அழுக்கின் ஆவணம்


சுற்றுசூழல் என்றாலே நமக்கு முதலில் நினைவு வரும் விடயம் என்ன? இயற்கை சார்ந்த இடங்கள், அதன் முக்கியத்துவம், சூழலை மாசுப்படுத்தும் வாகனப்புகை, குப்பைகள் உட்பட பல  விடயங்கள்  நம் கண்முன்தோன்றும். இவற்றில், வீதிகளில் வீசப்பட்ட குப்பைகள் அகற்றப்பட்டு அந்த இடம் சுத்தமாக்கப்பட்டால் உடனே பிரச்சினை தீர்ந்தது என்று எண்ணுகின்றோம். ஆனால் நிஜம் வேறு!  

குப்பைகளின் அழிவில்லா ஆயுள் நமக்கு முதல் எதிரி. அன்றாடம் நம் வாழ்வில் பல்வேறுபட்ட  பொருட்களை பயன்படுத்துகின்றோம். இவற்றில் நமது பயன்பாட்டை தவிர்த்து  எத்தனையோ  பொருட்கள் குப்பையாக மாற்றப்பட்டு வீசப்படுகின்றன. வீசப்படும் குப்பைகள் எங்கோ நிறைக்கப்பட்டு விதவிதமான அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதை நாம் சிந்தித்திருப்போமா? நமது இயந்திர வாழ்வை சற்று நிறுத்தி நம்மை சுற்றி என்ன நடக்கின்றது என்பதை அவாதனிக்க சொல்கின்றது இந்த Trashed ஆவணப்படம்.

Candida Brady இன் இயக்கத்தில் பிரபல நடிகர் Jeremy Irons நடித்து 2012ஆம் ஆண்டு வெளியான ஆவணத்திரைப்படம்தான் Trashed. குப்பைகளினால் உணவுச்சங்கிலியிலும் நீர், நிலம், காற்று  உட்பட எமது சுற்றுச்சூழலிலும் ஏற்படும் பாதிப்புகளைபற்றி இதுவரை நாமறியாத உண்மைகளை புலப்படுத்துகின்றது. படத்தின் டைட்டில் காட்சியில் குப்பையாக நாங்கள் வீசும் அசேதன பொருட்களும் அதன் மூலக்கூறுகளும்  காட்டப்படுகின்றது. விண்வெளியிலிருந்து பூமியை காட்டி, குப்பைகள் தேங்கிய நிலப்பரப்பும் கடல்பரப்பும் காட்டப்பட்டு, பரந்த நிலப்பரப்பில் நிறைந்து கிடக்கும் குப்பைகளுக்கு மத்தியில் நடிகர் Jeremy Irons தனது பயணத்தை ஆரம்பிக்கின்றார்.

அன்றைய கால மக்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தனர். காலத்தின் வழியே அபிவிருத்தியும் வணிகமயப்படுத்தலும் அதிகரிக்க அதிகரிக்க இன்று அன்றாட தேவைகளை தாண்டி செயற்கையான பொருட்களின் நுகர்வு எல்லையின்றி நீள்கின்றது. நுகர்வு கலாசாரத்தில் பொருட்களை மட்டும் வாங்கிக்கொண்டிருந்த நாம், காலம் மாற பொதிசெய்யப்பட்ட பொருட்களை வாங்க ஆரம்பித்தோம். ‘PAKING’ எனப்படும் பொதிசெய்தல்முறை  பாதுகாப்பிற்காக என்று சொல்லப்பட்டாலும் அதன் உண்மை காரணம் வேறு.  பொருட்களின் அளவினையும் அதற்கேற விலையையும் தாமே தீர்மானித்த  மேற்குலக முதலாளித்துத்தின் அடையாளமாகும். அதேவேளை இத்தகைய மேலதிக பொதியிடலுக்காக எண்ணற்ற பிளாஸ்டிக், பொலிதீன் பொருட்கள் உருவாக்கப்பட்டு இறுதியில் குப்பைகளாக இந்த உலகத்தில் தேங்குதல், எத்தகைய இன்னல்களை உருவாக்கியுள்ளது என்பதையே இந்த ஆவணப்படம் விரிவாக தெரிவிக்கின்றது. ஒவ்வொரு வருடமும் இவ்வாறு வீசப்படும் பிளாஸ்டிக் போத்தல்களின் எண்ணிக்கை 200 மில்லியன். 58 மில்லியன் பிளாஸ்டிக் கோப்பைகள், பொலிதீன் பைகள் என்று இந்தப்படத்தில் குறிப்பிடப்படுகின்றது. 2012ஆம் ஆண்டு இந்த புள்ளி விபரம் என்றால், தற்போது இதனளவு பல மடங்கு அதிகரித்துள்ளமை பற்றி நாம் உணரவேண்டும்.


பொதியிடலுக்கு பயன்படுத்தப்பட்டும் பிளாஸ்டிக் பொருட்கள் உணவை பாதுகாக்கின்றன என்று கூறப்பட்டாலும் உண்மை அதுவல்ல. ஒவ்வொரு பொதியிடல் உறையையும் எடுத்து பார்த்தால், அதில் அந்த பிளாஸ்டிக்கின் தரமானது குறீயீட்டு இலக்கங்களால் பதிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு இலக்கத்திற்கும் இது எந்த வகையான பிளாஸ்டிக், எத்தனை முறை பயன்படுத்தலாம், மீள் சுழற்சிக்கு ஏற்றதா இல்லையா? நச்சுத்தன்மையின் அளவுகோல் பற்றியும் அறிவுத்தல்கள் உண்டு. ஆனால் இந்த குறியீட்டு இலக்கங்கள் தொடர்பான விழிப்புணர்வு பொதுமக்களுக்கு இல்லை. குளிர்பான போத்தல்கள் ஒரே ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நச்சுத்தன்மை கொண்ட பிளாஸ்டிக்கில் உருவாக்கப்படுகின்ற அதேவேளை தண்ணீர்கேன் பிளாஸ்டிகானது  பயன்படுத்தவே கூடாத, உயிராபத்தை ஏற்படுத்தும் பிளாஸ்டிக்கினால் உருவாக்கப்படுகின்றது. உணவுபொருட்கள் கொண்ட பிளாஸ்டிக் நச்சுத்தன்மை மிக்கதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு என்ற பெயரில் பொதி செய்யப்பட்டு எமக்கு விஷம் வழங்கப்படுவதை உணரவேண்டும். இந்த விஷ பொருட்கள் நாளாந்தம் குப்பையாக வீசப்படுவதன் மூலம் இன்னும் பல்வேறு அபாயங்களை மனித குலமும் இயற்கையும் எதிர்நோக்கி வருகின்றது. படத்தில் வருவது போல பல்பொருள் அங்காடியில் உள்ள பொதியிடப்பட்ட அனைத்து பொருட்களும் அகற்றப்பட்டு இயற்கையான உணவுகள் விற்பனைக்கு வரும் நாள் வரவேண்டும். அப்பொழுதுதான் எதிர்கால சந்ததி ஆரோக்கியமாக வாழ சந்தர்ப்பம் கிட்டும்.

ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் நிலத்தில் வீசும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, ஏதாவது ஒரு இடத்தில் குவிக்கப்படுகின்றது. இப்படி குவிக்கப்படும் இடம், பெரும்பாலும் புறநகர் பகுதியாக இருப்பதால் அங்கு வாழும்  மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுடைய வாழ்க்கை சூழல் இத்தகைய குப்பைகளின் மத்தியில் நிர்ணயிக்கப்பட்டு நோய்மை கொண்ட சமுகமாக வாழும் அவலநிலை அரசாங்கத்தினால் தெரிந்தே ஏற்படுத்தப்படுகின்றது. இவ்வாறு வீசப்படும் குப்பைகளை பல விலங்குகள் உண்ணுகின்றன. கால்நடைகளுக்கான தாவர உணவுகளுக்கு மரங்களோ செடிகளோ அறுகிவிட்ட சூழலில் குப்பைகளை உண்டு வாழ, இசைவாக்கமடைந்து வருகின்றன விலங்குகள். இதனாலும் அவற்றின் உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படுவதோடு அவற்றின் கழிவுகளூடாக கிருமித்தொற்று ஏற்பட்டு நாம் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகின்றோம்.

புறநகர் பகுதிகளையடுத்து, குப்பைகள் குவிக்கப்படும் இடம் என்றால் அது கடற்கரைகள் தான். மக்கள் வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்றன என்பதால் எவ்வாறு கடல்புறத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன, கழிவுநீர் தெரிந்தே கடலில் கலக்கப்படுவது எப்படி என்பதும் இந்தப்படத்தில் காட்டப்படுகின்றது. நோய்களை விரைவாக பரவ செய்வது நீர் என்பார்கள். கடலில் இத்தகைய கழிவுகள் கொட்டுவது பல்வேறு நாடுகளுக்கும் நோய்களை பரவச்செய்கின்ற எளிய வழிமுறையாக அமைகின்றது. கடலில் வீசப்படும் பொலிதீன், பிளாஸ்டிக் பொருட்களை கடல் உயிரினங்கள் உண்ணுவதால் அவை இறப்பதோடு அவற்றின் உருவமானது விகாரமடைவது காட்டப்படுகையில்  அதிர்ச்சியடைகின்றோம். பொலிதீன் பைகளை உட்கொண்ட ஒரு கடலாமையின் உருவம் முற்றிலும் மாற்றமடைந்து வேற்றுகிரக வினோத உயிரிபோல இருப்பதை பார்க்கையில் மனிதர்களின் சுயநலத்தால் ஏதுமறியா எத்தனை உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன என்பதை உணர்கின்றேன். கழிவுகளினால் ஆக்ஸிஜன் தடைப்பட்டு சுவாசிக்க முடியாது இறக்கும் உயிரினங்கள் லட்சக்கணக்கில் இருக்க, கரையொதுங்கிய விலங்குகளை ஆய்வு செய்து பார்த்தால் அவற்றின் உடலில் சமிபாடு அடையாதிருந்த டயர்களும் பிளாஸ்டிக் பொருட்களும் பார்கையில் குற்றஉணர்வு ஏற்படுகின்றது. இந்த கழிவுகளினால் கடலில் பவளப்பாறைகள் போன்ற கடல் வளங்கள் பாதிக்கப்படுவதோடு இனம் புரியாத ஆபத்தான புதிய நச்சு உயிரிகள் தோன்றி இருப்பதும் படத்தில் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இந்த ஆவணப்படத்தை பார்க்கையில் இலங்கையிலும் இதே பிரச்சினை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் எனது குறும்படத்தின் படப்பிடிப்பிற்காக கடலுக்கு அருகாமையில் அமைந்த வீட்டினை தேடுகையில், ஆடம்பர ஹோட்டல்கள் கொண்ட காலிமுகத்திடல் கடற்கரையிலிருந்து கிராமிய தன்மைகொண்ட களுத்துறை கடற்கரை வரை பார்வையிட்டபோது நாங்கள் சந்தித்த மனிதர்களும் கிடைத்த அனுபவங்களும் முக்கியமானவை. அதில் சுற்றுச்சூழல் சார்ந்த மிக முக்கிய பிரச்சினையாக கடற்கரையில் குவிக்கப்படும் குப்பைகளை கருதுகின்றேன். காலிமுகத்திடல் கடற்கரை என்பது மனிதநடமாட்டம் இருக்கின்ற பகுதி, அங்கு குப்பைகள் போடப்பட்டாலும் உடனடியாக அகற்றபடுகின்றது. அங்கிருந்து செல்லச்செல்ல மக்கள் நடமாட்டம் குறைந்து குப்பைகளின் அளவு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதை அவதானித்தோம். நாங்கள் தேர்வு செய்த மக்கள் வசிக்காத வாதுவை கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள் போன்ற எண்ணற்ற குப்பைகளை பார்த்து முதலில் குழப்பமடைந்தாலும், மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதியில் குப்பைகள் குவிக்கப்பட்டிருகின்றன என்பதை புரிந்துகொண்டோம். இதே அனுபவ காலத்தில் குப்பைகளை குவித்து வைத்துள்ள மீதொட்டமுல்ல பிரதேசத்தின் குப்பைமலை சரிந்து விழுந்து மக்கள் பாதிக்கப்பட்டு குடியிருப்புகள் சேதமான சம்பவத்தால் நாட்டில் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.  அதன் பின்னர் குப்பைகளை சேகரிக்கும் துப்பரவுத் தொழிலாளர்களிடம் பேசிய போது ‘’மக்களிடமிருந்து உணவுக்கழிவுகள், காகிதக்கழிவுகள், பிளாஸ்டிக்கழிவுகள் என மூன்று வகையாக பிரிக்கப்பட்டு குப்பைகள்  கொண்டுவரப்பட்டாலும் அதிலுள்ள  இரும்பு, கண்ணாடி மற்றும் நல்ல காகிதங்கள் மீள் சுழற்சிக்கு அனுப்பப்பட்டு ஏனையவை ஒன்றாக இணைத்து அரசாங்கம் எமக்கு வழங்கிய இடங்களில் கொட்டுகின்றோம். குப்பைகளை முழுவதுமாக அகற்ற முடியா நிலையில் தான் நமது நாடு உள்ளது’’ என்றார். ஒரு அபிவிருத்தி அடைந்துவருகின்ற நாட்டில் குப்பைகளை சுத்தம் செய்ய மட்டுமே முடியும் குப்பைகள் அற்ற நாடாக நமது தேசத்தை மாற்ற முடியாது’’ என்பதை நான் தொடர்ந்து சந்தித்து பேசிய மனிதர்கள் குறிப்பிட்டனர். இது ஒரு பிரதேசத்தின் பிரச்சினையோ தேசத்தின் பிரச்சினையோ மட்டுமல்ல. சர்வதேச பிரச்சினை. உலகம் முழுவதும் இதன் தாக்கம் பற்றி தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.

ஐரோப்பிய நாடுகளில் அதிகார படிநிலையில் இறுதிகட்டத்தில் இருக்கும் நாட்டின்  கடலில் குப்பைகள் கொட்டப்படுகின்றது. அதைவிட அதிகமாக  அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் வறுமைகொண்ட பகுதிகளில் அரசாங்கத்தின் அனுமதியோடு இந்தக் குப்பைகள் கொட்டப்படுகின்றன. கழிவுகள்  பெரிய கப்பல்களில் ஏற்றப்பட்டு இத்தகைய நாடுகளின் கடல்பகுதியில் கொட்டப்படுகின்றன. தங்களது தேசத்தை காப்பாற்ற மேற்குலகு நாடுகள் செய்யும் இந்த நடவடிக்கைகளுக்கு பல கீழைத்தேய நாடுகளின் அரசாங்கமும் பணம் பெற்றுக்கொண்டு சம்மதித்து தன் மக்களையே இரையாக்கி வருகின்றது. அத்தகைய நாடுகளில் ஒன்றாக இந்தோனேஷியா இந்தப்படத்தில் காட்டப்படுகின்றது. ஆபத்தான கழிவுகளால் உடல் ஊனத்தோடும், மனவளர்ச்சி இல்லாதும் பிறந்த எண்ணற்ற குழந்தைகளை பார்க்கையில் மனம் கனக்கின்றது.

எண்ணற்ற பாதிப்புக்களை ஏற்படுத்தும் இந்த குப்பைகளை அகற்ற என்னதான் வழி ?
மேற்குலக நாடுகளில் குப்பைகள் தரம் பிரிக்கப்படுகின்றன. பிளாஸ்டிக் பொருட்கள் நைக்கப்பட்டு அவை ஒன்றிணைத்து கனவுரு வடிவில் அடக்கப்படுகின்றன. அவற்றை சீனா மாதிரியான நாடுகளுக்கு மீள் சுழற்சி பொருட்கள் தாயரிக்க ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இன்னும் சில நாடுகளில் கழிவு பொருட்கள் எரிக்கப்பட்டு அவற்றின் புகையை பிரித்து, அதில் கிடைக்கும் சக்தியை மட்டும் பல்வேறு உற்பத்திகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இத்தகைய மீள்சுழற்சி நடவடிக்கைகள் அதிக செலவுகொண்ட செயன்முறை என்பதோடு உலகின் 33% குப்பைகளே இவ்வாறு மாற்றப்படுகின்றன. ஏனையவை உலகில் தேங்கிவிடும் நிலையே காணப்படுகின்றது.

இந்தப்படம் வெளியான ஆண்டு 2012, அக்காலகட்டத்தில் இருந்த குப்பைகளின் பிரச்சனைகளை அடிப்படையாக கொண்டு இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலை கழிவுகள், இரசாயண பொருட்கள், பிளாஸ்டிக், பொலிதீன் என்று பல ஆபத்துகளை பற்றி இந்தப்படத்தில் உள்ளடக்கியிருந்தனர். இன்றைய காலத்தில், இந்த குப்பைகளில் பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் பிரிவாக மருத்துவகழிவுகளையும் இலத்திரனியல் கழிவுகளையும் குறிப்பிடலாம். மருத்துவ கையுறைகள், உடலில் இருந்து எடுக்கப்பட்ட பகுதிகள், இரசாயணங்கள் என்று எண்ணற்ற மருத்துவ கழிவுகள் கடலிலும் கீழைத்தேய நாடுகளிலும் கொட்டப்படுகின்றன. உயிரை காக்கும் மருத்துவ பொருட்களினால் அவை கழிவாக மாற்றப்படுகையில்  எண்ணற்ற அபாயங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. இன்று மில்லியன் கணக்கில் உருவாக்கப்படும் கையடக்க தொலைபேசிகள், கணனிகள், உதிரி பாகங்கள்  பல்வேறு இலத்திரனியல் பொருட்கள் என்பவற்றின் பாவனைக்காலம் முடிவடைந்து குப்பையாக எறியப்படுகையில் அவற்றின் தேக்கம் பாரியதொரு பிரச்சினையை ஏற்படுத்தி வருகின்றன. இந்த இரண்டுவிதமான கழிவுகளின் தேக்கம் தொடர்பாக இன்றைய நிலையில் என்னசெய்வது என்ற குழப்பத்தோடு பல நாடுகள் தீர்வுகளை பற்றி சிந்தித்து வருகின்றன.

உலகம் இப்படி இருக்கின்றது, மேலைத்தேய நாடுகள் ஒடுக்குகின்றன, பெருமுதலாளித்துவம் வளங்களை சுரண்டுகின்றது என்றெல்லாம் ஆதங்கப்படுகின்றோம். குப்பைகள் தொடர்பாக சிந்தித்து பார்த்தால் நாம் ஒவ்வொருவரும் குற்றவாளிகளே. நாம் வீசும் குப்பைகள் இந்த நீர், நிலம், வளி என்பவை கடந்து விலங்குகளையும் பிறமனிதர்களையும் எப்படியெல்லாம் பாதிக்கின்றது என்பதை உணரவேண்டிய தருணம் இது. குற்றமிழைப்பது நாம், தண்டனை எங்கோ  வழங்கப்பட்டுகொண்டிருகின்றது. எமக்கு உயிர்கொடுத்த உலகத்தினை காப்பது நம் கடமை. சிந்திப்போம்.



*ஆகஸ்ட் 2018 படச்சுருள் இதழுக்காக எழுதிய கட்டுரை 

Comments

Popular posts from this blog