தேடலற்ற கனவுலகம் - இலங்கை தமிழ்சினிமாவின் எதிர்காலம்





ஒரு தேசத்தின் உடைமைகளில் அந்த நாட்டின் கலைக்கு பெரும் முக்கியத்துவம் உண்டு. பெருவாரியான தேசங்களின் கலைகளில் சினிமாவுக்கு தரப்படும் முக்கியத்துவம் தனித்துவமானது.

உலகளாவிய ரீதியில், சினிமா என்பது கலை மட்டுமல்ல... ஒவ்வொரு நாடும், சினிமாவை மிகப்பெரிய சர்வதேச வணிகமாகவும் அதற்குள்ளே நுட்பமான அரசியல் ஆளுகை தன்மையை ஒளித்து வைத்தும் மறைமுகமாக அறிவுச்சண்டை நிகழ்த்தி வருகின்றது. அந்த வரிசையில் இலங்கை தமிழ் சினிமாவின் நிலை என்ன என்று ஒரு கேள்விகேட்டால், நமக்கு முழுமையான பதிலை சொல்ல முடியாதளவு குழப்பங்கள் இருப்பதால் மௌனமாக புன்னகைத்து மழுப்புவதையே நம் வழக்கமாக கொண்டுள்ளோம். ஆனால் சற்றே அந்த மௌனத்தை கூறுபிரித்து ஆய்வு செய்தால்.... நாம் ஊமைகள் அல்ல... எல்லாமே ஒருவித வெற்று மௌனம் என்பது இலகுவில் புரிந்துவிடுவதோடு, நம் மௌனத்திற்குள்ளே ஓர் அர்த்தபூர்வமான பதில் புதைந்திருக்கின்றது என்ற உண்மையும் புலப்படும்.

இலங்கை சினிமாவின் முடக்கத்துக்கு போர் மற்றும் இனப்பிரச்சினையை காரணமாக கூறுவது சில தரப்பின் கடமையாகவே இருகின்றது. உலக அரங்கில் போர் என்பது சினிமாவின் மாபெரும் வியாபார தளம். இரண்டாம் உலகப்போரினை மையப்படுத்தி வெளியான படங்களே அதன் சாட்சிகள். போர் சூழல் என்பது உலகின் கவனத்தை தன் திரைப்படத்தின் மீது திருப்ப ஒரு நாட்டுக்கும் படைப்புக்களை உருவாக்குபவர்களுக்கும் மிக அருமையான சந்தைக்காரணி. (போர் கதைகள் மட்டுமே எடுக்க வேண்டும் என்ற தேவை இல்லை.. அதனை களமாக தேர்வு செய்தால் அது இலகுவான சந்தைக்காரணியாக அமையும் .....) அதனை சரியாக உணர்ந்த பல நாடுகள் தங்கள் குரலை படைப்புக்கள் மூலம் அழுத்தமாக பதித்து சர்வதேசத்தின் கவனத்தை பெற்றுவருகின்றன. அவர்களால் சாத்தியப்படுத்தப்படும் சினிமா ஏன் இலங்கையில் சாத்தியமில்லை என்று சிந்தித்தால் அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

முதல் காரணம் நமக்கான சந்தை வாய்ப்புக்களை எதிர்மறையாக அணுகும் இலங்கை தமிழ் மக்களின் பொதுமை போக்கு. இரண்டாவது காரணம் சினிமா பற்றிய அடிப்படை புரிதலும் தேடலும் அற்ற மேம்போக்கான தன்மை.
கற்றுக்கொள்கின்ற தன்மை, அர்ப்பணிப்புணர்வு, அறிவுசார் தேடல், உலகத்தின்மீதான கவனிப்பு போன்ற அடிப்படை தகைமைகளை கூட நாம் கருத்திற்கொள்ள மறுப்பதினால் சர்வதேச சந்தையில் மட்டுமல்ல நம் மத்தியில் திரையிடக்கூட பொருத்தமற்ற படைப்புக்களை உற்பத்தி செய்து வருகின்றோம்.

வணிகம் எனும் போது அதன் சந்தை தன்மை என்பதை சரியாக கவனித்தால் மட்டுமே வெற்றியை சரியாக அடையமுடியும். இலங்கை தமிழ் சினிமா தனக்கான சந்தை வாய்ப்புக்களை சரியாக இனம் காணவில்லை என்பதே அடிப்படையான உண்மை. இந்தியாவை பொறுத்தவரை சினிமா என்பது தொழிற்சாலை. அங்கே உடனடி வருமானத்திற்கான சிறு கைத்தொழில் வணிகம் போலவே சினிமா வியாபாரம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. மக்களின் எண்ணிக்கை உட்பட பல காரணங்கள் அந்த பாதைக்கு வித்திட்டிருகின்றது. ஆனால் இலங்கை சூழல் அப்படி அல்ல ...

பிரதேச ரீதியாக மக்கள் தொகை குறைவாகவும் தமிழ் மற்றும் சிங்களம் என்ற 2 மொழி பேசும் மக்கள் இருப்பதாலும் இங்கே (தொழிற்சாலை கட்டமைப்பினை விட ) சுயாதீன படைப்புக்களுக்கு மிகப்பெரிய களம் இயல்பாகவே இருக்கின்றது. எப்பொழுதும் மேலைத்தேய நாடுகளின் பார்வை இலங்கையின் மீது நிலைத்திருப்பதனால் சர்வதேச சினிமாவின் வியாபார சந்தையை எம்மால் மிக இலகுவாகவே அடையக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன. ஆனால் நம் கண்களுக்கு முன்னே இருக்கின்ற அற்புதமான களங்கள் அனைத்தையும் எதிர்மறையாக கருதி எமக்கு வாய்ப்பில்லை, Industry இல்லை அதனால் சினிமா எடுக்க முடியவில்லை என்று புலம்பித்திரிகின்ற அறியாமைநிலை இங்கு உருவாகிவிட்டது.

இன்றைய காலத்தில் சுயாதீன படைப்புக்கள் உருவாகின்றன. நிறைய படைப்புக்கள் வருகின்றன என்று கூறினால் அது அடுத்த கட்ட அறியாமை. எண்ணிக்கை பெருகுவதில் எந்த பெருமைகளும் இல்லை. வருகின்ற எல்லாமே சினிமாவாக இருந்தால்தானே அதனை சினிமாவாக கருதி சிந்திக்க முடியும். வீடியோக்களை பதிவு செய்யும் தன்மையை சினிமா என்று கூறுவதை யாராலும் ஏற்றுகொள்ளவே முடியாது. சினிமாவின் வடிவத்தையும் திரைமொழியையும் அறியமுடியாத நிலையில் ‘’சினிமா’’ என்பது எப்படி சாத்தியமாகும் ?

இங்கு சினிமா என்று கூறினாலே நம் மத்தியில் பேசு பொருளாக அமைவது அந்த படத்தின் கதைகளும் அதில்வெளிப்படும் கருப்பொருளும் மட்டுமே. ஒரு திரைப்பட விமர்சகராக, ஆய்வாளராக, இயக்குனராக,படைப்பாளியாக நாம் செயற்பட விரும்பினால் சினிமாவின் வடிவத்தை முழுமையாகவும் நுட்பமாகவும் அறிதல் அவசியம். அதுவே அனைத்துக்கும் ஆரம்பம். அந்த அறிதலில் மட்டுமே சினிமா என்ற விடயம் நமக்கு புலப்படுகின்றது.

இலங்கை தமிழ் சூழலை பொறுத்தவரை ஒரு சினிமாவை விமர்சிப்பது என்பது மிக இலகுவான விடயம். படத்தின் கதையை ஒரு விவாத மேடையின் தலைப்பாக பாவித்தே திரைப்படங்கள் தொடர்பான விமர்சனங்களும் கட்டுரைகளும் முன்வைக்கப்படுகின்றன. சினிமா ஆர்வலர்களுக்கும் திரைப்படைப்புக்களை உருவாக்குபவர்களுக்கும் சினிமா பற்றிய அடிப்படை புரிதல் கூட தேவையில்லை என்ற நிலை இங்கிருகின்றது. கதையை விவாதிக்க தெரிந்தால் சினிமா ஆர்வலர் என்றும் கதையும் காமிராவும் இருந்தால் படைப்பாளிகள் என்றும் நாம் புரிந்து வைத்திருக்கின்றோம்.

சினிமா என்பது கலையும் அறிவியலும் கூடிப்பெற்ற குழந்தை என்பதை நாம் மறந்துவிடுகின்றோம்.
கதை – திரைக்கதை இரண்டுக்குமான வித்தியாசம் என்ன ? திரைமொழி என்றால் என்ன ? என்பதை அறியாமல் ஒரு திரைப்படத்தை உருவாக்க முடியாது.
ஒரே ஒரு ஷாட்டை எடுத்தால் அதில் Balance,Lines,Colour,Light,Shapes,Movement,Bloging,Composing,Tools ... உட்பட பல விடயங்கள் உள்ளன. இவற்றை பயன்படுத்தி எப்படி ஒரு காட்சியில் கதை வடிவமைக்கப்பட்டு சொல்லப்படுகின்றது என்பதை பற்றியும் அதன் emotion எப்படி பார்வையாளர்களுக்கு கடத்தப்படுகின்றது என்பதை பற்றியும் தெளிவு கொண்டவர்களினால் சினிமாவை உருவாக்கிவிட முடியும்.
இதனை பற்றிய தெளிவற்றவர்கள் கதைகளை காமிராவில் பதிவு செய்ய முடியுமே ஒழியே அதனை சினிமாவாக மாற்ற முடியாது. சினிமா விமர்சகர்கள், ஆர்வலர்கள் எனும் போது இவை அனைத்தையும் அறிந்து வைப்பதோடு எதிர்கால நுட்பங்களின் தேவைகளை பற்றிய தெளிவும் இருத்தல் வேண்டும். படைப்பாளியை விட விமர்சகனுக்கு அதிக புரிதலும் தெளிதலும் இருத்தல் அவசியம்.

மேலைத்தேய சினிமாக்களை பார்த்து சிலாகிக்கும் நாம் அது அவர்களின் இயல்பான படைப்பாக்க பாணி (ஸ்டைல்) என்று கூறுகின்றோம். அவர்கள் சினிமாவின் வடிவத்தை சரியாக புரிந்துகொண்டு படைப்புக்களை முன்வைப்பதை நாம் அந்த நாட்டிற்குரிய ஸ்டைல் என்று பொதுமைப்படுத்தி பேசுகின்றோம். ஸ்டூடியோக்களுக்கு ( தயாரிப்பு நிறுவனங்கள் ) கட்டுப்பட்டு இயங்கும் படங்கள், இருக்கின்ற சினிமா வடிவத்தினை சிறப்பாக பயன்படுத்துவதையும் சுயாதீன படைப்பாளிகள், அந்த வடிவத்தில் புதிய தேடலை மேற்கொள்வதையும் அந்த நாடுகளில் வழக்கமாக காண்கின்றோம்.

இலங்கையை பொறுத்தவரை இந்த வடிவம் பற்றிய புரிதல் ஆரம்பகாலத்தில் மிகச்சிறப்பாகவே படைப்பாளிகளுக்கு இருந்திருக்கின்றன. குறிப்பிட்ட காலத்தின் பின்னர், வடிவம் மற்றும் திரைமொழி பற்றிய முழுமையான புரிதல் அற்ற, இந்திய சினிமாவின் வணிக அந்தஸ்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பினால் பிரதியெடுக்கும் தன்மைக்கு நாம் மாறிவிட்டமையே இலங்கை தமிழ் சினிமா தனக்கான தனித்துவ அடையாளத்தை உலக அரங்கில் நிலை நிறுத்த தவறியதன் முக்கிய காரணம்.

இன்று சினிமா துறைக்குள் வருபவர்கள் சிங்கள சினிமா, ஈழ சினிமா என்ற வார்த்தை பிரயோகங்களை தவிர்த்து இலங்கை சினிமா என்ற அடையாளத்தை நாம் பேண ஆரம்பித்தால் மட்டுமே சர்வதேச அரங்கில் நாம் நுழைய முடியும். அடையாளம் ஒன்றாகவும் உள்ளடக்க மொழி என்பது வேறுபடலாம் என்பதையும் நாம் புரிந்து செயற்பட வேண்டும். இலங்கை தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி பேசும் சிந்திக்கும் நபர்கள் அனைவரும் இலங்கையின் சிங்கள மொழிபேசும் பழைய படங்களை அவசியம் பார்த்து அவற்றில் பல விடயங்களை கற்ற வேண்டும். இன ரீதியான பாகுபாட்டு முறைகளை கடந்து சினிமாவை சினிமாவாக நேசிக்க நாம் பழகவேண்டும். இலங்கையில் உருவாக்கப்பட்ட திரைப்படங்களில் சிங்கள மொழியில் உருவாக்கப்பட்ட படைப்புக்கள் பார்க்கும் போது சர்வதேசத்தை நோக்கிய சினிமாவின் பயணத்திற்கும் திரைமொழியின் தேர்ந்த வடிவத்திற்கும் என்றோ இலங்கை சினிமா உதாரணமாக அமைத்துள்ளது என்பதையும் அவற்றைப்பற்றி அறியாமலே சினிமா பற்றி குறைப்பட்டுக்கொண்டிருகின்றோம் என்பதையும் இனியாவது முறையாக உணர்ந்தால் இலங்கை சினிமாவின் அடுத்த கட்டம் பற்றிய புரிதல் முழுமையாக ஏற்படும்.

Comments

Popular posts from this blog

நாயகவிம்பத்தின் சிதைவுகள்