BARONESA





ஆண்களின் பார்வையில் உருவாக்கப்படும் பெண்களின் உலகமும் பெண்களின் பார்வையில் வெளிப்படுத்தப்படும் பெண்களின் உலகமும் மாறுப்பட்டவை.
இயக்குனரின் பாலின அடையாளத்தில் முரண்கள் வெளிப்படுவதில்லை.
படைப்பில் வெளிப்படும்  நுணுக்கமான அணுகுமுறையிலேயே பெண்களின் படைப்புலகம் உயிர்ப்படைகின்றது. அதில் ஆவணப்படங்களின் தாக்கம் தனித்துவமானது. அந்தவகையில் பலதரப்பட்ட சினிமாக்களை பார்த்தாலும்
உலகளாவிய ரீதியில் வெளியாகும் ஆவணப்படங்கள் பெரும் தாக்கத்தை
ஏற்படுத்தி கேள்விகளையும் குழப்பங்களையும் விட்டுச்செல்கின்றன.
சமிபத்தில் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்திய ஆவணப்படம் Baronesa .



2017 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த பிரேசில் நாட்டு ஆவணப்படத்தை இயக்கியுள்ளார் Juliana Antunes. சேரிப்புறத்தில் வாழும் Andreia, அந்த சூழலில் வாழ விரும்பாமல் அங்கிருந்து வெளியேற எண்ணுகின்றாள். எங்கிருந்தோ வந்து, அங்கு குடியேறிய Leid, சிறைக்கு சென்ற கணவன் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையில் அங்கே தங்கி வாழ்கிறாள். போதைப்பொருள் கும்பல்,குண்டர் கும்பல் சண்டைகளில் தப்பித்து வறுமையை மீறி வாழும் இருவரது வாழ்க்கை நிகழ்வுகளை நேரடியாக பதிவு செய்துள்ளது இந்த ஆவணப்படம்.


தனிப்பட்ட முறையில், பிரேசில் தேசத்தையும் மக்களது வாழ்வியலையும் எனக்கு அறிமுகப்படுத்திய  திரைப்படம் City of god.
அதே போன்ற புறநகர் பகுதி மக்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தாலும் இந்தப்படத்தின் களமும் மக்களும் படைப்புலகமும் முற்றிலும் புதிதாகவே தெரிந்தன. இந்தக்களம் எனது வாழ்வியலுக்கு பெரிதும் அந்நியப்பட்டிருந்ததை சில இடங்களில் உணர்ந்தேன். அதுவே இந்தப்படத்தை பெரிதும் விரும்ப வைத்துவிட்டது எனலாம்.


புறநகர் பகுதி கதை என்பதைவிட இரண்டு பெண்களின் வாழ்க்கையும் அங்கு நிகழும் சம்பவங்கள் மூலமாக அவர்கள் யார் என்பதையும் இந்தப்படம் பேசுகின்றது.
இரண்டு பெண்களின் சுயமும், சுகந்திரமும் படம் முழுவதும்  நமக்கு அவர்களது இயல்பு வாழ்க்கையூடாக முன்வைக்கப்படுகின்றது.
போதைப்பொருள் கும்பலின் அடிதடிக்கு மத்தியில் வாழும் இரண்டு பெண்களும் தமக்கான மகிழ்ச்சியை எப்படி ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.
தாம் வாழும் சூழலை எவ்வாறு புரிந்துகொள்கிறார்கள் என்பதை அறியமுடிகின்றது.


ஒரு இடத்தில் இயல்பாக பேசிக்கொண்டிருக்கையில் துப்பாக்கி சூடு நிகழ்த்தப்பட, எல்லாரும் பதறி அங்கிருந்து செல்கின்றார்கள்.
அந்த இடத்தில் இடம்பெறுகின்ற  நிஜ சம்பவம் அது. கமேராவை எடுத்துகொண்டு அங்கிருந்து விலகி செல்கின்றார்கள். இந்த வன்முறையும் கொலையும் இயல்பு வாழ்க்கையில் கலந்துவிட்டதையும் Andreia ஏன் அங்கிருந்து செல்ல விரும்புகின்றாள் என்பதையும் இந்த நிஜ சம்பவத்தினூடாக நாம் உணர்ந்துகொள்ள  முடியும்.


முதல் காட்சியில் உடலை காட்டும் இயக்குனர் படம் முழுவதும் பெண் உடல் தொடர்பான எண்ணப்பாடுகளை ஏற்படுத்துகின்றார்.
சமுக இருப்பை உடலே தக்கவைக்கின்றது. உடல் என்பது அவர்களுக்கான சொத்தாக இருக்கையில் அதனைக்கொண்டு அவர்கள் வாழும் விதமும் அதனது சுதந்திரத்தை பேணும் விதமும் நமக்கு காட்டப்படுகின்றது. தங்கள் உடலை அழகுபடுத்த முனையும் காட்சிகளில் பின்னணியில் ஒலிக்கும் பாடல்கள் ஆண்மைய உலகினை பற்றிய கேள்விகளை எழுப்புகின்றன.


படத்தில் இரண்டு காட்சிகள் என்னை பெரிதும் சிந்திக்க வைத்தன.  Leid, கணவனுக்காக காத்திருக்கின்றாள்.
குழந்தைகள், தனிமை, வறுமை, போதைப்பழக்கம், தனது பாலியல் ரீதியான துணை என்பவற்றில் அவளிடம் வெளிப்படும் சுதந்திரம் என்பதையே,
காலம்காலமாக நாம் பேசிக்கொண்டிருக்கின்றோம்.
நமக்கான சுயத்தையும் சுகந்திரத்தையும் யாரோ ஒருதரப்பிடம் நியாயப்படுத்தவும் உரிமை கோரவும் முனைகின்றோம்.
ஆனால்  Leid, தன் வாழ்க்கையை வாழ்கிறாள், யாரிடமும் தன்னை நியாயப்படுத்தவோ தனக்கு உரிமை கோராவோ முனையவில்லை.
பல சித்தாந்தங்களை கற்று அறம் வலியுறுத்தும் சமுகத்தை விட சாதாரண மக்கள், இயல்பான முறையில் தெளிவாக தங்கள் சுயத்தோடு வாழ்வது புரிந்தது.


வீட்டு வாசலில் ஒரு குழந்தை இருக்க, உள்ளே தனது மூத்த மகனை பிடித்து கத்திக்கொண்டிருபாள் Leid, அவனும் அழுதுகொண்டே தம்பிக்கு இப்படி செய்யமாட்டேன் என்று மறுப்பான்.
அந்த காட்சியில் வெளியே அமர்ந்திருக்கும் குழந்தையின் மிரட்சியான முகம் மட்டுமே நமக்கு காட்டப்பட்டிருக்கும்.
உள்ளே தாயும் மகனும் கத்துவது மட்டுமே கேட்கும். பத்துவயதுக்குட்பட்ட சிறுவன் தனது ஐந்துவயதுக்குட்பட்ட தம்பியை துஷ்பிரயோகம் செய்துள்ளான்.
அடுத்த காட்சியில்  Leid மற்றும் Andreia இருவரும் பேசுகையில் உன் மூத்த மகனுக்கு இங்கிருக்கும் யாரோ பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.
அதனால்தான் தனது தம்பிக்கு அதனை செய்துள்ளான் என்று கூறி புரியவைப்பாள்.


நாளாந்தம் நமது குழந்தைகள் எப்படி எல்லாம் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர், எப்படி அவர்களது மனநிலையில் அது பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பதை சற்று சிந்திக்க வைத்தது.
குழந்தைகளின் நிர்வாண புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிடுவது தவறான செயல் என்பதை மேற்குலகம் இதற்காக தானே உணர்த்தி வருகின்றது.
இவ்வாறன ஒரு சம்பவம் நமது சூழலில் நடந்திருந்தால் பெற்றோரின் புரிதல் எப்படியிருக்கும்? கோபம் வந்தாலும் நிதர்சனத்தை புரிந்துகொண்டு சூழலை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அத்தனை எளிதில் நமக்கு வந்துவிடாது. இந்த காட்சி பல புரிதல்களை எனக்குள் ஏற்படுத்தியது.

 

படத்தின் முதல் காட்சி இசையோடும் நடனத்தோடும் ஆரம்பிக்கும். இறுதிக்காட்சி அமைதியாக குழந்தை உறங்கும் காட்சியோடு நிறைவு பெறும்.
Andreia வெளியேறினாலும் Leid இன் குழந்தை அந்த இடத்தின் புது உறுப்பினராக சமப்படுத்தியதை போன்ற எண்ணம் அந்த காட்சியை பார்க்கையில் தோன்றியது.

நிஜமான களம், நிஜமான மனிதர்கள் அவர்களது வாழ்வில் நடந்த சம்பவங்களை நமக்கு காட்சிப்படுத்திய விதமானது ஆவணப்பட உணர்வு, fiction பட உணர்வும் என இரண்டு தன்மைகளையும் கொண்டு ஆச்சரியப்படுத்தியது. இதைப்பற்றி இயக்குனரிடம் கேட்டபோது ‘’எனக்கு எப்போதும் fiction படங்களை உருவாக்குவதற்கு தான் ஆர்வம் உள்ளது.
ஆவணப்படம் என்றாலும் fiction தன்மைகளை கொண்டே கதை சொல்ல விரும்புகின்றேன்’’ என்றார்.


இந்த பெண்களின் வாழ்க்கையூடாக சுதந்திரத்தின் விலை பற்றி மிக நுணுக்கமாக கேள்விகளை விட்டு செல்கிறார் இயக்குனர் Juliana Antunes.
அந்த கேள்விகளுக்கான பதில்களை சுயத்தை உணரும் பெண்கள் நிச்சயம் கண்டடைவார்கள்.

*ஜூலை  2018  ஞானம் சஞ்சிகைக்காக எழுதிய திரைப்பட கட்டுரை 

Comments

Popular posts from this blog

நாயகவிம்பத்தின் சிதைவுகள்