The Red Turtle



சினிமாவில் அனிமேஷன் படங்களின் உருவாக்கம் ஆரம்பித்த காலப்பகுதியில், ‘’அனிமேஷன் படங்கள் Live action படங்களைப் போல உயிர்ப்புடன் கூடிய படைப்பாக திகழமுடியாது; இங்கே மனித கூட்டிணைவுடன் உருவாகும் சினிமா, அங்கே தொழில்நுட்பத்தால் மட்டுமே சாத்தியப்படுத்தப்படுகின்றது. எக்காலத்திலும் Live action படங்களை அனிமேஷன் படங்களினால் நெருங்கவே முடியாது'' என்ற கூற்றுக்கள் முன்மொழியப்பட்டன. ஆரம்பகாலத்தில் Live action சினிமாக்களோடு ஒப்பிட்டு அனிமேஷன் திரைப்படத்தின் குறையாக அதன் கற்பனை படைப்புலகம்  முத்திரை குத்தப்பட்டது.  கற்பனை திறனென்பது கற்றுகொடுக்க முடியாத தனித்துவமான அம்சம்; எல்லைகளும் கேள்விகளுமற்ற கற்பனை படைப்புலகத்தை தனது பலமாகவும் தன் அடிப்படை மூலதனமாகவும்  மாற்றிக்கொண்டு, அனிமேஷன்துறை செயற்பட்டதன் விளைவு, காலம் அக்கூற்றுகளை பொய்யாக்கியதோடு, அனிமேஷன் படத்துறை பல பரிணாமங்களை கடந்து சினிமாவின் எதிர்காலத்தை மாற்றி அமைக்கின்ற சக்தியாகிவிட்டதை நாம் அவதானிக்க முடியும். அனிமேஷனில் சாத்தியப்படுத்தப்படும் உயிர்ப்பினை Live action படங்களில் கொண்டுவர முடியாது என்று கருதுகின்றோம்.

உலகம் முழுவதும் அனிமேஷன் படங்கள் உருவாக்கப்பட்டாலும்  ஒவ்வொரு தேசமும் தனித்துவமான திரை அடையாளத்தை கொண்டிருக்கின்றது. அமெரிக்க அனிமேஷன் படங்கள் திரைக்கதை கட்டமைப்பை பேணி எடுக்கப்படுவதோடு பல்வேறுபட்ட அனிமேஷன் தொழில் நுட்பங்களின் செயல்திறனை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. ஐரோப்பிய அனிமேஷன் துறை, தொழில்நுட்பங்களை விட பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டு மாற்றுத்தளங்களை கண்டடைந்து சினிமாவின் பாதையை விஸ்தரித்து வருகின்றன. கிழக்காசிய படங்கள், மங்கா சீரிஸ் வகையான முயற்சிகளுடனும் மனித உணர்வுகளை மையப்படுத்திய கதை படைப்புகளுடனும் பயணித்து வருகின்றன. கிழக்காசிய அனிமேஷன்துறையில்  மிக முக்கியமான நிறுவனமாக Studio Ghibli காணப்படுகின்றது.

Studio Ghibli இன் படைப்புக்களில், தொன்மக் கதை சொல்லல் அணுகுமுறையும் மனித வாழ்வியலுக்கும் இயற்கைக்கும் இடையிலான பிணைப்பு அடித்தளமாகவும் காணப்படும். அதற்கேற்ப The Red Turtle திரைப்படத்தில் மனிதனுக்கும் இயற்கைக்குமான உறவின் உன்னத தருணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு மனிதன் கடல் கொந்தளிப்பால் அடித்துவரபட்டு யாருமற்ற தீவில் கரையொதுக்கப் படுகின்றான். அந்த தனித்தீவிலிருந்து தப்பிக்க சிரமப்படுகின்றான். மூங்கில் மரங்களைக் கொண்டு ஒரு தெப்பம் அமைத்து தப்பிக்க முயல்கையில், கடலில் ஏதோவொன்று தாக்கி தெப்பம் உடைந்துபோக மீண்டும் தீவுக்கே திரும்பிச் செல்கிறான். முயற்சியை கைவிடாது மீண்டும் தப்பிச்செல்கையில் அதே நிகழ்வு தொடர, ஒரு கட்டத்தில் தன் தெப்பத்தை தாக்கி உடைப்பது ஒரு சிவப்புநிற கடலாமை என்பதை அறிந்து அதன் மீது கோபம் கொள்கின்றான். கடலாமையை தாக்கி அதனை புரட்டிப் போட, அசைவற்றுப் போகின்றது. அதன் நிலையைக் கண்டு  குற்றவுணர்சிக்கு ஆளாகி கடலாமையை தொட அது ஒரு பெண்ணாக உருமாறுகின்றது. முதலில் அதிர்ச்சி அடைபவன் அதன் பின்னர், அந்த பெண்ணின் மீது மெல்ல மெல்ல ஈர்ப்பு கொள்கின்றான். இருவரும் இணைந்து வாழ ஆரம்பிக்கின்றனர். அவர்களுக்கென்று ஒரு மகன் பிறக்க, அதன் பின்னர் அவர்களது வாழ்வில் எத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்தன என்பதை விபரிக்கின்றது இந்தத் திரைப்படம்.


மனிதர்கள் கதை சொல்வதிலும் கதை கேட்பதிலும் ஆர்வமுடையவர்கள். பெரும்பாலும் கீழைத்தேய அனிமேஷன் உலகம் தொன்மக் கதைகளை மையப்படுத்தியே செயற்படுகின்றது. The Red Turtle படத்தின் மையமும் அத்தகைய தொன்ம நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டமைகின்றது. படத்தின் கதையை ‘தீவில் மாட்டிக் கொண்ட ஒரு மனிதனுக்கும் சிவப்பு கடலாமையுருவிலிருந்து பெண்ணாக மாறியவளுக்குமிடையிலான அன்பின் உறவு’ என்று ஒரு வரியில் கூறினாலும், அதன் உண்மையான அர்த்தம் வேறு. உருவகத்  தன்மையான கதை சொல்லல் முறையை   இந்த திரைப்படம் கையாண்டுள்ளது. ஆண் – கடலாமையுருபெண் என்ற பிணைப்பில் மனிதனுக்கும் இயற்கைக்குமிடையிலான பிணைப்பின் முக்கியத்துவமே உருவகமாக கதையில் உணர்த்தப்படுகின்றது.

Red Turtle என்ற சிவப்பு கடலாமையை மையப்படுத்தி ஏன் கதை உருவாக்கப்பட்டுள்ளது? வேறு உயிரினம் இடம்பெற்றிருக்கலாமே.... கிழக்காசிய தொன்மக் கதைகளில் ஆமை என்பது நம்பிக்கையின் குறியீடாகவும் இயற்கையின் அடையாளமாகவும் கூறப்படுகின்றது. ஆமையின் மேலோடு வானமாகவும் உடல் பூமியாகவும் கீழோடு பாதாள உலகமாகவும் குறிப்பிடப்படும் தொன்ம நம்பிக்கைக்கு ஏற்ப இயற்கையின் சின்னமாக கதையில் காட்டப்படுகின்றது. கடலாமை பெண்ணாக உருமாறி மனிதனுடன் இணையும் கட்டத்தில் மனித ஜீவிதம் தழைக்க, இயற்கை வழிவகை செய்துள்ளதையும் மனிதனுக்கும் இயற்கைக்குமான ஒன்றிப்பே வாழ்வியலை நீடிக்கும் என்பதையும் உருவகமாக படத்தில் காட்டியுள்ளனர்.

நமக்கு சொல்லப்படுகின்ற தொன்மக் கதைகள் அனைத்தையும் கட்டுக்கதைகள் என்று நிராகரிக்கவோ கண்மூடித்தனமாக பின்பற்றவோ கூடாது. அக்கால கட்டத்தில் முழுமையாக ஆராயப்படாத உண்மைகளையும் வாழ்வியல் தத்துவங்களையும் தமக்கு புரிந்த விதத்தில் கதைகளூடாக பதிவு செய்து வைத்துள்ளனர். அவை கால மாற்றத்திற்கு ஏற்ப சரியான விதத்தில் ஆராயப்பட்டு உள்வாங்கப்படவேண்டும். அத்தகைய தொன்மக்கதைகளை மீட்டெடுத்து வாழ்வியல் தத்துவமாகவோ அறிவியல் உண்மையாகவோ அடையாளம் காணவேண்டியது அவசியம் என்றே கருதுகின்றேன். The Red Turtle படத்தில் உணர்த்தப்படும் தொன்மக்கதை இக்கால கட்டத்தில் நாம் கவனிக்க வேண்டிய நம்பிக்கை. இயற்கையை மீறி செயற்படும் மனித நடவடிக்கைகளை தடுத்து மீண்டும்  இயற்கையோடு ஒன்றித்து வாழ நாம் முயல வேண்டும். அந்த சமநிலை தவறின் எண்ணற்ற இயற்கை அழிவுகளை சந்திக்க நேரிடும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.

படத்தில், இயற்கையின் தன்மையை நுணுக்கமாக வெளிப்படுத்தியுள்ளனர். மூங்கில் காடுகளில் நீர் குடித்துக் கொண்டிருக்கும் மனிதன் வித்தியாசமான ஒலியை செவிமடுத்து அடிக்க தடி எடுத்தால் மழை பெய்ய ஆரம்பிக்கின்றது. மழை பெய்வதற்கு முன்னர் ஏற்படும் ஒலியினை விலங்கின் ஒலியாக மனிதன் தவறாக எண்ணியதை உணர்கின்றான். மூங்கில் காடுகளின் மழையோசை கூட மிக நுணுக்கமாக காட்டப்பட்டிருக்கின்றது. பரந்த கடல், அமைதி, கடலில் கரைகள் தரும் சத்தம், சிறிய நண்டுகளின் வாழ்க்கை, மலைகளுக்கு நடுவிலுள்ள ஊற்றுகள்,  ஆமைகள், தீப்பற்றுதல், சுனாமி ஏற்படல் என இயற்கையின் பல வெளிப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.


பெண்ணாக மாறிய கடலாமையுடன் உணவு உண்ணும் மனிதன், தான் அடித்தும் தன் மீது அவள் அன்பை பொழிவதை எண்ணி குற்றவுணர்வுக்கு தள்ளப்படுகின்றான். அவள், அவனை நெருங்கி அவனது முகத்தில் விரல்களால் ஸ்பரிசித்து அந்த உணர்வை அகற்றுகின்றாள். இவ்வாறு  இரண்டு கதாபாத்திரங்களும் வெளிப்படுத்தும் மனித உணர்வுகளை அழகியலோடு உருவாக்கியுள்ளனர்.  அவர்களது குழந்தை மலைக்குன்றின் ஊற்றில் விழுவதும் சுனாமி காட்சியில் மனிதன் கிடைப்பானா என்ற பதைபதைப்பு உருவாகுவதும்,  படத்திலிருப்பது வரையப்பட்ட அனிமேஷன் உருவங்கள் என்ற சிந்தனையின்றி நிஜ மனிதர்களைப் போலவும் அந்த வாழ்க்கையில் நாமும் பங்கேற்பதைப் போலவும் உணர்த்தி நெகிழ வைக்கும் அற்புதமான படைப்பு இது!

தனிமையில் இருக்கும் மனநிலையை எடுத்துக்காட்டவும், இயற்கையின் மத்தியில் மனித வாழ்க்கை என்ற அர்த்தத்தை கொடுக்குமாறு அமைய, Frameஇல் இயற்கை மிகப்பரந்ததாகவும் அதில் மனிதனின் உருவம் சிறியதாகவும் தெரியுமாறு உருவாக்கியுள்ளனர். மனிதனது குடும்ப உறவுப்பிணைப்பினை காட்டும் காட்சிகளில் மனிதனுக்கும் பெண்ணுக்கும் மகனுக்கும்  அதிக இடைவெளி இல்லாமல் அந்த கதாபாத்திரங்கள் அருகாமையுடன் இருப்பதைப்போல படைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

ஆழ்மன உணர்வுகளின் வெளிப்பாடாக படத்தில் கனவுக்காட்சிகளை குறிப்பிடலாம். தீவிலிருந்து நாட்டுக்கு செல்லவேண்டும் என்ற மனிதனது எண்ணத்தை கடலில் தென்படும் இசைக்குழுவின் கானல் தோற்றம், மூங்கில் மரங்களினால் ஆன பாலத்தின் வழியே பறந்து செல்லுதல்  ஆகிய  கனவுக் காட்சிகளிலும் மகனது எதிர்காலம் பற்றிய முடிவினை உயர எழும்பும் கடல் அலைகளில் அவன் மிதக்க,  பெற்றோர் அவனை மகிழ்ச்சியாக பார்த்திருப்பதாக காட்டும் கனவு காட்சியிலும் உணர்த்தியுள்ளனர்.



படத்தில் அடர் வர்ணங்கள் மிகையாக பயன்படுத்தப்படவில்லை. அதிகமான காட்சிகளில் எளிமையான உணர்வை கொடுக்கும் விதத்தில் கடலுக்கு நீலம், மூங்கில் காடுகளுக்கு பச்சை, சூரிய ஒளிக்கு  மஞ்சள் போன்ற குறித்த சில வண்ணங்களை பயன்படுத்தி படைக்கப்பட்டிருந்தது. இந்த வண்ணங்களின் ஆளுகையானது மெல்லிய உணர்வுகளை ஏற்படுத்த உதவியது என்று கருதுகின்றேன். இயக்குனரின் முந்தைய படங்களிலும் இதே போன்ற அடர்வண்ணங்களின் தவிர்ப்பு இருந்ததால், இயக்குனர் மைக்கலின் தனிப்பாணியாகவும்  இருக்ககூடும்.

The Red Turtle திரைப்படம் நம்பிக்கைக்கும் கற்பனைக்கும் பாலம் அமைத்து எழுதப்பட்ட கதை. சினிமாவாக அதன் நுண்னுணர்வுகளை கட்டமைக்க அதிகமாக உழைக்கவேண்டும். கற்பனைக்கும் அனுபவத்திற்கும் உழைப்புக்கும் இடையிலான சுழற்சியில் உருவாக்கப்படுகின்ற அனிமேஷன் படங்கள் நம் காலத்தின் நிகழ் ஆச்சரியங்கள். இத்திரைப்படமும் அத்தகைய உணர்வுப்பயணமே!

The Red Turtle படத்தின் வியப்புக்கு காரணமானவர் இயக்குனர் Michaël Dudok de Wit. ஐரோப்பாவின் நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவர், இவருடைய அனிமேஷன் குறும்படமான Father and Daughter (2000) ஆஸ்காரில் விருது வென்றதால் பிற ஸ்டுடியோக்களின் கவனம் இவர் மீது திரும்பியது. இந்த பட வாய்ப்பு வரவே, ஏற்றுகொண்ட Michaël ஒரு புதிய மாற்றத்துக்கு தயாரானார். அனிமேஷன் உலகில் ஐரோப்பிய பாணி என்பது வேறு, கிழக்காசிய பாணி என்பது வேறு; இரண்டும் இணைந்த படைப்பாக இந்த படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயம் மைக்கலுக்கு இருந்தது. அந்த புதிய அனுபவத்தை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார்.

நம்பிக்கையும் கற்பனை கதைகளையும் எழுதிவிட்டால் போதுமா? உயிர்ப்பினை எங்ஙனம் உருவாக்குவது? கற்பனை களங்களில் அனுபவங்கள் நிறையும் போதுதான் உயிர்ப்பு உருவாகும். அனிமேஷன் உலகில் அனிமேட்டர்கள் அந்த அனுபவத்திற்காக கையாளும் முறைகள் சுவாரஸ்யமானவை. ஜுராசிக்பார்க் திரைப்படத்தில் டைனோசர்களை உருவாக்க அனிமேட்டர்கள் அனைவரும் டைனோசர்கள் மாதிரியே தாவுவது, குதிப்பது, உணவு உண்பது என்று அந்த அசைவுகளை தினமும் சில மணித்தியாலங்கள் பயிற்சி செய்து உணர்ந்த பின்னரே வடிவமைக்க ஆரம்பித்தார்கள். இதேபோல எண்ணற்ற கதைகள் ஒவ்வொரு அனிமேஷன் படத்தின் பின்னணியிலும் இருக்கின்றன. இந்த படத்தில் நாயகன் தனித்தீவில் வசிப்பவன் என்பதால் மைக்கலும் அதே போல தனியாக ஒரு தீவில் வசித்து அங்கு கிடைத்த அனுபவங்களைக் கொண்டே திரைக்கதை அமைத்தார். மூங்கில் காடுகளும் பெரிய கற்பாறைகளும் கொண்ட தீவில்  பத்து நாட்கள் வாழ்ந்து இயற்கையின் நுணுக்கமான அமைப்புகளையும் தனிமையான மனநிலையையும் உணர்ந்து கொண்டார்.  கடலாமைகளை பார்த்து அவற்றோடு நீந்திப் பழகி அதன் செயற்பாடுகளை உள்வாங்கிய பின்னர் படத்திற்கான வேலையை ஆரம்பித்தார்.

Live action படங்களில் கூட திரைக்கதைக்கு மேலதிகமான காட்சிகள் இடம்பெறக்கூடும். ஆனால் அனிமேஷன் திரைப்படங்களில்  Close film ஆக தேவையான விடயங்கள் அனைத்தும் நுணுக்கமாகவும் சிறப்பாகவும் உருவாக்கப்படும். அதுவே அனிமேஷன் துறையின் வெற்றி எனலாம். The Red Turtle திரைப்படத்திலும் அத்தகைய நேர்த்தியை நாம் காண முடியும். மெல்லிய மனித உணர்வுகளும் இயற்கையின் அற்புதங்களும் சங்கமிக்கையில் எத்தகைய திரை அனுபவம் ஏற்படும் என்பதை உணர்த்தியிருக்கின்றது. மூங்கில் துளைகளில் நுழைந்து வெளியேறும் காற்றின் ஒலியாக நம் வாழ்வில் நுழைந்து நகர்கின்றது இந்த படைப்பு!


*ஜூன் 2018  ஞானம் சஞ்சிகைக்காக எழுதிய திரைப்பட கட்டுரை 

Comments

Popular posts from this blog

நாயகவிம்பத்தின் சிதைவுகள்