பேரன்பு ❤
நீண்ட தெருவின் மருண்மாலைப்பொழுது
ஓரிடம்
உனக்கும் எனக்குமான
எதிரெதிர் ஒற்றை இருக்கை
நிறுத்திவைக்கப்பட்ட ஒற்றைச்சைக்கிள்
பூக்களற்ற புற்சாலை
நம்மை சிறு புள்ளியாக மாற்றிச் சிரிக்கும்
தூரத்தே தெரியும் மாமலைகள்
வெயில் விரட்டும் குளிர்காற்று
நட்சத்திரங்களின் வருகைக்காக காத்திருக்கும்
இரவுக்கு முந்தைய பொழுதில்
பாதை தீர்மானிக்கா பயணக்காரனுக்கும்
பாதையின் கைதியானவளுக்கும்
அதிசயங்களின் கூறாய் அந்தச்சந்திப்பு
அயராத பயணத்தின்
எதிர்பாரா இளைப்பாறல்
எனக்கு
முரண் மொழி பகிரும் மகிழ் குழந்தை நான்
உனக்கு
யட்சத்தில்
எதிரினில்
எரிகின்ற
நான்
நிகழாத
கடந்த காலம்
எதிர்காலம்
கானல் நேரங்கள்
வரம்மரித்த தவம்

நகரும் நேரத்தோடு
தொடரும் பயணம் ஆரம்பிக்க முன்னர்...
இந்த
பெருநிமிட
இடைவெளியில்
மௌனமாய் நிரம்புகின்றது
பேரன்பு

Comments
Post a Comment