கேள்விகளைத்தேடும் பதில்கள்!


நாடு திரும்ப இன்னும் ஒரு நாள் மட்டுமே இருந்தநிலையில்
பொருட்கள் வாங்க chinatownல் உள்ள Petaling Street Marketக்கு வந்தோம்
பொருட்கள் வாங்கிகொண்டிருக்கையில் திடிரென்று மழை பெய்யவே
அம்மாவையும் சித்துவையும் பேருந்து தரிப்பிடத்தில்
அமர சொல்லிவிட்டு அருகிலிருந்து கடைக்கு பொருட்கள் வாங்கச்சென்றேன்.

இருபது நிமிடங்களில் திரும்பிவந்தால் ,
சித்துவோடு ஒரு வெள்ளைக்கார நடுத்தரவயது மனிதர் சிரித்துகொண்டிருந்தார்.
நான் வந்ததும் அம்மா,என்னை மகள் என்று அறிமுகப்படுத்தினார்.
புன்னகையோடு பேச்சை ஆரம்பித்தார்.
ஐரோப்பியர் அல்ல அமெரிக்கர் என்பதை அவருடைய ஆங்கிலம்
உணரவைத்தது.
சித்துவின் கண்கள் மிக வசீகரமாக உள்ளதாகவும்
அழகான பையன் என்று கூறிவிட்டு
என்னைப்பற்றி கேட்டார்.
என் விபரங்களையும் தொலைக்காட்சி பணிபற்றியும் கூறினேன்.
நான் அவர் பற்றி கேட்க ,
தான் ஒரு இஸ்லாமியன் என்றும் வங்கி ஊழியன் என்றும் கூறினார்.
அமெரிக்காவில் தன்னால் வசிக்க முடியவில்லை,
நிறைய பிரச்னைகள்
இஸ்லாமிய நாட்டுக்கு செல்லவேண்டும் என்று முடிவெடுத்து
மலேசியா வந்துவிட்டதாக கூறினார்.
சொல்லும்போதே சற்று குரல் தளர்ந்துவிட்டது.
அதன் பிறகு அவர் எதுவும் பேசவில்லை .
நீண்ட நேரம் சித்துவையே பார்த்துகொண்டிருந்தார்
சித்து அவர் குழந்தையை ஞாபகப்படுத்திவிட்டான்
என்பது புரிந்தது.

அமெரிக்காவில் இரட்டைகோபுர தாக்குதலுக்கு பின்னர் நடந்த சம்பவங்களில்
ஏதேனும் பிரச்சனைக்கு உட்பட்டிருப்பாரோ ?
இல்லை வேறு ஏதும் சங்கடங்கள் நடந்ததா ?
அவருடைய குடும்பத்தை பிரிந்துவிட்டாரா ?
இழப்புகள் ஏதேனும் நடந்திருக்குமா ?
பாதுகாப்பாக இருப்பதாக சொன்னாரே
சந்தோஷமாக இருப்பதாக சொல்லவில்லையே....
நாட்டை பிரிந்து வாழ்வது எப்படி மகிழ்ச்சியளிக்கும் ?
இங்கு தனிமையில் வாழ்கிறார் போல ...
குடும்பத்தை காண வேண்டும் என்ற ஏக்கமா
அவர் கண்களில் தெரிகிறது ?
அந்த அமைதியின் இடைவெளியில் என் மனம்
பலகேள்விகளை சிந்திக்க ஆரம்பித்தது
ஆனால் எதையுமே நான் அவரிடம் கேட்கவில்லை.

காலம்,
பதில்களை தந்துவிட்டு கேள்விகளை தேடச்சொல்லும் வாழ்க்கையை
சிலருக்கு தந்துவிடுகிறது.
அப்படியான மனிதர்களிடம் பிரச்சனை பற்றி விவாதிப்பதில்
அர்த்தமில்லை என்றே தோன்றியது.

சற்று நேரத்தில்
எங்கள் தோழிகள் யாழினி,ப்ரௌபி மற்றும் விஜி அக்கா
பொருட்கள் வாங்கிவிட்டு வரவே
நாங்கள் அவரிடம் விடைபெற்று கிளம்ப தொடங்கினோம்.
புன்னகையுடன் அவரும் விடைகொடுத்தார்.
மனதிற்குள் அவர் சீக்கிரம் வீடு திரும்ப வேண்டும் என்று
நினைத்துகொண்டேன்.
சற்று தூரம் வந்து திரும்பிபார்த்தேன்
அவர் இன்னும் தரிப்பிடத்தில் அமர்ந்திருந்தார்.
மழை மீண்டும் பெய்ய தொடங்கியது.

#மலேசியாடயரிக்குறிப்புக்கள்

Comments

Popular posts from this blog

Traveling on one leg