ஆராத மனக்களிப்போடழுத கண்ணீர் !









எத்தனை கண்ணீர் வாழ்க்கையில் வந்து போனாலும்
ஓர் கண்ணீர்க்கு மட்டும் ஒப்பில்லா உயர்வுண்டு உலகில் -ஏனெனில்
அதுமட்டுமே
ஆராத மனக்களிப்போடழுத கண்ணீர் !

என் கண்முன்னே தெரியும் உலகம்
இன்று மட்டும் ஏதோ விசித்திரமாய் ….
சூன்யப் புள்ளிகளில் சுற்றி திரியும் மனதில்
மெல்ல எழுகின்றது பயத்தின் புகை மடல்கள்
மரண முடிவும் ஜீவ தொடர்ச்சியும்
நிலைபெறும் போது
ஓர் சுழற்சியில் சிக்கி தவிக்கிறது மனது
சிற்றூசிகளை கொட்டிக்குத்தியத்தைப்போல
வயிற்றில் ஓர் பிடிப்பு

முளைக்கத்துடிகும் விதை நேரம் பார்க்கும் பொழுதாய்
நான் தாயாகும் இந்த பொழுது
உடல்வலி ....மன வலி ..எல்லாம் கடந்து
நினைவுகள் நீள்கிறது என் தாயை நோக்கி .....

என் விழிகளுக்குள்ளே
வலிகளைத்தாண்டி
அவள் முகசுருக்கங்களில்
கனவுகளையும் கவலைகளையும் தேக்கி வைத்து
ஏக்கத்துடன் பார்த்த பார்வைகள்
எதுவும் பேசாமல்
மௌனங்கலாலேயே
என் மனம் படித்தவளின்
குரல் என் காதுகளின் அருகாமையில் ...


என் கண்ணே
என்னவளே
என் உயிரில் உதித்த உறவே ....
அழுத்தத்தை உதறி அவிழும் கம்பி சுருலென
எழும் என் தாய்மையின் நினைவுகள்
நீ தாயாகும் பொழுது

உடல் இச்சையில்
இரசாயன ரகசியங்களில்
உயிர்த்த அன்பே

சூன்யத்தில் இருந்து சிறு புள்ளயின் தோற்றம் போல
உன்னில் இதயம் உருவான வேளையில்
அதன் துடிபே என் சங்கீதம்
மெல்ல மெல்ல சதைசாறுகள் கலந்து
சதை பிண்டமாய் நீ கருவில் உருவான வேளையில்
உருவமே இல்லாமல் உள்ளே இருந்த போதும்
மேடிட்ட வயிற்றை தடவித் தடவிப் பார்த்து உணர்ந்திருக்கின்றேன்
உன் லேசான அசைவினால் உன்னை உணர்த்தும் போது
பரவசத்தில் நெகிழ்திருக்கின்றேன்

நீ சிந்திக்க முன்னரே
உன்னை சிந்திந்திதவள் நானடி
அப்பொழுதெல்லாம்
தாய்மையின் பூரிப்பில்
சிலாகிப்புகள் எத்தனை எத்தனை
உன் முகம் காணாவிட்டாலும்
அந்த கற்பனையிலேயே
என் காயங்களை மறந்து காலம் கடத்தியிருகின்றேன்
யாருக்கும் புரியாத மொழியில் உன்னுடனா ன உரையாடல்கள்
மொழி பெயர்க்க முடியா கவிதைகளாய்
அந்த மௌன நிமிடங்கள் மரணத்திலும் தொடர வேண்டும்

உன் சத்தமில்லாத உதைவலிகள்
எனக்கு முத்தங்களாய் இனிதிட்டன
உருளல்கள் வயிற்றில் உலக பந்தின் சுழல்வுகளாய்
அத்தனை வலிகளும் சுகமான சுமைகளாய்

உன்னை கருவில் காக்க அரும்பாடுபட்டேன்
ஆனால்
நீ ஜனிக்க போகையில் மட்டும்
பயமாய் இருக்கிறது கண்ணே
உன்னை நினைத்து...
நீ வாழப்போகும் உலகை நினைத்து...

இதுவரை கருவறை காரிருள் மட்டுமே உன் உலகம்
ஆனால் இனி
இருட்டே உலகமாய் உன் வருங்காலம்
எப்படி காத்திடப்போகிறேன்
என் உயிரே உன்னை

உன் உலகத்தில் நிறையப் பேர்
உண்மைகள் இல்லா பொம்மைகள்
உன் கலையும் கனவுகள் தேக்கிவைக்கபடும்
அதன் கண்களில்

உனக்கு உற்ற துணையாய்
உயிருள்ள பொருட்கள் தரமுடியா
துர்பாக்கியசாலிகள் நாங்கள்
சொந்தங்கள் பந்தங்கள் என்று
பாசமில்லா உறவு சங்கிலிகளில்
உன்னை விலங்கிடும் நாட்கள்
வெகு தூரத்தில் இல்லை

அசுத்த துகள்கள் நிறைத்த காற்று
சில நேரங்களில் சதைதூள் கலந்து
போதைக்கு பஞ்சமில்லா உலகில்
நீ குடிக்க நன்நீரில்லை
ஓட்டை விழுந்த ஆகாயத்திட்குள்
சுட்டெரிக்கும் தீயாய் சூரியக்கதிர்கள்
உன் தேகம் பொசுக்க காத்திருக்கும்
நிழல் வரையும் ஓவியர்களாய் விருட்சங்கள்
இன்று கட்டில் பிரோவாய் உருமாறிவிட்டன
பஞ்ச பூதங்கள் அனைத்தும் வெரும் பூதங்களாய்
மட்டுமே

இதை விடவும் பெரும் பேய்கள் இருக்கிறது இன்னும்
கல்வி எனும் சிறைக்குள்
கைதியாய் நீ வாழ நேர்கையில்
பயமுறுத்தும் பாடத்திட்டங்களில்
பெறுபேறு இயந்திரமாய் உன்னை மாற்ற முயலும் கல்வித்திட்டத்தில்
எங்கே நீ கத்தி தூக்கி விடுவாயோ என்று செத்து பிழைக்கின்றேன்
நட்பு என்ற பெயரில்
திரும்பிய பக்கமெல்லாம் போலிகள்
எப்படி மீட்டிடுவேன் கண்ணே
பாசாங்கு காட்டி பலி எடுக்கும் உலகத்தில்
ரத்தம் சத்தம் யுத்தம் மட்டுமே
நீ நித்தம் காணப்போகிறாய்
உடம்பில் ஓட வேண்டிய குருதி
தெருவில் ஓடும் காட்சிகள்
உன்னை சிறைப்படுத்தி சிந்திக்க சொல்லும் வாழ்க்கைவிதிகள்
உன்னுள் திணித்துவிடும் அடுத்தவர் சுயங்கள்
இளமை வேகத்தில்
அதன் மோகத்தில் தொலையும் நாட்கள்
உன் அமைதியை உண்ணும் பெரும் விரக்தி பூதங்கள்
உன் சிறகுகளை கத்தரித்து உன்னை பறக்க சொல்லி ஏய்க்கும் உலகம்
பூக்களில் கூட இரத்தம் ருசிக்கும் வன்மம்
வானம் வரை வேட்டையாடும் மனித பேராசை
பணத்தால் நிரப்பமுடியா
மன வெருமைகள்
விலங்குகள் கூட எல்லை கடந்து அன்பு செலுத்துகையில்
மனிதர்கள் மட்டும் எலும்பில் உயிர்த்து
இதயத்தில் மரிக்கின்ரர்கள்
தொலைந்து வரும் மனிதம்
தோல்வி நிமிடங்களில் அன்பு நிரப்ப இதயங்கள் இல்லை
துயரங்கள் கடக்க உயரங்கள் தாண்ட
உன்னை அடகு வைக்க வேண்டும் இங்கு
எல்லாவற்றுக்கும் மேலாக உன்னை
ஊர் கூடி கொள்ளை அடிக்கும் திருமண சந்தையில் விற்க
அவஸ்தைபடும் நாட்கள் .....

நீ யாவது நீயாக வாழ பிரார்த்திக்கும் நாட்கள்
மட்டுமே என்னால் முடிந்தவை
இன்றும்
எங்கோ ஓர் மூலையில் கடல் கடந்து வாழும் உன் பற்றிய கனவுகளுடன்
வாழ்கின்றேன்
உன்னை நினைவில் நிகழ்த்திப்பார்த்து காலம் கழிக்கின்றேன்
அந்த நினைவும் கனவும் நீ இல்லாத தனிமையை வெல்ல உதவும் கருவிகள்
என்றாவது உன் முகம் காட்டும் இணணயத்தில்
மயிலிறகின் வருடல்கள்
உன் தாய்மையில் வாழ்கின்றேன் நான் என்பது அறியாயோ அன்பே


அறிகின்றேன்
இந்த தாய்மையில் கண்டேன் உன்னை
நீ சொல்லாத உண்மைகளை
உன் உணர்வுகளை

ஆ ...
ஐய்யோ
அம்மா ...
இதுபோன்றதொரு வலி தானே நீயும் கண்டாய்
என் தலையால் முட்டி
கருப்பை கதவுகளை நான் திறக்க முற்பட்ட போது
எத்தனை தூரம் வலித்திருக்கும்
உனது கருவறை சுவர்கள்
அத்தனை வலிகளையும் எப்படிப் பொறுத்தாய்
உன் பனிக்குடம் உடைத்து கருவறை நனைத்து
இடை பிளந்து உதிரத்தோடு வெளிவந்த இந்த உயிருக்காக தானே
உன் இடை விடாத காத்திருப்புகளும் கண்ணீரும்
மன்னித்து விடு தாயே
உனது சில காயங்களுக்கு நானும் காரணம் என்பதால்

இதோ என்னில் உயிர்த்த உயிர்
பிஞ்சு பாதங்கள் பூமியை முத்தமிடும் வேளையில்
என் விழியோரம் ஈரங்கள்
என் முத்தத்துடன் ஆராத மனக்களிப்போடு அழுத கண்ணீர்
உப்புசுவையுடன் அதன் உதடுகள் ருசி பார்கிறது
தாய்ப்பாலை விட என் கண்ணீரை தான் தந்திருகின்றேன் உனக்கு
பனியை முத்தமிட்டு கொண்டே செடிகளில் தூங்கும் மலரென நீ
இறுதிவரை மனிதனாய் வாழவேண்டும் என்பதே
இத் தாயின் கனவு
கனவுகளோடு தொடங்குகிறது நம் உறவு
தொடரட்டும்
கண்ணீர் கனவுகள்...

Comments

Post a Comment

Popular posts from this blog

சட்டென நனைந்தது நெஞ்சம்

The Clue:4th Period Mystery