Exam
முழுமையாக படித்து ,அரைகுறையாக படித்து ,முதல் நாள் இரவில் படித்து ,படிக்காமல் சென்ற பரீட்சைகள் எத்தனை ?படித்த அனைத்தும் மறந்து போய் என்ன எழுதுவது என்று தெரியாமல் தவித்த தருணங்கள் ,
பக்கத்து இருக்கையிலிருந்து பதில் வேண்டி எதிர்ப்பார்த்த நேரங்கள் ,
எரிச்சலோடு சில திருட்டு தனங்களை சகித்த பொழுதுகள் , பொறாமையோடு நன்றாக எழுதுபவரை பார்த்து மனதில் திட்டியது , பரீட்சை தாளில் கடிதங்களையும் கவிதைகளையும் கிறுக்கி தள்ளியது.
இப்படி பரீட்சை,பரீட்சை நிலைய அனுபவங்கள் தனி சுவாரஸ்யம்
பரீட்சையை மையப்படுத்தி ஒரு திரைப்படம் அதுவும் மிக மிக சுவாரஸ்யமான திரைக்கதையுடன் உருவான ஒரு திரைப்படம் இருக்கிறது . அந்த படம் தான் Exam
ஒரு மிகப் பெரிய நிறுவனத்தின் C .E .O பதவிக்கு பல கட்ட தேர்வுகள் முடிந்து கடைசி தேர்வு நடைபெறுகிறது.
கடைசி தேர்வில் பங்கு பற்றுபவர்கள் 8 பேர்.
ஜன்னல்கள் இல்லாத மிக சிறிய மூடிய அறையில் அவர்கள் அனைவரும் அமர்த்தப்படுகிறார்கள் .
அவர்களுக்கு ஒரு பரீட்சை தாளும் பென்சிலும் வழங்கப்படுகிறது.
பரீட்சை நடத்துபவர் வந்து பரீட்சைக்கான நிபந்தனைகளை கூறுகிறார் .
நிபந்தனைகள்
1.பரீட்சை நடைபெறும் அறையை விட்டு வெளியேறக்கூடாது
2.பரீட்சை ஆரம்பித்த பின்னர் தன்னை தொடர்புகொள்ள முடியாது
3.பரீட்சை தாளை தெரிந்தோ தெரியாமலோ சேதப்படுத்தகூடாது
இவற்றை மீறினால் தேர்வில் இருந்து நீக்கப்பட்டு வெளியேற்றப்படுவிர்கள்
ஒரே ஒரு கேள்விதான் தரப்பட்டுள்ளது அதற்கு ஒரே ஒரு விடைதான் எதிர்பார்க்கபடுகிறது என்றும் விடையளிக்க 80 நிமிடங்கள் தரப்படுகிறது என்றும் கூறிவிட்டு வெளியேறுகிறார் பரீட்சை நடத்துபவர் .
பரீட்சை ஆரம்பிக்கிறது பரீட்சை தாளை எடுத்து பார்த்தால் அதில் ஒன்றுமே இல்லை அது ஒரு வெற்றுத்தாளாக இருக்கிறது.
என்ன செய்வது என்று புரியாமல் யோசிக்க ஒரு பெண் மட்டும் அவளுடைய தாளில் எழுத ஆரம்பிக்க பரீட்சைதாளை சேதப்படுத்தியதாக கூறி வெளியேற்றப்படுகிறாள்.
தவறான விடை அளித்தாலும் வெளியேற்றப்படுவார்கள்
கேள்விகளுக்கு பதில் எழுத தெரியாத நிலையில் விடையை கண்டுபிடிக்கும் அவஸ்தையை தான் நாம் அனுபவித்திருப்போம் ஆனால் கேள்வியையும் விடையையும் கண்டுபிடிக்கும் பரீட்சை நடந்தால் ...
ஒவ்வொருவரும் பரீட்சை தாளில் உள்ள கேள்வியை கண்டுபிடிக்க விதவிதமான முயற்சிகளை செய்கிறார்கள் .மாறுபட்ட குணாதிசயங்கள் உள்ள 8 பேரும் தங்களுக்குள் எப்படி முரண்படுகிறார்கள் ,இணைந்து பணியாற்றுகிறார்கள் இறுதியில் யார் அந்த கேள்வியை கண்டுபிடித்தார்?எப்படி கண்டுபிடித்தார் ? அந்த கேள்விதான் என்ன ?
பிரம்மாண்ட படங்களை பார்த்து விட்டு சிலாகிக்கும் ரசிகர்களுக்கு Exam புது அனுபவம்
மிக குறைந்த பொருட்செலவில் படம் உருவாகியுள்ளது .ஒரு அறைக்குள்ளே மொத்தப் படமும் நகர்கிறது. 10 கதாபாத்திரங்கள்.
இவற்றுடன் எப்படி ஒரு சலிப்பில்லாத படத்தை தர முடியும் ? அதுவும் த்ரில்லர் திரைப்படம்.
படம் பார்க்கும் போது 8 பேருடன் இணைந்தது நாமும் அந்த கேள்வியை தேடிபயணப்படுகிறோம்,குழம்புகிறோம்,ஆர்வமடைகிறோம்,சிந்திக்கிறோம்,சலிப்படைகிறோம்,வெறுப்படைகிறோம் ,வேதனைபடுகிறோம்
இப்படி அவர்களுடன் நாமும் இருப்பதாக உணரவைப்பது பெரும் சவால் அதில் சாதித்து காட்டியிருக்கிறார் இயக்குனர் .
1000 பரீட்சைகள் தராத த்ரில்லை இந்த ஒரு Exam தருகிறது.
பார்த்து அனுபவியுங்கள் ...
Comments
Post a Comment