பெண் சமத்துவம் ?



''மகளிர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது ?
அப்படி என்ன உங்களுக்கு உரிமை இல்லை
பாரதி காலத்தில் உரிமை இல்லை என்று போராடினால் அது நியாயம்
அன்று பெண்கள் அடிமையாக இருந்தார்கள்
இன்று உங்களுக்கு என்ன குறை?
படிக்க முடியும் வேலைக்கு போக முடியும்
விரும்பியபடி பணம் உடை வாழ்க்கைமுறை வசதி வாய்ப்புக்கள் எல்லாம் இருக்கிறது
உடன்கட்டை முறை கூட இல்லை
எப்படி எல்லா கொடுமைகளும் ஒழிந்தாயிற்று
இன்னும் என்ன உரிமை வேண்டும் ?
அடக்குமுறை அடக்குமுறை என்று கூப்பாடு போடுகின்றிர்கள்
பெண்ணியம் பேசுவது இப்ப ஒரு fashion
எப்ப பார்த்தாலும் ஆண்களை குறை சொல்லிக்கொண்டு .....''
இப்படி தொடர்கிறது சிலரின் அங்கலாய்ப்பு ....

இந்த வாரத்தைகளை கேட்ட போது எனக்கு கோபமே வரவில்லை .காரணம் பெண்ணுக்கு உரிமை உண்டு என்று சிந்திப்பது பெரிய விடயம்
அந்த சிந்தையை வரவேற்கிறேன்

முதலில் ஒருவிடயத்தை பதிவு செய்ய நினைக்கிறன்
ஆண்கள் எல்லோரும் தவறானவர்கள்
பெண்கள் எல்லோரும் நல்லவர்கள் என்று நான் கூறவில்லை
இருவரும் மனிதர்கள் சரியும் தவறும் கொண்ட
சராசரி வாழ்வை கொண்டவர்கள் தான் நாங்கள்

ஆண்கள் தவறானவர்கள் அல்ல ....என் வீட்டில் அலுவலகத்தில் நண்பர் கூட்டத்தில் ....எத்தனை அன்பான ஆண்கள் இருக்கிறார்கள் தெரியுமா ?
தவறான பார்வை கூட அவர்களில் நான் கண்டது இல்லை
ஒரு சகோதரியாக நல்ல நண்பியாக என்னை மரியாதையாக நடத்தும் நபர்கள் என்னருகே இருக்கிறார்கள்

அதே சமயம் பெண் உடலை வேட்கையோடு அணுகும்
உணர்வுகளை நசுக்கும், உரிமைகளை புறக்கணிக்கும் நபர்கள் இருக்கிறார்கள் .
அவர்களை பற்றி தான் நாங்கள் பேசுகிறோம்
அந்த பெரும்பான்மை கூட்டத்தை நோக்கிதான் எங்கள் கேள்விகளும் கோபங்களும் தொடர்கிறது ....

மகளிர் தினம் என்பது சம்பளத்துக்கான போராட்டத்தில் ஆரம்பித்த ஒன்று அன்று ஆரம்பித்த அந்த போராட்டம் ஒரு மன்னனை அரியணையிலிருந்து அகற்றுமளவு சக்திவாய்ந்ததாக வளர்ந்தது
அந்த போராட்டத்தில் ஆரம்பித்த சமத்துவத்தின் அங்கமாகத்தான் நாங்கள் இன்று, நீங்கள் மேற்சொன்ன உரிமைகளை அனுபவிக்கிறோம்
அந்த அர்பணிப்பு மிக்க மகளிர்க்கு
அன்று போராடிய அந்த தைரியமான பெண்களை
நினைத்து பார்க்க நன்றி செலுத்த
மேலும் எதையும் தைரியமாக நேர்மையாக எதிர்கொண்டால் எப்பேர்பட்ட விடயத்தையும் சாதிக்கலாம்
பெண்கள் எப்போதும் ஒற்றுமையாக அதை செய்யவேண்டும் என்று
எங்களுக்கு நாங்களே உணர்ந்து கொள்ள தான் இந்த தினம்

பாரதிக்கு முற்பட்ட காலத்தில் பெண்கள் சக்திமிக்கவர்களாக இருந்தார்கள் . எத்தனை பெண் புலவர்கள் அரசவையில் இருந்தார்கள் தெரியுமா ?
எத்தனை வீராங்கனைகள் போர்களத்தில் இருந்தார்கள் தெரியுமா ?
இடைப்பட்ட காலத்தில் பெண் அடிமைத்தனம் வந்தமைக்கு என்ன காரணம் என்று சொல்ல முற்பட்டால் சில சாதிய வேர்களை வெளிபடுத்த வேண்டிய தேவை ஏற்படும் அதை மற்றொரு பதிவில் விரிவாக பார்க்கலாம்

எல்லா பெண்களும் சமைக்க பழக வேண்டும் என்று எதிர் பார்கின்றிர்கள்
ஆண்களுக்கு சமைக்கவும் வீட்டு வேலைகளையும் கற்று தரும் எத்தனை குடும்பங்கள் இங்கிருக்கின்றது?

''ஒரு டீ ஊற்ற தெரியாதாம் ....இந்த லட்சணத்துல பெண் உரிமை பேசுறாங்களாம் '' என்று பேசியவர்கள் இங்கு இல்லையா?
பெண்ணாக பிறந்தவள் சமையல் கற்பது கடமை என்று என்று யார் சொன்னது ?
சமையல் ஒரு கலை அது கடமையல்ல
பெண்களுக்கான கடமையாக கருதும் மனிதர்கள் இல்லையா ?
எந்த ஆணையும் ஏன் சமைக்க தெரியுமா வீட்டு வேலைகள் செய்யதெரியுமா என்று நாங்கள் கேட்பதில்லை
ஆனால் தவறாமல் எல்லா பெண்களையும் கேட்கிறோம் தெரியாது என்றால் எள்ளி நகையாடுகிறோம்
அது ஏன்?

நான் உழைத்து களைத்து வரும் போது என் மனைவி என்னை அன்பாக உபசரிக்க வேண்டும் என்று எதிர்பார்பவர்கள்
நாள் முழுக்க வீட்டில் மனைவியும் வேலை செய்கிறாளே
அவளை உபசரிக்க வேண்டும் என்று எண்ணியதுண்டா ?

சமுக அமைப்பு குடும்ப அமைப்பில் சில மாற்றங்கள் ஏற்பட வேண்டும்
குடும்ப சங்கிலி சமத்துவத்தில் கட்டமைக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த வித்தில் தவறு ?

ஒரு பெண் விரல் நீட்டி பேசக்கூடாது கோபபட கூடாது சத்தம் போட்டு சிரிக்க கூடாது என்று இன்னும் எத்தனையோ குடும்ப கட்டுபாடுகள் நம் மத்தியில் இல்லையா

உங்கள் குடும்பம்சார் தொழில்சார் பெண்களை மட்டும் வைத்துகொண்டு எப்படி எல்லாம் கிடைத்துவிட்டது என்று சொல்லலாம் ?
நீங்கள் மூன்று வேளை உணவருந்தினால் உலகில் பசி பட்டினியே இல்லை. ஏழைகளே இல்லை என்று எப்படி சொல்லுவது ?
தக்காளி திருவிழா ஆரஞ்சி திருவிழா என்று உணவை வீணடிக்கும் நாடுகள் இருக்கும் இதே பூமியில் தான் சோமாலியாவும் இருக்கிறது
இது சமுக ஏற்ற தாழ்வு
பெண் சம்பந்தப்பட்டது சமத்துவ ஏற்றத்தாழ்வு
ஒரு தரப்பு பெண்கள் படித்து நல்ல வேலை, சாதனைகள் என்று முன்னேறும் அதே தருணம்
பாலிய விவாகம் ,மாதம்மை கொடுமை ,விலைக்கு விற்கபடுதல், விலை மாதுவாக மாற்றுதல் , வன்புணர்வு ,ஆசிட் வீச்சு ,பாலியல் வன்முறை ,
மனோரீதியான அடக்குமுறை ,பெண் சிசுக்கொலை , பெண் உடல் உறுப்பு விற்பனை, சிறுவர் துஷ்பிரயோகம் , வார்த்தைகளால் காயப்படுத்தல் ,வரதட்சணை கொடுமை , பெண் கல்வி மறுக்கபடுதல் ....இன்னும் எத்தனையோ நடக்கின்றன .
இவை எல்லாம் இல்லை என்று உங்களால் மறுக்க முடியுமா ?

என் படிப்பு, என் வேலை, என் குடும்பம் என்று இருபவர்கள் இது பற்றி பேச மாட்டார்கள் சமுக அக்கறை உடையவர்கள் பேசுகிறார்கள்
நாட்டில் வறுமை பெருக்கை பற்றி பேசினால் ,
சமுக கட்டமைப்பு அரசியல் சார் எண்ணக்கருக்களை பதிந்தால் விளையாட்டில் தேசம் வெல்லும் என்று ஆர்பரித்தால் ஆனந்தமாக லைக் போட்டு உற்சாக படுத்தும் நீங்கள் எல்லோரும்
ஏன் பெண் சமத்துவம் பேசினால் fashion என்று சொல்கிறார்கள் ?

எனக்கு கிடைத்த எல்லாம் எங்கோ குக்கிராமத்தில் இருக்கும் பெண்ணுக்கு கிடைக்க வேண்டும்.
கல்வி கிடைக்க வேண்டும் வேலை கிடைக்க வேண்டும் அடிப்படை வசதிகள் கிடைக்க வேண்டும் என்று எண்ணுவது எந்த வகையில் தவறு ?
இது போன்று சமுகத்தில் எல்லா மட்ட பெண்களையும் ஒன்று திரட்டி அவர்களுக்கான உரிமையை அவர்களுக்குள்ளாகவே சமத்துவத்துடன் பகிர்ந்தளிக்க தான் பெண் சுயம் பற்றி பேசுகிறோம் , போராடுகிறோம் .

பெண்களுக்கு எதிரி அவர்களுக்குள் இருக்கும் பயம் தயக்கம் அறியாமை தான் அதை எதிர்க்க ஒவ்வொரு பெண்ணும் போராட வேண்டும்
அதன் குறியீடு தான் என் cover photo

முதலில் எங்களை நாங்கள் அறிந்து தெளிந்தால்
எதிர்படும் ஆணாதிக்க ஜென்மங்களை எதிர்க்கலாம்

ஒரு பெண்ணை அடக்க அவளை ஆபாச வார்த்தைகளை சொல்லி திட்டினால் அந்த இடத்தில அழுவதும் அருவருத்து போவதும் பெண்கள் வழக்கம்
ஆனால் ஒரு நிமிஷம் அவனை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்
ஒரு பெண்ணின் மார்பில் கைவைக்க முயலும் ஆணை தைரியமாக தடுக்க வேண்டும் கூனிக்குறுகி அழுது ஓடக்கூடாது

உங்கள் கண் முன்னால் ஒரு பெண்ணை யாரோ ஒருவன் ஆபாச வார்த்தைகள் சொல்லி அல்லது அத்துமீறி தொட முயன்று சில்மிஷம் செய்து ......ஏதோ ஒரு தவறை செய்கையில் நீங்கள் என்ன செய்கிறிர்கள்
ஒரு கணம் சிந்தித்து பாருங்கள்
எங்களை விட அமைதியாக கடந்து போவது ஆண்கள் தான்
அவள் தங்கையாகவோ மகளாகவோ இருக்கும் பட்சத்தில் உங்கள் செய்கை வேறு என்பதை யாம் அறிவோம்
எம் ஜி ஆர் போல ஒரு ஹீரோவை நாங்கள் எதிர்பார்க்கவில்லை
நீங்கள் எங்களுக்காக போராட வேண்டும் என்று கூறவில்லை
பங்கெடுக்க முடியவில்லை என்றால் தடுக்காதீர்கள்
கிண்டல் கேலிகளால் வதைக்காதீர்கள்
கருத்தியல் உடன்பாடு இல்லை என்றால் அமைதியாக வழி விடுங்கள்
எங்கள் பாதையில் குறுகிடாதீர்கள் அதுவே எங்கள் குறைந்த பட்ச எதிர்பார்ப்பு

ஒரு சில கொடுமைகள் மறைந்து விட்டன /மறைகின்றன என்பது உண்மை ,,,இன்னும் மிகுதியாக உள்ள எல்லாமே மறைய வேண்டும் என்பதே எங்கள் எண்ணம் ...
எனக்கு மகளிர் தின 'கொண்டாட்டத்தில்; நம்பிக்கையும் இல்லை உடன் பாடும் இல்லை .

ஆனால் அந்த போராட்டத்தை தியாகத்தை நேர்மையை எல்லா பெண்களுக்கும் விதைக்கும் இந்த தினம் நிச்சயம் அவசியம் தான்

ஒரு பெரிய அரண்மனையின் ஜன்னலை சுத்தபடுத்தி விட்டு அரண்மனையே சுத்தப்படுத்தியதாக கூற முடியாது
அது போல தான் ஒரு தரப்பு பெண்களுக்கு கிடைக்கும் உரிமையையும் சுகந்திரத்தையும் வைத்துக்கொண்டு பெண் சமத்துவம் கிடைத்ததாக சொல்ல முடியாது
நீங்கள் எவ்வளவு கேலி கிண்டல் கேவலபடுத்தினாலும்
நாங்கள் பின்வாங்க மாட்டோம்
உங்களை எதிர்ப்பது எங்கள் தேவையல்ல
எங்களை ஒன்றுபடுத்தி முன்னேற்றுவது தான் எங்கள் இலக்கு
பெண்களுக்குள் சமத்துவம் வரும் வரை எங்கள் குரல் அடங்காது ....
அதுவரைபதிவுகள் தொடரும் ....

Comments

Popular posts from this blog

The Clue:4th Period Mystery

Balut Country