Fairway Galle Literary Festival - 2019காலி இலக்கிய திருவிழாவிற்கு  சென்றிருந்தேன். 15 ஆண்டுகளுக்கு பின்னரான காலி பயணம் மகிழ்ச்சியான அனுபவமாக அமைந்தது.

காலி எனக்கு மிகப் பிடித்த நகரங்களில் ஒன்று. காரணம் அந்த கடலோசை.
இலங்கையின் வெவ்வேறு கடல் பகுதிகளுக்கு சென்று அதன் ஓசையில் லயிப்பது பிடிக்கும். காலியின் கடலோசை எனக்குள் வெறுமையும் அமைதியும் கலந்த  உணர்வை தோற்றுவிக்கும். அதனால்தான் அதிகம் பிடிக்கும். கடலும் கோட்டைகளும் பழைமையான கட்டிடங்களும் இணைந்து  தனித்துவமான அழகை காலிநகரம்  வெளிப்படுத்தியது. ஏதோ வெளிநாட்டு நகரமோ என்று நினைக்குமளவு வெளிநாட்டவர்கள் நிறைந்திருந்தனர். அதனால் ஆட்டோ விலை உட்பட அனைத்து பொருட்களின் விலையும் மூன்றுமடங்காக  காணப்பட்டது.

சிங்கள இலக்கிய விழாவில் கவிதை இலக்கியம் பற்றிய பகுதியில் சுவாரஸ்யமான கவிதைகளை கேட்கமுடிந்தது. அது முடிய கோட்டையை நோக்கி சென்றோம். ஓவியங்கள் வரைவதற்கான செயலமர்வும் கண்காட்சியும் எமது நேரத்தை பயனுள்ளதாக மாற்றின. வயது‌ வித்தியாசமின்றி ‌மிக ஆர்வமாக‌ அனைவரும்‌ வரைந்தனர். வரைதல் கொடுத்த மகிழ்ச்சியையும்  அவர்களது கைகளையும்‌ நான் ‌அமைதியாக ரசித்து கொண்டிருந்தேன் . (முகங்களை விட கைகளை வேடிக்கை பார்ப்பதே என் வழக்கம் )கொழும்புக்கு எப்படி செல்வது அதன் சுற்றுலா முக்கியத்துவம் பற்றி Maps அச்சிட்டு ஆயிரங்களில் விலை கூறி விற்றுக்கொண்டிருந்தார் ஒரு வெளிநாட்டு பெண்மணி. கூடவே கொழும்பு பற்றிய  App தயாரித்து அதில் street food உட்பட அனைத்து தகவல்களையும் பதிவேற்றியுள்ளது அந்த நிறுவனம். பெட்டாவை சுற்றிப்பார்க்க சொல்லி எனக்கு பரிந்துரைத்தார் அந்த பெண்மணி. நம்ம ஊரை நமக்கே சுற்றிக்காட்டி விற்க கூட வெளிநாட்டு நபர்களினால் முடிகிறது. நாம்தான் நம் நகரங்களை கவனிப்பதே இல்லை.

நிறைய‌ கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.‌ சமுக வலைத்தளம்‌ பற்றிய‌ நிகழ்வில் சிறிதுநேரம் பங்கேற்று விட்டு அங்கிருந்த தெருக்கள் வழியே நடக்க ஆரம்பித்தோம். வெவ்வேறு நாடுகளை சேர்ந்த பலரும் வந்திருந்தனர்.
வெளிநாட்டு ‌பெண்களில் மிக பருமனான பெண்கள் வசீகரமான தோற்றத்துடன் காட்சியளித்தார்கள். தொப்பை, மேடிட்ட வயிறு, பெரிய தொடைகளுடன் தங்கள் உடல் பகுதிகள் தெரியும்படி ஆடையுடுத்தியிருந்தனர். ஒல்லியான தோற்றத்தை விட பருமனான பெண்களே கவர்ச்சிகரமாக இருந்தனர். நம் மத்தியில் பருமனான பெண்களுக்கு மார்டன் டிரஸ் பொருந்தாது , ஒல்லியான உடலே செக்ஸி என இன்னும் பேசிக்கொண்டிருக்கிறார். நமக்குள்ளிருக்கும் சிந்தனை தேக்கமும் முடக்கமும் நீங்க நீண்ட காலம் எடுக்கும்.நிகழ்வின் இடைவேளையின் போது குறும்படங்களின்  திரையிடலை ஏற்பாடு செய்திருந்தனர். அதில் எனது குறும்படம் திரையிட தேர்வாகியிருந்தது. எனது சமிபத்திய குறும்படத்தின் முதல் திரையிடல் இதுதான் என்பதால் எனக்கு மறக்க முடியாத திரையிடலாக மாறிவிட்டது.
பத்துவருடமாக இடம்பெறும் இலக்கிய திருவிழாவில் கடந்த மூன்று வருடங்களாக தான் இலங்கை குறும்படங்கள் திரையிடப்படுகின்றன. அந்த வாய்ப்பை Fairway  அமைப்பிடம் கேட்டு பெற்றிருந்தார் அனோமா ராஜகருணா. இது மிகவும் பாராட்டத்தக்க விடயம். எங்களை போன்ற சுயாதீன இயக்குனர்களுக்கு அதுவும் குறும்படங்களை எடுப்பவர்களுக்கு திரையிடும் வாய்ப்புகள் அத்தனை எளிதில் கிடைப்பதில்லை. youtube உட்பட எந்தவொரு சமுக வலைத்தளத்திற்காகவும் நாங்கள் படம் எடுக்கவில்லை. முழுக்க முழுக்க திரையிடும் ஆர்வத்துடன் எடுக்கும் எமக்கு பல நாடுகளை சேர்ந்த மக்கள் கலந்துகொள்ளும் இத்தகைய நிகழ்வில் திரையிட கிடைத்தமை மகிழ்ச்சி.

உணவு இடைவேளையை கூட பொருட்படுத்தாது அரங்கு நிரம்பியமை எமக்கு ஆச்சரியமே! ஒவ்வொரு படத்தின் நிறைவிலும்  பலத்த கைத்தட்டல் எழுந்தது. கடந்த டிசம்பரில் agenda 14 குறும்பட விழாவில் 4 நாள் திரையிடலிலும் யாருமே கைத்தட்டவில்லை. படைப்பை படைப்பாக பார்த்து ரசித்து வாழ்த்தி கடந்து போக சாதாரண மக்களால் முடிகிறது. பொதுமக்களிடமிருந்து குறும்பட இயக்குனர்களான நாம்  கற்றுகொள்ள வேண்டியது முக்கியம்.  பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர். அனைவரும் திருப்தியடைந்ததாக கூறினார்கள்.எங்களை பாராட்டி வாழ்த்தினார்கள்.

திரையிடல் முடிந்தபின்னர் சில கேள்விகள் கேட்கப்பட்டன. இலங்கையில்
பெண்கள் வாழ்க்கை மாற்றமடைந்துள்ளதா என்ற கேள்வி கேட்கப்பட்டது.
'' பெண்கள் வாழ்க்கையில் மாற்றங்கள் மந்தகதியில் நிகழ்கின்றன. ஆண் பெண் வித்தியாசமின்றி,  இருக்கின்ற வாழ்வை அப்படியே ஏற்று வாழ்ந்து முடித்துவிடுகிறோம். எதிர்ப்புகுரல் வருவது குறைவு. உடனடி மாற்றங்களை நான் பார்த்ததில்லை . பெண்களின் வாழ்க்கை தொடர்பான மாற்றம் என்பது அஞ்சலோட்டம் போல. ஒருவர் ஓடி இன்னொருவர் கைகளுக்கு தர வேண்டும். அதைதான் நாங்கள் செய்ய நினைக்கின்றோம்'' என்று பதிலளித்தேன்.

எங்களுக்கு படத்தயாரிப்புக்கு பணம் எப்படி கிடைக்கிறது என்ற கேள்வி கேட்கப்பட்டது. எங்களைப்போன்ற குறும்படங்களை உருவாக்குபவர்களுக்கு அரசு சார்பாக எந்தவொரு உதவியும் வழங்கப்படுவதில்லை என்பதையும் வேறுவேறு தொழில் செய்து அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு படங்களை உருவாக்கின்றோம் ; திரையிடல் வாய்ப்பு கூட கிட்டுவதில்லை என்ற உண்மையை சொன்னோம். அதை கேட்டு கவலையடைந்தனர்.


தமிழ் இலக்கியங்கள் பற்றிய கலந்துரையாடலின் இறுதி அரைமணி நேரம் மட்டுமே கலந்துகொள்ள முடிந்தது. இலக்கியத்தின் செயற்பாடு குறித்தும் ஒரே மாதிரியான இலக்கியங்கள் தொடர்ந்து படைக்கப்படுவதை பற்றியும் விவாதித்துக்கொண்டிருந்தனர்.

சிங்கள நவீன நாடகங்களை பற்றிய கலந்துரையாடலின் போது உலகளாவிய ரீதியில் நாடக துறை மாற்றம் காண்கையில் இலங்கையில் நாடக துறையின் மாற்றங்கள் பற்றி விவாதித்தனர். சிந்தனை மற்றும் Production குறைபாடுகளை பற்றி கூறினார்கள். அத்துடன் நாடக துறையின் நடைமுறை அரசியலையும் ஊடகத்துக்கு எதிராக போராடுவதை பற்றியும் ஒருசில விடயங்களை முன்வைத்தனர்.

நமது அரசியலை முன்வைக்கவும் இருப்பை வெளிப்படுத்தவும் கலையும் இலக்கியமும் அதிமுக்கியமான தளம். இதனை  முழுமையாக உணர்ந்து செயற்பட வேண்டியது கலைஞர்களான நாம்தான்.

Comments

Post a Comment

Popular posts from this blog

மறைமுக பிரச்சாரமும் மாற்றுத்தேர்வும்

ஒரு கோப்பை தேநீரில் கொஞ்சம் காதல் .....