தாய்மையின் வெற்றிடம்



You're changing that boy's life.
No. He's changing mine.

தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சி
இந்தியாவிலிருந்து வருகை தந்த பிரபல மகப்பேற்று மருத்துவர்,
அவரை நேர்காணல் செய்ய தொகுப்பாளினி தயாராகிவிட்டார்.
'குழந்தையற்ற தம்பதிகளின் வாழ்க்கையில் துயரங்களை அகற்றி உயிர்ப்பை ஏற்படுத்த வந்த கடவுளின் தூதுவர்' என்றெல்லாம் நான்
புகழ்ந்து எழுதிக்கொடுக்க அதையே தொகுப்பாளினியும் பேச
மகிழ்ச்சியுடன் நேர்காணல் இடம்பெற்றது.
அவர் பெருமை பொங்க சாதனைகளை சொல்லிக் கொண்டிருந்தார். எனக்கு அது பெருமையாக தெரியவில்லை.
ஏன் என்றால் ....


The Blind Side
தாய் போதைப்பொருளுக்கு அடிமை
தந்தையாலும் கைவிடப்பட்டநிலையில்
குற்றப்பின்னணியில் வாழும் மைக் ,
அநாதரவான இளைஞன்.
2 டீசர்ட்கள் மட்டுமே அவனது உடை,
எழுத படிக்க சரியாக வராததால் வகுப்பில் யாரும் அவனை கண்டுகொள்வதில்லை.
கல்லூரியில் எல்லோரும் சாப்பிட்டு வீசிய பாப்கார்ன் பக்கட்டுகளை எடுத்து அதில் இருக்கும் எஞ்சியதை உண்ணவேண்டிய நிலை.
உறங்குவதற்கு கூட இடமில்லை ....இரவெல்லாம் தெருவில் நடந்து திரிகிறான் .
ஒருநாள் எதேச்சையாக அவன் பள்ளியில் படிக்கும் மாணவியின் தாயார் அவனை கண்டு வீட்டுக்கு அழைத்து வருகிறாள்.
அவனது நிலையை கண்டு உதவ எண்ணுகிறாள்.
ஒரு கறுப்பனையா வீட்டுக்குள் சேர்த்தாய் என்ற கேள்விகளையும் கேலிகளையும் அவள் எதிர்கொள்ள நேரிடுகிறது.இன்னும் பல சிக்கல்கள் ஏற்பட அனைத்தையும் கடந்து மைக்கின் விளையாட்டு திறமையை உணர்ந்து
அமெரிக்க கால்பந்து போட்டிகளில் பங்கேற்க வைத்து வெற்றிபெற வைக்கிறாள்.
படத்தின் கதை இதுதான் .இது கதையல்ல நிஜம்.


அமெரிக்க கால்பந்து வீரரான Michael Oherன் வாழ்க்கை வரலாற்றினை எழுத்தாளர் Michael Lewis, The Blind Side: Evolution of a Game என்ற பெயரில் புத்தகமாக எழுத அதை திரைப்படமாக எடுத்துள்ளார் John Lee Hancock.
Michael Oher-https://en.wikipedia.org/wiki/Michael_Oher

இதுபோன்ற பல செண்டிமெண்ட் படங்களை தமிழில் நாங்கள் பார்த்திருக்கிறோம் என்று நினைத்தால்
ஆம் பார்த்திருக்கிறோம்
ஆனால் பார்க்காத சமுக பக்கம் ஒன்றிருக்கிறது .

மகப்பேற்று மருத்துவம் என்பதை அறிவியல் அபிவிருத்தி என்று பேசலாம் பெருமை கொள்ளலாம். ஆனால்
இனவிருத்தி -குழந்தை பாக்கியம் -அதான் வாழ்வின் அர்த்தம் என்றெல்லாம் கற்பித்து வைத்திருக்கிறோம்.
அந்த கற்பிதங்களை கொண்டே அன்பை கட்டுபடுத்தி
சுயநலத்தை விதைக்கிறது என்று தோணவில்லையா ....?
இனவிருத்தி -தன் குழந்தை என்ற குறுகிய மனநிலை
அது ஏன் ?
குழந்தை இல்லை என்று வருந்தாமல் காசை கொட்டி தனது குழந்தையை ஈன்றெடுக்க சொல்லி அறிவுறுத்துகிறார்கள்.
ஏன் குழந்தை இல்லாவிட்டால் வேறு ஒரு குழந்தையை தத்து எடுக்கும் மனநிலை உருவாகுவதில்லை/ உருவாக்குவதில்லை ?
எப்போதும் உலகில் பெருமைமிக்கதாக நாம் அடையாளப்படுத்துவது தாய்மை என்ற உணர்வை.
ஆனால் அதில் எந்த பெருமையும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.
இரத்த உறவுகள்,ஒன்றுகொன்று துணையான உறவுகளிடையே அன்பின் பரிமாற்றம் என்பது இயல்பான ஒன்று.
அதை மிகைப்படுத்திக்காட்டுவது அவசியமில்லை.
அம்மாக்களுக்கும் நமக்கும் இருக்கும் பாசம் கூட தன்னில் உயிர்ப்பு என்றே நிகழ்கிறது.

எனக்கும் அம்மாவுக்கும் 17வயது வித்தியாசம்; இயல்பில் சிந்தனையில் முரணானவர்கள் நாங்கள் .
முக்கியமாக தினமும் குறைந்தது ஒரு சண்டையேனும் வரும் ஆனால் எங்கள் அன்பில் எந்த குறையுமில்லை.
எங்களின் புரிதலின் உச்சத்தை நாங்கள் மட்டுமே உணர்வோம் !
என் குடும்பம் மிகப்பெரிய கூட்டுக்குடும்பம் ஆனால் அம்மாவுடன் மட்டுமே அதிக ஒன்றுதலை என்னால் உணர முடிகிறது. ஒவ்வொரு இக்கட்டான சூழலிலும் அம்மா எனக்கு தேவைபடுகிறார். என் சுதந்திரத்தை உறுதிப்படுத்திக் கொடுக்க எப்போதும் எனக்கு அவர் தேவைப்படுகிறார்.
அரவணைப்பு அன்பு என்று அம்மாவை மனம் எதிர்பார்கிறது.
என் அம்மா எல்லோரையும் நேசிக்கிறார் ஆனால் என்னை அதிகமாவே நேசிக்கிறார் என்பதே உண்மை.
அக ரீதியான பிணைப்புக்கு எனக்கு அம்மா என்ற உறவு உதவுகிறது ...ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதம்....

குடும்ப சூழ்நிலையில் வளரும் குழந்தைகளுக்குள் ஆயிரம் பிரச்சனைகள் உருவாகும் நிலையில்
குடும்ப அமைப்பு என்ற ஒன்று இல்லாது வளரும் குழந்தைகள் எதிர்நோக்கும் வாழ்க்கை எப்படிபட்டது என்று நாம் உணரவேண்டியது அவசியம் ....
சமுகத்தில் குடும்பம் ஏன் அவசியம் என்று யாரும் எண்ணுவதில்லை...இனவிருத்தி, சாதியை மதத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்தவே குடும்பங்கள் பயன்படுகிறது.
இன்றைய நிலையில்
குடும்பங்கள் தேவையில்லை என்றே பலரும் துறந்து செல்ல நினைகின்றனர்.
ஆனால் குடும்பங்களின் தேவை, சரியாக பூர்த்தி செய்யப்படவில்லை என்றே தோன்றுகிறது.

தெருவினை கடந்து பேருந்து நிலையம் வரும் வரையான பாதையில் எதிர்படுகின்றனர் வீடற்ற சிறுவர்கள். அவர்களுகென்று உறவுகளும் இல்லை உறையுளும் இல்லை.
அவர்களின் பின்னணி எதுவென்று ஆய்வு செய்து பதிவெல்லாம் எழுதுகிறோம்.
ஆனால் தீர்வுகளை முன்வைப்பது அத்தனை சுலபமல்ல நமக்கு.
சில வருடங்களுக்கு முன்னர்
ஏன் உன்னை சமுக செயற்பாட்டாளர் என்று எப்போதும் அடையாளப்படுத்திக்கொள்வதில்லை என்று ஒருவர் கேட்டார்.
நாம் குழந்தைகளை போற்றுகிறோம்; நான் குழந்தைகளை ரசிப்பேன்.
ஆனால் தெருவில் வாழும் ஒரு பிச்சைக்கார குழந்தையை தூக்கி முத்தமிடுமளவு எனக்கு பக்குவம் வரவில்லை என்றேன்.
என் பதிலை புரிந்துகொண்டவர் அமைதியாக சென்றுவிட்டார்.
என்னுடைய அன்றைய மனநிலைதான் உண்மையில் பொதுவாக எல்லோருக்கும் இருக்கிறது. அது என்ன நம் குடும்பம் நம் குழந்தை என்ற கோட்பாடு
நம் உயிரணு தான் வேண்டுமா? ஏன் இன்னொரு குழந்தையை நம் வாரிசாக ஏற்க மனம் வருவதில்லை
அன்புக்கு அடைக்கும் தாழ் !

செல்வவளம் இருந்தால் உங்கள் குழந்தையோடு இன்னொரு குழந்தையை எடுத்து வளர்ப்பதில் என்ன குறைந்துவிட போகிறது என்ற கேள்வி வருகிறது.
தெருவில் அநாதரவாக விடப்படும் சிறுவர்கள்
குற்ற செயல்களுக்குள்மிக இலகுவாக உள்வாங்கப்படுவார்கள்.
அவர்களின் உருவாக்கம் நாளை, பெரிய சமுக பாதிப்பை ஏற்படுத்தும்.
ஒவ்வொரு குடும்பத்திலும் நிராதரவான பிள்ளைகளை பராமரிக்க ஆரம்பித்தால்
அதன் பலன் எப்படியிருக்கும் என்பதே படம் உணர்த்தும் செய்தி.
நிஜ வாழ்க்கை சம்பவம் என்பதை மீண்டும் கவனிக்க.

ஒரு கூலித்தொழிலாளி தனது 5 குழந்தைகளோடு
ஆறாவதாக ஒரு குழந்தையை அழைத்துவந்தார்.
தெருவில் அநாதரவாக விடப்பட்ட பிள்ளை என்று
கஷ்டமான சூழ்நிலையிலும் வளர்க்க ஆரம்பித்தார்.
அவரை பற்றிய கவர் ஸ்டோரி படித்திருப்போம்.
வசதியற்ற நிலையிலும் அவருக்கு இருந்த பரந்த உள்ளம் படித்த நாகரிகம் கொண்ட நமக்கு இல்லை
என்பதே உண்மை.

எங்கோ பிறந்த நாய்க்குட்டி பூனை குட்டி எல்லாம் எடுத்து வளர்கிறோம்.அதற்கு ஆயிரங்களில் செலவு செய்து பராமரிக்கிறோம்.ஆனால் தெருவில் கைவிடப்பட்டவர்களை
அநாதைகள் என்று பெயரிட்டு குழந்தைகளை புறக்கணிக்கிறோம்.
குழந்தை இல்லை என்றால் குழந்தைகளை தத்து எடுத்து வாழ்வோம்.
நிறைய வசதிகள் இருந்தால் எம் குழந்தையோடு இன்னொரு குழந்தையை எடுத்து வளர்க்கலாம்.
அதில் தவறில்லை.

பணத்தை மருத்துவமனைக்கு கட்டி நாம்பெற்றுவருவது குழந்தை என்று நினைக்கிறோம் அது நமது சுயநலம் அன்றி வேறில்லை.
''உங்கள் குழந்தை'' என்ற எண்ணத்தை வலியுறுத்தி மருத்துவமனைகளும் வியாபாரம் செய்கின்றன என்பதை மறக்க வேண்டாம்.
அன்பை பகிர்கிற மனநிலை இல்லை என்றால் நாங்கள் மனிதர்கள் புனிதர்கள் என்றெல்லாம் அடையாளப்படுத்துவதில் அர்த்தமில்லை.
தாய்மையை போற்றுகிறோம் ....நம் உயிர்ப்பில் இல்லாத இன்னொரு ஜீவனையும் ஏற்கும் மனதிற்கு
மட்டுமே தாய்மையின் போற்றுதல்கள் சென்று சேரும்.
அன்பு எதிர்பார்ப்புக்கள் அற்றது
தேவைகளை பொறுத்து அன்பின் வடிவம் தீர்மானிக்கபடுதல் அன்பாக அமையாது என்பதையும் உணர்வோம்.

The Blind Side
2009

Comments

Popular posts from this blog

நாயகவிம்பத்தின் சிதைவுகள்