மாற்றத்துக்கான நிரந்தரம் - Gamperaliya



ஒரு தேசத்தின் உடைமைகளில் அந்த நாட்டின் கலைக்கு பெரும் முக்கியத்துவம் உண்டு. பெருவாரியான தேசங்களின் கலைகளில் சினிமாவுக்கு தரப்படும் முக்கியத்துவம் தனித்துவமானது.
உலகளாவிய ரீதியில், சினிமா என்பது கலை மட்டுமல்ல... ஒவ்வொரு நாடும், சினிமாவை மிகப்பெரிய சர்வதேச வணிகமாகவும் அதற்குள்ளே நுட்பமான அரசியல் ஆளுகை தன்மையை ஒளித்து வைத்தும் மறைமுகமாக அறிவுச்சண்டை நிகழ்த்தி வருகின்றது. அந்த வரிசையில் இலங்கை சினிமாவின் நிலை என்ன என்று ஒரு கேள்விகேட்டால், நமக்கு முழுமையான பதிலை சொல்ல முடியாதளவு குழப்பங்கள் இருப்பதால் மௌனமாக புன்னகைத்து மழுப்புவதையே நம் வழக்கமாக கொண்டுள்ளோம். ஆனால் சற்றே அந்த மௌனத்தை கூறுபிரித்து ஆய்வு செய்தால்.... நாம் ஊமைகள் அல்ல... எல்லாமே ஒருவித வெற்று மௌனம் என்பது இலகுவில் புரிந்துவிடுவதோடு, நம் மௌனத்திற்குள்ளே ஓர் அர்த்தபூர்வமான பதில் புதைந்திருக்கின்றது என்ற உண்மையும்  புலப்படும்.

இன்று பல நாடுகள் தங்கள் குரலை படைப்புக்கள் மூலம் அழுத்தமாக பதித்து சர்வதேசத்தின் கவனத்தை பெற்றுவருகையில், அவர்களால் சாத்தியப்படுத்தப்படும் சினிமா ஏன் இலங்கையில் சாத்தியமில்லை என்று சிந்தித்தால், சினிமா பற்றிய அடிப்படை புரிதலும் தேடலும் அற்ற மேம்போக்கான தன்மை காணப்படுகின்றது. கற்றுக்கொள்கின்ற தன்மை, அர்ப்பணிப்புணர்வு, அறிவுசார் தேடல், உலகத்தின்மீதான கவனிப்பு போன்ற அடிப்படை தகைமைகளை கூட நாம் கருத்திற்கொள்ள மறுப்பதினால் சர்வதேச சந்தையில் மட்டுமல்ல நம் மத்தியில் திரையிடக்கூட பொருத்தமற்ற படைப்புக்களை உற்பத்தி செய்து வருகின்றோம்.

இங்கு சினிமா என்று கூறினாலே நம் மத்தியில் பேசு பொருளாக அமைவது அந்த படத்தின் கதைகளும் அதில் வெளிப்படும் கருப்பொருளும் மட்டுமே. ஒரு திரைப்பட விமர்சகராக, ஆய்வாளராக, இயக்குனராக, படைப்பாளியாக நாம் செயற்பட விரும்பினால் சினிமாவின் வடிவத்தை முழுமையாகவும் நுட்பமாகவும் அறிதல் அவசியம். அந்த அறிதலில் மட்டுமே சினிமா என்ற விடயம் நமக்கு புலப்படுகின்றது. 

சினிமா என்பது கலையும் அறிவியலும் கூடிப்பெற்ற குழந்தை என்பதை நாம் மறந்துவிடுகின்றோம். கதை – திரைக்கதை இரண்டுக்குமான வித்தியாசம் என்ன ? திரைமொழி என்றால் என்ன ? என்பதை அறியாமல் ஒரு திரைப்படத்தை உருவாக்க முடியாது. ஒரே ஒரு ஷாட்டை எடுத்தால் அதில் Balance,Lines,Colour,Light,Shapes,Movement,Bloging,Composing,Tools ... உட்பட பல விடயங்கள் உள்ளன. இவற்றை பயன்படுத்தி எப்படி ஒரு காட்சியில் கதை வடிவமைக்கப்பட்டு சொல்லப்படுகின்றது என்பதை பற்றியும்   அதன் emotion எப்படி பார்வையாளர்களுக்கு கடத்தப்படுகின்றது என்பதை பற்றியும்  தெளிவு கொண்டவர்களினால் சினிமாவை உருவாக்கிவிட முடியும். இதனை பற்றிய தெளிவற்றவர்கள் கதைகளை காமிராவில் பதிவு செய்ய முடியுமே ஒழியே அதனை சினிமாவாக மாற்ற முடியாது.  சினிமா விமர்சகர்கள், ஆர்வலர்கள் எனும் போது இவை அனைத்தையும் அறிந்து வைப்பதோடு எதிர்கால நுட்பங்களின் தேவைகளை பற்றிய தெளிவும் இருத்தல்  வேண்டும். படைப்பாளியை விட விமர்சகனுக்கு அதிக புரிதலும் தெளிதலும் இருத்தல் அவசியம்.
மேலைத்தேய சினிமாக்களை பார்த்து சிலாகிக்கும் நாம் அது அவர்களின் இயல்பான படைப்பாக்க பாணி  (ஸ்டைல்) என்று கூறுகின்றோம். அவர்கள் சினிமாவின் வடிவத்தை சரியாக புரிந்துகொண்டு  படைப்புக்களை முன்வைப்பதை நாம் அந்த நாட்டிற்குரிய ஸ்டைல் என்று பொதுமைப்படுத்தி பேசுகின்றோம். ஸ்டூடியோக்களுக்கு ( தயாரிப்பு நிறுவனங்கள்  ) கட்டுப்பட்டு இயங்கும் படங்கள், இருக்கின்ற சினிமா வடிவத்தினை  சிறப்பாக பயன்படுத்துவதையும் சுகந்திர படைப்பாளிகள் அந்த வடிவத்தில் புதிய தேடலை மேற்கொள்வதையும்  அந்த நாடுகளில் வழக்கமாக காண்கின்றோம்.  
இலங்கையை பொறுத்தவரை இந்த வடிவம் பற்றிய புரிதல் ஆரம்பகாலத்தில் மிகச்சிறப்பாகவே படைப்பாளிகளுக்கு இருந்திருக்கின்றன. குறிப்பிட்ட காலத்தின் பின்னர், வடிவம் மற்றும் திரைமொழி பற்றிய முழுமையான புரிதல் அற்ற, இந்திய சினிமாவின் வணிக அந்தஸ்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பினால் பிரதியெடுக்கும் தன்மைக்கு நாம் மாறிவிட்டமையே  இலங்கை சினிமா தனக்கான தனித்துவ அடையாளத்தை உலக அரங்கில் நிலை நிறுத்த தவறியதன் முக்கிய காரணம்.  

இன்று சினிமா துறைக்குள் வருபவர்கள் சிங்கள சினிமா, ஈழ சினிமா என்ற வார்த்தை பிரயோகங்களை தவிர்த்து இலங்கை சினிமா என்ற அடையாளத்தை நாம் பேண ஆரம்பித்தால் மட்டுமே சர்வதேச அரங்கில் நாம் நுழைய முடியும். அடையாளம் ஒன்றாகவும் உள்ளடக்க மொழி என்பது வேறுபடலாம் என்பதையும் நாம் புரிந்து செயற்பட வேண்டும். இலங்கை தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி பேசும் சிந்திக்கும் நபர்கள் அனைவரும் இலங்கையின் சிங்கள மொழிபேசும் பழைய படங்களை அவசியம் பார்த்து அவற்றில் பல விடயங்களை கற்ற வேண்டும். இன ரீதியான பாகுபாட்டு முறைகளை கடந்து சினிமாவை சினிமாவாக நேசிக்க நாம் பழகவேண்டும். இலங்கையில் உருவாக்கப்பட்ட பழைய திரைப்படங்களில் சிங்கள மொழியில் உருவாக்கப்பட்ட படைப்புக்கள் பார்க்கும் போது சர்வதேசத்தை நோக்கிய சினிமாவின் பயணத்திற்கும் திரைமொழியின் தேர்ந்த வடிவத்திற்கும் என்றோ இலங்கை சினிமா உதாரணமாக அமைத்துள்ளது என்பதையும்  அவற்றைப்பற்றி அறியாமலே சினிமா பற்றி குறைப்பட்டுக்கொண்டிருகின்றோம் என்பதை இனியாவது முறையாக  உணர்ந்தால் இலங்கை சினிமாவின் அடுத்த கட்டம் பற்றிய புரிதல் முழுமையாக ஏற்படும். 

இலங்கை சினிமா தன்னிகரற்ற பல படைப்பாளிகளையும் படைப்புக்களையும் கொண்ட திரையுலகம். அதில் முதன்மையானவர் Lester James Peiris. 1919 இல் தெஹிவளையில் பிறந்த லெஸ்டர் ஸ்காட்லாந்தில் மருத்துவம் படித்தவர். சிறுவயதிலிருந்து கிறிஸ்தவ சூழலில் வளர்க்கப்பட்டவருக்கு பாட்டியின் மூலமாகவே சிங்கள பாரம்பரியங்கள் பற்றிய அறிமுகம் ஏற்பட்டது. சார்லி சாப்ளினின் மௌனப்படங்கள் மூலமாக சினிமா அறிமுகமாகியிருந்தாலும் தேசிய சினிமா அப்போது இலங்கையில் இல்லாததால் அவருக்கு சினிமாவில் ஆர்வம் இருக்கவி ல்லை. ஐரோப்பா சென்ற பின்னர் அங்கிருந்த சினிமா துறையின் வளர்ச்சியை பார்த்து முதன்முதலாக அவருக்குள் சினிமா  ஆர்வம் ஏற்பட்டது. அவரைப்போலவே சிந்தனை மற்றும் ஆர்வம் கொண்ட Hereword Jansz இன் நட்பு கிட்டவே இருவரும் இணைந்து திரைப்படங்களை உருவாக்கவேண்டும் என்று தீர்மானித்தனர். 1949 ஆம் ஆண்டு Soliloquy என்ற குறும்படத்தை உருவாக்கினார்கள். அந்த படம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக வந்ததோடு Institute of Amateur and Experimental Film Makers Festival திரைப்படவிழாவில் விருதினையும் பெற்றுக்கொண்டது. அந்த வெற்றி மற்றும் நம்பிக்கை காரணமாக மேலும் மூன்று குறும்படங்களை இயக்கினார்கள். ஐரோப்பிய நண்பர்களுடன் இலங்கை வந்த லெஸ்டர் இலங்கையில் திரைப்படங்களை இயக்க ஆரம்பித்தார். 1955 இல் ‘’ரேகாவ’’ என்ற தனது முதல் திரைப்படத்தை இயக்கினார். லெஸ்டரின் திரை வாழ்வை மட்டுமல்ல இலங்கை சினிமாவின் புதிய மாற்றுப்பாதையை திறந்து வைத்த படம் இது. முதன்முதலாக வெளிப்புற படப்பிடிப்பு நடைபெற்ற திரைப்படம்  உட்பட பல சிறப்பம்சங்களை தாங்கி வெளியான இத்திரைப்படம் கான்ஸ் திரைப்பட விழாவில் போட்டியிட்டமை மாபெரும் கௌரவமாக அமைந்தது.
அந்த படத்தை தொடர்ந்து 1956 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டுவரை Sandesaya,Gamperaliya,Delovak Athara, Ran Salu, Golu Hadawatha,Akkara Paha,Nidhanaya,
Desa Nisa,The God King,Madol Duwa,Ahasin Polawata,Pinhami, Veera Puran Appu,Baddegama,Kaliyugaya,Yuganthaya,Awaragira, Wekande Walauwa,Amma Warune ஆகிய படங்களை கொடுத்து இலங்கை சினிமாவின் கௌரவத்தை நிலைநாட்டியுள்ளார். சர்வதேச விருதுகள் பலவற்றை பெற்று வாழ்நாள் சாதனையாளர் கௌரவத்தை பெற்ற இவரது படைப்புக்கள் அனைத்தும் நாம் அவசியம் கற்றவேண்டிய திரைப்பாடங்கள் ஆகும்.
இலங்கையின் மிகச்சிறந்த உயரிய திரைப்படமாக இலங்கை அரசாங்கத்தினால் இவரது நிதானைய திரைப்படம் முதலிடத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் கம்பெரலிய திரைப்படம் காணப்படுகின்றது. கம்பெரலிய நாவல் இலங்கை முழுவதும் அறியப்பட்ட படைப்பாக இருப்பதால் கம்பெரலிய திரைப்படத்தைப் பற்றி பாப்போம்.

எழுத்தாளர் மார்ட்டின் விக்ரமசிங்க எழுதிய நாவல்களில் ஒன்று கம்பெரலிய. இலங்கை வரலாற்றில் அத்தனை எளிதில் மறக்க முடியாத இந்த நாவலை பலரும் திரைப்படமாக நாடகமாக தொலைக்காட்சி தொடராக உருவாக்கியுள்ளனர். அதில் லெஸ்டரின் இயக்கத்தில்  1963ஆம் ஆண்டு வெளியான ‘’கம்பெரலிய’’ திரைப்படம் காவியத்தன்மை வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
இந்த படத்தின் மூலம் நாம் பலவிடயங்களை கற்றுக்கொள்ளலாம் அதில் முக்கியமான 3 விடயங்கள் எனும் போது....
நாவல்களில் இருந்து உருவாக்கப்படும் திரைப்படங்கள் பற்றிய தெளிவினையும் படத்தில் உள்ளடக்கப்பட்ட நவீனமயமாக்கலின் சமுக பார்வை தொடர்பாகவும் மூன்றாவதும் முக்கியமானதுமான அம்சம் திரைப்பட நுட்பங்கள் தொடர்பாகவும் அறியவேண்டியமை அவசியமாகும்.
உலகளாவிய ரீதியில் இலக்கியங்கள் சினிமாவுக்கான களமாகவே அமைகின்றன எனலாம். ‘தழுவல் திரைக்கதை’ (ADAPTED SCREENPLAY) என்ற பிரிவுக்கும் தழுவல் திரைக்கதை எழுதும் திரைக்கதை ஆசிரியர்களுக்கும் இருக்கும் அங்கீகாரம் அதற்கு சிறப்பான சாட்சி. 
ஒரு நாவலை அப்படியே படமாக்க முடியாது அதன் ஒற்றை கூறினையோ அல்லது ஒரு கதாபாத்திரத்தையோ மட்டும் எடுத்து உருவாக்கப்பட்ட படைப்புக்கள் அதிகம் உள்ளன. தமிழ் சினிமாவில் கூட பெரிய அளவில் வெற்றிபெறாத இந்த தழுவல் திரைக்கதை அமைப்பு இலங்கையில் சிங்கள சினிமாவில் மிக அற்புதமாக கையாளப்பட்டமைக்கு இந்த கம்பெரலிய படம் ஓர் உதாரணம். நாவலில் இருந்த முக்கிய கதாபத்திரங்கள் மற்றும் சம்பவங்களை எடுத்துகொண்டு சிறப்பான திரைவடிவத்துடன் இந்த படம் உருவாக்கப்பட்டடுள்ளது. 

உயர் சமுகத்தை சார்ந்த பெண் நந்தா. அவளை பியால் என்ற படித்த சாதாரண இளைஞன் காதலிக்கிறான். வசதியின்மையால் அந்த காதல் புறக்கணிக்கப்பட்டு நந்தா ஜினதாச என்பவனுக்கு திருமணம் செய்து கொடுக்கப்படுகின்றாள். ஜினதாசவுக்கு உழைக்கும் திறமை இல்லாததால் மனைவியை கைவிட்டு செல்லவேண்டிய நிலை ஏற்படுகிறது. ஒருகட்டத்தில் ஜினதாச இறந்துவிட்டான் என்ற செய்தி வர நந்தா தனித்துபோகின்றாள். வசதியானவனாக மாறிவிட்ட பியால் நந்தாவை இரண்டாவது திருமணம் செய்துகொள்கின்றான். இருவரின் மனநிலையும் முழுமையாக ஒன்றிணையா தருணத்தில் ஜினதாச தற்போதுதான் இறந்துவிட்டான். முன்னர் கேள்விபட்டது தவறான தகவல் என்று தெரியவருகிறது. பியாலுக்கும் நந்தாவுக்கும் சண்டை ஏற்பட பியால் மன்னிப்பு கோர இதுவரை அவர்களுக்குள் இருந்த இடைவெளி மறைந்து காதலிக்க ஆரம்பிகின்றனர். இந்த எளிய கதையை லெஸ்டர் திரைப்படமாக்கிய விதமும் திரையாக்க முயற்சிகளும் புத்தகம் எழுதக்கூடிய அளவிலான பரந்த விடயங்களை உள்ளடக்கியுள்ளது

படத்தின் ஆரம்ப காட்சியில் ஒரு குயவன் மட்பாண்டங்களோடு நடந்துவருவான் முதலில் இயற்கை காட்சிகளை காட்டி அப்படியே நிலையாக இருக்கும் காமிரா குயவன் வந்த பின்னர் அசைய தொடங்கும் . மனிதன் மாற்றங்களை சந்தித்தே பயணிக்கிறான் என்பதை குறியீடாக உணர்த்தி படத்தை ஆரம்பித்திருப்பார் இயக்குனர்.
பெரிய வீட்டின் மகள் நந்தா, அவளுக்கு சாதாரண குடும்பத்தை சேர்ந்த பியால் ஆங்கிலம் கற்றுகொடுக்கும் காட்சி .
நந்தா மீதான காதலை மறைமுகமாக வெளிப்படுத்தும் பியால், கதையில் வரும் இளவரசியை சாதாரண இளைஞன் மணமுடிப்பதை பற்றி கேட்க அது சாத்தியமில்லை என்று மறுக்கின்றாள் நந்தா. பணம் சம்பாத்தித்து வசதியாக மாறினால் அந்த திருமணம் நடக்கும் என்று பியால் கூறுகின்றான். இந்த காட்சியில் முதலில் பியால் நந்தா மற்றும் தாயரை தனித்தனியாக மிட் ஷாட்டில் காட்டுவார்கள். அடுத்து பியால் நந்தா இருவரையும் காட்டும் போது அரசனை பற்றிய பேச்சு வரும்.  ஒரே அளவில் அமர்ந்திருக்க பின்னணியில் தென்னந்தோப்பு காட்டப்படும். அடுத்த ஷாட்டில் திருமணம் பற்றிய வசனம் ஆரம்பிக்கையில் நடுவில் நந்தாவின் தாயார் அமர்ந்திருப்பார். அவர்களது காதலுக்கு தடையாக தாயார் அமைவார் என்பதை கதாபத்திரங்களின் நிலைகளினூடாக காட்டப்படுகின்றது. சினிமாவில் கதாபாத்திரங்களின் அமைவின் அடிப்படையில் என்னமாதிரியான வடிவ நிலை உருவாகின்றது என்பதை நாம் கவனித்தால் வட்ட உரு நிலை அனைத்தும் நன்மை அளிப்பதாகவும் கூர்மையான உருவ நிலை தீமையை உணர்த்துவதாகவும் அமைகின்றன. அதனடிப்படையில் இந்த காட்சியை கவனித்தால் மூவரின் நிலையை கொண்டு முக்கோண அமைப்பு உருவாகின்றது. அதில் அதி கூர்மையான பகுதி தாயாரின் நிலையை காணலாம். தீர்மானிக்கும் சக்தி அவரே ஒரே காட்சியில் புரியவைத்திருப்பார் இயக்குனர் . 






பியால் நந்தாவிடம் நேரடியாக காதலை வெளிப்படுத்தும் காட்சியில் இருவருக்கும் தனித்தனியே க்ளோஸ் அப் வைக்கப்பட்டு தென்னை மரங்களின் நடுவே சூரிய ஒளி ஊடுருவும் காட்சியை அமைய அதன் பின்னரே இருவரும் பேசும் காட்சி இடம்பெறும். காதல் பரவுகின்றது என்பதையும் அந்த காதலை பியாலுக்கு வசதி இல்லை என்பதால் புறக்கணிக்கப்படும் என்பதையும் வேலைக்காரன் வெளியேற சொல்லும் காட்சியின் மூலம் உணர்த்தப்படும்.

தாயாருக்கு காதல் விடயம் தெரியவர கடிதங்களை நந்தா எரிக்கும் காட்சியில் அவளது கைகளின் அசைவு , அமரும் நிலை மற்றும் கடிதங்கள் எரிவது இந்த மூன்றையும் ஒரே ஷாட்டில் வெளிப்படுத்தி வசனங்கள் இல்லாமலே அவளது மனநிலையை புரியவைத்திருப்பார் .


 பியாலின் மனநிலையை வெளிப்படுத்தும் காட்சி ஒரு கவிதையை போலவே படமாக்கப்பட்டிருக்கும் பெரும் கடலை லாங் ஷாட்டில் காட்டி பியால் தளர்ந்துபோய் நடந்துவருவதை காட்டுவார். அலைகள் அவனது கால்களை தொட்டு செல்லும். அடுத்த ஷாட்டில் கடலில் சூரியன் மறைவதை காட்டி சூரியனுக்கு பதில் பியாலின் உருவம் மிட் க்ளோஸில் பதிவு செய்யப்பட்டிருக்கும். பியால் மெல்ல பார்வையாளர்களை நோக்கி முகம் திருப்ப அந்த முகத்தில் துயரத்தின் சாயல் படர்ந்திருக்கும். கடலில் ஒரு சங்கு கிடைக்க அதனை எடுத்து காதில் வைத்து கேட்கையில் ஆரம்ப காட்சியில் உயர் குடும்பத்தை சேர்ந்த பெண்ணை சாதாரணமான ஒருவன் திருமணம் செய்வதை பற்றி நந்தாவுடன் பேசிய வார்த்தைகள் அவனுக்கு கேட்கும். சமுக ஏற்றதாழ்வுகள் ஏற்படுத்திய  காதலின் துயரத்தை வசனங்கள் இன்றி அழகியலாக படமாக்கியிருப்பார் இயக்குனர்.


காதல் தோற்றுப்போன பின்னர் பியால் ஊரை விட்டு செல்லும் காட்சியானது  லெஸ்டரின் திறமைக்கு இன்னொரு சாட்சி. தண்டவாள பாதையில் பியால் தனித்து செல்கையில் ஒரு கிராமத்தான் எதிர்ப்பட்டு பியாலை விசாரிப்பது போல காட்சி அமைத்திருப்பார்.
கிராமத்தை விட்டு கொழும்பு செல்லும் இளைஞன் என்ற கருத்துக்குள்  பல விடயங்களை உள்ளடக்குகின்றார். கிராமத்தானின் பாதை சிறியது. பியாலின் பாதை நீண்டது; அந்த பாதையின் முடிவு காட்டப்படவில்லை. காமிரா அசையாது நிலையாக காணப்பட இருவரது பயணம் மட்டும் இடம்பெறுவதூடாக நவீன மயமாக்கல் என்பதை வெளிப்படுத்த முயலும் கட்டம் இது எனலாம்.  தண்டவாளங்கள் என்பதே  கிராமங்களை,காடுகளை அழித்து அவற்றின் மத்தியில் ஐரோப்பியர்களினால் அமைக்கப்பட்டவை. நவீன மயமாக்கல் கிராமங்களுக்கு மத்தியில் ஊடுறுவியதையும் அதன் முடிவற்ற பாதையூடாக அடுத்த தலைமுறை பயணிக்கின்றது என்பதையும் ஒரே காட்சியில் வெளிப்படுத்தியிருப்பார்.




பெண்பார்க்கவரும் ஜினதாசவின் நேர்த்தியற்ற உடையை பற்றி நந்தா பேசும் காட்சியில் ஜினதாசவின் குணம் பார்வையாளர்களுக்கு உணர்த்தப்படுகின்றது. அவனுடைய பொறுப்பின்மை,அசட்டை தனங்கள் பற்றி பார்வையாளருக்கு புரியவத்துவிட்டு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றார்.
சிலவருடங்களுக்கு பின்னர் குழந்தை பிறக்கும் காட்சியில்... ஜினதாசவின் க்ளோஸ் அப் காட்சியும் நந்தாவின் க்ளோஸ் அப் காட்சியும் இடம்பெறும். ஜனதாச நிம்மதியான மகிழ்ச்சியை வெளிப்படுத்த நந்தா சற்றே வெறுமையான மகிழ்ச்சியை வெளிப்படுத்துவாள். அடுத்து கத்தரிக்கோலை காமிரா ZOOM IN செய்ய மருத்துவர் கத்தரிக்கோலை பார்க்கும் காட்சியில், பின்னணியில் நந்தாவின் அழுகை ஒலிக்கும். துருப்பிடித்த கத்தரியை பயன்படுத்தியதே குழந்தை இறப்புக்கு காரணம் என்று சொல்ல வெற்று தொட்டில் ஜினதாசவுக்கு அருகில் இருக்க அவனிடம் ஒரு வெறித்த பார்வையும் இயலாமையும் வெளிப்படும். நான் ஆரம்பத்தில் சொன்ன வடிவ நிலைகளை பொறுத்தவரை கதாபாத்திர அசைவினைபோலவே பொருட்களிலும் கூர்மையான வடிவங்கள் தீமையையும் வட்ட அல்லது உருண்டை உருவங்கள் நன்மை தருவதாகவும் காட்டப்படும். சாதரணமாக கத்தி என்பது கூர்மையான பொருள். கத்தரிக்கோல் என்பது இரண்டு பக்கமும் கூர்மையான பொருள். மிகபெரிய தீய விடயம் என்றும் இதனை தொடர்ந்து துயர் சூழும் என்பதையும் கத்திரிக்கோலை பயன்படுத்தி அதனை zoom in செய்வதன் மூலம் உணர்த்தியுள்ளனர்.
ஜினதாசவின் வெறுமை நிலையை வெளிப்படுத்தும் காட்சி –
இதற்கு முந்தைய அனைத்து காட்சிகளிலும் ஜினதாச கதாபாத்திரம் வீட்டிற்குள்ளும் வீட்டை சுற்றியும் நடமாடுவதாகவே அமைந்திருக்கும். முதன் முதலாக ஜினதாச வெளிப்புறத்தில் இருக்கும்காட்சியில் குழந்தை இழந்த சோகத்தோடு இருக்க தூரத்தே தாலாட்டுப்பாடல் ஒலிக்கும் . ஒரு தாய் தொட்டிலில் குழந்தையை ஆட்டுவது BACKGROUND காட்சியில் காட்டப்பட  FOREGROUNDஇல் ஜினதாசவின் விரக்தியான முகம் காட்டப்படும் . மனவேதனையுடன் ஒரு நீண்ட பாதையில் நடந்து போவதோடு காட்சி முடியும். இந்த காட்சிகளில் காமிரா நிலையாக இருக்க கதாபாத்திரங்கள் மெல்ல அசையும். இந்த படத்தில் கதாபத்திரங்கள் தோல்வி,வெறுமை,துயரத்தை வெளிப்படுத்தும் தருணங்களில் காமிரா நிலையாக நிற்பதையும் கதாபத்திரங்கள் தொய்வாக அசைவைதையும் நாம் காணலாம். இந்த காட்சியிலும் அதே போல  ஜினதாசவின் வெறுமையும் வேதனையும் நீள்கிறது என்பதையும் அதிலே அவன் தொடர்ந்து பயணிக்கின்றான் என்பதையும் காட்சிபடுத்தியிருப்பார் .

பணமில்லா பிரச்சினை வீட்டில் ஏற்பட நந்தாவுக்கும் சகோதரிக்கும் தர்க்கம் ஏற்படுகையில் சகோதரி, ஜினதாச உழைக்கவில்லை என்பதை பேசிக்கொண்டே எரிந்த விறகினை மேலும் கிளறுவாள். அவர்களது நிலையை ஒரே காட்சியில் குறியீடாக வெளிப்படுத்த அடுத்த காட்சியில் ஜினதாச காணியை விற்று வெளியூர் சென்று விவசாயம் பார்க்க முடிவெடுப்பான். ஜினதாச மற்றும் நந்தா இருவரும் அமர்ந்திருக்கும் நிலையும் ஜினதாச உறங்கிவிட நந்தா குழம்பி விழிப்பதையும் இயக்குனர் காமிரா அசைவுகளில் அழகாக வெளிப்படுத்தியிருப்பார். ஜினதாச ஊரை விட்டு கிளம்புகையில் தென்னை மரங்கள் செழிப்பற்று இருப்பதை காணலாம்.
ஜனதாச அனுப்பும் கடிதத்தில் தனது தனிமையை எழுதியிருக்க அதை காட்சிகளில் இயக்குனர் காட்டியிருப்பார். பரந்த தனிமை நிலையை காட்சிபடுத்திய விதம் அத்தனை நேர்த்தியும் அழகியலும் நிரம்பியது.
பியால் வசதியானவனாக ஊருக்கு திரும்பிய பின்னர் அவனது அசைவில் நடத்தையில் வார்த்தையில் தனது செல்வநிலையை வெளிப்படுத்திக்கொண்டே இருப்பான். வெளியூர் செல்ல நந்தாவின் குடும்பத்தை அழைக்கும் காட்சியில் கதாபாத்திரங்கள் அமர்ந்துள்ள நிலையை கவனித்தால் நந்தா சகோதரி பியால் மூவரை காட்டும் காட்சியில் ஒரு முக்கோண நிலை தென்படும். ஆனால் சமாந்திரமற்றநிலையில் காணப்படும். பியால் தாயார் நந்தா மூவரையும் காட்டுகையில்  பியால் காமிராவுக்கு முன்னும் நந்தாவின் தாயார் பின்னும் அமர்ந்திருக்க ஏற்றத்தாழ்வுகள் அற்றுப்போய் பியால் அவர்களுக்கு முதன்மையானவனாக மாறிவிட்டதை அமரும் நிலையை கொண்டே விளக்கியிருப்பார்.


வெளியூர் சென்றிருக்கையில் வயல் வெளிபார்க்கையில் நந்தாவுக்கு ஜினதாச நினைவு வரும். ஒரு பறவை பறக்க தீ எரிய ஒருவன் தூரத்தே ஒருவன் வருவான். நந்தாவுக்கு கணவனின் கடித வார்த்தைகள் எதிரொலிக்க தூரத்தே வந்தவன் பியாலையும் நந்தாவையும் கடந்து செல்வான் . படத்தின் இறுதிகட்டத்தை வெளிப்படுத்தும் சிறிய காட்சி இது.

ஜினதாச இறந்த செய்திக்கு பின்னர் இரண்டாவது திருமணம் பற்றிய பேச்சு வரும். பத்து வருடங்களுக்கு முன்னர் ஒரு பெண் ஆணுடன் தனித்து பேசுவதே முறையல்ல என்று பேசிய தாயார் இரண்டாவது திருமணத்தை பற்றி பேசுவார். கால மாற்றத்தில் மனநிலை மாறிய விதத்தை காணலாம். ஜினதாசவுடனான திருமணம் பாரம்பரிய திருமணமாக நடந்த நிலையில் பியாலுடனான திருமணம் பதிவு திருமணமாக ஐரோப்பியர்கள் முன்னிலையில் நடைபெறும்.


படத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் வீடு சிதிலமடையும் நிலை காட்டப்படும். கிராமங்கள் எப்படி நவீன மயத்தில் மாற்றங்களை எதிர்நோக்குகின்றது என்பதை ஒவ்வொரு காட்சியிலும் குறியீடாக வெளிப்படுத்தியிருப்பார்கள்.
இறுதிகாட்சியில் பணம் பற்றி பேசியதை எண்ணி மன்னிப்பு கேட்கும் பியால் உன் மீதான காதல் எனக்கு அதிகம் வசதியற்றவன் என்று என்னை நிராகரித்த வேதனை எனக்குள் இருக்கிறது. புறக்கணிப்பால் ஏற்பட்ட கோபம்.. என்று மன்னிப்பு கேட்க அதுவரை நந்தாவுக்கும் பியாலுக்கும் இருந்த திரை விலக பழைய காதலை வெளிப்படுத்தி இணைவதை மனித உளவியல் கூறுகளோடு இயல்பான வசனங்களில் பிரதிபலித்திருப்பர் இயக்குனர்.
இந்த இடத்திலும் நாம் கதாபாத்திர நிலைகளை கவனிக்க வேண்டும். திருமணத்தின் பின்னர் பியால் நந்தா இருவரும் சம நிலையில் இருப்பது போலின்றி  வெவ்வேறு நிலைகளில் அமர்தல் நிற்றல் நிலை காட்டப்படும். இறுதி சண்டையின் போதும் அதே போல் இரண்டு கதாபாத்திரமும் பேச ஆரம்பிக்கும் போது மெல்ல மெல்ல இருவரும் கட்டிலில் அமர்ந்த நிலையில் பேசுகையில் அவர்களின் மனமாற்றம் வெளிப்படுத்தபடும். இந்த இடத்தில் முதல் காட்சியில் இருவரும் ஒரே அளவில் அமர்ந்து பேசி பாடம் படித்ததை நாம் கவனிக்க வேண்டும்.


லெஸ்டர் ஒரு திரை மேதை என்பதை இந்த திரைப்படம் பார்க்கையில் நான் உணர்ந்துகொண்டேன். பத்துவயதிலிருந்து உலக சினிமாக்களை பார்த்த எனக்கு இலங்கை சினிமா பற்றிய ஆர்வம் நீண்டகாலமாக ஏற்படவே இல்லை. உயர்தரம் படிக்கையில் தான் இலங்கை படங்கள் பற்றிய தேடலே ஆரம்பித்தது. உலக சினிமாக்களின் வரிசையில் இலங்கை திரைப்படங்கள் என்றோ இடம்பிடித்திருகின்றன என்பதையும் இன்று சர்வதேசத்தின் கவனத்தை தன் பக்கம் திருப்பிய இயக்குனர்கள் லெஸ்டரின் வழித்தோன்றல்கள் என்பதையும் புரிந்துகொண்டேன்.

சினிமாவில் Foreground, Middleground, Background இந்த மூன்றினை பயன்படுத்தி கதை சொல்ல முடியும் பெரும்பான்மையான படங்கள்  Foreground மற்றும் Background பயன்படுத்தி கதைகளை சொல்வது வழக்கம். இவரது படங்களிலும் அந்த தன்மை காணப்படுகின்றது. வசனங்கள் மூலம் எதை கொடுக்க வேண்டும். கதாபத்திரங்களின் அசைவுகள் எப்படி வெளிப்படவேண்டும் என்பதை மிக சிறப்பாக கையாள்பவர். அதிலும் காமிரா அசைவுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை கவனித்து நேர்த்தியாக கையாண்ட இயக்குனர்களில் ஒருவர். அத்துடன் ஒரு படத்தில் நிலத்தின் கூறுகள் பாரம்பரியம் மக்கள் வாழ்வியலை வெளிப்படுத்துவதில் இலங்கையின் முக்கிய படைப்பாளி. இந்த திரைப்படத்தில் நிலபிரபுத்துவம் , மக்கள் வாழ்வியல் ,கிராமிய மாற்றம் ,பொருளாதார மாற்றம் ,குடும்ப கட்டமைப்பு , பெண்கள் நிலை உட்பட பலவிடயங்களை நமக்கு தெரியப்படுத்துகின்றார்.  
இலங்கை சினிமா துறையில் செயற்பட விரும்பும் அனைவரும் லெஸ்டரின் படங்களை பார்த்து இலங்கை சினிமா என்றால் என்ன என்பதை கற்றுகொள்வது அவசியம். 

திரைப்படம் என்பது கதையும் வசனங்களும் மட்டும் அல்ல ...அதன் அழகியலும் திரைமொழியும் தனித்துவமானது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சி குறைவாக இருந்த காலத்தில் கறுப்புவெள்ளையில் லெஸ்டர் போன்ற இயக்குனர்களினால் காவியங்கள் உருவாக்கப்பட்டன என்பதையும் இன்று சகல வசதிகளுடன் தட்டையான காட்சிகளை பதிவு செய்து வருகிறோம் என்பதையும் நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.  தொழில்நுட்படங்களை கற்று இயக்குனராகிவிட முடியும் படைப்பாளியாக மாறுதல் எளிதல்ல. தன்னையே உருக்கி கலை செய்யும் அர்ப்பணிப்பு கொண்ட கூட்டத்தில் இணைய நம்மில் எத்தனை பேர் தயாராகவுள்ளோம் ?


புதிய சொல் இலக்கிய சஞ்சிகைக்காக எழுதிய கட்டுரை (இதழ் 7)


Comments

Popular posts from this blog

நாயகவிம்பத்தின் சிதைவுகள்