மறைமுக பிரச்சாரமும் மாற்றுத்தேர்வும்




ஆட்டோவில் சிக்னலில் பச்சை விழும் வரை காத்திருந்தேன். அந்த நேரம் ஒரு ராணுவவீரர் ஆட்டோக்காரரிடம் அவருடைய டீ-சர்ட்டின் கைப்பகுதியில் இருந்த ராணுவ உடைபோன்ற அலங்காரத்தை சுட்டிக்காட்டி ''அண்ணா தயவு செய்து இதுபோன்ற டிஸைன்களை அணியாதீர்கள், கழட்டச்சொல்வார்கள், அடுத்தமுறை அணியவேண்டாம் கவனமாக இருங்கள்'' என்று அன்போடு சொல்லிவிட்டு சென்றார்.

ஆட்டோக்காரர் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. என்னிடம் திரும்பி ''பாருங்க என்ன ஒரு நன்னடத்தை, என்னை அண்ணா என்று பணிவா அழைத்து இந்த டீசர்ட்டை போடவேண்டாம் என சொல்கிறார். இதே போலீஸ்காரன் என்றால் அவ்வளவுதான். இந்நேரம் கழட்டுடா டீ-சர்ட்டை என்று என்னை அடித்து இழுத்து போலீஸ் ஸ்டேஷன் கொண்டு போயிருப்பான். ஆனால் இவர்கள் எவ்வளவு மரியாதையாக நடந்துகொள்கிறார். என்ன இருந்தாலும் ராணுவத்தினர் மாதிரி வராது'' என்று பெருமிதமாக நான் இறங்கும் வரை பாராட்டி பேசிக்கொண்டே இருந்தார்.

ஈஸ்ட்டர் குண்டு வெடிப்பின் பின்னர், மீண்டும் நாங்கள் நடமாட ஆரம்பித்த பின்னர் சந்தித்த முதல் ஆட்டோக்காரர் ''இனி பயமில்லை... ராணுவம் பாதுகாப்பாங்க... முன்ன எப்படி எங்கள பாதுகாத்தாங்க... ஒரு பிரச்சினை இல்ல... இவனுங்க நடுவுல நாட்டை கெடுத்துட்டாங்க.. இப்ப மறுபடி ராணுவம் வந்தாச்சு.. அவங்க இல்லன்னா இப்ப நீங்களும் நாங்களும் இப்படி ஆட்டோல போக முடியுமா?'' என்று பாராட்டினார். அன்று ஆரம்பித்து இன்றுவரை ராணுவத்தின் புகழ் புராணத்தை தினமும் வெவ்வேறு மனிதர்களிடம் கேட்டு வருகிறேன்.

மருத்துவர் ஒருவர் சீட் பெல்ட் போடாமல் பயணிக்க அவரை நிறுத்தி விசாரிக்கையில் ''உங்களை போன்றவர்கள் எங்களுக்கு முக்கியம். எங்கள் உயிர் உங்கள் கைகைகளில் இருப்பதால் உங்களை பாதுகாக்க வேண்டிய கடமை எனக்கிருக்கிறது. சீட்பெல்ட் போடுவதை மறக்க வேண்டாம். பத்திரமாக சென்று வாருங்கள்'' என அந்த ராணுவ வீரர் தன்னை அனுப்பி வைத்த கதையை நெகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டார்.

அடித்துதட்டு மக்கள், ஆட்டோகாரர்கள், கடைகளை நடத்துபவர்கள், மார்க்கெட்டிங் மேனேஜர்கள், ஊடக துறையினர், விளம்பர துறையினர், அரச அதிகாரிகள், குடும்ப தலைவிகள், மருத்துவர் என எண்ணற்ற மனிதர்களிடம் வெவ்வேறு புகழ் கதைகளை கேட்டுவருகின்றேன்.
நேற்று கால் செயலிழந்த முஸ்லிம் பிச்சைக்காரர் ஒருவருக்கு ராணுவ வீரர் தண்ணீர் புகட்டிக்கொண்டிருந்ததை நான் நேரில் பார்த்தேன்.  

நாங்கள் இத்தகைய நெகிழ்ச்சிகதைகளைதான் விளம்பரமாக எழுதி பொருட்களை விற்பனை செய்ய தூண்டுவோம். அதே டெம்பிளேட்டில் நிஜ சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. எல்லா ராணுவ வீரர்களும் சமுத்திரக்கனிகளாக மாறி அன்பை பொழிந்து சிங்கள மக்களின் மனதை ஈர்த்து வருகின்றனர்.
ஒவ்வொரு ராணுவவீரனதும் அன்பு மொழிகளும் அக்கறை செயல்களும் வருட இறுதியில் இடம்பெறவுள்ள தேர்தலுக்கான ஓட்டுக்களாக மாறக்கூடும். ஊடக விளம்பரங்கள், பத்திரிகை மாநாடுகள், பிரச்சாரங்கள், நடைபயணம் உட்பட ஏனைய பல அரசியல் நடவடிக்கைகளையும் விடவும் இந்த மறைமுக பிரச்சாரம் வலிமையானது.

இலங்கை ஒரு தீவு. தீவுகளில் வாழும் மக்களுக்கு Island mentality எனும் மனநிலை காணப்படும். அந்த மனநிலை காரணமாகவும் நீண்ட கால போரினாலும் பாதுகாப்பற்ற மனநிலையை நாங்கள் கொண்டிருக்கின்றோம். சிறு சம்பவம் நிகழ்ந்தாலும் பதறிதுடித்து நமது இனம், மதம் என ஏதாவது ஒரு அடையாளத்துக்குள் புகுந்துகொள்ள எத்தனிப்பது எமது வழக்கம். ஈஸ்டர் குண்டுவெடிப்பு எங்களுடைய நிலைபெறல்தன்மை மற்றும் பாதுகாப்பு தொடர்பான பதட்டத்தை எம்மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. அதனை மிகச் சரியாக பயன்படுத்தி மக்களை பாதுகாப்பதே பிறவிக்கடமை என அன்புமொழிகளை சொல்லி, அவர்களது ஆழ் மனதில் ராணுவத்தினர் மட்டுமே தீர்வு என நம்பவைக்கும் செயல்பாடுகளே இவையாவும்!

எமது அரசியல் தலைமைகள் ஆளுமையற்ற, முட்டாள்தனம், முரட்டுத்தனம், சுயநலம், குறுகிய பழைமைவாத சிந்தனை கொண்டவர்கள்.  மாற்று தேர்வு என எதுவுமே இல்லாத நிலையில் நாமிருக்கின்றோம்.  அரசியலில் அடுத்த தலைமுறை என்ற அடையாளமே இல்லாத தருணத்தில் எமது வாக்குரிமையை சுய சிந்தனையோடு பயன்படுத்தவேண்டிய கடமை நமக்கிருக்கிறது. செயற்பட தெரியாத முட்டாள்களை விட பாஸிச சிந்தனையுடையவர்கள் ஆபத்தானவர்கள்!

Comments

Popular posts from this blog

காக்கா முட்டை