அதிகாரத்தின் இழைகள்

The Experiment   



வன்முறை - குற்றமாக பார்க்கப்படும் உலகில், அரச வன்முறையை குற்றமாக அடையாளப்படுத்த முடியாமல் மௌனித்து வேடிக்கை பார்க்க வேண்டியிருக்கும் மனித அவலம் தொடர்ந்து நிகழ்கின்றது. ‘அரச வன்முறை’ என்பதை வெறும் வார்த்தையாக கடந்து விடமுடியாது; பலகோடி உயிர்களின் ரத்தபலியில் பதிவு செய்யப்பட்ட அரசாங்கத்தின் வெற்றிகளை உள்ளடக்க முயலும் கடவுச்சொல்லாகவே கருதுகின்றேன். இந்த அரச வன்முறையின் ஆரம்பத்தை ஆராய்வோமானால் ‘அதிகாரம்’ என்பதே மையப்புள்ளியாக தென்படுகின்றது. அதிகாரத்தை நிலை நாட்டவே வன்முறை கட்டவிழ்க்கப்படுகிறது. அதிகாரத்தை எதிர்க்கவே போராட்டம் பிறக்கிறது.

அரச வன்முறை நிகழ்த்தப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சில குரல்களும் கேள்விகளும் தொடர்ந்து ஒலித்தவண்ணம் உள்ளன. ‘’பிற மனிதனிடம் வன்முறையை பிரயோகிப்பவன் நல்லவனா? மனிதாபிமானமே இல்லையா? இந்த உலகம் ஏன் இப்படி இயங்குகின்றது?.....’’  மனிதர்களில் நல்லவர்கள் கெட்டவர்கள் என்ற வகைப்பாடு எல்லாம் இல்லவே இல்லை. மனிதனின் அடிப்படை உளவியலை குறுக்குவெட்டுப்பார்வைக்கு உட்படுத்தும் போதுதான் மனிதாபிமானம் எனும் கற்பிதம் உடைபடுகின்றது.

மனிதர்களான நாம்  அடிப்படையில் விலங்குகள்; விலங்குகளான நமக்கு தார்மீக நியதிகள் (morals) சொல்லப்பட்டு பின்பற்ற கட்டளையிடப்பட்டுள்ளன.  கலாசாரம், சமயம், பண்பாடு, மாண்பு, சட்டம் என்று பல வழிகளில் தார்மீக நியதிகள் வழங்கப்பட்டு அதையே பின்பற்றி வருகின்றோம். விலங்குகளின் எண்ணத்தில்  தார்மீக நியதிகளை ஆராய்வதை விட பின்பற்றுதல் சுலபமாக பதிந்து போயுள்ளது. 

உலகத்தின் சகல விலங்குகளின் உளவியலிலும் பதிந்துபோன விடயம் ‘நிலைபெறல்தன்மை’ . ஒரு உயிரினம் தன்னை நிலைபெற செய்வது எப்படி என்றே சிந்திக்கும்.  தான் நிலைபெறுவதற்குரிய தார்மீக நியதிகளையே கற்பிக்கும், போதிக்கும், பின்பற்றும்.  மனித பகுத்தறிவு என்பதே நிலை பெறுவதற்குரிய சிந்தனையை தூண்டுவதில்தான் உருவாகின்றது.  நகர்ந்துகொண்டிருந்த மனித இடம் கூட்டமாக தங்கி வாழ ஆரம்பித்தது ஏன்? நிலைபெறலை உறுதிசெய்யத்தானே !

மனிதன் சமூகப்பிராணியாக கூடி வாழ ஆரம்பித்த போதுதான் அதிகாரத்தின் வழியாக அரசு என்ற அமைப்பாக்கம் உருவானது.  மனித இனம் ‘தக்கன பிழைக்கும்’ என்பதையும் வலியது உயிர்க்கும்’ என்பதையும் அதிகாரத்தின் வழியாகவே அறிந்தும்கொண்டது.  தன் நிலைபெறலுக்காக வலிமையை பிரயோகித்து பிற உயிரினங்களை அதிகாரப்படுத்த ஒரு தரப்புமுனைய, மறுபுறம் வலிமையான உயிரினத்திற்கு  அடிபணிந்து போவதன் மூலமாக தன் நிலைபெறலை உறுதிப்படுத்திக் கொண்டது பிற உயிர்கூட்டம்.

அன்றைய உலகில் உடல் வலிமை மிக்கவர்கள் வலியவர்களாக  பார்க்கப்பட்டு அதிகாரம் அவர்களிடத்தே  நிலைபெற்றது. பின்னர் உடலை காட்டிலும் அறிவின் பலம் நிலை பெற அறிவின் வழியே உலகம் அடித்துக் கொண்டது. இன்று உலகம், வலிமையின்  விடத்தோ அறிவின் விடத்தோ இல்லை. வணிகர்களின் வசமிருக்கின்றது. வணிகர்களின் தீர்மானங்களுக்கு அரச இயந்திரம் செயற்படுகிறது. அத்தகைய அரச அதிகாரத்தின் வேர்கள் உலகம் முழுவதும் படர்ந்து பரவியிருப்பதை தொடர் வன்முறை நிகழ்வுகளினால் நாம் அறிந்துகொள்ளமுடியும்.


மனித உளவியலின் படி, பிற உயிர் மீது அதிகாரத்தை செலுத்துவதும் வன்முறையை நிகழ்த்தி அந்த உயிரின் தவிப்பை ரசிப்பதும் போதைக்கு நிகராக மனிதனை அடிமைப்படுத்தும் செயலாகும். மனிதர்களின் உளவியலுக்கும் அதிகாரத்தின் போதைக்குமுள்ள இணைப்பின் விளக்கத்தை மிக எளிமையாக முன்வைத்த திரைப்படம்தான்  ‘’The Experiment’’.


1971 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட Stanford prison experiment நிகழ்வை மையப்படுத்தி எழுத்தாளர் Mario Giordano, ''Black Box '' என்ற பெயரில் ஒரு நாவலை எழுதினார். இந்த நாவலை அடிப்படையாக கொண்டு 2001 ஆம் ஆண்டில் Das Experiment என்ற ஜேர்மனிய திரைப்படம் வெளியானது. அத்திரைப்படத்தை இயக்குனர் Paul T. Scheuring ரீமேக் செய்து The Experiment என்ற பெயரில் இயக்கினார்.

The Experiment திரைப்படத்தில், ஒரு உளவியல் பரிசோதனைக்காக வெவ்வேறு குண இயல்புகள், வாழ்க்கை சூழல்கள் கொண்ட மனிதர்களை, வடிவமைக்கப்பட்ட சிறையில் அடைத்து அதில் சிலரை சிறை அதிகாரிகளாகவும் ஏனையோரை சிறைக்கைதிகளாகவும் மாற்றி கண்காணிக்கின்றனர். ஆரம்பத்தில் அனைவரும் மிக இயல்பாக இருகின்றனர். ஆனால் நாளாக நாளாக சிறை அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருப்பதையும் அவர்களுக்கிடையில் சமத்துவம் இல்லை என்பதும் உணர்த்தப்பட, மெல்ல மெல்ல அதிகார போதையை உணரத் தொடங்குகின்றனர்.  சிறை அதிகாரிகள், கைதிகள் மீது கண்டிப்பு காட்ட பிரிவினை எழுகின்றது. கைதிகளில் மனஉறுதியும் உடல் வலிமையையும் கொண்டவனாக கருதப்படுபவன் வேண்டுமென்றே மிகக் கொடுமையாக அதிகாரிகளினால் தாக்கப்படுகின்றான். அந்த வன்செயல் அவனை உடலளவிலும் மனதளவிலும் ஒடுக்குகின்றது. அத்துடன் பிற கைதிகளுக்கு அச்சம் உருவாக, அதிகாரிகளுக்கு பணிந்து நடந்தால் மட்டுமே இங்கு நாட்களை கடத்த முடியும் என்பது புரியவைக்கப்படுகின்றது. அனைவரும் இயலாமையோடு தங்களுக்கு பணிந்து போவதை பார்த்து மமதை கொள்ளும் சிறை அதிகாரிகள், அவர்களை மேலும் மேலும் துன்புறுத்தி அதன் மூலம் மகிழ்கின்றனர். வன்செயல்கள் எல்லை மீறி செல்ல, ஒரு கட்டத்தில் சிறைக்கைதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து அதிகாரிகளை எதிர்க்க, வன்முறைகளமாக அந்த சிறைக்கூடம் மாறுகின்றது.   



இந்த படத்தின் சம்பவங்களை சமூகத்தோடு இலகுவாக பொருத்திப்பார்க்க முடியும். அரசாங்கம் மக்களை  சாதாரணமக்கள், அரச அதிகாரிகள் என்று இரண்டு பிரிவாக பிரித்து அவர்களுக்கிடையில் சமத்துவமின்மையை தெளிவுபடுத்துகின்றது. காவல்துறையை மட்டும் எடுத்து நோக்கின் ‘காவல் என்பது உனது வேலை, மக்களை பாதுகாப்பதே உன் பொறுப்பு’ என்று சொல்லப்படுவதற்கு பதிலாக  ‘நீ காவல்துறையை சேர்ந்தவன் உனக்கு அடிபணிந்து பிறர் நடக்க வேண்டும் மறுத்தால் இரும்புக்கரம் கொண்டு அடக்கு’’ என்றல்லவா போதிக்கப்படுகின்றது. காவல்துறையிடம் அதிகாரத்தை அளித்து அதன் போதையை உணர செய்து மேட்டிமைத்தனம், வன்முறைகுணம், கொலையுணர்ச்சி என்று அனைத்தையும் அதிகாரத்தினூடாக ஏற்படுத்துகின்றது  நம் அரசாங்கம். விளைவு, எண்ணற்ற அட்டூழியங்களை நிகழ்த்திய காவல்துறையின் வன்மங்கள், சிறையில்  நிகழ்ந்த உயிர் இழப்புக்கள் என்று மிக நீண்ட பட்டியல்களை தயாரிக்க முடியும்.  

அரசின் அதிகார தார்மீக நியதிகளை பின்பற்றி வருபவர்களுக்கு மன உறுதியும் அறிவும் கொண்டவர்களை பார்க்கையில் இயல்பாய் பதட்டம் எழ அவர்களை துன்புறுத்த ஆரம்பிக்கின்றனர்.  எளிய மக்களின் மீதான ஒடுக்குமுறை பிறரிடம் பயமாக பரவுகின்றது. அந்த பயம் அவர்களின் அதிகார போதைக்கு மேலும் மேலும் ஊக்கமளிக்கின்றது . நிலைபெறல் தன்மை எளிய மக்களை சிதைக்கவும் வலிய / பணக்காரர்களை கண்டால் வாலாட்டி கையூட்டு பெறவும் உந்தித்தள்ளுவதோடு அரசின் வேட்டை நாய்களாக மாற வழிவகுக்கின்றது. இந்திய அரசின் கட்டளைக்கு அடிபணிந்து சொந்த மக்களை சுட்டுக் கொன்ற தமிழக காவல்துறையின் அட்டூழியங்கள் இதற்கு சமகால உதாரணங்கள்.

இந்த அதிகாரத்தையும் அட்டூழியங்களையும் தடுக்க என்ன வழி என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழும். இந்தப்படத்திலும் அந்தக்கேள்வி எழுப்பப்படுகின்றது. கைதிகள் அனைவரும் ஒன்று படுகின்றனர். எதிர்த்து கேள்விகள் கேட்டு கலகம் செய்கின்றனர். அதிகாரிகளினால் தாக்கப்பட, அடங்க மறுத்து கைதிகள் எதிர்க்க, முடிவு பிறக்கிறது.

வாழ்தல் என்பது தனக்கென ஒரு உறையுள், இன தொடர்ச்சிக்கு ஒரு  குடும்பம் மகிழ்ச்சியான  அமைதியான நாட்களை கடத்தும் செயன்முறை என்று நமக்கு போதிக்கபட்டிருகின்றது. அந்த அமைதிக்கு அடிபணிந்து செல்ல பழக்கப்படுத்தப்பட்டிருக்கின்றோம். சமத்துவம் சிதைக்கப்படும் ஒவ்வொரு முறையும் எம் உரிமைகளை முன்வைத்து கேள்வி கேட்பது கட்டாயம்  என்ற தார்மீக நியதியை பின்பற்றுபவர்கள் வன்முறைக்கு எதிராக எதிர்ப்பினை பதிவு செய்வார்கள். உரிமைக்குரல்களே போரட்டங்களாகி போர்களை கண்டு வாழ்தலை உறுதிப்படுத்தியிருக்கின்றது என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

நடைமுறை உலகில் காவல்துறை, இராணுவம் உட்பட பல துறைகள் அரசின் வன்மத்தை செயல்படுத்தும் இயந்திரங்களாகவே தொழிற்படுகின்றன. இந்த இயந்திர வாழ்க்கைக்கு முடிவு ஏற்பட்டு அதிகார அந்தஸ்து அகற்றப்படுகையில் சராசரி மக்களுடன் சென்று வாழ நிர்பந்திக்கபடுக்கையில் அதிகார போதை அற்றுப்போய் நிதர்சனத்தை உணர்ந்துகொள்ள ஆரம்பிக்கின்றனர். இந்த திரைப்படத்தில் இறுதியில் அனைவரும் ஒன்றாக அமர்ந்திருக்கையில் அதிகாரியாக சிறப்பாக பணியாற்றிய  Forest Whitakerக்கு $14,000  பணத்திற்கான காசோலை  தரப்பட்டிருக்கும். அதனை வாங்கியவர் ஒரு சராசரி மனிதனாக சக பயணிகளை பார்க்கையில், வெறுப்பை உமிழும் பார்வையோடு அனைவரும் அவரவர் வாழ்க்கையை பற்றி சிந்திக்க அந்த சராசரி கூட்டத்தோடு தான் கலந்துவிட்டதை ஏற்றுக்கொள்ளவும் மறுக்கவும் முடியாது அமர்ந்திருப்பார். அந்த நிதர்சனத்தை எப்போதும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

அதிகாரத்தை நிலை நாட்டுவதை விட சட்டமும் சமத்துவமும் மக்கள் மயப்படுத்தியே இயங்குதல் வேண்டும் என்பதை அரச அதிகாரிகள் உணர்வதே முதல் தேவை. உரிமை மறுக்கப்படும் தருணங்களில் எதிர்ப்பை பதிவு செய்ய முனைவதே நம் சமூக கடமை. உரிமை கோரி எதிர்ப்பை பதிவு செய்ய மனிதர்களை எதிர்ப்பதன் மூலம் அமைப்பை எதிர்கின்றோம். அமைப்பை தகர்ப்பதன் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்துகின்றோம். மனிதனின் அடிப்படை உளவியல் சொல்லும் ‘’நிலைபெறல் தன்மை’’ என்றுமே மாறப்போவதில்லை. நாமும் அதே மனித விலங்குகள் தான். நமது எதிர்ப்பு குரலும் நமது நிலைபெறலுக்காகவே என்பதை  உணர்வோமாக!

ஜூன் மாத படச்சுருள் - அரச பயங்கரவாத எதிர்ப்பு சினிமா சிறப்பிதழுக்காக எழுதிய கட்டுரை  

Comments

Popular posts from this blog

Dyketactics

ஒரு கோப்பை தேநீரில் கொஞ்சம் காதல் .....