Caroline Leaf - நுட்பங்களின் அரசி



பிறப்பின் அடிப்படையில் நாம் ஒவ்வொருவரும் தனியன்கள். ஆனால் நாம் தனியன்களாக பிறந்தாலும் அனைவருடனும் ஒன்றித்து வாழவேண்டிய நிலையே காணப்படுகின்றது.  நமக்கு ஏற்படும் அனுபவங்கள் இன்னொருவர் வாழ்வோடும்  கலந்த  சம்பவங்களாக காணப்படுகின்றன. வாழ்க்கை என்பதே ஒன்றித்து நிகழ்வதாகும். யாராலும் கட்டுப்படுத்தவோ ஏற்படுத்தவோ முடியாத இந்த நிகழ் அதிசயத்தை சினிமாவில்  காண்பியல்  அனுபவமாக தருவதற்கு  வாழ்வின் மீதான அதீத கவனிப்பு ஒரு படைப்பாளிக்கு இருத்தல் வேண்டும். இந்த வாழ்வியல் ஒன்றிப்பை வெளிப்படுத்தும் படைப்புகள், சினிமாவின் மிக அரிதான பொக்கிஷங்கள். Live Action  சினிமாவில் இந்த வாழ்வியல் ஒன்றிப்பை பார்த்ததை விட, அனிமேஷனில் இந்த உயிர்ப்புடன் கூடிய காண்பியல் தருணத்தை ஏற்படுத்தி, பரவசப்படுத்திய  படைப்பாளி Caroline Leaf  (கரோலின் லீப்).

அறிவியலில் பிறந்த கலையே சினிமா. அறிவியல் தொழில்நுட்பங்கள் வழியே படைக்கப்படும் கலை வடிவமாக சினிமாவை காண்கையில், தொழில்நுட்ப சினிமாக்களில் மிக உச்சதன்மையான நிகழ் அதிசயமாக அனிமேஷன் படங்கள் காணப்படுகின்றன. உயிருள்ள ஜீவன்களின் உணர்ச்சிகளை கோட்டுப்படங்களில் பிரதிபலித்து அதன் வழியே, எம்மை புதியதொரு படைப்புலகத்திற்கு அழைத்து செல்வதை என்றும் அதிசயத்தோடுதான் கவனித்து வருகின்றோம். அனிமேஷன் படத்துறையில் ஒவ்வொரு நாடும் தனக்கென்று தனித்துவமான அமசங்களுடன் செயற்பட்டு வருகின்றது. கனேடிய அனிமேஷன்துறை பற்றி கூறுகையில் நினைவில் வரும் பெயர் Caroline Leaf.  கனேடிய அனிமேஷன் துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் புத்தாக்க சிந்தனைகளுக்கும் சொந்தக்காரர் என்பதோடு இன்று அனிமேஷன் துறைக்குள் வருபவர்களுக்கு வழிகாட்டியாக திகழ்கின்றார்.

Caroline Leaf - அனிமேஷன்துறை மரியாதையுடன் உச்சரிக்கும் பெயர். கல்லூரிக்கு செல்லும் வரை சினிமா பற்றிய எந்தக்கனவுகளும் கரோலினுக்கு இருக்கவில்லை. ஆங்கில இலக்கியமும் கட்டிடக்கலையுமே அவரது விருப்பத்திற்குரிய பாடங்கள். கட்டிடக்கலைஞராக வருவதையே பெரிதும் விரும்பினார். கல்லூரியில் துணைப்பாடமாக  அனிமேஷன் கிடைக்க, அதனை படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சாதாரண உருவங்களை கூட சரியாக வரைந்து பழகாதவருக்கு ஓவியங்களை வரைவது கடினமாகவே இருந்தது. அத்துடன் கமெரா அசைவுகளுக்கு ஏற்ப ஓவியங்களை வரைவதெப்படி என்ற தெளிவின்மையால் நிறையவே தடுமாறினார். அவரால் வரையவே முடியாது என பலரும் தீர்மானித்தவேளையில், இயல்பாகவே அவருக்குள் இருந்த புத்தாக்க சிந்தனையால்  ‘’சாதாரண ஓவியங்களை வரைய முடியவில்லை என்றால் புதிதாக வேறுபட்ட வழிகளில் வரைய முடியுமா என்பதை தேட ஆரம்பித்தார். மணல் ஓவியங்களை பற்றி அறிந்து, அதில் தீவிர முயற்சியில் ஈடுபட்டு, கடல் மண்ணைக்கொண்டு வரைய ஆரம்பித்தார். அந்த ஓவியங்களின் வழியாக கதை சொல்ல முயன்றார். மணல் ஓவியங்களினால் தனது முதல் குறும்படத்தை எடுத்துக்காட்ட, கல்லூரியில் அனைவரும் பாராட்டியதோடு புதியதொரு அனிமேஷன் முறையாக ‘’Sand Animation’’ அங்கீகரிக்கப்பட்டு அனிமேஷன் துறையில் மேற்படிப்புக்கான Harvard பல்கலைக்கழகத்தின் புலமைப்பரிசிலும் வழங்கப்பட்டது.

அனிமேஷன் துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணமோ ஓவியங்கள் வரைவதில் மீஉயர் திறனோ கொண்டவர் இல்லை கரோலின். எதிர்பாராமல் கிடைத்த இந்த வாய்ப்பை பற்றி சிந்திக்க ஆரம்பித்தார். அனிமேஷன் படங்களை உருவாக்குகையில் தனக்குள் மகிழ்ச்சியை உணர ஆரம்பித்ததால் தனது மேற்படிப்புக்காக அனிமேஷன் துறையை தேர்வு செய்தார்.

கரோலினின் புத்தாக்க சிந்தனைகள் கல்லூரியிலும் தொடர்ந்தன. Glass Painting, Water color, கண்ணாடியில் பதிக்கப்பட்ட கைரேகை ஓவியங்கள்  போன்ற புத்தாக்க முறைகளை பயன்படுத்தி அனிமேஷன் படங்களை உருவாக்கினார். அனிமேஷன் துறையில் அடுத்தகட்ட மாற்றங்களை ஏற்படுத்தியவரை கனடாவின் தேசிய திரைப்படக்கூட்டுத்தாபனம் முதன்மை அனிமேட்டர்களில் ஒருவராக இணைத்துக்கொண்டது. இன்று பேராசியராகவும் உலகம் முழுவதுமுள்ள அனிமேஷன் மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்ந்து, எண்ணற்ற மாணவர்களை உருவாக்கி வருகின்றார்.

சினிமா எப்போதும் புத்தாக்க சிந்தனைகளால் இற்றைப்படுத்தி வளர்ச்சியடைந்து உயிர்ப்படையும் துறை. கரோலினின் படைப்புலகமும் உயிர்ப்பும் புதுமைகளும் நிரம்பியது. இவரது படைப்புகள்  கதைசொல்லும் முறை, உணர்வுகளின் உள்ளடக்கம் மற்றும் அனிமேஷன் தொழில்நுட்ப முறைகளுக்காக புகழ்பெற்றவை. இவர் இயக்கிய இருபதுக்கும்மேற்பட்ட குறும்படங்களில் The Owl Who Married a Goose(1974) , The Street (1976),The Metamorphosis of Mr. Samsa (1977), Interview (1979), Two Sisters/Entre Deux Soeurs (1990) என்பன உலகப்புகழ் பெற்றவை.

உலகளாவிய ரீதியில் அதிகாரத்திற்கு எதிரான சினிமாகள் பேசப்படுமளவு ஆன்ம ஊடுருவலை ஏற்படுத்தும் படைப்புக்கள் பேசப்படுவதில்லை.  கரோலினின் படைப்புக்கள் ஆன்ம ஊடுருவலை ஏற்படுத்துகின்றன. ‘வாழ்வியல் ஒன்றிப்பு’ என்பதே கரோலினின் படைப்புலகம்.  கரோலினின் படங்களில்  தனித்தனி காட்சிகள் இல்லை. முதல் காட்சியில் நிகழும் சம்பவத்தில் இன்னொரு நிகழ்வு பிணைக்கப்பட்டு தொடர்ந்து ஒன்றிற்குள் ஒன்றாக நிகழ்வுகள் அடுக்கப்பட்டு ஓரிடத்தில்  முற்றுப்பெறுகின்றது.  அந்த தொடர் நிகழ்வுகளில் உருவங்கள், களம், காலத்தின் நிலை, உணர்ச்சிகள், பொருட்கள் உட்பட அனைத்தையும் கரோலின் கையாளும் விதம், படைப்புலகத்தின் வழியே வாழ்க்கையை படைக்கும் நுட்பத்திற்கு சிறந்த  எடுத்துக்காட்டாக அமைகின்றது.

வயிற்றின் மீது கட்டப்பட்ட கைகளில் ஆரம்பிக்கும் The Street குறும்படம்  வயதான பாட்டியின் சிரமத்துக்குரிய சுவாசத்தை காட்டி, அம்மாவின் உருவம், அறையின் சூழல், வெளியறை  மனிதர்கள், யூதக்குடியிருப்பு, தெருவின் அமைப்பு, அன்றைய அரசியல் சூழல்,  பேரனின் செயல்கள், முதியோர் இல்லம், பாட்டியின் இழப்பு, உறவுகளின் சங்கமம் என்று தொடர்ச்சியாக ஒன்றிணைந்த காட்சிகளுடன் மிக நீண்ட உலகத்தை படைத்து பிரமிப்பை ஏற்படுத்துகின்றது. The Metamorphosis Of Mr Samsa குறும்படத்தில் அறைக்குள் அடைக்கப்பட்ட கரப்பான் பூச்சியின் பயமும் தனிமையும் வெளிப்படுத்தப்படுகின்றது. அறைக்குள் கரப்பான் பூச்சியின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக காட்டி, அறைக்கு வெளியே கேட்கும் இசையை பெருமூச்சுடன் செவிமடுக்கும் அதன் காதுகளுக்குள் படத்தை நிறைவு செய்திருக்கும் விதம் பலவிதமான உணர்வுகளை கிளர்ந்தெழ செய்யும் விதமாக அமைந்திருக்கின்றது. இவரது படைப்புலகம் எண்ணற்ற காண்பியல் அற்புதங்களை  உள்ளடக்கியது  என்றால் அதனை, தொழில்நுட்பங்களை தவிர்த்து மணல் குவியல்களினாலும் கைரேகையினாலும் உருவாக்குகிறார் என்பது பெரு வியப்பையே ஏற்படுத்துகின்றது.

கரோலினின் படங்கள், உறவுகளின் உணர்ச்சிமிகு கதைகளை பதிவுசெய்கின்றன. சிறுவயதில் பெற்றோரை பிரிந்து தாத்தா பாட்டியுடன் வாழ்ந்ததால் உறவுகளையும் உறவுகளின் உணர்வுகளையும் நுணுக்கமாக அவதானித்து தனது படங்களில் பிரதிபலிகின்றார்.  ஒரு ஆந்தையும் வாத்தும் திருமணம் செய்தால் ஏற்படுகின்ற சிக்கலை The Owl Who Married a Goose: An Eskimo Legend குறும்படம் வெளிப்படுத்துகின்றது. பொருந்தா திருமணங்கள், பொருந்தா உறவுகளுக்குள் நிகழும் புறக்கணிப்பின் வலியை ஆந்தையின் உணர்வுகளில் பதிவுசெய்த விதம் அற்புதமானதாக காணப்படுகின்றது. The Street குறும்படத்தில் உடல்நலமின்றியுள்ள பாட்டி சீக்கிரம் இறந்தால், பாட்டியின் தனியறை தனக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கும் சிறுவனை காட்சிப்படுத்தியிருக்கிறார். Two Sisters குறும்படத்தில் தனித்துவாழும் முரண்பாடான குணம் கொண்ட இரண்டு சகோதரிகளின் வீட்டிற்கு வரும் மூன்றாவது மனிதனின் வருகைக்கு பின்னர், அவர்களது வாழ்வில் நிகழும் உணர்ச்சிகரமான மாற்றங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

மனித மனத்தின் அகச்சிக்கலை பதிவுசெய்யும் கரோலின், சொந்தமாக கதை எழுதுவதை விரும்புவதில்லை. ஆங்கில இலக்கியம் அவருக்கு விருப்பத்துக்குரிய பாடமாக இருந்ததால் எப்போதும் சிறுகதைகளை அல்லது  நாவல்களில் ஏதேனும் ஒரு அத்தியாயத்தை படமாக்கும் முறையை  பின்பற்றுகின்றார். ‘நான் தேர்ந்தெடுத்த கதைகள் எனக்கான எல்லையை சரியாக வரையறுத்துவிடுகின்றன. அதற்குள் என் உணர்வுகளை எண்ணங்களை வரைகின்றேன். ஒரு கதையின் அர்த்தத்தை தேடுவதே மிகவும் கடினமான வேலை. கதைகளில் உள்ளார்ந்த உணர்வுகளை தேடிப்பயணிப்பது எனக்கு பிடித்திருக்கின்றது.’’ என்கின்றார்.

திரைமொழி மற்றும் படத்தொகுப்பு பற்றிய விதிகளை புறக்கணித்து தனது எண்ணங்களை மட்டுமே பிரதானப்படுத்தி செயற்படுகின்றார். கதையின் மையப்புள்ளியை மட்டும் கருத்திற்கொண்டு கைகளில் மணலை குவித்து, தோன்றும் அனைத்தையும் வரைகின்றார் என்றாலும் புத்தாக்க சிந்தனை என்பதை தாண்டி தனது படத்தின் கதாபாத்திரங்களை கறுப்பு வெள்ளையில் காண்பதை தான் விரும்புவதாக குறிப்பிடுகின்றார். ‘சினிமாவுக்கும் வாழ்க்கைக்கும் வித்தியாசமில்லை. வாழ்வில் நடைபெறும் சம்பவங்கள் ஒன்றோடொன்று இணைந்து நடக்கையில், சினிமாவில் மட்டும் தனித்தனி சட்டகங்களில் காட்சிகளாக அடைப்பதில் உடன்பாடில்லை. படங்களின் கதாபாத்திரங்களை வாழ்க்கையின் நிழல் போல உணர்வதால் இவ்வாறு படைப்பதாகவும் மாற்றத்திற்காக சில குறும்படங்களை  வண்ணங்களினால் உருவாக்கினேன்’’ என்கிறார்.

உலகம் முழுவதும் சினிமாவின் ஆன்மாவை ஊடறுத்து அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி மாற்றங்களை தேடி பயணிக்கும் அரிய படைப்பாளர்கள் சினிமாவின் உயிர்ப்பை எப்போதும் நிலைநிறுத்த முனைகின்றனர். அத்தகைய படைப்பாளிகளின் வரிசையில் கரோலின் லீப்பிற்கான இடம், என்றுமே தனித்துவமானது.

-பவனீதா லோகநாதன்








*அக்டோபர் 2018 அயல்சினிமா இதழுக்காக எழுதிய கட்டுரை 




Comments

Popular posts from this blog

The Clue:4th Period Mystery

சட்டென நனைந்தது நெஞ்சம்