அன்றும்... இன்றும்... என்றும்...



7.35க்கு அலுவலகத்திலிருந்து வெளியே வந்தேன் ...
தெருமுனையை கடக்க முன்னர் சைக்கிளில் வந்தவன் 
சொன்ன அரைகுறை ஆபாச வாசகம் காதில் விழுந்தது 
தொடர்ந்து நடந்தேன் ....

பேருந்தில் நடந்துனர் பணம் வாங்கும் சாக்கில் 
கைகளை தொட முயன்றார்.என் பக்கத்தில் நிற்கும் பெண்ணுக்கு மிகுதி பணம் கொடுக்கும் சாக்கில் உடலில் படுமாறு கைகளை நீட்ட முயன்றதை
மெல்ல நகர்ந்து கைப்பையால் தடுத்துக்கொண்டு பயணத்தை தொடர்ந்தேன்

நிறுத்தத்தில் இறங்கி நடந்தால் எதிர்படுபவன் அழைக்கிறான்
ஏய்...பாப்பா என்று .
அடுத்த வசனம் காதில் விழ முன்னர் நடையை வேகப்படுத்தினேன்

இரவு இருளை கடைதெரு விளக்குகள் அகற்ற முயல...
உள் வீதி வீடுகள் மட்டும் வரவேற்றுகொண்டன .
அந்த அரைகுறை வெளிச்சத்தில்
மழை சகதியில் அருவருப்போடு நடந்து கொண்டிருக்கையில் கூட நடந்த ஒருவன் அழைத்த வாரத்தைகளை கேட்டும் கேட்காதது போலவே மேலும் நடந்தேன்

வீட்டை நெருங்க கொஞ்ச நேரமே இருந்த நிலையில்
எதிர்பட்ட ஒரு கும்பல் விசிலடித்து நெருங்க
சட்டென்று நகர்ந்து எங்கள் வீதி நுழைந்தேன்
வீட்டில் நுழைந்து செருப்பைக் கழற்றுகையில் 

கடிகாரத்தில் நேரம் பார்த்தால் 8.54 pm.

நாளை மார்ச் 8-மகளிர்தினம் ???






உலகத்தில் நூற்றுக்கு 99.9 % பெண்கள் தினமும்
ஆபாசவார்த்தைகளையும் அருவருப்பான நடவடிக்கைகளையும் கடந்து தான் செல்கிறார்கள் .
எல்லோருக்கும் இந்த அனுபவம் உண்டு
உங்கள் சகோதரிக்கு, தாயாருக்கு, மனைவிக்கு, மகளுக்கு, தோழிக்கு, காதலிக்கு கூட இந்த அனுபவங்கள் இருக்கும் ...
ஒரு 20 நிமிடத்துக்குள் நடந்தவை இவை ...
இன்னும் எத்தனை அனுவங்கள் வாழ்க்கையில் இருகிறது ?
எல்லாவற்றையும் கண்டுகொள்ளாமல் கடந்து போக பழகிவிட்டோம் 
அன்றும் இன்றும் என்றும்
''தினமும் ஒருவர் தொல்லை செய்தால் எதிர்த்து போராடலாம் ஒரு நாளைக்கு குறைந்தது 5 சம்பவங்களையாவது எதிர் கொள்ள நேர்கிறது 
அத்தனை பேரையும் எதிர்த்து நிற்பது சாத்தியமா ?
எங்களுக்கும் குடும்பம் ,வேலை ,பொறுப்புகள் என்று இருக்கிறது 
அனைத்தையும்சரிவர செய்ய வேண்டும் 
இது போன்ற நபர்களுடன் வாதம் செய்துகொண்டிருந்தால் எப்படி எங்களுக்கான கடமையை முடிப்பது ?
மேலும் இவர்கள் எல்லாம் திருந்தவா போகிறார்கள் ?
அதனால் சகித்து கடக்க பழகிவிட்டோம் ''
இது பற்றி கேட்ட போது பெண்களின் பெரும்பான்மையான பதில் இதுதான் .

ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்துக்காக இது போன்ற இடர்களை 
கடந்து போக பழகிவிட்டார்கள் ...பழக்கப்படுத்தப்படுகிறார்கள் 
பொறுமை ,சகிப்புத்தனமை ,பெருந்தன்மை என்று அவர்களின் விலகலை பலஹீனமாக எண்ணுபவர்கள் ,மேலும் மேலும் தொடர்கிறார்கள் .
அதன் உச்ச கட்டம் ஆசிட் வீச்சாகவோ பாலியல் வன்புணர்வாகவோ 
அமைகிறது .அதுபோன்ற சந்தர்பங்களில் தான் பெண்ணுரிமை, மனித உரிமை ,
சமூகநலன் ,சுகந்திரம் உட்பட இன்னபிற விடயங்கள் பேசப்படும் 
தினமும் நடக்கும் விடயங்கள் பற்றி பேச யாருமில்லை 
பாலியல் வன்புணர்வு போன்ற பெரிய குற்றங்கள் தானே நம் கண்களுக்கு புலப்படும் ?

அப்படியே குற்றங்கள் நடந்தாலும் அப்போது 
அந்த பெண் எத்தனை மணிக்கு வெளியே சென்றாள்?
அந்த நேரத்தில் அவள் ஏன் செல்லவேண்டும் ?
உடல் தெரியும்படி ஆடைகளை உடுத்தி இருந்தாளா ?
அவள் எவ்வளவு சம்பாதிக்கின்றாள் ?
அவளுடைய சம்பாத்தியமும் வேலையும் தான் அவளின் இந்த நிலைக்கு காரணம் ...
அடக்க ஒடுக்கமாக இருந்தால் எந்த பிரச்னையும் வராது.....
இன்னும் எத்தனையோ விடயங்கள் கூறப்படும் 
ஒரு பெண்ணை வன்புணர்வு செய்தவர்கள் பற்றி என்ன சொல்வீர்கள் ?
என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் ?

ஒரு பெண்ணின் பிறப்புறுப்பில் பாட்டிலை உட்செலுத்தி குருரமாக
பாலியல் கொடுமை செய்த அதுவும் பொது இடத்தில பாலியல் கொடுமை செய்தவனை எதுவும் சொல்லாமல் உயிருக்கு போராடிய அந்த பெண்ணின் உடை ,வேலை ,சம்பளம் உட்பட அனைத்தையும் குற்றம் சுமத்தி சமுக வலைதளத்தில்  பகிர்ந்தவர்கள் கருத்திட்டவர்கள் நம் அருகே தான் இருக்கிறார்கள் .

ஒரு பெண் அழகாக இருந்தாலும் சரி என்ன ஆடை அணிதிருந்தாலும் சரி அவர்கள்  எப்படி இருந்தாலும் சரி 
பெண் உடல் தான் அவர்களுக்கு தேவை 
அது தான் நிஜம் 
இது தெரிந்தாலும் தெரியாதது போலவே இருக்கும் சமுகமும்
அதை நன்கு அறிந்திருந்தும் கோபத்துடன் கூடிய வெறுப்பை பதிவு செய்ய தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பேன் நானும் .....

Comments

Popular posts from this blog

Dyketactics

ஒரு கோப்பை தேநீரில் கொஞ்சம் காதல் .....