நீதிக்கு நெஞ்சோ நிகர்




கவிபாட வேளை வந்தது
திறந்திருந்த என் பேனையில்
வார்த்தைகளைக் கொட்டி
குவிக்கிறேன்
கிறுக்கல்கள் கவியாகாது
இது கிறுக்கச்சியின் உளறல்கள்
கவியரங்கில் 

நீதிக்கு நெஞ்சோ நிகர் 
என்ன கவி சொல்வேன் இங்கு ?

வருகிறான் ஒருவன் 
என் பக்கத்தில் நிற்க வைக்கிறார்கள் 
நிற்கிறான்.
கண்களில் சிந்தக் காத்திருக்கும் கண்ணீர் 
தளர்ந்து போன உடல் 
அமைதியும் பயமும் கொண்ட அவன் உள்ளம்
பிரார்த்திக்கிறது 
சட்டென்று அவன் முகம் மறைத்து 
என்னை அவனுடன் இருகப் பிணைத்துவிட்டார்
என் அதிகாரி.
நேரம் பார்த்து அனுமதிக்க
மெல்ல மெல்ல நான்,
அவன் கழுத்தை இறுக்கினேன் .
என் முழு பலத்தையும் உபயோகித்து 
அவன் கழுத்து நரம்புகளை அறுத்தேன்.
சுவாசக்குழாய் நெரிபட்டு லேசான உடைவுடன் 
அவன் நாக்கு வெளித்தள்ள 
கண்கள் முழித்தள்ள 
மேலும் மேலும் இறுக்கி பிடித்தேன் 
வன்மம் பொங்க என் கடமையை தொடர்ந்தேன் 
அவன் துடித்தான் 
நான் இறுக்கி பிடித்து கழுத்தறுக்க 
சில நிமிட போராட்டங்களில் மடிந்தான் 
உயிர் பிரிந்த உடன் என் அதிகாரி 
என்னை உற்சாகமாய் பெருமை பொங்க பார்த்தார் 
அவன் கழுத்தை இ றுக்கிப் பிடித்தால் 
என் உடல் வலித்தது 
சற்று நேரத்தில், ஏதோ ஒரு வித வலி என்னுள் 
பரவத்தொடங்கியது 
உயிரற்ற அவன் உடல் என் கைகளுக்குள் இருந்தது.
என் உடலில் இறங்கியது 
பாவத்தின் பார சுமைகள் 

எல்லாவற்றையும் விட சிறப்பானவர்கள்
மனிதர்கள் தானாம் 
கட்டளைக்கு காத்திருகின்றது உலகம் 
கருத்துக்களுக்கு காத்திருகிறது காலம் 
விளையாட பிரபஞ்சம் 
பந்தாட கிரகங்கள் 
ஆறாம் அறிவுகள் திறந்து வைத்த வாழ்க்கை 
வாசலில் விரிகிறது 
வெவ்வேறு நகரில் வெவ்வேறு உலகம் 
இல்லை இல்லை 
வெவ்வேறு நபரில் வெவ்வேறு உலகம் 
வாழ்கிறது வரலாறு 

வல்லமையோடு 

வஞ்சனையோடு 

வறுமையோடு 

விதவிதமான வாழ்க்கை !




வல்லமை உள்ளவன் 

ஆள்கிறான் உலகை 

தன் விழுதுகளில் அடுத்தவர் வேர் அறுத்து 

அழகு பார்கிறான் 

வியாபகம் குறிக்கோள் 

அதற்கு விலை மனிதம் 

என்றாலும் பரவாயில்லை.


உலகமே உள்ளங்கையில் 
சுருங்கி ஒரு கிராமமாய்
அதை ஆளும் ஒரே தலையாரியாய்
அவன்  

ஆள்தலின் சுகம் தொடர 
அடிமைகள் வேண்டுமே 
இருப்பவரும் பிறப்பவரும்
நவயுக அடிமைகள் 
உழைப்பு சுரண்டல்கள் 
தொடர்ந்தாலும் 
எங்களுக்கு கவலையில்லை
தூக்கி கொடுப்பதில் வள்ளல்கள் 
வாலை ஆட்டி விசுவாசம் பார்ப்பதில்
நாங்கள் வல்லவர்கள்
இதில் இனப்பெருமை பேசி 
இயலாமை மறந்திடுவதும் வழக்கம் தானே

வாய்ச் சொல்லில் வீரரடி 
வஞ்சனைகள் செய்வாரடி 
பேசுகிற பேச்சை பார் 
பெருமகனின் பிள்ளைகள் போல 
என்று புலம்பவைத்து விட்டார்கள்
வஞ்சனையாளர்கள்

அடுத்தவர் சுயத்தில் கல்வீசி
உள்ளத்தில் சொல் வீசி 
வலிகளை அனுபவிக்க அனுபவிக்க 
இன்பம் கொள்ளும் அன்பர்கள் இவர்கள்

வஞ்சித்து வஞ்சித்து வாழ்கிறார்கள் 
அடுத்தவர் வாழ்வின் அழிவில் 
தொடங்குகிறது இவர்களின் உயரங்கள் 
பேசி சிரித்து நடித்து அழுது
அழிப்பவர்கள்
ஆதர்ச சூரியன்களாய் ...
அரியணை ஏற்றிவிட்டு அழகு பார்க்கும் 
கடமையை தொடர்கிறோம் 
மீண்டும் மீண்டும் 

இறுதியாய் இவர்கள் 
இருக்கவும் பிழைக்கவும் வழியற்று 
விதி பார்த்து விரக்தியில் 
ஏங்கி தவிப்பவர்கள் 
பற்றி எரியும் வயிற்று சூட்டை
தணிக்க வழி தேடுபவர்கள் 
ஆசைகளையும் கனவுகளையும் தின்று 
வயிறு நிரப்புகிறார்கள்

முன்னவர் இருவர் வழிதவறின் 
அதற்கு பல பெயர்கள் 
உழைப்பு 
ராஜதந்திரம் 
புத்திசாலித்தனம் 
வியாபார தர்மங்கள் 
பின்னவர்கள் வழி தவறின் 
சந்தேகமே இல்லை 
அதன் பெயர் குற்றம் 

வங்கியில் கொள்ளை அடிப்பவன் 
உல்லாசமாய் இருக்க 
வயிற்று பசிக்காய் திருடியவன் 
சிறைச்சாலையில் 
பணமின்றி திருடியவனுக்கு 
அபராத பணம் வேறு 
இல்லாவிட்டால் அதற்கும் சேர்த்து 
சிறைவாசம் 
நல்ல தீர்ப்பு நல்ல தீர்ப்பு 
சட்டங்கள் சொல்கிறது    


நீதிக்கு நெஞ்சோ நிகர் 
தலைப்பில் இருக்கிறது நீதி 
நீதி -வரைவிலக்கணம் தேடிப்பார்க்கிறேன்
கிடைக்கவில்லை 
எப்படி கிடைக்கும் 
இருந்தால் தானே கிடைபதற்கு 
சொன்னதுதான் தாமதம் 
பொங்கி எழுந்துவிட்டாள் சிலைமகள் 
கறுப்பு துணியால் கண்கட்டி 
காலமெல்லாம் தராசு தூக்கும்
சிலைமகளுக்கு இருக்கிறதாம் நீதி 

புத்தகங்கள் 
மன்றங்கள் 
கூண்டுகள் 
தண்டனைகள் 
அது தோற்றுவித்திடும் பயங்கள் 
இருக்கிறதாம் நீதி 
வரலாற்றிலிருந்து வரிசைப்படுத்திக் காட்டினாள் 
எது தீர்ப்பு ?
உதராரணப் படுத்தல்களில் இருப்பதுவா தீர்ப்பு 
இல்லை, உண்மைகளில் இருப்பதுவா தீர்ப்பு ?

சட்டம் எழுதிய முதல் வாசகம்
இரக்கம் கூடாது என்பதுதானே 

குற்றம் குற்றம் என்பவர்கள் 

எது குற்றம் என்ற எல்லை வகுத்தார்களா ?

எவன் செய்தால் குற்றம் என்று சொன்னார்களா ?



சட்டம் சமனானது தான்

அதன் ஓட்டைகள் சமனல்லவே 



இறுதியில் அவள் காட்டிய உதாரணங்கள்
கூட்டம் கூட்டமாய் கொலை செய்தவர்கள் 
தூக்கிலிடப்பட்டார்கள் 
நியாயம் வென்றது 
நீதி வென்றது

பல மன்றுகள் தாண்டி கிடைப்பதுதான் தூக்கு
மறுக்கவில்லை 
மனிதம் மறந்து போனதையும் மறுக்கவில்லை 
வென்றது நீதியோ நியாயமோ அல்ல 
அரசியல்

நம் தேச வீரன் எதிர் பாசறையில்
மாட்டிய போது
அவன் விழிகள் பிடுங்கப்பட்டு
குடல் அறுத்து உடல் சிதைத்து
உயிர் வதையோடு இறந்தகதை
சொல்பவர்களே 
எதிர்ப்பாசறை வீரன் எம் பாசறையில் 
சிக்கியபோது 
அறுசுவை உணவோடு ஆடம்பரமாய் 
கவனித்தோமா ?
அங்கே நடந்தவை இங்கேயும் தொடர்ந்தது  

உள்நாட்டு பெண்கள் நிர்வாண போராட்டம்
நடத்திய போது உங்கள் சேவை பெருமைகளை 
உலகமே உணர்ந்து கொண்டது

ஆதிக்குடி பெண்களை வன்புணர்ந்த 
பெருமை மிக்க ஆண்மைக் காவலர்களுக்கு 
தரப்பட்டது பொது மன்னிப்பு 
வெடி மருந்துக்கு பிளாஸ்டிக் பை கொடுத்தவனுக்கு 
அளிப்பீர்கள் தூக்கு
உயிர் பலிக்கு பதில் பலி கொடுத்த 
மனுநீதிகளின் மரபணுக்கள் தானே 
உங்களுக்கும் 

குற்றவாளிகளை தேடிப்பிடித்த வீரர்களின் 
வாழ்க்கையை உயர்த்தினீர்கள் 
நம்புகிறோம் நம்புகிறோம்
காட்டரசனை நீங்கள் பிடித்த கதையைப் போலவே 
இதையும் நம்புகிறோம்

பிடிபட்டவனின் ஆணுறுப்பில்
மின்சாரம் பாய்ச்சி உண்மைகளை பெற்ற 
உங்கள் பெருமைகளை சொன்னபோது
கண்கள் மிளிர கை தட்டி வரவேற்ற 
குடிமக்கள் தானே நாங்கள்

உங்கள் பார்வையில்
அப்பாவிகளை கொன்ற கொலைகாரன் குற்றவாளி 
அவன் மட்டுமா குற்றவாளி 
வரலாறுகளை தோண்டிப் பாருங்கள்
குற்றத்தின் வேர்கள் விளங்கும்

தண்டிப்பது சட்டத்தின் கடமை -
இட ஒதுகீட்டுக்காய்
உயிரோடு தீ வைத்து கொளுத்தியவர்கள்
மதப் பெயரால் மனித வேட்டையாடியவர்கள்
இன்னும் எத்தனை பேர் ?
இவர்களுக்கெல்லாம் என்ன தண்டனை ?

உஷ் ! அதிகம் பேசாதே 
என்று அதட்டுகிறாய் 
கைப்புண்ணுக்கு கழுத்தறுத்து
பலி கொடுக்கும் மேதாவிகள் நாங்கள்
இறந்த பின்னர் கிருமிபோல பெருகும் விபரம்
தெரிந்தும் தெரியாதது போல இருப்பதே
நமக்கு அழகு 

அம்புகள் உடைக்கப்படும் அவலம் தொடர்கிறது
வில்லேந்தியவனின் விளையாட்டுக்கள் நடக்கிறது
வேடிக்கை பார்க்கிறோம் நாமும் 
வழக்கம் போல 
வேறு என்ன வேலை நமக்கு?

நீதிக்கு நெஞ்சோ நிகர் 
என்ன கவி சொல்வேன் இங்கு ?


என் கையில் தொங்கிக்கொண்டிருகிறது உடல் 
பாவத்தின் பாரச்சுமைகள்  
வருகிறார் அதிகாரி 
என் கழுத்தை அறுத்து எறிந்து விட்டு 
அவன் உடலை எடுத்துப் போகிறார் 
தூரத்தில் வீசப்பட்டு கிடக்கிறேன் நான் 
என்னிடத்தில் கட்டப்படுகிறது
என்னைப்போலவே 
இன்னுமொரு தூக்கு கயிறு
இன்னொருவனுக்காய் ...

Popular posts from this blog