அழுக்கு சூரியன்கள்...




பரந்து விரிந்த பிரபஞ்ச வெளியில்...
நிறைந்து கிடக்கிறது பல கோடி சூரியன்கள்
நம் கண்ணுக்கு எட்டிய சிறுதூரம் தான் உண்மை என்று
எண்ணிக்கிடக்கின்றோம்
இன்றுவரை...




நம் கண்ணில் கண்ட ஒரு சூரியனை
ரட்சகன் என்றெண்ணி
கண்ணில் ஒற்றிக்கொள்ளும்
மடமைகளுக்கு

புரிவதில்லை
வாழ்வின் நிஜங்கள்


விடிந்த பின்னர் வந்த சூரியன்கள்
வாழ்வின் விடிவுகளை தீர்மானிப்பதில்லை
சூரியன் இல்லாது விடிந்த பொழுதுகள் உண்டு உலகில்

சூரியன் இல்லாது விட்டாலும்
விடியும் பொழுது விடிந்ததே தீரும்

கவனிக்க ....
பலகோடி நிலவுகளும் உண்டு உலகில்
அதற்கென்று தனி ஒளியும் உண்டு
சில சூரியன்கள், தன் ஒளியை வீசி நிலவொளியை மறைத்து
வாழ்வளித்த வள்ளல் என்று போலிப்பெருமை பேசுகிறது


நிலையின்றி சுற்றி வரும் நிலவுகள் தான் அவை
மேகம் மறைக்க மறைக்க அதிலிருந்து மீளும் நிலைகள்
எப்போதுமே அவற்றுக்கு உண்டு
அமாவாசையில் மறைக்கப்படும் நிலவுகள்
தொலைந்துபோவதில்லை
பௌர்ணமிகள் அதற்கு எப்போதும் உண்டு
பூமி தொலைந்தாலும் நிலவில் வாழ்வோம் என்ற நம்பிக்கை
ஆய்வுகளுக்கு உண்டு
நம்பிக்கை தரும் நிலவுகளை போலவே சில மனிதர்களும் ....

ஜீவ ஒளி பற்றி கேட்கலாம்  நீங்கள்
ஆமாம் ஜீவ ஒளி தரும் சூரியன்கள்
இன்னும் உண்டு உலகில்
அவை மதிக்கப்படவேண்டியதே
ஆனால் அழுக்கு சூரியன்கள் ???

அழுக்கு சூரியன்கள் ஆதர்சமாவதால்
அழிந்து போகும் அபாயம்
என்றும் நிரந்தரம்

சலவை செய்ய முடியாத அழுக்கு சூரியன்கள்
சாக்கடையாக மாற்றும் மனங்களை
தோற்றுவிக்கும்
அடுத்தவர் மீது சேறு அள்ளி தூற்றும் குணங்களை

ஆபத்துகளை அழகு என்றெண்ணி
அரியணை கொடுக்கும் முயற்சிகள்
நிற்காமல் தொடர்கிறது மீண்டும் மீண்டும்

சூரியனின் அழுக்கு வெளிப்படும் வரை
வசனம் பேசி மகிழுங்கள்

இன்று உங்கள் சூரியன்கள்
வானத்தில் பெரிதாக இருக்கலாம்
பிரகாசமாக ஒளி வீசிகொண்டிருக்கலாம்
அந்த ஒற்றை சூரியன்
வானத்தை நிரப்பிக்கொண்டு இருக்கலாம்
தன் சுட்டெரிக்கும் வெப்பத்தால் மற்றவர்களை
தன்னை மீறி செல்ல விடாது
தடுக்கலாம்... எரிக்கலாம்...
தன் விஸ்ரூபக்கதை பேசி ( பேசச்சொல்லி )விளம்பரம் தேடலாம்

நிலையானது என்று எண்ணி பெருமிதம் கொள்ளும்
அந்த சூரியனும் ஒரு நட்சத்திரம் தான்
ஒருநாள்-
நிச்சயம் எரிந்து விழப்போகும் நட்சத்திரம் தான்
தான் கொண்ட எச்சங்களாலேயே
எரிந்து கருகி விழ வைக்கும் காலம்
விழ்ந்த பின்னர் யாராலும் கவனிக்கப்படாது போகும்
உங்கள் ஆதர்ச சூரியன்கள்...

அந்த நாட்களை யாராலும் தடுக்கவோ தவிர்க்கவோ முடியாது
எதுவும் நிரந்தரமில்லாத உலகில்
நிலையானது என்று எதுவும் இல்லை
காலத்தின் கேள்விகளை ஏமாற்றி பிழைத்தவர் எவரும் இல்லை

அடுத்தவர் வீழ்ச்சிக்காக அல்ல உண்மையின் எழுச்சிக்காக
காத்திருப்போம் அதுவரை...

Comments

Popular posts from this blog

The Clue:4th Period Mystery

சட்டென நனைந்தது நெஞ்சம்