பறக்கிறது இந்தக் காட்டையும் விட்டு






தன்னந்தனியே நிற்கின்றேன் நான்
தலைக்கு மேலே தெரியும் வானம்
என் மனதைப்போல
முற்றிலும் வெறுமையாய் ...

காலணிகளை துறந்து
வெற்றுக்கால்களில் நிற்கின்றேன் நான்
காய்ந்து போய் குத்தும் மணல்கள்
வலிக்கிறது இதயத்தில் ....

என் இயலாமையில் நிறையும் வாழ்க்கை
நிரப்பபடாத இந்த கானகத்தில் ?
என தேடி அலைகின்றேன் நான் ....
நான் தேடி அலைவது என்னை
எனக்கான அடையாளத்தை
அடைவேனா என்னை ?

நரமயமாக்களில்...
தாராளமயமாக்கலில் ...
உலகமயமாக்களில் ...
ஆட்பட்டு போன உங்களுக்கு
காடு என்பதன் பொருள் என்ன ?

வெறும் மரம் சூழ்ந்த பகுதியல்ல காடுகள்
பயங்கர விலங்குகள் நிறைந்த இடமோ
வாழத்தகுதியற்ற உறைவிடமோ அல்ல காடுகள் ...

பல்லாயிரம் வருடமாய் செழித்து நெடிந்துயர்ந்து
வான்தொட்டு நிற்கும் மரங்களும்
செடிகொடி தாவரங்களும்
இருவாச்சிகள் இரவாடிகள் இறைச்சி உண்ணிகள்
பெரிய காட்டுயிர்களும்
புழு பூச்சிகள் பறவைகள் நீருயிர்கள் என
இயற்கை கூறுகள் அனைத்தும் இணைந்த
எண்ணற்ற உயிரினங்களின்
வாழ்வாதரமான அற்புத கட்டமைப்பே
காடு அதுவே எங்கள் வீடு

காடு அது தனி உலகம்
உயிரோட்டமாய் விளங்கும் இந்த உலகைக் காண
இயற்கையை நேசிக்கும்
நாங்களாக வேண்டும் நீங்கள்

என் முன்னே இடிந்து உடைந்த குகைசுவர்
அழைக்கிறது அதன் சன்ன நுழைவாயில்
உள்ளே தெரிகிறது ....கலவியும் பிறப்புமாய் குறிகாட்டும் விதத்தில்
மனிதனின் வயிற்றில் உதிக்கும் சூரியன்
வானில் சிறகு விரிக்கும் பறவைகள்
ஜனிக்கும் குழந்தை
இயற்கையின் இயல்புகள்
வாழ்வின் அத்தனை நொடிகளையும்
தன் கைரேகை மூலம்
தீட்டிவிட்ட ஒரு ஓவியனின் பார்வையில் தெரிகிறது
மறைக்கப்பட்ட மறக்கப்பட்ட
ஒரு இனத்தின் வலிமிகுந்த
வரலாறு!

காடுறை உலகின் கதாநாயகர்கள் போல
வாழ்ந்த வாழ்க்கை எமது
அன்பும் பாசமும் கலந்த வாழ்க்கையில்
மரங்களைப்போலவே நேயம் மிக்க மனிதக்கூட்டம்

இயற்கையின் கூறுகளாய் நாங்கள்
இன்புற்றிருந்த வேளையில்
இராட்ச மின்னல் போல வந்தீர்கள் நீங்கள்

வெளுத்த நாகரிகமாகான்களுக்கு
காட்டுப்பண்பாடு அருவருத்துப்போக
ஆரம்பித்தது அடுத்தக்கட்டம்.

உயிரியல் யுத்தத்தின் ஆரம்பமாய்
நோய்ப் போர்வைகளை வீசி
எம் இனக்குறைப்பை மேற்கொள்ள துடித்தனர்
புது நோய்களுடன் போராட திராணியற்றவர்கள்
மெல்ல மெல்ல செத்து மடிய
தலையெடுத்தது ஆண்டான் ஆட்டம்!

எலும்பைத் தேடி நாய் ஓடுவதுபோல
தேடி அலைந்தனர்
எம் செல்வங்களை...

நாகரிகம் பேசியவர்கள்
தனது வேட்டைக்கு உதவும் நாய்களுக்கு
உணவிடமுடியாத போது
எம் முதியோர்களை கொன்று குவித்து
நாய்ப்பசி தீர்த்த மகான்களே
நம்மில் யார் காட்டு மிராண்டி சமுகம் ?

எங்கள் பழங்குடிப்பெண்களை
வன்புணர்ந்த உங்கள் கோர ஆண்மை!
அதை தடுக்கவந்த கணவன்களை
கொன்றொழித்த உங்கள் பெருமிதங்கள்!

பீரங்கிக்கும் துப்பாக்கி ரவைக்கும் இடையில்
செத்து பிழைத்து வாழ,
ஓடிய நாட்கள்
பொருளற்ற குறியீடுகள் போல
எஞ்சி நின்ற வேளையில்...
அடிமை சங்கிலியால் அலங்கரிக்கப்பட்டோம்.

எங்கள் தங்கத்தை அடைய
சுரங்கத்தில் அடிமையாக்கி
உழைப்பை சாகும் வரை உறிஞ்சிய
வெள்ளைக்கார அட்டைகள் நீங்கள்!

எம் போன்ற பூர்வகுடிகளை
விரட்டியடித்து அபகரித்த நிலத்தில்
செழிக்கிறது
வானுயர்ந்த கட்டிடங்கள்!

எஞ்சியவர்களை காடு சுமந்து நகரங்களில்
வாழப்பழக்கப்படுத்திய அவலங்கள்
உங்கள் பேராசைக்காக அழிக்கப்பட்ட
எங்கள் காடுகளுடன்
அழிக்கப்பட்டன எம் வாழ்வு!

ஓவியங்களுக்கு உரியவர்கள்
அழிக்கப்பட இவை அனைத்தும்
ஊமையாய் நிற்கின்றன.
அந்த விழப்போகும் சிதைந்த சுவர்களைப் போல
எம் நிலை ....

உங்கள் மேலை சீமாட்டிகளின்
கூந்தல் அலங்காரத்துகாய்
ஒடிக்கப்பட்ட சிறகுகள் கொண்ட
பறவையை போலவே
நாங்களும் வாழ்கிறோம்
நாதியற்று .....

காலத்தின் வேர்களை எலும்புகள் மூலம்
அகழ்வாய்வு செய்யும் பொழுதுகளில் ...
தின்று தீர்த்த மிச்சமாய் எம் சுவடுகள்.
அதைக் காண்கையில்
ஒரு வேற்றுகிரக வாசியின் வாழ்வைப் பார்ப்பது போல
விசித்திர உணர்வு மட்டுமே எஞ்சும்
அவர்களுக்கு...

உண்மை மனிதர் குறித்த
அடையாள உணர்வை அழிக்கும்
மனோபாவம்
உன் மரபணு பாய்ச்சலிலும் உண்டு என்பதை
நாம் அறிவோம்

ஒரு சகாப்தத்தை
ஓட ஓட ஒழித்து
உருத் தெரியாமல் அழித்து
ஒடுக்கிவிட்டு
இன்று ஆய்வுகளில் மட்டும்
பெருமையுடன் குறுக்குவெட்டுப்பார்வை பார்க்கிறாய்

எங்கள் நிகழ்வுகள் குறித்த நினைவுகள்
நிலைநிறுத்த வேண்டிய தேவை
யாருக்கும் இல்லை
முக்கியமாக உங்களுக்கு..

ஏழ்மை நிரம்பிய உங்களது வரலாறு ஆழமற்றது.
பணத்தை அஸ்திவாரமாகக் கொண்ட
வியாபார பிரதிநிதிகள் நீங்கள்.
எங்கள் தங்கத்துகாய்
வேட்டை நாய்களை ஏவி
எம்மை காவுகொடுத்து
களவாண்ட உங்கள் வீரதீரங்களை
பறைசாற்றும் வரலாறுகள்.

உங்கள் வரலாற்றுக்கு எப்பொழுதுமே
நியாயம் தேவையற்றது என்பது
எழுதப்படாத சட்டமோ ?
வரலாற்றில் எம்வாழ்க்கை
ஒற்றை அத்தியாயம் மட்டுமே
அச்சுமையால் எழுதப்படவில்லை
எங்கள் செங்குருதி மையால் எழுதியவை.

உங்கள் பூட்சுகளால் சிதைவுண்ட
நிறைவுற்ற வாழ்க்கையின்
வலியும் துயரும் யாருக்கும் புரிவதில்லை

எங்களை அடிமையாக்கி
பெண்கள், சிசுக்களை கொன்றொழித்து
எங்கள் தேசத்தை கைப்பற்றிய தினத்தை
விழாவாகக் கொண்டாடுகிறீர்கள்.
எம் மக்களின் துயரமும்
இழைக்கப்பட்ட கொடுமைகளும் மறைக்கப்பட்டு
விரும்பிவந்ததாக சொல்லி சித்தரிக்கும்
உங்கள் வார்த்தை வர்ணனைகள்
பிழைக்க வழியின்றி
பஞ்சம் மிக்க தேசத்திலிருந்து
வந்தேறியாய் வந்தவர்க்கு
இருவேளை உணவு
உடுக்க ஓர் உடை
ஒதுங்க ஓரிடம்
கொடுத்த வள்ளல் நீங்கள்
விலங்குகளைப் போல
வேட்டையாடிப் பிடிக்கப்பட்டவர்கள்
எம்மக்கள் என்பதை
யார் அறிவார் ?

உங்கள் வாழ்விடத்திலே
புழு அளவு விலங்குகள் உட்புகுதலையே
ஆர்ப்பரிக்கும் நீங்கள்
எங்கள் இன அழிப்புக்கு
சமாதானம் செய்துகொள்ளச் சொல்லி கூறுதல் மட்டும்
நியாயமா ?

காணுயிர்களின் வாழ்விடங்களின் ஊடேபுகுந்து
அவற்றின் வாழ்வை தடுமாறவைக்கும் உரிமை
எங்கிருந்து பெறப்பட்டது ?

மறந்துவிட்டாய் மனிதா மறந்துவிட்டாய்
உன் இருப்புக்கு ஆதாரப்புள்ளியே
உலகின் நுரையீரல்களான காடுகள்
என்பதை மறந்து
மரங்களுடன் எங்களையும் மரிக்கவைத்துவிட்டாய்

உங்களுக்கும் எங்களுக்குமாய்
பிறந்த சிறார்களை
இராணுவம் கொண்டு
சிறைப்படுத்திய
நாட்களை மறக்க மாட்டோம்!

மனிதத்தன்மை பெருமனம் படைத்தது என்பது
பொய்த்து போனது இன்றுவரை,
எங்களை வாழ அனுமதிக்காத
உங்கள் வல்லரசு தன்மையில் ...

கற்காலம் முதல் இக்காலம் வரை
தொடர்கதையாய் இதே வரலாறு
வெவ்வேறு இடத்தில் ........
வெவ்வேறு விதத்தில் ....
வெவ்வேறு மனிதர்களில் ..

காட்டுவாசி என பட்டமளித்து ஒதுக்கிவைத்த
எமக்காய் பாதுகாப்பு சட்டம்
காட்டுவாசிக்கென இருக்கிறதா காடு ?
காடுகள் மீது இருக்கிறதா எமக்கு உரிமை ?

ஏதோ ஒரு தரிசு நிலத்தை எமக்களித்து விட்டு
எம்மை வளப்படுத்தியதாய் பூரிப்படைகின்றீர்கள்
காடுள்ளவரை நாம் இருப்போம்
காடழிப்புடன் நாம் இறப்போம்
என்பதை அறிந்தும் அறியாதது போல் நடிக்கும்
உங்கள் தேர்ந்த நடிப்பாற்றல் ஈடு இணையற்றது

போர்க்களத்தில் எதிர்கொண்ட
பண்பாடுகள் தோற்றுப்போய்
தன் இயல்பை மாற்றிக்கொள்தல்
காலசாபம்
மாற்றத்துக்கு இடம் கொடுத்து
தோற்க்கும் முரண்பாடுகளின்
முதலீடுகள் நாங்கள்

எங்கள் மாற்றங்கள்
ஒரு நீண்ட மரணத்தின்
முடிவில் எழும் இறுதி உயிர்முச்சைப்போல
இயலாமையுடன் காற்றில் கலந்து கரைகிறது

காடுகொள்ளவும் நாடுகொள்ளவும்
முடியாத நிலை
ஒதுக்கப்பார்வைகளும் அடிமைசங்கிலிகளும்
மாறாத மனிதருடன்
எப்படி ஐக்கியப்படுவது ?

காடுறை உலகத்தை நாடுகளாக்கி
காட்டுவிலங்குகளை வீட்டில் வளர்த்து
அதற்கெல்லாம் டியுசன் வைத்து
நாகரிகம் கற்றுத்தரும் நீங்கள் 
மிருகமாகிவிட்டீர்கள் என்பதை
ஒரு முறை எண்ணிப் பாருங்கள்
அதுவரை புரியப்போவதில்லை
எங்கள் உணர்வுத்தள வெளிப்பாடுகள்

ஆதிவாசி என்றழைத்து
அன்று முதல் இன்று வரை எம் அடையாளத்தை அழித்து
அந்நியப்படுத்துகின்றாய்

இன்று மரங்களில்லா வனவாழ்க்கை
மரத்துடன் சேர்த்து
எம் வாழ்க்கையும் அழிக்கப்பட்டுவிட்டது
எதிர்க்கமுடியாத நிலையில்
ஈனஸ்வரத்தில்
ஒலிக்கிறது எங்கள்
இயலாமையின் குரல்

கூர்நக மிருகங்களால் சிதைந்துபோன கூடுகளில்
எது வென்று தெரியவில்லை என் கூடு
தனிப்பறவையாய் கூடு தேடி அலையும்
பறவைகளாய் எம் ஜீவன்
பறக்கிறது இந்தக்காட்டையும் விட்டு !!!






Comments

Popular posts from this blog

சட்டென நனைந்தது நெஞ்சம்

Departures

The Clue:4th Period Mystery