வன்புணர்ச்சி - இதுவும் ஒரு சம்பவம் !!!


 உடல் வன்முறை அதுவும் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்ச்சி சம்பவங்களை ஒவ்வொரு முறையும் கடக்கும் போது வலிக்கும் .
அந்த செயலை செய்த ஆண்கள்  மீது  கோபம் ஏற்படும். அந்த சம்பவத்தை  நினைத்தாலே  மனமெல்லாம்  எரியும். உயிருள்ள பெண்ணை வெறும் சதையாக நினைக்கும்   ஆண்களை கொல்ல வேண்டும் எனும்  உணர்வு  தோன்றும் . 

திரைப்படங்கள் பார்க்கும் போது கூட ஆண் அல்லது பெண் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்படும் காட்சிகளை என்னால் பார்க்க முடியாது
அந்த காட்சியை பார்க்காது கடத்திவிட்டாலும் ஒரு பெரும் பாரம் மனதை அழுத்த தொடங்கிவிடும்
சில நாட்களாவது ஆகும் அந்த சுவடு மறைய ...அடுத்த திரைப்படத்தில் லயிக்கும் வரை அதே நிலைதான்

மீண்டும் ஒரு வன்முறை செயல் ...பெண் உடல் மீதான வதைபடலம்
அரங்கேறியிருகிறது.வழக்கம் போல கோபமும் வெறுப்பும் வந்தது.
ஆனால் இம்முறை எனக்கு அதீத கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்திவிட்டது
பாலியல் துன்புறுத்தலை செய்தவருடைய வாக்குமூலமும் அதை தொடர்ந்து வெளியான பத்திரிகை செய்திகளையும்
என்னால் ஜீரணிக்க முடியவில்லை


இரவுஆண்நண்பனுடன்ஊர் சுற்றிக்கொண்டிருந்த பெண்ணுக்கு பாடம் கற்பிக்கவே அவளை வன்புணர்வு செய்தோம்" - மாணவியை தன் தம்பி மற்றும் இன்னும் மூவருடன் சேர்ந்து வன்புணர்வு செய்த டெல்லி பேருந்து ஓட்டுனர் ராம்சிங் 


காமம் என்பது உலகியல் வாழ்வில் அவசியமான ஒன்றுதான்..மறுப்பதற்கு இல்லை
கலாச்சாரத்தில் அங்கீகரிக்கபடாத விடயமல்ல உடலுறவு
ஆணும் பெண்ணும் கலவி இன்பம் கொள்வது தவறல்ல இருவரும் மனமொத்து இணைவதை தானே சரி என்று  இவர்கள் சொல்லும் கலாச்சாரமும் சொல்கிறது
அப்படி இருக்க ஒரு பெண்ணின் அனுமதி இன்றி அவளை துன்புறுத்தி தன்னுடைய உடல் பசியை தீர்த்துக்கொள்வது தான் நல்ல காரியமோ ?
அதையா கலாச்சாரம் போதிக்கிறது ?

அந்த பெண், இரவில் ஊர் சுற்றுவது குற்றம் என்று கருதிய அவர்கள் , அந்த பெண்ணின்  உடலையும் மனதையும் காயப்படுத்தி வன்புணர்ச்சி செய்வது குற்றம் என்று யோசிக்கவில்லை ...அப்படி செய்வது மனித உரிமை மீறல் ...சாதாரண தவறு என்று கூட அவர்களால் யோசிக்கமுடியவில்லை
ஆக இரவில் ஒரு பெண் செல்வது அதுவும் ஆண் நண்பனுடன் செல்வது குற்றமாக தெரியும் சமுகத்துக்கு ஒரு பெண் மீதான பாலியல் அடக்குமுறை தவறல்ல என்பதை பெருமையுடன் அங்கிகரிகிறது...அப்படிப்பட்ட ஒரு சமுகத்தில் தான் நீங்களும் நாங்களும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்
வெட்கமாக இருக்கிறது... அருவருப்பாக இருக்கிறது ....



பாலியல் வன்முறைகள்
-இந்த விடயத்தை மனித உரிமை மீறலாக பார்க்கும் ஊடகங்கள் எத்தனை?
எல்லாமே செய்தி...காமப்பேய்களால் கிழித்துப்போடப்பட்ட பெண்ணை வெளிச்சம் போட்டு காட்டி தங்கள் வருமானத்தை உயர்த்தும் செயலைத்தான் பெரும்பாலான ஊடகங்கள் முன்னின்று நடத்துகின்றன

தினமணி -இந்த பத்திரிகையில் இந்த சம்பவம் தொடர்பாக ஒரு கட்டுரை இடம்பெற்றிருந்தது.
(நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகள் ...நெறிகள் ??? என்பதன் பொருள் தெரியுமா ?)
வன்புணர்ச்சி செய்தது குற்றம் என்பதை விட ...பெண்கள் இரவு நேரம் பயணிப்பது ...நாகரிகத்தில் மூழ்குவது தான் தப்பாம்
அவர்கள் அடக்க ஒடுக்கமாக நடந்தால் எல்லாம் சரியாகிவிடுமாம் ...

நள்ளிரவில் பெண் நடமாட்டம் பற்றி பேசிய காந்தி பிறந்த தேசத்திலிருந்து இப்படி ஒரு பத்திரிகை
இதில்'நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை 'என்று பத்திரிகை பெயருக்கு மேலே ஒரு வாசகம்

தன் உடல் இச்சைக்கு இப்படி நடந்து விட்டு தன் செயலுக்கு கலாச்சார சாயம் பூசும் பாதகர்களை விட்டு விட்டு அந்த பெண்ணை குறை சொல்கிறது .சமத்துவம் பேச வாராதீர்கள் நடைமுறையை யோசியுங்கள் என்று அறிவுறுத்தல் வேறு ?

நாங்கள் சொல்லவில்லை பெண்களை மது அருந்துங்கள் ,புகை பிடியுங்கள் என்றெல்லாம் ....அந்த பெண்னின் நிலைக்கு என்ன பதில் சொல்லப்போகின்றீர்கள் ? அவளது வலிக்கு என்ன மருந்து ?வன்செயல் புரிந்தவனுக்கு என்ன நிலை ?
எதுவுமே சொல்லவில்லை...உங்களுக்கென்ன  இன்னும் கொஞ்ச நாளைக்கு இது பரபரப்பான செய்தி...அப்புறம் சம்பவம் ...எல்லோரும் மறந்துடுவாங்க
அவ்வளவுதான்
பிற்போக்குத்தனமான கருத்து என்று நான் சொல்லவரவில்லை ....மனித தன்மை இல்லாத கருத்து ...வலியை அறியாதவர்களின் கருத்து இது
நீங்கள் ஆணோ பெண்ணோ ,நாளை பலரால் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தபட்டாலும் இப்படி தான் சொல்வீர்களா ?
அதையும் செய்தியாக்கி இதுபோல எழுதுவீர்களா ?

டெல்லி மாதிரி ஒரு பெரிய நகரத்தில் இப்படி என்றால் கிராமங்களில்,அதிகாரவர்க்கத்துக்கு உட்பட்ட பிரதேசங்களில்
வாழும் பெண்களின் நிலை என்ன ?
மலைவாழ்மக்கள், ஆதிகுடிகள் ,எளிய கிராமங்கள் இப்படி எத்தனை இடங்களில் இதே செயல் அரங்கேறி இருக்கிறது .
வறுமையோடு பிறந்து வாழ்ந்து மடிந்து போகும் அப்பாவி மக்களை ஏன் வேட்டை நாய்கள் போல உயிரோடு வதைக்க வேண்டும் ? 


இந்த சதையில் அப்படி என்ன இருக்கிறது? இவர்களுக்கு எல்லாம் அரசு செலவில் 100 பிணங்களை ஆர்டர் செய்து கொடுங்கள்
வேட்கை தீருகிறதா பார்ப்போம் ?
சக மனிஷி என்று கூட பார்க்காமல் புணர்ந்தவனுக்கு உயிர் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன ?இவர்களுக்கு  தேவை சதை தான்

தண்டனைகளால் இந்த செயலை கட்டுப்படுத்த முடியுமா ....ஆயுள் தண்டனை ,மரணதண்டனை ???
ஒரு அயல் சினிமாவில்
பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தும் ஒருவனை பெண்ணாக பால் மாற்று அறுவை சிகிச்சை செய்து விடுவார்கள்
இப்படி எந்த தண்டனையும் யாரையும் மாற்றி விடாது.
 இன்று பிடிபட்ட ராம் ஒரு பஸ் ஓட்டுனர் அவனுக்கு தண்டனை கொடுப்பார்கள் 
இதே அதிகாரவர்கத்தில் இருப்பவர்களுக்கு காலம் கடத்தி விட்டு பொது மன்னிப்பு வழங்குவார்கள்
இப்படி எத்தனை பொது மன்னிப்புக்களை பார்திருகின்றோம்
நியாயம் ,நீதி ,சட்டம் எல்லாம் வெங்காயம் 


காமுகர்கள் செய்யும் இந்த காரியத்துக்கு எல்லா ஆண்கள் மீதும் கோபப்பட கூடாதுதான்
 ஆண்மையை இப்படித்தான் உலகுக்கு நிருபித்து காட்ட வேண்டிய இழிநிலையில் இருகின்றதா ஆண் இனம் ???

பெண்கள் புகைப்பதையும் மது அருந்துவதையும் களியாட்டங்களில் ஈடுபடுவதையும் தடுக்க தவிர்க்க பாடுபடுபவர்கள் இருக்கிறார்கள்
சமுக வலைதளத்தில் புகைப்படங்களை போட்டு கமெண்ட் அடித்து தங்கள் சமுக அக்கறையை வெளிபடுத்தும் சகோதரர்கள் இதற்கும் உதவலாமே..
பக்கத்தில் இருக்கும் காம பசி உடையவர்களை இனம் காட்டலாமே  

குடும்பத்தில் ,பள்ளியில் ,தொழில் புரியும் இடத்தில் ,பாதையோரங்களில் எப்படில்லாம் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றது ?
உங்கள் சகோதரிகளின் மீது நிகழ்த்தபடும் எதையும் யாரும் தடுப்பதில்லை
பெண்களை பெண்கள் தான் காத்துக்கொள்ள வேண்டும்
ஆண்களை காப்பாற்ற சொல்லி நான் கெஞ்சவில்லை

காம வெறி பிடித்தவர்களால் நாளை உங்கள் பாட்டி, தாய் ,சகோதரி ,மனைவி உட்பட உறவுகள் பாதிக்கப்படலாம்
ஏன் நீங்களே கூட பாதிக்கபடலாம் அதையாவது தடுக்க முயற்சியுங்கள் 
குறைந்த பட்சம் வீதி ஓரங்களில் தன் ஆண் உறுப்பை காட்சிபடுத்தி நிற்கும்  மனிதனை ஒரு மனநல சிகிச்சைக்கு உட்படுத்துங்கள்
அதுவும் முடியாவிட்டால் சதையை தவிர்த்து தன்னைப்போல உயிரும் உணர்வும் உள்ள சக மனிஷி என்ற ரீதியில் பெண்களை பாருங்கள்

இருபாலாருக்கும்  ஒன்று பொதுவாக கேட்கிறேன்
 கற்பு ,மதம் ,கலாசாரம் என்று பேசி ஏற்கனவே உடலால் வேதனைபட்டவளை இன்னும் வேதனைபடுத்தாதீர்கள்
அதிலும் முக்கியமாக பெண்கள் ,
உங்களைப் போல ஒரு பெண் பாதிக்கப்பட்டால் அவளை ஏதோ அருவருப்பான பொருளாக கருதுவதை நிறுத்துங்கள்
உடல் ரீதியானதல்ல கற்பு என்பதை புரிந்து கொள்ளுங்கள் 

ஆணோ பெண்ணோ ,உடல் வதை என்பது குற்றம்...
வன்புணர்ச்சி- மனித உரிமை மீறல்..
அவர்கள்  குற்றவாளி என்றால் அந்த குற்றத்தில் சமுகத்துக்கு பங்கிருகின்றது
என்பதை வேண்டுமென்றே மறந்து விடுகிறோம் மீண்டும் மீண்டும்

இந்த பதிவை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கூட உலகின் ஏதோ ஒரு மூலையில் வன்புணர்ச்சி நடந்து கொண்டுதான் இருக்கும்
தடுக்க முடியாத கையாலாகாத தனத்தில் இப்படி எழுதிக்கிழித்துக் கொண்டு  கோபத்தையும் வெறுப்பையும் எழுத்தில் கரைத்துக்கொண்டு
என்னைப்போல இன்னும் எத்தனைபேர் ?...

எழுத எழுத கொட்டும் வார்த்தையில் இனம் தெரியாத வலியுடன்  இந்த செய்தியையும் கடந்து போக முயற்சிகிறேன்  வழக்கம் போல ...

Comments

Popular posts from this blog

சட்டென நனைந்தது நெஞ்சம்

The Clue:4th Period Mystery