ஸ்பரிசம்



The Handmaiden-சில திரைக்கதைகள் நம் கதையை நியாபகப்படுத்தும்
நான் எழுதிய சிறுகதையை நினைவூட்டுகிறது
இக்கதையின் ஒரு பகுதி

எனக்கு அதிகபட்சம் 15 வயதிருக்கும். அப்பொழுது
வெளிப்பாடசாலை சிறுகதைப்போட்டி
தலைப்பின் கீழ் எழுதுவது எனக்கு பிடிக்காது
அந்த நேர மனநிலையில் ஏதோ ஒன்றை எழுதிவிட்டு
3வதாக இருக்கும் தலைப்பை கதைக்கு சூட்டுவது என் வழக்கம்
அன்று விரும்பிய தலைப்பு என்ற அறிவிப்பு
எதுவுமே திட்டமிடாத நிலையில் எழுத ஆரம்பிக்கிறேன்
கதை -ஸ்பரிசம்

இரு பெரிய மரத்தடுப்புக்கள் வழியே சிறு துளை
அதில் இருபுறமும் விரல்கள்
மெல்ல ஒன்றை ஒன்று பற்றிக்கொள்கின்றன
அந்த ஸ்பரிசத்தோடு ஆரம்பிக்கிறது கதை

மலையுச்சி, பெரிய மாளிகை
காட்டுவழியே வருகிறாள் ஒரு பெண்
அவள்அந்த மாளிகைக்கு புதிதாக வரும் பணிப்பெண்
அந்த மாளிகையின் எஜமான் பெரும் செல்வந்தன்
மாதத்தில் சில நாட்கள் மட்டுமே அங்கு வந்து வசிப்பான்
அவன் மனைவி பேரழகி
இத்தனை தூரத்தில் அவளை பாதுகாக்கவே
இந்த மலை அரண்மனை
அந்த பேரழகிக்கு எப்போதும் ஓவியங்கள் வரைவதே வேலை
எல்லாமே பார்த்து வரையும் ஓவியங்கள்
சுய சிந்தையில் அவள் வரைந்ததே இல்லை
வெளி உலகம் அறியாதவள் அவள்
அவள் புன்னகைத்ததே இல்லை
எப்போதும் அமைதியாக அவள் நாட்கள் கடக்கிறது
கணவனோடு காமம் கொள்கையில் அவள் மகிழ்ச்சியை உணர்ந்ததே இல்லை
காதல் என்பதை உணரா நிலையில் மகிழ்ச்சி எங்கிருந்து வரும் ?

பணிப்பெண்- எஜமானியின் அழகை விட அவள் அகஉலகை எண்ணி
வருந்துகிறாள்
அவள் மீதான ஈர்ப்பை உணர்கிறாள்
வெற்றிடம் போன்ற அவள் முகம் ;
எதையும் எழுதலாம் என்ற நிலை
அவளுக்கான பணிவிடைகளை அமைதியாக செய்கிறாள்

எஜமானிக்கு பணிப்பெண்ணின் நேர்மையும் தைரியமும் பிடித்துப்போகிறது
மெல்ல மெல்ல அவள் மீது ஈர்க்கப்படுகிறாள்
காலம் நகர்கிறது
இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பு கொள்கின்றனர்
அந்த காதலை உணர்கின்றனர்
பணிப்பெண் எஜமானியை வெளியே அழைத்து செல்கிறாள்
மகிழ்ச்சியை உணரச்செய்கிறாள்
முதன் முதலாக அவள் புன்னகைகிறாள்
தானாக ஓவியம் வரைகிறாள்
இருவரும் முத்தமிட்டுகொள்கின்றனர்
முதன் முதலில்
காதலும் காமமும் அவர்கள் வாழ்வில்....

கணவன் வருகிறான்
அவளால் அவனோடு காமம் கொள்ள முடியவில்லை
அருவருப்பாக உணர்கிறாள்
அவளுடைய அழுகையும் விலகலும்
கணவனை எரிச்சல் படுத்துகிறது
தன்னை ஒருத்தி நிராகரிப்பதை
அவன் ஆண் மனம் ஏற்றுகொள்ள மறுக்கவே
வன்முறையை கையாள்கிறான்
தினம் தினம் சித்திரவதைகள்
அவள் துடிப்பதை இவளால் சகிக்க முடியவில்லை
ஒரு கட்டத்தில்
கணவனை கொன்றுவிட்டு
எஜமானிக்கு விடுதலை அளிக்கிறாள்

பணிப்பெண்
சிறைக்கு செல்கிறாள்
எஜமானி அந்த தனித்த வீட்டில்
அவளோடு இருந்த நினைவுகளோடு
ஓவியம் வரைகிறாள்
வீடு முழுவதும் ஓவியங்கள் நிரம்புகின்றன.

ஆண்டுகள் நகர
போர்க்காலம் முடிந்து
அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்த பின்னர்
முதன் முதலில் நகருக்கு வருகிறாள்
சிறைசாலைக்கு செல்கிறாள் எஜமானி
வயது முதிர்ந்த நிலையில் சந்திக்கிறார்கள்
இரு பெரிய மரத்தடுப்புக்கள் வழியே சிறு துளை
அதில் இருபுறமும் விரல்கள்
மெல்ல ஒன்றை ஒன்று பற்றிக்கொள்கின்றன
கண்ணீரும் புன்னகையுமாக
இருவரின் விரல் ஸ்பரிசங்களில்
மீண்டும்
உயிர்கிறது அவர்களின் காதல் !

மேற்சொன்னது கதை ...
சம்பவங்களால் மட்டுமே என் கதை எழுதப்பட்டது
திரைக்கதை வடிவத்தில் சிறுகதைகளை எழுதுவேன்
அந்த கதைக்கு பரிசு இல்லை :)
(கிடைத்தால் தானே ஆச்சர்யம்)
The Handmaiden படத்தின் கதை இதுவல்ல
கதையின் ஒரு பகுதி மட்டுமே

அளவில்லா மகிழ்வோடு படம் பார்த்தேன்
கண்களில் கொஞ்சம் கண்ணீர்
காரணம் என் கற்பனை திரையில்...
நான் யோசித்த களம்.
யோசித்த காமரா கோணங்கள்
அந்த காட்சிகளின் நிறங்கள்
அந்த மாயத்தன்மை எல்லாமே அதி நேர்த்தியாக திரையில் ...
நாயகியாக நான் எண்ணியது மெலினா மோனிக்கா பெலோசி
மோனிக்கா மீதான என் அப்போதைய ஈர்ப்பாக கூட இந்த கதையை
நான் எழுதியிருக்கலாம்.

என் கதை ஒன்றும் சிறப்பானதல்ல
ரொம்ப ரொம்ப சுமார் தான்
ஆனால்
எழுதியதைவிட சிறப்பான உலகத்தை
திரையில் தரிசிப்பதை விட வேறு என்ன
மகிழ்ச்சி வேண்டும் ?
The Handmaiden படத்தை பற்றி நிறைய எழுதவேண்டும் .

Comments

Popular posts from this blog