Komaali Kings




கோமாளி கிங்ஸ் திரைப்படத்தை திரையரங்கில் முதல்நாள் காணவேண்டும் என்று எண்ணியிருந்தேன். இயக்குனர் கிங்ரட்ணம் அவர்கள் ஊடக திரையிடலுக்கு வருமாறு அழைத்திருந்தார். அதனால் முன்னரே பார்க்க நேர்ந்தது. அதனடிப்படையில் சில விடயங்களை பதிவு செய்ய விரும்புகிறேன்.

உலக நாடுகளின் திரைப்படங்களை பற்றி பேசுகின்றோம் எழுதுகின்றோம், இலங்கை தமிழ் படங்கள் என்று பெயர் கூறக்கூட முடியாதளவு இருக்கின்றோமே என்ற கவலை நமக்குள் உள்ளது. அந்த நிலையை மாற்ற சுயாதீன படங்கள் மட்டுமே தொழிற்பட்டு வந்த நிலையில், தொழிற்துறை சினிமாவை மீள் கட்டியெழுப்பும் விதமாக வெளியாகவுள்ளது கோமாளி கிங்ஸ் திரைப்படம்.

இலங்கையானது நில அமைவு , அரசியல் மற்றும் மக்கள் வாழ்வியலின் அடிப்படையில், சுயாதீன திரைப்படங்களுக்கான சிறந்த களமாக காணப்பட்டாலும், தமிழ் மக்களை பொறுத்தவரை சுயாதீன சினிமா மீதான தெளிவும் புரிதலும் இல்லாத நிலையில் தமிழக திரைப்படங்களின் வெற்றி, வணிகப்புகழ், அந்தஸ்து, நாயக விம்பம் என்பவற்றின் மீதான ஈர்ப்பும் பிரமிப்பும் கொண்டிருப்பதால் தொழிற்துறை சினிமாவை உருவாக்க வேண்டும் என்ற எண்ணமே பெரும்பான்மையானவர்களிடம் காணப்படுகின்றது.

தொழிற்துறை சினிமாவிற்கான ஆளணியும் வணிக வாய்ப்பும் இல்லாத நிலையிலும் அதனை உருவாக்கி நமக்கென்று சினிமாதுறை அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிலரும் அந்த சினிமாவின் மூலம் புகழும் அங்கீகாரமும் எய்த வேண்டும் என பலரும் இன்று செயற்பட்டு வருகின்றனர். இரண்டு விதமான எண்ணப்பாடுகளையும் வரவேற்கின்றேன் என்றாலும் அதற்காக மேற்கொள்ளப்படும் திரை நடவடிக்கைகள் அனைத்தும் தவறான முறையில் புரிதலற்று அமைந்திருப்பதால் மகிழவோ பாராட்டவோ இதுவரை முடியவில்லை.

கோமாளி கிங்ஸ்-
தொழிற்துறை சினிமாவினை மீள் கட்டியெழுப்புவதற்கு சரியான பாதையில் பயணிக்க முனைந்திருக்கும் முதல் படைப்பு. மிக நீண்ட பாதையில் பயணிக்க முதன்முதலில் எடுத்து வைக்கப்பட்ட சரியான தடம் இதுதான். சினிமாவின் மொழி,வடிவம் என்பதை தாண்டி நமக்கு இக்கால கட்டத்தில் மிகவும் அவசியமான படம் என்ற கருத்தில் எந்த மாற்றமும் இல்லை.

தொழிற்துறை சினிமாவை உருவாக்க போகிறோம்; அதற்காக கஷ்டப்படுகின்றோம்; எங்களுக்கு அங்கீகாரம் இல்லை என்று ஒரு புறமும், சினிமா எல்லாம் சாத்தியமே இல்லை, முட்டாள்களின் செயல் என்று இன்னொரு புறமும் எப்போதும் குரல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. இரண்டு தரப்புமே நம்பிக்கையான ஆரோக்கியமான எண்ணங்களோடு பயணிக்க வேண்டும் என்றே கருதுகின்றேன். நாம் எதையும் புதிதாக உருவாக்க தேவையில்லை. இலங்கையில் தொழிற்துறை சினிமா ஆரம்பகாலத்தில் இருந்தது. சிங்கள,தமிழ் கலைஞர்கள் ஒன்றுபட்டு படங்களை உருவாக்கினார்கள். சிலசமயம் இந்தியக்கலைஞர்களுடன் சேர்ந்து கூட்டிணைவுடன் பணியாற்றினார்கள். இலங்கை நடிகர்களுக்கு ஆளுயர கட்டவுட் வைத்து நாயக விம்பம் போற்றிய கதைகள் இங்கும் நடந்தன. போர்க்கால சூழலில் ஸ்டூடியோக்கள் எரிக்கப்பட்டு கலைஞர்கள் பாதிக்கப்பட்டதோடு அடுத்த தலைமுறை கலைஞர்களாக உருவாக வேண்டியவர்களின் வாழ்க்கை தடம் மாறிச்சென்றதால் தொழிற்துறை சினிமா முடங்கிப்போனது. ஆதலினால் சினிமாவை புதிதாய் உருவாக்க வேண்டும் அது கஷ்டம் சாத்தியமில்லை என்ற எண்ணத்திலிருந்து வெளியேறி புதிதாக நாம் எதையும் உருவாக்கத் தேவையில்லை. மீள் கட்டியெழுப்புதலே நம் பணி...அதை ஒன்றுபட்டு அர்ப்பணிப்புடன் உழைத்தால் அடைய முடியும் என்ற பாசிடிவ் எண்ணம் நமக்கு முதலில் வேண்டும். அதை தலைப்பிலிருந்தே உணர்த்தி மீள் கட்டியெழுப்பும் முயற்சியாக உருவாகிய படமாகத் தான் கோமாளி கிங்ஸ் திரைப்படத்தை பார்கின்றேன்.

தொழில் துறை சினிமாவை மீள் கட்டியெழுப்புதல் ஒரே படத்தில் நடைபெறும் விடயமல்ல. அதற்கான உழைப்பும் அர்ப்பணிப்பும் காலவரையறையற்றது. அங்கீகாரம் புகழ் அடையாளம் என்பவற்றை தாண்டி உத்வேகத்துடன் உழைக்க ஒரு கூட்டமே தயாராக இருக்க வேண்டும். இன்று நாம் உழைப்பதன் பலன் இரண்டு தலைமுறை கடந்த பின்னர் கிடைக்கும் வாய்ப்பும் உண்டு. பலனையும் அங்கீகாரத்தையும் எதிர்பார்க்கா மனநிலையில் நாம் செயற்பட வேண்டும். மற்றவர்களை விட இயக்குனர் கிங் ரட்ணமிற்கு இந்த முயற்சி சாத்தியமானதன் அடிப்படை காரணமே பத்து வருடத்திற்கும் மேலான அவரின் உழைப்பும் அனுபவமும் தான். அந்தவகையில் கோமாளி கிங்ஸ் குழுவினர் முதல் உதராணமாக அமைந்ததில் மகிழ்ச்சி. அத்தோடு எதிர்மறையான கருத்துக்களை முன்வைப்பவர்கள் விமர்சிப்பதும் வசைபாடுவதும் மட்டுமே அறிவு அல்ல என்பதை உணர வேண்டும். 

தமிழ் சினிமாவை போலவே இங்கும் தொழில் துறை சினிமா உருவாக வேண்டும் என்ற எண்ணத்தில், உருவாக்கப்படும் படைப்புக்கள் யாவும் தமிழக சினிமாவின் பிரதியாக வெளிவருவதை காண்கின்றோம். பிரதி எடுத்தல் என்பது ஒரு கலை. அதை அனைவராலும் அத்தனை எழுதில் செய்துவிட முடியாது. தமிழ் திரைப்பட துறையினை பிரதி எடுத்து இலங்கை சினிமாவை படைக்கவே இங்கு பணியாற்றும் பலரும் முயற்சிக்கின்றனர்.
ஏழு கோடி மக்களின் நிலத்திலுள்ள, நூற்றாண்டு வரலாறு கொண்ட தொழிற்துறை அமைப்பை நம் நிலத்தில் பொருத்திப் பார்க்கும் எண்ணமே தவறான திட்டம். சற்றே நகர்ந்து நோக்கினால்.....
கேரள சினிமாவின் அமைப்புக்கூறுகள் நம் நிலத்திற்கும் பொருந்தும் தன்மை உண்டு. மலையாள திரைப்படங்கள் போல குறைந்த முதலீட்டில் மாறுபட்ட கதைகளங்களில் நமக்கான தனித்துவங்களை மையப்படுத்தி படங்களை உருவாக்கும் முயற்சியே நமக்கான அடையாளத்தையும் வெற்றியையும் கிடைக்கச் செய்யும் பாதை !. மலையாள திரைப்பட துறையின் கூறுகளை பிரதி எடுத்து வெளியாகும் படத்தின் உணர்வையே கோமாளி கிங்ஸ் எனக்கு தந்தது. அந்தவகையில் தனித்துவ சினிமாவின் உருவாக்கத்தில் மிகச் சரியான வழிமுறையை கையாண்டு உருவாகியுள்ளது என்ற மகிழ்ச்சியும் நம்பிக்கையும் ஏற்பட்டது.

கோமாளி கிங்ஸ் படத்தின் தனித்துவம் எங்கிருக்கின்றது? தெமட்டகொட தமிழ் பேச்சு வழக்கும் அந்த மனிதர்களின் உடல் மொழியுமே இந்த படத்ததின் தனித்துவம். யாழ்ப்பாணத் தமிழை தவிர்த்து இலங்கையில் வேறுவிதமான தமிழர்களோ மொழிவழக்கோ இருப்பதாக பிற நாட்டவர்கள் இன்னும் சரியாக அறியவில்லை. இலங்கையை தவிர்த்து வேறு நாட்டின் மக்கள் இந்த படத்தை பார்க்கையில் அந்த தனித்துவமே அவர்களை கவனிக்கச் செய்யும். (சென்னை உட்பட பிற இடங்களில் அவசியம் திரையிடப்பட வேண்டும் ). பிரதேச ரீதியான பிரிவினை சினிமாவுக்கு இல்லை என்பதை அழுத்தமாக நிருபித்துள்ளது. அத்தோடு நாயக விம்பங்கள் ஆக்ஷன் ஹீரோக்கள் என்பதை தவிர்த்து நம் அருகாமை மனிதர்களும் அவர்களின் கதைகளும் திரைப்படமாக எடுக்க முடியும் என்ற எண்ணத்தையும் தெளிவாக உணர்த்தியுள்ளது.



திரையில் தெரியும் முகங்கள் -
இலங்கை முகங்களை திரையில் பார்க்கையில் அதில் உள்ள தனித்துவ மகிழ்ச்சி மறக்கமுடியாது.
நடிகர்கள் எனும் போது சினிமாவின் மொழி புரிந்த பயிற்றப்பட்ட நடிகர்கள் தமிழில் இல்லை. சினிமாவை பார்த்தே சினிமா எடுப்பதும் நடிக்க பழகுவதும் இருப்பதால் நமது நடிகர்களின் நடிப்பு திறனை நாமே கவனிக்கவோ ரசிக்கவோ முடியாதளவு ‘உட்புகுத்திய’ நடிப்பையே நாம் கொண்டிருக்கின்றோம். இயல்பு தன்மையை காண முடியாது. ஆனால் இந்த படத்தில் அந்த குறையை ஓரளவு நிவர்த்தி செய்யும் நடிகர்களை நாம் காணலாம். 

இந்தபடத்தில் நான் மிகவும் ரசித்த இருவர், Kamalraj balakrishnan , GK Reginold Eroshon. இருவருமே துணை நடிகர்கள். இயல்பான நடிப்பை வழங்கியவர்கள். இன்னொரு கதாபாத்திரம் நடிக்கும் போது இவர்களுடைய அசைவுகளை கவனித்தால் புரியும்.இயல்பான நடிப்பை இவர்களால் வழங்க முடியும்.

Gajan Kanesshan என்ற ''நடிகனை'' தமிழ் சினிமாவின் ஹீரோ வில்லன் இலக்கணங்களுக்கு உட்பட்டு சிந்திப்பதை விட மாறுபட்ட வேடங்களை உருவாக்கி கொடுத்தால் ஒரு பண்பட்ட நடிகனை நாம் எதிர்காலத்தில் காணமுடியும். 
Niranjani shanmugaraja, Dharshan dharmaraj. இருவருமே சிங்கள படங்களில் கூட்டிணைவுடன் பணியாற்றுபர்கள். சிறிய/ பெரிய கதாபாத்திரங்கள் என்ற வேறுபாடின்றி எந்த வேடமானாலும் சிறப்பாக நடிக்கும் இயல்பை வளர்த்துக்கொண்டால் தன்னை நிலை நிறுத்த முடியும் என்பதை நிரூபித்துக் கொண்டிருகின்றார்கள். 
இந்த படத்தில் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் தொடர்ந்து பட வாய்ப்புக்கள் கிடைத்தால் தங்கள் நடிப்பை மேம்படுத்தி தங்களை அடையாளப் படுத்திக் கொள்வார்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளனர் அனைவரும். 

கோமாளி கிங்ஸ் படத்தின் மீது சினிமாவின் வடிவம் சார்ந்த, திரைமொழி சார்ந்த விமர்சனங்கள் எனக்கிருந்தாலும் 
தொழில் துறை சினிமாவை மீள் கட்டியெழுப்புவதற்கு சரியான முறையில் எடுக்கப்படிருக்கின்றது என்பது என் மகிழ்ச்சி. கோமாளி கிங்ஸ் நல்லதொரு ஆரம்பம், நம்பிக்கைக்குரிய படைப்பு. இதே பாதையில் அடுத்தடுத்து மாறுபட்ட கதைகளும் களங்களும் எடுத்தாளப்பட்டு படங்கள் வர வேண்டும். இனி எடுக்கப்படும் திரைப்படங்கள் சினிமாவின் கூறுகளிலும் கவனம் செலுத்தி எடுக்கப்பட வேண்டும். அவற்றை நாம் திரையரங்கிற்கு சென்று பார்க்க வேண்டும். அந்த படைப்புக்களை விமர்சிக்க சினிமா பற்றிய சரியான புரிதலும் அறிவும் உள்ள விமர்சகர்கள் உருவாக வேண்டும். 

நமக்கு தடைகள் வரும் அனைத்தையும் சவால்களாக எண்ணி கடந்து உருவாக்குவோம் என்ற நம்பிக்கையை விதைப்போம்.
சுயாதீன திரைப்படங்களும் தொழிற்துறை திரைப்படங்களும் சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டு இலங்கை தமிழ் சினிமாவின் அடையாளத்தை பதிவு செய்யும் என்று நம்புவோம்.

Comments

Popular posts from this blog

The Clue:4th Period Mystery

சட்டென நனைந்தது நெஞ்சம்