The Reader

சிறை வாசகி !


We're changing the order we do things.
Read to me first, kid. Then we make love.

தனிமையில் இருக்கும் நடுத்தரவயது பெண் ஹனா ,
பதினாறு வயது கொண்ட மைக்கல் .
இருவருக்குமிடையிலான சந்திப்பு
காமத்தில் நுழைகிறது.
அவள் அவனை குழந்தையாக கருதுகிறாள்
அன்பு செலுத்துகிறாள்.
அவளது அன்பின் இன்னொரு வடிவம் காமம்.
மைக்கல் புத்தகங்களை வாசிக்க அதை கேட்டுக்கொண்டிருப்பது
அவளுக்கு பெரும் நிம்மதியளிகிறது.
ஒரு நாள் அவள் மைக்கலிடம் எங்கோ
சொல்லாது சென்று விடுகிறாள்.

சில ஆண்டுகளுக்கு பின்னர் சட்டக்கல்லூரி மாணவன் மைக்கல்
கோர்ட்டுக்கு வருகிறான்
பிரபலமான வழக்கு
அங்கு முக்கிய குற்றவாளி அதே ஹனா .
வழக்கின் பல கட்டங்களில்
மைக்கலுக்கு ஒரு உண்மை புரிகிறது
ஹனாவுக்கு எழுத படிக்க தெரியாது
அவள் அதை வெளிப்படுத்துவதில்லை
நீதிமன்றத்திலும்
அதை அவள் மறைத்துவிட
குற்றவாளியாக சிறை செல்கிறாள்.

காலம் மாறுகிறது
விவாகரத்தான மைக்கலுக்கு ஹனா ஞாபகம் .
புத்தகங்களை வாசித்து ஆடியோக்களை பதிவு செய்து
சிறையிலிருக்கும் ஹனாவுக்கு அனுப்ப
அதை கேட்டு நிம்மதியடையும் ஹனா,
சிறை நூலகத்தில் புத்தகங்களை எடுத்து
தானாகவே எழுத வாசிக்க கற்றுகொள்கிறாள்
ஹனா விடுதலையாகும் நிலை வருகிறது
விடுதலையின் பின்னர்
ஹனா -மைக்கல் வாழ்க்கை என்ன ஆனது ?

நிறைய உடலுறவு காட்சிகள் கொண்ட படம் என்றே
பலரும் reader படத்தை அறிமுகப்படுத்துகின்றனர்.
ஆனால் அப்படி தோன்றவில்லை.
ஹனா வாசிப்பின் காதலி.
நிறைய மொழிகளை கற்று
உலகத்தின் சகல புத்தகங்களையும் வாசித்துவிட வேண்டும் என்ற
பேராசை எனக்கு பள்ளிகாலத்தில் இருந்தது.
தொலைக்காட்சியில் பணிபுரிந்த காலத்தில்
புத்தக வாசிப்பு அரிதான நிலையில்
புத்தகங்களை பார்க்கையிலும்
நூலகத்தை கடந்து போகையிலும்
எனக்குள் வெளிப்பட்ட ஏக்கங்களை
எப்படி சொல்வதென்று தெரியவில்லை.
ஹனாவுக்குள் இருக்கும் அந்த ஏக்கம்
கேட்டின் கண்களில் வெளிப்படுகிறது.

காமம் தரும் கிளர்ச்சியை விட
புத்தகங்கள் தரும் கிளர்ச்சி அதிகம்.
அந்த ராஜ போதையில் அமிழ்ந்தவர்களுக்கு மட்டுமே
அது புரியும்.
அலுத்துபோகும் உடலை தாண்டி
பல வாசல்களை திறந்துவிடும் புத்தகங்களில்
பல சுவாரஸ்ய ரகசியங்கள் உண்டு.

பள்ளிக்காலம் முழுவதும் புத்தகங்களோடுதான்
பேசியிருக்கிறேன்.
உலகத்தின் ஏதோ ஒரு வீதியில் நடந்து
பலரை சந்தித்து உரையாடி
காடுகளும் கடல்களும் கண்டு
அழுது சிரித்து காத்திருந்து
கரைந்து காதல்கொண்டு
போர் முனையில் கூச்சலிட்டு
பிரபஞ்சம் கடந்த அனுபவங்களுக்கு
அழைத்து சென்ற ஒவ்வொரு புத்தகமும்
மனசை திறக்கும் அற்புதங்கள்.

மொழி என்பது என்ன ?
பேச எழுத கற்றால்
நாம் மொழி அறிந்ததாக அர்த்தமா ?
அந்த மொழியின் அர்த்தங்களை,
பண்பாடுகளை,இலக்கியங்களை
உள்வாங்காமல் மொழி அறிந்தோம் என்று
முழங்குவது மட்டும் நியாயமா ?
எழுத்துக்களை அறிவதும் எழுத்தாக்கங்களை அறிவதற்கும்
வித்தியாசங்கள் உண்டல்லவா ?
தமிழ் ,தமிழன் ,தமிழ் பிறப்பு என்றெல்லாம்
பெருமை கொள்ளும் நாம்
குறைந்த பட்சம் நம் மொழியின் கூறுகளை
அறிந்துவைப்பது நல்லது.
ஆங்கிலத்தில் பேசுவதை கௌரவமாக கருதும் நபர்கள்
அந்த மொழியின் உள்ளடக்கத்தையும் அறிந்துகொள்வது
உங்களை வளப்படுத்தும்.

ஹனா எழுத்தாக்கங்களை அறிந்த பின்னரே
எழுத்தை அறிகிறாள்
சிறையில் மீண்டும் வாசிப்பை கேட்க முயல்கையில்
ஹனாவின் நிலை .....
அந்த பரவசம்
தடுமாற்றம்
மகிழ்ச்சி
அதிர்ச்சி .
கொரிய மொழி வகுப்பில்
எழுத்துக்களை கற்று
வார்த்தைகளை சுயமாக வாசித்த போது
கண்கள் மகிழ்ச்சியில்
கலங்கத்தொடங்கி விட்டது.
அத்தனை மகிழ்ச்சி
மொழியறிதல்
எத்தனை சுவாரஸ்யமான
விடயம்
ஒரு நீண்ட பயணம் தரும் அனுபவங்களை
மொழியறிகையில் உணர்கிறேன்
இறப்பதற்கு முன்னர்
குறைந்த பட்சம் 3 மொழிகளையாவது
முழுமையாக கற்றவேண்டும்.


reader ஒரு கதை
ஹனாவின் கதை
அவள் மொழிகற்றுகொண்ட கதை.
வாசிப்பின் காதலர்கள்
ஹனாவை அவர்களில் ஒருத்தியாகவே காண்பார்கள்.

கதையில் சொல்லபட்ட
ஆனால் வெளிப்படாத இன்னொரு விடயம்
சிறைக்கு பின்னரான வாழ்க்கை ?
வாழ்வின் பெரும்பகுதியை
சிறைசுவர்களுக்குள் வாழ்ந்தவர்களுக்கு
விடுதலை என்பதே சுமைதானே .
யாருமற்ற தனிமையில்
மாற்றமடைந்த உலகை அவர்கள்
எப்படி எதிர்கொள்வார்கள்
முதுமையும் தனிமையும்
நிர்கதியான நிலையும்
அவர்களை எப்படியெல்லாம் சிதைக்கும் ?

புத்தகங்கள் மீதேறும்
ஹனாவின் கால்களை பார்கையில்
ஏனோ
கோபமோ வருத்தமோ எழவில்லை.

தன்னையும்
தன் நினைவுகளையும்
சிறைப்படுத்திக்கொள்வது
சிலநேரங்களில்
சரியானதே.

The Reader (2008)

Comments

Popular posts from this blog

Dyketactics

ஒரு கோப்பை தேநீரில் கொஞ்சம் காதல் .....