடைமைகளில் அந்த நாட்டின் கலைக்கு பெரும் முக்கியத்துவம் உண்டு. பெருவாரியான தேசங்களின் கலைகளில் சினிமாவுக்கு தரப்படும் முக்கியத்துவம் தனித்துவமானது. உலகளாவிய ரீதியில், சினிமா என்பது கலை மட்டுமல்ல... ஒவ்வொரு நாடும், சினிமாவை மிகப்பெரிய சர்வதேச வணிகமாகவும் அதற்குள்ளே நுட்பமான அரசியல் ஆளுகை தன்மையை ஒளித்து வைத்தும் மறைமுகமாக அறிவுச்சண்டை நிகழ்த்தி வருகின்றது. அந்த வரிசையில் இலங்கை தமிழ் சினிமாவின் நிலை என்ன என்று ஒரு கேள்விகேட்டால், நமக்கு முழுமையான பதிலை சொல்ல முடியாதளவு குழப்பங்கள் இருப்பதால் மௌனமாக புன்னகைத்து மழுப்புவதையே நம் வழக்கமாக கொண்டுள்ளோம். ஆனால் சற்றே அந்த மௌனத்தை கூறுபிரித்து ஆய்வு செய்தால்.... நாம் ஊமைகள் அல்ல... எல்லாமே ஒருவித வெற்று மௌனம் என்பது இலகுவில் புரிந்துவிடுவதோடு, நம் மௌனத்திற்குள்ளே ஓர் அர்த்தபூர்வமான பதில் புதைந்திருக்கின்றது என்ற உண்மையும் புலப்படும். இலங்கை சினிமாவின் முடக்கத்துக்கு போர் மற்றும் இனப்பிரச்சினையை காரணமாக கூறுவது சில தரப்பின் கடமையாகவே இருகின்றது. உலக அரங்கில் போர் என்பது சினிமாவின் மாபெரும் வியாபார தளம். இரண்டாம் உலகப்போ

Wow 2017

Image
Women of the World Festival in Sri Lankaவில் 2 ஆம் நாள் 5 இயக்குனர்களின் குறும்படங்கள் திரையிடப்பட்டு அதன் பின்னர் சினிமா செயற்பாட்டாளரும் ஆவணப்பட இயக்குனருமான அனோமோ ராஜகருணா தலைமையில் கலந்துரையாடல் பகுதி இடம்பெற்றது. இலங்கையில் பெண் இயக்குனராக எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பற்றியும் அவரவர் படங்களில் இடம்பெற்ற பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி இயக்குனர்கள் வெளிப்படுத்த முயன்ற சிந்தனைகளை பற்றியும் ஆரம்பத்தில் கேட்கப்பட்டது. அதன் பின்னர் பார்வையாளர்களுக்கான கேள்வி பதில் பகுதி இடம்பெற்றது. ஒவ்வொருவரும் பேசியவற்றிலிருந்து சில விடயங்கள் ..... Anomaa Rajakaruna இருபது வருடங்களுக்கு முன்னர் குறும்படம் எடுக்கையில் அதிகமான பிரச்சினைகளை எதிர்கொண்டேன். இன்று காலம் மாறியிருகின்றது...மாற்றங்களூடாக பயணித்து நம்பிக்கைதரும் நிறைய படைப்புக்களும் படைப்பாளிகளும் உருவாகியுள்ளனர் என்பது மகிழ்ச்சியளிகின்றது.ஆனால் இந்த படைப்புக்களுக்கும் பார்வையாளர்களுக்கும் மிகப்பெரிய தூரம் உள்ளது. படைப்புகளின் திரையிடலுக்கான வாய்ப்பின்மை காரணமாகவே இந்த படங்களின் மக்களிடம் சரியாக சென்று சேரவில்லை.திரைப்படக் கூட

Painting in movies - Inception

Image
திரைப்படங்களில் ஒரு Frame என்பது, வெறும் கேமராவின் பார்வை சார்ந்தது மட்டுமின்றி பல விடயங்களை உள்ளடக்கியதாக அமைகின்றது. Everything within the frame makes up the frame என்பதற்கேற்ப ஒளிப்பதிவு விடயங்கள் (lighting,camera angle etc) Character elements (blocking,Costume) Set design ( props, decor) உட்பட பல விடயங்களை உள்ளடக்கியே ஒரு Frame உருவாக்கப்படுகின்றது. Set design என்ற பிரிவில் Propகளின் பங்கு அளப்பரியது. Props என்பவை வெறும் காட்சியின் சூழலை இட்டு நிரப்புகின்ற பொருட்கள் அல்ல. படத்தின் கதையினை கட்டியெழுப்பும் கூறுகளில் முக்கியமானவை. சினிமாவில் கதை சொல்ல ,கதாபாத்திர பயன்பாட்டிற்கு, கதாபாத்திர அசைவுகளுக்கு,திருப்புமுனை ஏற்படுத்த ,Background Prop,Stunt Prop,திரைக்கதையின் கட்டமைப்புக்கு என்ற ரீதியில் பலவிதமான Props, பலதரப்பட்ட விதத்தில் பயன்படுத்தப்படுகின்றன. கதைக்கு பொருத்தமற்ற எந்த ஒரு பொருளையும் நாம் பயன்படுத்த முடியாத அதே வேளை, பயன்படுத்துகின்ற பொருளானது படத்தில் சரியான ''MOOD'' ஐ உருவாக்குகின்றது என்பதை தெளிவாக உணர்ந்தே ஒவ்வொரு Frameலும் அதற்கேற்ற Prop

அநாதைக்கருவாளிகள்!

Image
ஒற்றைக்கனவில் ஊடாடும் வாழ்க்கை துறவுக்கும் துணைக்கும் இடையில் இயைவு தேடி நகரும். வெளிச்சத்திரையில் கண்ணீர் கசியும் நொடிகளுக்காக போலிப்புன்னகை சுமந்து இடம்பெறும் பொழுதுகள் என்று இடம்பெயரும் ? வலிக்க வலிக்க செதுக்கிச்செதுக்கி செய்யும் தவம் உனதல்ல எனவும் அது எளிதல்ல எனவும் பறை . இக்கனா தேயம் அழிக்கும் தேயு. கனவின் தேளை தொடர என் தார்ட்டியம் அறியா உலகம் சிரிக்கும் ...பழிக்கும். என் துருவம் மரியா துல்லம் எதிரொலிக்கும் என்றென்றும். கனவின் நீட்சி எனை அழிக்கும் எனை மீள் உயிர்க்கும். தனை கரைத்து கலை புரியும் மகவுகளை சுவிகரிக்க யாருண்டு ? ஆனாலும் வாழ்வுண்டு. அநாதைக்கருவாளிகள் உயிர்க்கும் கருப்பைகள் இருப்பறியா இன்மையாய் துடிதுடித்தே உயிர்க்கும் . இறப்புக்கும் உயிர்ப்புக்குமான துலாபார நாட்கள் அது தீர்மானிக்கும் வாழ்நர் நாமங்கள். வாழ்வின் தாழ் திறக்கும் வரை தொடரும் இந்த ஒற்றைக்கனவில் ஊடாடும் வாழ்க்கை.!

திரை ஓவியன் -Gaspar Noé

Image
சமிப காலமாக இயக்குனர் Gaspar Noéவின் படங்களை பற்றி பலரும் பதிவிடுகின்றனர்.  சில வருடங்களுக்கு முன்னர் Gaspar Noéவின் படங்களை  திரைக்கதைபற்றிய சுய கற்றலில் அவரை பற்றி எழுதி சிறு ஆய்வு செய்திருக்கிறேன்.  ஓவியம் பற்றி முழுமையாக தெரியாததால் அப்படியே வைத்துவிட்டு வேறு படத்தில் மூழ்கி விட்டேன்.  இயக்குனர் Gaspar Noéஇன் படங்களை பலரும் பார்த்தாலும் அதில் உள்ள காமத்தை மட்டுமே வைத்து பேச முற்படுகின்றனர். இன்றைய சூழலில் காமம் பற்றி பேசுவதும் எழுதுவதும் அதிகரித்திருப்பதால் தங்களது கருத்துக்களுக்கு இவருடைய படங்களையும் துணைக்கழைப்பது நடந்துவருகிறது.  அது வெறும் அறிமுக நிலை தான் ! அதை தாண்டி நாம் செல்ல வேண்டியது முக்கியம்.  அதுதான் படைப்பாளி பற்றிய புரிதலை விதைக்கும் . ஆர்ஜென்டினாவின் கலை இலக்கியத்தில்  ''புதிய அடையாளத்தினை '' நிறுவியவர்களில் முக்கியமான ஓவியர்,எழுத்தாளர் Luis Felipe Noé. அவரின் மகன் தான் Gaspar Noé. Expressionism பற்றி தேடும் போது நிச்சயம் இவரை பற்றி அறிவீர்கள்.  Luis Felipe Noéவின் ஓவியத்தில் கையாண்ட intellectual ஆளுமையும் தேடலும்

As we were dreaming

Image
பெருங்கனவின் சிறுதுயரம் It depends on your imagination my thoughts are elsewhere அரசியலும் உளவியலும் கூறுபோடுகிற  வாழ்வியல்  இவர்களுடையது....! கிழக்கு ஜெர்மனியின் இளைஞர் குழுவின் இலக்கற்ற பயணமும்  அவர்களின் வாழ்பனுபவங்களும் மாறிமாறி இடம்பெற்று  மீளிணைவின்(German reunification) வரலாற்றை  உணர்த்திக்கொண்டே இருக்கிறது. Clemens Meyerஇன் நாவலுக்கு Andreas Dresenஇன் திரை வடிவம் . படத்திலுள்ள இலக்கற்ற மனிதர்களின் கனவுகளின் கதைகளை  கொஞ்சம் பிரித்தாலே  பல நூறு குறும்படங்களிற்கு களம் காணலாம். நான், திரைமொழியின் அழகியலை ரசிப்பேன் என்றாலும்  அதில் உள் இணைவது கொஞ்சம் குறைவுதான். எப்போதும் அழுக்கின் அழகைத்தான்  மனம் விரும்புகிறது. இங்கே ....நிலையற்ற கமராவின் விழிகளில்  அகப்பட்ட இரவுகளில்... அழுக்கான குடியிருப்புக்களில்...  நீண்ட தெருக்களில் ... இன்னும் அலைந்துகொண்டிருகிறேன். நமக்குள் இருக்கும்  சிக்கலான மனநிலையை  வார்த்தைகளில் விபரித்து  பேசிவிட்டாலோ எழுதிவிட்டாலோ  புரிந்துவிடும்;கடந்துவிடலாம் என்று யார் சொன்னது ? அருகிருப

தாய்மையின் வெற்றிடம்

Image
You're changing that boy's life. No. He's changing mine. தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சி இந்தியாவிலிருந்து வருகை தந்த பிரபல மகப்பேற்று மருத்துவர், அவரை நேர்காணல் செய்ய தொகுப்பாளினி தயாராகிவிட்டார். 'குழந்தையற்ற தம்பதிகளின் வாழ்க்கையில் துயரங்களை அகற்றி உயிர்ப்பை ஏற்படுத்த வந்த கடவுளின் தூதுவர்' என்றெல்லாம் நான் புகழ்ந்து எழுதிக்கொடுக்க அதையே தொகுப்பாளினியும் பேச மகிழ்ச்சியுடன் நேர்காணல் இடம்பெற்றது. அவர் பெருமை பொங்க சாதனைகளை சொல்லிக் கொண்டிருந்தார். எனக்கு அது பெருமையாக தெரியவில்லை. ஏன் என்றால் .... The Blind Side தாய் போதைப்பொருளுக்கு அடிமை தந்தையாலும் கைவிடப்பட்டநிலையில் குற்றப்பின்னணியில் வாழும் மைக் , அநாதரவான இளைஞன். 2 டீசர்ட்கள் மட்டுமே அவனது உடை, எழுத படிக்க சரியாக வராததால் வகுப்பில் யாரும் அவனை கண்டுகொள்வதில்லை. கல்லூரியில் எல்லோரும் சாப்பிட்டு வீசிய பாப்கார்ன் பக்கட்டுகளை எடுத்து அதில் இருக்கும் எஞ்சியதை உண்ணவேண்டிய நிலை. உறங்குவதற்கு கூட இடமில்லை ....இரவெல்லாம் தெருவில் நடந்து திரிகிறான் . ஒருநாள் எதேச்சையாக அவன் பள்ளியில் படிக்

The Reader

Image
சிறை வாசகி ! We're changing the order we do things. Read to me first, kid. Then we make love. தனிமையில் இருக்கும் நடுத்தரவயது பெண் ஹனா , பதினாறு வயது கொண்ட மைக்கல் . இருவருக்குமிடையிலான சந்திப்பு காமத்தில் நுழைகிறது. அவள் அவனை குழந்தையாக கருதுகிறாள் அன்பு செலுத்துகிறாள். அவளது அன்பின் இன்னொரு வடிவம் காமம். மைக்கல் புத்தகங்களை வாசிக்க அதை கேட்டுக்கொண்டிருப்பது அவளுக்கு பெரும் நிம்மதியளிகிறது. ஒரு நாள் அவள் மைக்கலிடம் எங்கோ சொல்லாது சென்று விடுகிறாள். சில ஆண்டுகளுக்கு பின்னர் சட்டக்கல்லூரி மாணவன் மைக்கல் கோர்ட்டுக்கு வருகிறான் பிரபலமான வழக்கு அங்கு முக்கிய குற்றவாளி அதே ஹனா . வழக்கின் பல கட்டங்களில் மைக்கலுக்கு ஒரு உண்மை புரிகிறது ஹனாவுக்கு எழுத படிக்க தெரியாது அவள் அதை வெளிப்படுத்துவதில்லை நீதிமன்றத்திலும் அதை அவள் மறைத்துவிட குற்றவாளியாக சிறை செல்கிறாள். காலம் மாறுகிறது விவாகரத்தான மைக்கலுக்கு ஹனா ஞாபகம் . புத்தகங்களை வாசித்து ஆடியோக்களை பதிவு செய்து சிறையிலிருக்கும் ஹனாவுக்கு அனுப்ப அதை கேட்டு நிம்மதியடையும் ஹனா, சிறை நூலகத்தில் புத்தகங்களை எடு

A Fighter's Blues

Image
தோற்றுப்போனவனின் கதை what's the most difficulty being a boxer? it is how to win boxer என்பதை தாண்டி பல சந்தர்பங்களில் இதே கேள்வி முன்வைக்கப்படுகிறது. ஜெயித்தல்/வெற்றிபெறுதல் என்றால் என்ன ? எதை எல்லாம் எப்படி ஜெயிக்கலாம்? வெற்றி என்பது பணம்,அடையாளம்,புகழ் என்பதை தாண்டி வேறு எதுவுமே இல்லையா ? வெற்றிக்கான திறமையும் உழைப்பும் இருந்தாலும் கடைசிவரை அதை அடையமுடியா மனிதர்கள் ? தோற்றுபோனவர்களுக்கு பின்னே தோற்கடிக்கப்பட்ட கதைகளும் மறைந்துதானே இருக்கின்றன. அதுபோன்ற உலகமறியா கதைக்கு சொந்தக்காரனின் வாழ்க்கை A Fighter's Blues. ANDY குத்துசண்டை வீரன் , அவனை பேட்டி எடுக்க வந்த பெண்ணோடு காதல், ஒரு குத்துசண்டை போட்டி மாட்ச் பிக்சிங்கில் அவன் தோற்றுபோக வேண்டும். அவனது நிலையை பார்த்து காதலி வருந்த இயலாமையிலும் அவமானத்திலும் துடித்துபோகும் ANDY, ஒரு கட்டத்தில் சக போட்டியாளனை அடிக்க அவன் இறந்துவிடுகிறான். ANDYக்கு சிறை தண்டனை கிடைகிறது. பல வருடங்கள் கழித்து சிறையிலிருந்து திரும்புபவன் காதலியை தேடிப்போகிறான். காதலி என்றோ இறந்துவிட்டதாகவும் அவர்களுக்கு ஒரு மகள் இருப்பதாகவ

கேள்விகளைத்தேடும் பதில்கள்!

Image
நாடு திரும்ப இன்னும் ஒரு நாள் மட்டுமே இருந்தநிலையில் பொருட்கள் வாங்க chinatownல் உள்ள Petaling Street Marketக்கு வந்தோம் பொருட்கள் வாங்கிகொண்டிருக்கையில் திடிரென்று மழை பெய்யவே அம்மாவையும் சித்துவையும் பேருந்து தரிப்பிடத்தில் அமர சொல்லிவிட்டு அருகிலிருந்து கடைக்கு பொருட்கள் வாங்கச்சென்றேன். இருபது நிமிடங்களில் திரும்பிவந்தால் , சித்துவோடு ஒரு வெள்ளைக்கார நடுத்தரவயது மனிதர் சிரித்துகொண்டிருந்தார். நான் வந்ததும் அம்மா,என்னை மகள் என்று அறிமுகப்படுத்தினார். புன்னகையோடு பேச்சை ஆரம்பித்தார். ஐரோப்பியர் அல்ல அமெரிக்கர் என்பதை அவருடைய ஆங்கிலம் உணரவைத்தது. சித்துவின் கண்கள் மிக வசீகரமாக உள்ளதாகவும் அழகான பையன் என்று கூறிவிட்டு என்னைப்பற்றி கேட்டார். என் விபரங்களையும் தொலைக்காட்சி பணிபற்றியும் கூறினேன். நான் அவர் பற்றி கேட்க , தான் ஒரு இஸ்லாமியன் என்றும் வங்கி ஊழியன் என்றும் கூறினார். அமெரிக்காவில் தன்னால் வசிக்க முடியவில்லை, நிறைய பிரச்னைகள் இஸ்லாமிய நாட்டுக்கு செல்லவேண்டும் என்று முடிவெடுத்து மலேசியா வந்துவிட்டதாக கூறினார். சொல்லும்போதே சற்று குரல் தளர்ந்துவிட்டது. அத

கடனாய் கொஞ்சம் நன்றிகள்

Image
பினாங்கிலிருந்து நீண்ட பஸ்பயணம் முடிந்து, கோலாலம்பூர் வந்துவிட்டோம். எங்களுக்கான தங்குமிடம் Sentulலில் இருக்க, கோலாலம்பூரில் இருந்து ரயிலில் Sentul செல்ல வேண்டும். மக்கள் கூட்டத்தை பார்த்து மிரண்டுபோன தம்பி சித்துவின் நச்சரிப்பு மெல்ல மெல்ல அதிகரிக்கத்தொடங்கியது. அம்மாவை தூக்கிபோகச்சொல்லி அழ ஆரம்பித்துவிட்டான். உடல்நலக்குறைவோடுடிருந்த அம்மாவும் மூச்சிரைக்க சித்துவை தூக்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தார். 3 பெரிய லக்கேஜ்களை நான் தூக்கிச்செல்ல வேண்டும் . இருபத்தி ஐந்து கிலோவிற்கும் மேல் பாரம் என்பதால் மெல்ல மெல்ல நடக்க வேண்டிய நிலை. அங்கிருந்து இங்குமாய் இங்கிருந்து அங்குமாக அலைச்சல் வேறு. எங்களோடு வந்த தோழிகளோடு அம்மாவை போக சொல்லிவிட்டு நான் மெல்ல வருகிறேன் என்று லக்கேஜோடு நடக்க ஆரம்பித்தேன். எஸ்கலேட்டர் வேலை செய்யவில்லை,படியால் இறங்க வேண்டும். எல்லோரும் இறங்கிவிட்டனர்.நான் மேலே நிற்கிறேன். 3 லக்கேஜ்களை சுமந்து படியிறங்க முடியவில்லை. பின்னால் நின்ற பயணிகள் சத்தமிட தொடங்க அவர்கள் இறங்க வழிவிட்டு ஒதுங்கி நிற்க , பயணிகள் எரிச்சலோடு என்னை கடந்து செல்லத்தொடங்கினார்கள். ர

A Question of Silence

Image
அமைதியின் வன்முறை  ‘’நீ எவ்வளவு பெரிய சைக்கார்ட்டிஸ்ட், அவங்க சாதாரண பெண்கள்;இது ஒரு நார்மல் கேஸ்’’   ‘’அதான் என் பிரச்சனை,  அவங்க ரொம்ப சாதாரண பெண்கள்.  தினமும் கடைல,தெருவுல பார்க்குற சராசரி பெண்கள்.  இந்த பொண்ணுங்ககிட்ட இருந்து என்னால  உண்மைய பேச வைக்க முடியல;அதான் என் பிரச்னை’’ மனநல மருத்துவர் Cox Habbema, தன் கணவனிடம் கோபமும் இயலாமையுமாக பேசும் இடத்தில் இயக்குனர் நமது கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டார். 3 பெண்கள் உணவகத்தில் பணிபுரியும் தனிமையில் வாழும் வயதான பெண். கணவன் குழந்தை சகிதம் குடும்ப வாழ்வில் ஈடுபடும் நடுத்தரவர்க்க பெண். பெரிய நிறுவனத்தின் செயலாளராக பணியாற்றும் இளம்பெண்.  ஒருவருக்கொருவர் அறிமுகமற்ற இந்த மூவரும் ஒரு ஆடைக்காட்சியறையின் உரிமையாளரை அடித்துக்கொலைசெய்கிறார்கள் . போலிஸ் விசாரணையில் கைது செய்யப்படும் இந்த மூவரிடமும் பேசி. அவர்களின் மனநிலை தொடர்பான தெளிவான விளக்கத்தை அளிக்கும் பொறுப்பு மனநலமருத்துவர் Cox Habbemaவிடம் தரப்படுகிறது. ஒருத்தி பேச மறுக்கிறாள், இன்னொருத்தி வெகுளித்தனமாக பேசுகிறாள். மற்ற பெண்ணின் பேச்சில் எப்போதும் எச்சரிக்

அவளில் அவள்கள்

Image
திரை-கதை-தொடர் -பகுதி 1  அன்று - கார்லோட்டா . பேரழகி வறுமையால் வாடிய அவளை ஒரு பணக்காரன் திருமணம் செய்துகொள்கிறான் . காதலால் வாழ்க்கை அழகானதை எண்ணி மகிழ்கிறாள்.   ஆனால் அந்த மகிழ்ச்சி நிலைக்கவில்லை . ஒருநாள் அவளது கணவன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு பிரிந்துசென்றுவிடுகிறான் . குழந்தை பறிபோன ஏக்கத்தில் மனநிலை பாதிக்கப்பட்டு வருவோர் போவோரிடமெல்லாம் குழந்தையை கேட்டு கதறி அழுதவள் தனிமையும் துயரும் தாங்காமல் ஒருநாள் மலையுச்சிக்கு சென்று தற்கொலை செய்துகொள்கிறாள் . இன்று Madeleine தினமும் காலை வீட்டிலிருந்து கிளம்பி பூக்கடைக்கு சென்று அங்கு ஒரு பூச்செண்டை வாங்குகிறாள் . அதன் பிறகு Carlottaவின் கல்லறைக்கு சென்று அதனை உற்றுப்பார்த்துக் கொண்டிருப்பவள் அருகிலிருக்கும் அருங்காட்சியகத்திற்கு சென்று Carlottaவின் படத்தை பார்த்துக்கொண்டே பல மணிநேரம் அமர்ந்திருப்பாள். கார்லோட்டா படத்தில் வைத்திருக்கும் பூக்கள்தான் மெடலின் கைகளிலும் இருக்கும் . அதே போன்ற கூந்தல் அலங்காரத்தை செய்து அதே மாதிரி அமர்ந்துகொண்டிருப்பாள் இது அவளது தினசரி வழக்கம் . ஒரு திரைக்கதையின் மிகவும் சிறு பகுத

ஒரு கோப்பை தேநீரில் கொஞ்சம் காதல் .....

Image
''உயிரே''   காதல் கதைகள்- பகுதி 1 நான் தேநீர் விரும்பியல்ல. தேநீர் போலவே எனக்கு காதலும்  :) காதலின் இயல்பும் அதீதமும் அரிதாகவே என்னை கவர்ந்திருகின்றன. மணிரத்னம் படங்களில் வெளிப்படும் காதலின் அழகியல் நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை. மணிரத்னம் படங்களில் காதல் என்பது அழகிய சிறுகதைகளின் தொகுப்பு. வசனங்களில் ....காட்சிப்படுத்தலில் .... ஒளிப்பதிவில் ....இசையில் ....வரிகளில் என்று அதன் பிரிவுகள் மட்டுமே மாறிக்கொண்டிருகின்றன. தில்ஸே(உயிரே ) ஏன் இந்த படத்தைப்பற்றி அதிகம் பேசுவதில்லை என்ற கேள்வி அடிக்கடி எழும். உயிரேயின் அரசியல் தவிர்த்து அதன் காதல், அழகிய சிறுகதைகள். முதல் சிறுகதை உலகத்திலேயே மிகவும் சுருக்கமான காதல் கதை இது தான் என்று முடிகிறது. நான் ஆரம்பிக்கிறேன்  :) மணிரத்னம் படங்களில் காதல் களங்கள் எவை ? ரயில்,மழை,காற்று,பரவசம், புன்னகை எல்லாம் இங்கிருக்கிறது. அமர் ஒரு சாதாரண இளைஞன். எப்போதும் கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்கும் தீர்வுகளை பற்றி சிந்திக்காதவன். எப்போதும் மகிழ்ச்சியும் தேடலும் ஆர்வமும் கொண்ட இளைஞனின் முகம் அன்றைய ஷாருக்கினுடையது. அசட்டை ந

சட்டென நனைந்தது நெஞ்சம்

Image
திரைப்பட வகுப்பறை ... ஏதோ ஒரு பேச்சின் நீட்சியில் வந்தது  கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்பட பெயர் அங்கிருந்த அனைவருமே பிடிக்கவில்லை/ பிடித்த படம் என்ற வரையறைக்குள் அடக்கிட முனைந்த தருணம் என் பட்டியல்களில்  கன்னத்தில் முத்தமிட்டால் இல்லை என்றாலும் படத்தில் இடம்பெறும் கிட்டத்தட்ட 14 நிமிஷ காட்சியை அதில் ஒலிக்கும் பாடலை மட்டும் எப்போதும் ரசிக்க தவறாதவள் நான் காதல்- மணிரத்னம் தன் படத்தில் அழகியல்- யதார்த்தம் என்று 2 பக்கங்களையும் இணைக்க முற்பட்ட கட்டம். மாதவன் எழுத்தாளன் எழுத்தின் வழியே அவனை, அவன் அழகை ரசிக்கும் சிம்ரன். ஈர்ப்பு -காதல்- அன்பு என்று எல்லாம் இருவருக்குள்ளும் மெலிதாய் இருக்கும் தருவாயில் குழந்தைக்காக சிம்ரனை திருமணம் செய்ய மாதவன் கேட்க, அது ஏன்? அப்படி ஒரு காரணம் ஏன்? காதலை விட காரணம்தான் தீர்மானித்ததா தன்னை, என்று சிம்ரன் கேட்கும் காட்சி எந்த வார்த்தையுமே அவளை சமாதனப்படுத்த முடியாதென்று உணர்பவன் அவளது கோபத்தை, குழப்பத்தை கட்டியணைத்து தீர்க்க முற்படுகையில் அவளுக்கு சந்தோஷ வார்த்தைகள் கண்ணீராக உருமாறி தெறிக்க முதன் முதலில் அந்த அருகா

ஸ்பரிசம்

Image
The Handmaiden-சில திரைக்கதைகள் நம் கதையை நியாபகப்படுத்தும் நான் எழுதிய சிறுகதையை நினைவூட்டுகிறது இக்கதையின் ஒரு பகுதி எனக்கு அதிகபட்சம் 15 வயதிருக்கும். அப்பொழுது வெளிப்பாடசாலை சிறுகதைப்போட்டி தலைப்பின் கீழ் எழுதுவது எனக்கு பிடிக்காது அந்த நேர மனநிலையில் ஏதோ ஒன்றை எழுதிவிட்டு 3வதாக இருக்கும் தலைப்பை கதைக்கு சூட்டுவது என் வழக்கம் அன்று விரும்பிய தலைப்பு என்ற அறிவிப்பு எதுவுமே திட்டமிடாத நிலையில் எழுத ஆரம்பிக்கிறேன் கதை -ஸ்பரிசம் இரு பெரிய மரத்தடுப்புக்கள் வழியே சிறு துளை அதில் இருபுறமும் விரல்கள் மெல்ல ஒன்றை ஒன்று பற்றிக்கொள்கின்றன அந்த ஸ்பரிசத்தோடு ஆரம்பிக்கிறது கதை மலையுச்சி, பெரிய மாளிகை காட்டுவழியே வருகிறாள் ஒரு பெண் அவள்அந்த மாளிகைக்கு புதிதாக வரும் பணிப்பெண் அந்த மாளிகையின் எஜமான் பெரும் செல்வந்தன் மாதத்தில் சில நாட்கள் மட்டுமே அங்கு வந்து வசிப்பான் அவன் மனைவி பேரழகி இத்தனை தூரத்தில் அவளை பாதுகாக்கவே இந்த மலை அரண்மனை அந்த பேரழகிக்கு எப்போதும் ஓவியங்கள் வரைவதே வேலை எல்லாமே பார்த்து வரையும் ஓவியங்கள் சுய சிந்தையில் அவள் வரைந்ததே இல்லை வெளி உலகம் அறி