கடனாய் கொஞ்சம் நன்றிகள்




பினாங்கிலிருந்து நீண்ட பஸ்பயணம் முடிந்து, கோலாலம்பூர் வந்துவிட்டோம்.
எங்களுக்கான தங்குமிடம் Sentulலில் இருக்க,
கோலாலம்பூரில் இருந்து ரயிலில் Sentul செல்ல வேண்டும்.

மக்கள் கூட்டத்தை பார்த்து மிரண்டுபோன தம்பி சித்துவின் நச்சரிப்பு மெல்ல மெல்ல அதிகரிக்கத்தொடங்கியது.
அம்மாவை தூக்கிபோகச்சொல்லி அழ ஆரம்பித்துவிட்டான்.
உடல்நலக்குறைவோடுடிருந்த அம்மாவும் மூச்சிரைக்க சித்துவை தூக்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்.
3 பெரிய லக்கேஜ்களை நான் தூக்கிச்செல்ல வேண்டும் .
இருபத்தி ஐந்து கிலோவிற்கும் மேல் பாரம் என்பதால் மெல்ல மெல்ல நடக்க வேண்டிய நிலை.
அங்கிருந்து இங்குமாய் இங்கிருந்து அங்குமாக அலைச்சல் வேறு.
எங்களோடு வந்த தோழிகளோடு அம்மாவை போக சொல்லிவிட்டு
நான் மெல்ல வருகிறேன் என்று லக்கேஜோடு நடக்க ஆரம்பித்தேன்.

எஸ்கலேட்டர் வேலை செய்யவில்லை,படியால் இறங்க வேண்டும்.
எல்லோரும் இறங்கிவிட்டனர்.நான் மேலே நிற்கிறேன்.
3 லக்கேஜ்களை சுமந்து படியிறங்க முடியவில்லை.
பின்னால் நின்ற பயணிகள் சத்தமிட தொடங்க
அவர்கள் இறங்க வழிவிட்டு ஒதுங்கி நிற்க ,
பயணிகள் எரிச்சலோடு என்னை கடந்து செல்லத்தொடங்கினார்கள்.

ரயில் வந்துவிட்டது.இறங்க வேண்டும்
அம்மாவை சித்து நகரவிடாது நச்சரிக்க,
''பரவாயில்லை நான் வருகிறேன்'' என்று கூறி சமாளித்தேன்.
2 பெரிய லக்கேஜ்கள் எதிர்புறம் சரிய,
அதனை நிமிர்த்தி ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து
மற்ற பையை தோளில் மாட்டிகொண்டு திரும்பினால்
என் 2 லக்கேஜ்களையும் காணவில்லை.

யாரோ ஒருவர் 2 லக்கேஜ்களையும் தூக்கிக்கொண்டு சட்டென்று படியிறங்கி கீழே என் அம்மாவிடம் வைத்துவிட்டு
எதிர்புறம் கூட்டத்தில் சென்று மறைந்தார்.
சில செக்கன்களில் நிகழ்ந்துவிட்டது அந்த சம்பவம்.
நான் படியிறங்கி வந்து நன்றி சொல்ல தேடினால்
மக்கள் கூட்டத்தில் அவரை காணவில்லை
''நல்ல பையன்,நல்ல நேரம் உதவி பண்ணினான்''
என்றார் அம்மா.
நன்றி சொல்ல முடியவில்லை என்ற தவிப்போடு
ரயிலில் ஏறிவிட்டேன்.

மனம் முழுவதும் வருத்தம் சூழ்ந்தது
ஒரு நன்றி சொல்ல முடியலையே என்று.
அம்மாவிடம் அவரைப்பற்றி கேட்டால்
ஆறடி உயரம்,வெள்ளைகார இளைஞர் .
தான் நன்றி சொல்ல புன்னகைத்துவிட்டு சென்றதாக சொன்னார்.

சிந்தித்து பார்த்தால் மிக சாதாரண செயல்தான் என்று தோன்றும்
ஆனால் என்னால் அப்படி எடுத்துகொள்ள முடியவில்லை.
வெற்றிபெற்ற மனிதர்கள் வாழ்க்கை மட்டும்தான்
நமக்கு படிப்பினையா ?
சின்ன சின்ன அன்பில்,
அருகாமை மனிதர்களின் சின்ன நல்ல செயல்களை
ரசிப்பதில் ஒரு மகிழ்ச்சி இருகிறது.
பதினைந்து நிமிடங்கள் அங்கு தடுமாறியிருப்பேன்.
மேல் தளத்தில் நிறைய பேர் இருந்தார்கள்
யாரும் உதவவில்லை
இவர் என்னிடம் வந்து உதவட்டுமா என்று அனுமதி எல்லாம் கேட்கவில்லை
நன்றியையும் எதிர்பார்க்கவில்லை
யாருக்கும் எதுவும் தேவையென்றால் அவர்களை கேட்காமல் முடிந்ததை செய்துவிடுவதும்
எந்த நன்றியையும் எதிர்பார்க்கா குணமும் எத்தனை அழகானது ?
அந்த செயல் என்னை முழுவதும் மாற்றிவிட்டது.

அவர் எந்த நாடாக இருக்கும் ?
அமெரிக்கா?ஐரோப்பா ?இல்லை ரஷ்யா ?
நான் அவர் முகம் பார்க்கவில்லை;
எனக்கு அடையாளம் தெரியாது ...
அம்மாவுக்கு கடைசி வரை முகம் மறக்காமல் இருக்குமா ?
என்றாவது மறுபடியும் அவரை பார்க்கும் வாய்ப்பு கிட்டுமா ?
நன்றி சொல்ல முடியுமா ?
தெரியவில்லை

யாருக்கு நன்றி சொன்னாலும்
யார் எனக்கு நன்றி சொன்னாலும்
இந்த சம்பவம் ஞாபகம் வந்துவிடுகிறது.

அன்று நான் சுமக்க முடியாது தவித்த லக்கேஜ்களை
இறக்கிவைத்துவிட்டு அவர் சென்றுவிட்டார்.
நான்தான் அவருக்கு சொல்ல வேண்டிய நன்றியை
இறக்கிவைக்க முடியாமல்
இன்னும் சுமந்துகொண்டிருக்கிறேன்.

#மலேசியா டயரிக்குறிப்புக்கள்

Comments

Popular posts from this blog