Tree of life


சினிமா எனக்கு ஆன்மிகம் !
என் வாழ்க்கையில் உடைந்து நொறுங்கும் போதெல்லாம்
டெரன்ஸ் மாலிக்கின் படைப்புலகத்திற்குள் நுழைந்து என்னை மீட்டுக்கொள்வேன்.

என்னைச் சுற்றி என்ன நடந்தாலும்
யார் என்ன செய்தாலும் அமைதியாக
கடந்து செல்ல சினிமாவின் ஆன்மிக அனுபவமே வழிநடத்துகின்றது.

திரைக்கதை எழுதுகையில் நாம் பார்க்ககூடிய செயல்களை மட்டுமே எழுத முடியும். உணர்வு தளங்களில் எழுத முடியாது.
செயல்பாடுகளின் வழியே எழுதப்பட்ட சினிமாவை, உணர்வுகளின் வழியே பார்வையாளனை அடையச் செய்ய,
பல சூட்சுமங்களை கையாண்டு, பார்வையாளர்களையும் சேர்த்தே இயக்கவேண்டிய நிலை இங்குண்டு.

டெரன்ஸ் மாலிக் எந்த சூட்சுமங்களையும் கையாள்வதில்லை.
தன் அறிவிலிருந்து திரைப்படங்களை உருவாக்காமல் மனதிலிருந்து உருவாக்குகின்றார்.

திரையுலகில் இருக்கும்போதே யாரிடமும் எதுவும் கூறாமல் 20 வருடங்கள் தொலைந்து போனார்.
அந்த தவப்பயணமே மாபெரும் படைப்புலகத்தை அவருக்குள் உருவாக்கி கொடுத்திருக்கின்றது.

நான் எப்போதும் கூறுவதுதான் ...
வாய்ப்புக்கள் எவரையும் இயக்கினராக்கிவிடும் ஆனால் படைப்பாளியாக தன்னையே அர்பணிக்க வேண்டும்.
வாழ்க்கையும் வாழ்தலும் மிக மிக சிக்கலானது; அந்த சிக்கல்களுக்குள் ஒளிந்திருக்கும் அற்புதங்களை அடைய
தேடல் கொண்டவரால் மட்டுமே முடியும்.
டெரன்ஸ் மாலிக்கின் தேடல் அக உணர்வுகளின் திரைப்படுத்தலை சாத்தியப்படுத்தி இருக்கின்றது.நம்மை பிரமிப்பில் ஆழ்த்தி சினிமாவின் அற்புதத்தை நிகழ்த்திக் காட்டியிருகின்றது.

அந்த ஆன்மிக உணர்வு எத்தகையது என்பதையும்
அந்த படைப்புலகம் எப்படி சாத்தியமானது என்பதையும்
இந்த பதிவில் விபரித்திருகின்றார் Mahesh Raghavan.




எழுதியவர் : Mahesh Raghavan
பதிவு : https://www.facebook.com/mahesh.raghavan.9/posts/1632851533429083

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் சில விஷயங்களில் ஆன்மீக அனுபவம் (spiritual feeling) ஏற்படலாம். ஒரு மலை உச்சியில் தனிமையில் இருக்கும்போது ஒருவருக்கு இந்த spiritual அனுபவம் கிடைக்கலாம். அப்படியானதொரு அனுபவம் Tree of Life படத்தில் எனக்கு கிடைத்தது. அநேக சினிமாக்களில் கிடைக்கிறது. சினிமா எனக்கான ஆன்மீக அனுபவமாக இருந்து வருகிறது.

நான் இதுவரை டெரன்ஸ் மாலிக் பார்த்ததே இல்லை. அவரது படைப்புலகம் இப்படி இருக்கும் என்பது பற்றிய அறிமுகம் கூட கிடையாது. வகுப்பில் என் படத்துக்கு நான் எழுதிச் சமர்ப்பித்த ஸ்க்ரிப்டை படித்து விட்டு என் ஆசிரியர் நீ டெரன்ஸ் மாலிக் ரசிகனா என்று கேட்டு, இல்லையென்றதும் அவசியம் பார்க்க வலியுறுத்தி அனுப்பி வைத்தார். நீ செய்ய நினைப்பது அதை போல இருக்கிறது, அதை சிறப்பாகச் செய்ய உனக்கு டெரன்ஸ் மாலிக்கின் அறிமுகம் அவசியம் என்று அறிவுறுத்தினார்.

முதலில் Badlands பார்த்தேன், பின்னர் Tree of Life. இதில் செய்யப்பட்டிருக்கும் சினிமா நம் காலத்தின் மிகப்பெரிய பாய்ச்சல். இது மனித உள்ளுணர்வில் இருந்து செய்யப்படும் சினிமா என்று தோன்றியது எனக்கு. சினிமாவோ, சிற்பமோ, தோட்டக்கலையோ, சமையலோ அவற்றை ஆரம்பத்தில் அளவுகோல்கள் வழி படித்து பின்னர் நம் மனதை தொலைத்து உள்ளுணர்வில் இருந்து செய்யத் தொடங்கும் வேளைகளில் அற்புதம் நிகழும். அப்படியான ஒரு படமாகவே எனக்கு இது தோன்றியது.

குறிப்பாக கீழே இருக்கும் frame தோன்றும் இடம் மனதுக்குள் ஒரு கணம் ஷாக் அடித்தது போன்ற உணர்வு. அனைவர் வாழ்விலும் நினைவுப்படிமமாக தேங்கி இருக்கும் ஒரு காட்சி இது. பள்ளியில் முன் வரிசையில் இருந்து யாரோ ஒரு பையன்/பெண் திரும்பி அத்தனை பல்லையும் காட்டி அப்பாவித்தனமாய் சிரித்தது. இந்தக் காட்சி படிமத்தை பதிவு செய்ய உள்ளுணர்வில் இருந்து வேலை செய்ய வேண்டும்.

இந்தப் படம் முழுவதுமே ஒரு மனிதனின் நினைவுப் படிமங்களில் பயணிக்கிறது. அலைந்து திரியும் மனதின் அந்த நினைவு பயணத்தின் randomness-ஐ அப்படியே பிரதிபலிக்கும் வகையில் இப்படத்தின் திரைமொழி கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதை சரியாக செய்வதில் இருக்கும் சிக்கல், அது வெறும் random ஆக மட்டும் இருந்து விடல். அதற்குள் ஒரு ஆன்மா இருக்க வேண்டும். இது மனித மனத்தின் பயணம் என்ற உணர்வு நமக்கு கடத்தப்பட அந்த மனத்தின் அருகாமையை நாம் உணர வேண்டும். ஒரு படைப்பாளி தன் உள்ளுணர்வில் இருந்து பணியாற்றுவதன் மூலம் இதனை செய்து பிரமிக்க வைத்திருக்கிறார்.

இதற்கு மாலிக் மிகவும் தனித்துவமான வழிமுறைகளில் பணியாற்றி இருக்கிறார். நேரடியாக ஸ்க்ரிப்ட் என்ற ஒன்றை அவர் தன் நடிகர்களுக்கு, ஏனைய கலைஞர்களுக்கு வழங்குவது இல்லை. தானும் ஒரு ஸ்க்ரிப்ட்டின் அடிப்படையில் கண்டிப்புடன் பணியாற்றவில்லை. ஒவ்வொரு நாள் படப்பிடிப்பின் துவக்கத்திலும் கதாபாத்திரத்தின் அன்றைய மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் எழுதப்பட்ட பக்கங்களை நடிகர்களுக்கு கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு காட்சிக்கும் முன்னர் நடிகர்களுக்கு விதவிதமான குறிப்புகள் கொடுத்திருக்கிறார். ஒளிப்பதிவாளருக்கும்.

காட்சிகளை படம் பிடிக்கும் விதத்திலும் பொதுவான ஒழுங்குமுறை இல்லை. ஒரே காட்சியின் ஒரு டேக் முந்தைய டேக்குக்கு சம்மந்தமே இல்லாமல் இருக்கும். அதற்கடுத்தது இன்னுமொரு கோணத்தில். ஒரு சமயம் வசனங்கள் நிறைந்த ஒரு காட்சியை எழுதிக் கொடுத்து அதனை இரண்டு, மூன்று டேக் படம் பிடித்த பின்னர் அதே காட்சியை வசனமே பேசாமல் நடிக்கச் சொல்லி படம் பிடிக்கிறார். அதாவது ஸ்க்ரிப்ட்டில் இருக்கும் வரிகளை ஷாட்களாக பிரித்து பல டேக்குகள் எடுத்து வைக்கும் வழிமுறையை நிராகரித்திருக்கிறார். ஒவ்வொரு டேக்கும் வித்தியாசமானது. இப்படியாக முன்னரே திட்டமிட்ட ஒன்றை படம்பிடிப்பதை விட படிப்படியாக எதையோ நோக்கி பயணித்து ஒரு நல்ல டேக்கை கண்டடைகிறார். பயிற்சி பெற்ற நடிகர்கள் படிப்படியாக ஒத்திகை செய்து சரியான நடிப்பை கண்டடைவதை "உண்மையை கண்டடைதல்" (finding the truth) என்று அழைப்பார்கள். இப்படியான ஒரு Organic process of filmmaking-ஐ கையாண்டிருக்கிறார்.

சினிமாவை முறைப்படி கற்று, நுட்பங்களை அறிந்து ஒரு லயத்தை கட்டமைக்கும் பொதுவான சினிமா தயாரிக்கும் பாணியை நிராகரித்து ஒரு படம் எடுக்கும் பயணம் முழுவதிலுமே அதன் கதையையும், லயத்தையும் தேடிக்கொண்டே இருக்கிறார் மாலிக். கேமரா அசைவுகள் எவையும் முன்பே திட்டமிடப்பட்டவை அல்ல. வழக்கமான சினிமா கேமரா நகர்வுகளின் இலக்கணத்துக்கு உட்பட்டவை அல்ல. அந்தக் கணத்தில் உள்ளுணர்வில் இருந்து தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கிறது கேமரா. There is no rule or convention in the camera movements whatsoever. கேமராவுக்கும் நடிகர்களுக்கும் இடையேயான ஒருவிதமான ecstatic dance நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. அதே நடனம் படத்தொகுப்பின் லயத்திலும் தொடர்கிறது.

உதாரணமாக படத்தில் ஒரு இடத்தில் ஒரு கதாபாத்திரம் மேல்நோக்கி கைகளை தூக்கும் ஷாட் ஒன்றில் இருந்து, கேமரா ஒரு பறவையின் அசைவை frame செய்தபடி சூரியனை நோக்கி மேலே நகர்த்தப்படும் ஷாட்டுடன் கட் ஆகிறது. The rhythm in this transition is unbelievable. இந்த மாதிரி ஒரு rhythm உருவாக முன்பே திட்டமிட முடியாது. அது "நிகழ" வேண்டும். உள்ளுணர்வுக்கு நேர்மையாக இருந்து தோன்றுபவற்றை திரும்பத் திரும்ப படம்பிடித்துக் கொண்டே வந்து உள்ளுணர்வில் இருந்து எடிட் செய்து கொண்டே வருகையில் இப்படி ஒரு rhythm நிகழ வேண்டும். இந்தத் தருணத்தின் மேஜிக் ஆன்மாவுக்கு நெருக்கமானது.

சினிமா என்பது புனைவை விட இசைக்கு நெருக்கமான ஊடகம் என்ற ஸ்டான்லி கூப்ரிக்கின் கருத்தியல் போல அது கவிதைக்கு, நடனத்துக்கு, ஓவியத்துக்கு நெருக்கமான ஊடகம் என்று வெவ்வேறு கருத்தியல்கள் உண்டு. மாலிக் சினிமாவை மனித எண்ண ஓட்டங்களுக்கு, அவற்றின் அலையாடலுக்கு நெருக்கமான ஊடகமாக படைக்கிறார்.
(மற்றொருபுறம் Pollock ஓவியங்களையும் நினைவுபடுத்துறது மாலிக்கின் படைப்புலகம். அவற்றை பார்க்கையில் முதலில் வெறும் சிதறடிக்கப்பட்ட வண்ணங்கள் போலத் தோன்றும். ஆனால் தொடர்ந்து பார்க்கையில் அந்த strokes-ல், அவை சிதறடிக்கப்பட்ட விதத்தில் ஒரு நடனம் இருக்கும். அது ஒரு mood-ஐ கட்டமைக்கும்.)

கவனம். உடனே அனைவரும் நானும் உள்ளுணர்வில் இருந்து படம் எடுக்கப் போகிறேன். ஸ்க்ரிப்ட் எழுதாமல், ஷாட் எழுதாமல் மனதில் தோன்றுவதை எல்லாம் படம் எடுத்து அற்புத சினிமா எடுக்கப் போகிறேன் என்று கிளம்ப முடியாது. மாலிக் இதனை செய்வதற்கு பல பல ஆண்டுகள் படைப்புலகில் ஊறியிருக்கிறார். இந்த பாணியை தன்னுடைய தனித்துவமான பாணியாக, படிப்படியாக பழகி, அதில் ஒரு பூரணத்துவத்தை கண்டிருக்கிறார். சரியாக வேலை செய்யும் ஒரு செறிவான உள்ளுணர்வை, தொடர்ந்த பயிற்சியின் மூலம் வளர்த்துக் கொண்டிருக்கிறார்.

(இந்த மாதிரியான செறிவான உள்ளுணர்வை வளர்த்துக் கொள்ளத்தான் நமக்கு வாசிப்பு, ஓவியங்கள், இசை, பயணம், வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் எண்ணற்ற கலைகளின் பரிச்சயம் தேவைப்படுகிறது. மாலிக் நமக்கு சொல்வது,
"மொதல்ல ஊறுங்கடா. அப்போதான் ஊறுகா போட முடியும். இல்லன்னா பொறியல் தான் போட முடியும்.")

படத்தில் ஐந்து படத்தொகுப்பாளர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் தாஸ்தாவ்ஸ்கி, டால்ஸ்டாய் என்று குறிப்பிட்ட புத்தகங்களை reference ஆக கொடுத்திருக்கிறார். நடிகர்களுக்கும். ஒன்றிரண்டு வருடங்கள் படத்தொகுப்புக்கு மட்டும் செலவிட்டிருக்கிறார்கள். சீரற்ற முறையில் எடுத்து தள்ளிய footage-ஐ ஒழுங்குபடுத்துவதி பிரித்து வைப்பதே பெரும் வேலையாக இருந்திருக்கிறது. எடிட்டிங் நடைபெறும் நேரம் முழுவதும் வாய்ஸ்-ஓவரை திருத்தி எழுதிக் கொண்டே இருக்கிறார். புதிய வாய்ஸ்-ஓவர் அனுப்பி எடிட்டர் அதற்கு ஏற்ப ஒரு லயத்துடன் வெட்டியதும் அதனை பார்த்து அந்த புதிய லயத்துக்கு ஏற்ப இன்னொரு வாய்ஸ்-ஓவர் எழுதுகிறார். இந்த புதிய வாய்ஸ்-ஓவர் கொண்டு மீண்டும் எடிட்டிங். புதிய லயம். மீண்டும் புதிய லயத்துக்கு புதிய வாய்ஸ்-ஓவர். இப்படியாக படப்பிடிப்பில் கையாண்டது போலவே படத்தொகுப்பிலும் திரும்ப திரும்ப படத்தின் ஆன்மாவை தேடி அடைந்திருக்கிறார்கள்.

இதன் மூலமாகத்தான் படத்தில் கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒரு visual and time rhythm உருவாகி இருக்கிறது. ஜம்ப்-கட் செய்வதிலேயே ஒரு புதிய உச்சத்தை, முழுமை நிலையை கண்டடைந்திருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட காட்சியை லேசாக மாற்றியமைத்து விட்டு பார்த்தால் மொத்த லயமே பாதிக்கப்பட்டது போன்றதொரு உணர்வு தோன்றியதாகச் சொல்கிறார் படத்தின் ஒரு எடிட்டர்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் சினிமா ஒரு saturation point-ஐ அடைந்து தேங்கி நிற்கும்பொழுது ஒரு படைப்பு பெரிய ஆற்றலை உட்செலுத்தி அதனை மற்றொரு நிலைக்கு மேலெழும்பச் செய்கிறது. 1970-களில் தர்க்காவ்ஸ்கியின் மிரர் படம் சினிமா உலகில் இப்படியான ஒரு பெருவெடிப்பாக நிகழ்ந்ததாக ஒரு கருத்து உண்டு. அதே போல நம் காலத்தின் பெருவெடிப்பாக Tree of Life-ஐ பார்க்கிறேன். நம் காலத்தைய சினிமாவின் வடிவத்தில் மிக முக்கியமான பாய்ச்சலாக இது சில வருடங்கள் கழித்து பார்க்கப்படலாம்.

Tree of Life-ல் கூட மிரர் படத்தின் சாயல்கள் ஆங்காங்கே வெளிப்படுவதாக உணர்கிறேன். இரண்டுமே ஒரு மத்திம வயது மனிதனின் பின்னோக்கிய நினைவு பயணம். இரண்டு படங்களுமே சினிமாவின் time rhythm-ஐ உணர்ந்து அதில் கற்பனைக்கு அப்பாற்பட்ட பாய்ச்சலை நிகழ்த்தியிருப்பவை. இது தவிர lace curtains, அம்மா, புல்தரையில் தாய்-தந்தையின் காதல் காட்சி, காற்றில் மிதக்கும் அம்மாவின் உருவம் என மிரர் படத்தின் பல references இருப்பதாக எனக்குத் தோன்றியது.

சினிமாவை ஒழுங்காக எடுப்பதற்காக நாம் உருவாக்கி வைத்திருக்கும் வழிமுறைகள் அனைத்தையும் நிராகரித்து சினிமாவை உள்ளுணர்வில் இருந்து கண்டடையும் தனித்துவமான பாணியை கையாள்கிறார் டெரன்ஸ் மாலிக். அதன் மூலமாகத் தான் இப்படி மனதுக்குள் ஒரு ஷாக் அடிக்க வைக்க முடிகிறது. ஒரு பார்வையாளனின் மனதின் விளக்க முடியா அறைகள் சென்று, ஆன்மாவை தொட முடிகிறது. இந்தப் புள்ளியில் ஒரு திரைப்படம் ஆன்மீக அனுபவமாக மாறுகிறது.

(படம் பற்றி இன்னும் நிறைய அறிந்து கொள்ள,
இதனை எழுத உதவிய, இவ்விரண்டு தளங்களை அணுகலாம்-
http://www.vulture.com/…/how-terrence-malick-wrote-filmed-e…
https://ebiri.blogspot.is/…/growing-tree-of-life-editing-ma…)




Comments

Popular posts from this blog