Wow 2017






Women of the World Festival in Sri Lankaவில் 2 ஆம் நாள்
5 இயக்குனர்களின் குறும்படங்கள் திரையிடப்பட்டு அதன் பின்னர்
சினிமா செயற்பாட்டாளரும் ஆவணப்பட இயக்குனருமான அனோமோ ராஜகருணா தலைமையில் கலந்துரையாடல் பகுதி இடம்பெற்றது.

இலங்கையில் பெண் இயக்குனராக எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பற்றியும் அவரவர் படங்களில் இடம்பெற்ற
பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி இயக்குனர்கள் வெளிப்படுத்த முயன்ற சிந்தனைகளை பற்றியும் ஆரம்பத்தில் கேட்கப்பட்டது. அதன் பின்னர் பார்வையாளர்களுக்கான கேள்வி பதில் பகுதி இடம்பெற்றது.
ஒவ்வொருவரும் பேசியவற்றிலிருந்து சில விடயங்கள் .....

Anomaa Rajakaruna
இருபது வருடங்களுக்கு முன்னர் குறும்படம் எடுக்கையில் அதிகமான பிரச்சினைகளை எதிர்கொண்டேன். இன்று காலம் மாறியிருகின்றது...மாற்றங்களூடாக பயணித்து நம்பிக்கைதரும் நிறைய படைப்புக்களும் படைப்பாளிகளும் உருவாகியுள்ளனர் என்பது மகிழ்ச்சியளிகின்றது.ஆனால் இந்த படைப்புக்களுக்கும் பார்வையாளர்களுக்கும் மிகப்பெரிய தூரம் உள்ளது. படைப்புகளின் திரையிடலுக்கான வாய்ப்பின்மை காரணமாகவே இந்த படங்களின் மக்களிடம் சரியாக சென்று சேரவில்லை.திரைப்படக் கூட்டுத்தாபனம் மற்றும் திரையரங்கங்கள் உட்பட பல அமைப்புகளும் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

Lanka Bandaranayake
கால மாற்றத்தால் பிரச்சினைகள் தீரவில்லை; குறைந்திருக்கிறது எனலாம்.எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அனைத்தும் personality (ஆளுமை ) என்பதை பொறுத்து அமைகின்றது. சினிமாவிற்கு என்று நாங்கள் வரும் போது எந்தளவு நாம் personality ஐ மேம்படுத்துகின்றோமோ அந்தளவு பிரச்சினைகளை சமாளித்து இலக்கை அடையலாம். பெண்ணாக பெண்களோடு சினிமாவில் பணிபுரிய ஆசைப்படுகின்றேன் பெண்கள் இந்ததுறைக்கு வருவதில் பெரும் பின்னடைவு இருப்பதால் எனது ஆசை இன்னும் நிறைவேறவில்லை. சகல துறைகளிலும் பெண்கள் பங்கேற்க வேண்டும்.

Nipu Fernando
ஒரு ஆண் படம் எடுக்க வேண்டும் என்று கிளம்பி அதனை செயற்படுத்துவதற்கும் ஒரு பெண் அந்த முடிவை எடுப்பதற்கும் செயற்படுத்துவதற்கும் நிறையவே வித்தியாசங்கள் உண்டு. இலகுவான பயணமாக அமைவதில்லை. பணம்,களத்தில் பணி புரிதல்,சொந்த வாழ்க்கை,வாழ்க்கை துணை உட்பட பல தடைகள் எதிர்கொள்ள நேரிடுகின்றது.அனைத்தையும் கடந்து செயற்பட வேண்டும்.
நமக்கென்று ஒரு குரல் இருக்கும் அதனை உலகத்திற்கு வெளிப்படுத்த எண்ணுவோம்.நம் பெற்றோர்கள் அதை மறுப்பார்கள்.அவர்கள் சொல்கின்ற வாழ்வை வாழ ஆரம்பிப்போம் நாம் பெற்றோர்களான பின்னர் நமது நிறைவேறாத ஆசைகளை பிள்ளைகள் மூலமாக நிறைவேற்ற எண்ணுவோம். அங்கே நமது பிள்ளைகளின் குரலை நாங்கள் தடுக்கிறோம்.அவர்களும் வளர்ந்து இதையே செய்ய சுழற்சியாக மாறும். அவரவர் வாழ்க்கையை அவரவர்கள் வாழ முற்படுகையில் மட்டுமே மாற்றங்கள் சாத்தியம் என்பதை என் படத்தில் வெளிப்படுத்தியுள்ளேன்.

Bavaneedha Loganathan
ஆண் பெண் பாகுபாடு எனக்கில்லை .... நான் இயக்குனர் என்றால் இயக்குனர். அவ்வளவு தான். பிரச்சினைகளை சவால்களாக பார்க்கின்றேன்... சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்கின்றேன். சினிமா தான் என் வாழ்க்கை... அதற்காக என்னை தகுதிபடுத்த உறுதிபடுத்த தேடித்தேடி கற்கின்றேன். எந்த சூழ்நிலையிலும் எந்த கட்டத்திலும் என் மன உறுதி உடைந்ததே இல்லை ....
சமுக கருத்து சொல்லவேண்டும் என்று திட்டமிடவில்லை. உண்மையில் நான் எப்படியானவள் என்றால் எனக்கு தடையாகவுள்ள குடும்ப அமைப்பை பற்றி விமர்சித்துக் கொண்டிருக்கின்றேனே ஒழிய அதனை விட்டு இன்னும் வெளியேற முடியாத சிக்கலுக்குள் இருக்கும் முரண்பாடானவள் . உடல் சார்ந்த உளவியல் கட்டுடைப்புகளை நான் இன்னும் முழுமையாக மேற்கொள்ளவில்லை. அதுபற்றிய புரிதலும் குழப்பமும் நிரம்பிய எண்ணவோட்டங்களின் ஒருபகுதியை திரையில் பார்க்கலாம். சாதாரண சீண்டல் முதல் பாலியல் துன்புறுத்தல் வரை எது நடந்தாலும் உங்கள் உடலை முன்னிறுத்தி உடைந்து போதல் கூடாது. உடல் என்பது முழுமையான நீங்கள் அல்ல எனபதை நம்புகின்ற மனநிலை வேண்டும்.எப்போதும் உறுதியுடன் செயற்பட வேண்டும்.

Shanaz Deen
சினிமா மட்டுமல்ல எல்லா விடயங்களிலும் ஆண் பெண் பாகுபாடு இன்றி அதை வேலையாக மட்டுமே கருதி செய்கின்றேன். யாரவது ஒருவர் நான் பெண் என்பதையும் இந்த மதத்தை சேர்ந்தவள் என்பதையும் எனக்கு நினைவுபடுத்தும் போது மட்டுமே தோன்றும். அப்படியான நினைவூட்டல்களை கேள்விகளை எப்போதும் பொருட்படுத்துவதில்லை.
நீங்கள் படத்தில் பார்த்தது எனது கதை .....என் தாயார் இளவயது திருமணத்தை தடுத்து என் கனவுகளை நனவாக்கினார்.என் தாயாரின் ஊக்கத்தில் தான் இந்த அளவு நான் முன்னேறியுள்ளேன்.
இளவயது திருமணங்களை வீட்டுப் பெண்கள் தடுக்கவேண்டும். உறுதியான முடிவினை எடுக்க வேண்டும். உங்கள் பிள்ளைகளின் கனவுகளை நிறைவேற்ற முயற்சியுங்கள். எதிர்காலத்திற்காக ஊக்கப்படுத்துங்கள்... நிச்சியம் அவர்கள் சாதிப்பார்க்கள்.

Ajantha Wijewardena
நான் எல்லாவிதமான தடைகளையும் எதிர்கொண்டுள்ளேன். கொஞ்சம் அதிக நேரம் ஆன்லைனில் இருந்தால் கூட ஏன் அவ்வளவு நேரம் ஆன்லைனில் இருக்கிறாய் என்று ஆரம்பித்து எல்லாவிதமான தனிப்பட்ட விடயங்களையும் விமர்சிக்க தலையிட ஆரம்பிக்கும் குணம் இங்குள்ளது. எல்லாவற்றுக்கும் கட்டுப்பட்டு அவர்களது கேள்விகளுக்கு பதில் சொல்ல தயார்படுத்தபடுகின்றோம். இப்படியான சூழலில்
நாங்கள் சினிமா என்ற துறைக்கு செல்கையில் அனைத்தும் பூதாகரமாக்கபடுகின்றது. அனைத்தையும் மீறிதான் எங்கள் படைப்புக்களை உங்களுக்கு முன்வைகின்றோம். எங்கள் கேள்விகளை கோபங்களை முடிவுகளை குழப்பங்களை உறுதியை எங்கள் படைப்புக்களில் வெளிப்படுத்துகின்றோம்.
பெண்களின் மீதான கலாசார பாரம்பரிய அழுத்தங்கள் எல்லாமே அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வது பெண்கள் தான். அம்மாக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சொல்ல, அதை அவர்கள் தங்களது பிள்ளைகளுக்கு சொல்கின்றார்கள் . இது நிற்க வேண்டும் . சுய சிந்தனை வளர வேண்டும் ஒவ்வொரு பெண்ணும் சுயமாக சிந்திக்க ஆரம்பித்தால் அதுதான் அவர்களின் முதல் வளர்ச்சி.

Comments

Popular posts from this blog