FAILAN



காதல்-
ஒருவர் மனதை ஒருவர் புரிந்துகொள்வது அவருக்காக தன்னை மாற்றிகொள்வது அவரோடு வாழ்வை பகிர்ந்து கொள்வது போன்றவை தானா ? 
நேசிப்பு என்பதில் தனித்திருத்தல், காத்திருத்தல் என்பவை உள்ளடங்காதா ?
தனித்த ஒருவரின் நேசிப்புக்கு அர்த்தமோ அடையாளமோ
ஏன் இல்லை ....?
எதிர்பார்ப்புகள்  இல்லாத காதல்
புயல், தென்றல் தவிர்த்து உணரப்படாத அந்த காற்றை போலவே எப்போதும் .....

கதாநாயகியின் பெயர்  Failen. சீனாவிலிருந்து கொரியாவுக்கு வருகிறாள். பெற்றோர்கள் இறந்தபின்பு யாருமற்ற நிலையில் தூரத்து உறவினர்களை தேடி கொரியாவுக்கு வந்தால், அவர்கள் எப்போதோ கனடாவுக்கு இடம்பெயர்ந்துவிட்ட விடயம் தெரிகிறது.
யாருமற்ற நிலையில் அவளை சிகப்பு விளக்கு பகுதிக்கு விற்க ஒருவன் முயல்கிறான். அப்போதுதான் தெரிகிறது
Failenக்கு தீராத வியாதி இருப்பதாகவும் நோயோடு போராடி அவள் வாழ்ந்துகொண்டிருகிறாள் என்பதையும் அறியும் அவன் வேறு வழியின்றி பணத்துக்காக அவளுக்கு உதவ முன்வருகிறான்.
திருட்டுத்தனமாக விவாகம் செய்தால் கொரியாவில் வாழிட உரிமை கிடைக்கும் என்று சொல்லி விவாக பத்திரங்களை தயார் செய்கிறான்.
Failenஐ திருமணம் செய்ய தனது நண்பனை அணுகுகிறான்.
அவன் தான் Kang-jae ( சோய் மின் சிக்.)

Kang-jae-நடத்தர வயது ரௌடி. எல்லோரும் அவனை காலவதியாகிய  ரௌடி என்று அழைகின்றனர் .யாரும் அவனுக்கு இல்லை.
சுற்றி இருப்பவர்கள் யாருமே அவனை பொருட்படுத்துவதும் இல்லை.
ரௌடியாக இருந்தாலும் வயதானதால் மற்றவர்கள் அவனை கேலி செய்கின்றனர் .பெரிய அடிதடிகளுக்கு அழைப்பதுமில்லை .நீல படங்களை விற்பனை செய்யும் கடையை மேற்பார்வை செய்யும் வேலையை கொடுத்ததோடு என்றாவது அந்த நகரில் நடக்கும் பஞ்சாயத்துக்கு வேண்டா வெறுப்பாக அழைத்துபோவார்கள்.

இந்த நிலையில் பணத்துக்காக திருமணம் செய்ய சம்மதிக்கிறான்Kang-jae. Failenன் முகத்தை கூட பார்க்காமல் பத்திரங்களை ஒப்படைத்துவிட்டு சென்றுவிடுகிறான்.
Kang-jaeன்  ஸ்கார்ப்பையும் அவனது புகைப்படத்தையும் கொடுத்து இவன் தான் உன்னை திருமணம் செய்தவன் என்று காட்டி இனி நீ இந்த கொரியாவில் சந்தோஷமாக வாழலாம் என்று கூறுகிறான் அந்த நண்பன்.
Failenம் ஒரு கிராமத்திற்கு சென்று அங்கு ஒரு பெண்மணியிடம் பணிபுரியத்தொடங்குகிறாள்.



நேர்த்தியாக சிரமம் பார்க்காது பணிபுரியும் அவளை,
கடை உரிமையாளராக உள்ள பெண்மணிக்கு பிடித்து போகிறது .
மகளைப் போல அன்பு காட்டுகிறார் .அந்த ஊரில் அவள் மீது நல்ல மதிப்பு ஏற்படுகிறது .எல்லோரும் தன் மீது அன்புடன் இருப்பதை பார்த்து மகிழும் Failen இதற்கு காரணம் தன்னை திருமணம் செய்த Kang-jae தான் என நினைக்கிறாள்.
அவன் மூலமாகவே கொரியாவில் நிம்மதியாக வாழும் உரிமை கிடைத்தாக எண்ணுபவள் தனது அறையில் Kang-jaeன் புகைப்படத்தை பார்த்துக்கொண்டே நன்றி கடிதம் எழுதுகிறாள்.
''எனக்கு வாழிடம் கொடுத்த உங்களுக்கு நன்றி என்றாவது என்னை பார்க்க நீங்கள் வருவீர்கள்'' என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறாள்.

பல மாதங்களுக்கு பின்னர்,
Kang-jaeக்கு ஒரு தகவல் வருகிறது.
'உங்கள் மனைவி இறந்துவிட்டாள்;வந்து உடலைபெற்றுகொள்ளுங்கள்'.
Failen வாழ்ந்த இடத்திற்கு செல்கிறான்.

இதுவரை பார்க்காத பெண்ணை முதன் முதலாக பிணமாக பார்கிறான். கணவன் என்று ஆதாரங்களை காட்டி உடலை எரித்து அஸ்தியை பெற்றுகொள்கிறான்.
பணிபுரிந்த இடத்துக்கு சென்றால் அந்த பெண்மணியை Kang-jaeக்கு முன்பே தெரியும் .அவளுடைய கடையை பல வருடங்களுக்கு முன்னர் அடித்து பிடுங்கிய போது Kang-jaeம் ரௌடிகளோடு உடனிருந்தான்.
இவனை பார்த்து தூற்ற தொடங்கியவள் Failen ன் கணவன் என்பதை அறிந்து அமைதியாகிறாள்.
உனக்காக அவள் காத்திருந்தாள் என்று சொல்லி அவளது அறையை காட்டுகிறாள். தனது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தையும் ஸ்கார்ப்பையும் பத்திரப்படுத்தி  வைத்திருந்ததோடு தனக்காக எழுதிய கடிதங்களை பார்கிறான்.

படிக்க படிக்க அவனுள் இனம்புரியாத மாற்றம் ஏற்படுகிறது .
கடிதங்களில் அவளது நன்றி உணர்வும் சொல்லபடாத நிரம்பி வழியும் காதலும் அவன் மனதை கலங்க செய்கிறது .
ஊரே தன்னை திட்டி அவமானப்படுத்திய போது கலங்காத மனம் அவளின் அன்பில் கரைந்ததை உணர்கிறான்
அந்த அன்பு அவனை முழுவதுமாக ஆட்கொள்கிறது அவனது இறுக்கத்தை தளர்த்தி மென்மையாக மாற்றுகிறது .
அவளது இறுதிக் கடிதத்தை படிக்கிறான் .
நோய் தீவிரமடைந்த நிலையில் Kang-jae யை பார்க்க வந்ததாகவும்
தயக்கத்தோடு அவனது DVD கடைக்கு வெளியே நின்று வேடிக்கை பார்க்கையில் உள்ளே செல்ல முயல போலீஸ் Kang-jae ஐ கைது செய்து அழைத்து செல்கிறது ....அதை பார்த்துக் கொண்டே தனியே நிற்கிறாள் Failen.
கடிதத்தை வாசித்து முடிக்க முன்னரே துடித்துப்போகிறான்
யாருமே நேசிக்காத தன்னை இத்தனை தூரம் நேசித்த இவள் யார் ?
இந்த தேவதையை பார்க்க முடியாமல் போய்விட்டதே என்று கலங்குகிறான்

அவளது பொருட்கள் ,இறுதி சம்பளம் ,அஸ்தி போன்றவற்றோடு  நகருக்கு வருபவன் ,
Kang-jae க்காக பாடிய ஒரு பாடலை கேசட்டில் நண்பன் பதிவு செய்து வைத்திருக்க அதை போட்டு கேட்கிறான் .
மிகுந்த வெட்கத்தோடு கடற்கரை சத்தத்தில் மென்மையாக ஒலிகிறது அவள் பாடல் ....
அதே நேரம் எங்கிருந்தோ வந்த யாரோ ஒருவன் Kang-jaeஐ பின்னாலிருந்து கழுத்தை நெரித்து கொல்கிறான்.அவள் பாடல் ஒலிக்க இவன் உயிர் துடிதுடிக்கிறது .
அவன் உயிர் பிரிகிறது
இன்னும் பாடிக்கொண்டிருகிறாள் Failen
காற்றில் அஸ்தியோடு அவள்  கானமும் தேர்ந்தே கலக்கிறது.


ஒரு போஸ்டரை பார்த்து இந்த படத்தை கண்டிப்பாக பார்க்கவேண்டும் என்று நினைத்து பார்த்த ஒரே படம் இதுதான்
காரணம்  படத்தில் நடித்தவர்கள்
Choi Min-sik (சோய் மின் சிக்)கை யாரும் மறக்க முடியாது.
OLD BOY,I SAW THE DEVIL படங்கள் அவர் நடிப்பில் அதிகம் பேசப்பட்ட படைப்புகள்.
அந்த சோய் மின் சிக், ஹாங்காங் நடிகை Cecilia Cheung உடன் ...
இது ஒரு காதல்கதை; கொரிய சினிமாவின் காதல் படங்களில் காணப்படும் நாயகன் நாயகியை முதுகில் சுமக்கும் காட்சி
அருமையான காதல் கதையாக இருக்கும் என்று பார்க்க முடிவெடுத்த படம் தான் இந்த Failen
என் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை 
போஸ்டரில் இருந்த காட்சி படத்தில் இல்லை 
காதல் இருந்தாலும் காதல் காட்சிகளே இல்லை 
இருவரும் சந்திக்காத நிலையில் சம்பவிக்கும் காதல் இது ....

கேங்ஸ்டர்   படங்களை திகட்ட திகட்ட பார்த்த எனக்கு Choi Min-sik  கதாபாத்திரம் கொஞ்சம் புதிதாகவே தோன்றியது 
வில்லனிடம் ஹீரோவிடம் அடிவாங்கும் மூன்றாந்தர ரௌடிகளை பார்த்திருப்போம் . 
உடல் வலிமை இருந்தாலும் அண்டி வாழும் நிர்பந்தத்தில் இருப்பவன் தன்னை விட எளியவனை வதைத்து தன் கோபத்தை காட்டி ''நானும் ரௌடிதான் '' என்ற விம்பத்தை ஏற்படுத்த மிகவும் சிரமப்படுபவன் 
தலைவன் சொல்லும் வேலையை அப்படியே செய்பவர்களாகவும் முட்டாள்தனத்துடன் முடிவெடுக்கும் மனிதர்களாகவும் காட்சிப்படுத்தப்படும் ஒருவன் தான் இங்கு கதையின் நாயகன் .கவனிக்கப்படாத அவனின் காதல் தான் இந்த கதை .
பெண்களை வன்புணரும் மிருகமாவும் பழிவாங்குதலில் தேடலும்  கொண்ட மனிதனாக பார்த்த Choi Min-sik ஐ இப்படி ஒரு கதாபாத்திரத்தில் பார்க்க வித்தியாசமாகவே இருக்கிறது .
எதற்கும் உதவ மாட்டான் என்று புறக்கணிக்கபடும் நபராகவும்
கேங்ஸ்டர் என்ற அடையாளம் பெற்றதால் சராசரி வாழ்வை வாழ முடியாத நிலையிலும் தன்கென்று யாருமில்லாத வெறுமையை உணர்பவராகட்டும் எத்தனை தேர்ந்த நடிப்பு 
Failanன் அன்பை கடிதங்கள் வழியே உணர்ந்து அழும் தருணத்தில் 
ஏதோ ஒரு வித குற்றஉணர்வும் ஏக்கமுமாக அவர் காட்டும் முக பாவங்கள் மிகதேர்ந்த நடிகன் என்பதை உணர்த்தும் 

சிறிய கண்களில் எப்போதும் சோகம், 
புன்னகையில் வசீகரம், அமைதியான நடிப்பு என்று மனமெங்கும் சோகத்தை நிரப்புகிறார் Cecilia Cheung.


மிக மிக மெதுவாக நகரும் காட்சிகள் எதோ ஒரு சலிப்பை தருகிறது 
காரணம் Choi Min-sik ன் வாழ்க்கை பகுதி அப்படித்தான் .நெரிசல் மிகுந்த வாழ்வில் அவனுகென்று எதுவுமே இல்லை 
Failanன் காட்சிகள் மிக மென்மையாக ஒரு தென்றல் காற்றை போல கடக்கிறது .யாருமில்லாத தனிமையை வதை தரும் நோயை Choi Min-sikஐ நேசிப்பதன் மூலம் எளிமையாக கடந்து விடுகிறாள் Failan.
முட்டாள் தனம் என்ற விமர்சனங்களை கடந்து அவள் தன் வாழ்வை மகிழ்ச்சி படுத்திகொள்கிறாள் ....


 Jirō Asadaன் ஜப்பானிய நாவலான Love Letterஐ படமாக இயக்கியிருக்கிறார் Song Hae-sung. 
இதற்காக  Blue Dragon Film Awardsல் சிறந்த இயக்குனருக்கான விருதினை வென்றுள்ளார் .
Blue Dragon Film Awards,Busan Film Critics Awardsல் சிறந்த நடிகருக்கான விருது Choi Min-sikக்கு கிடைத்து 
இன்னும் சில விருதுகளும் படத்திற்கு கிடைத்துள்ளன . தோல்வி படமாக அமைந்தாலும் விமர்சனரீதியாக வரவேற்பை பெற்றது .


இந்த உலகமே அன்புக்காகதான் ஏங்குகிறது.
யாரவது நம்மை கவனிக்க மாட்டார்களா என்று ஆழ்மனதில் ஒரு ஏக்கம் இருக்கிறது .
பிறந்ததும் அம்மாவின் விரல்களை பற்றி பிடிக்க ஆரம்பித்ததில் இருந்து மற்றவர்களின் நேசத்துக்காகவே தவிக்கிறோம் .
அந்த நேசிப்பு எந்தளவு சுகமும் வலியும் ஒரே நேரத்தில் தரவல்லது என்பதை திரையில் பார்க்கலாம் .

Comments

Popular posts from this blog

நாயகவிம்பத்தின் சிதைவுகள்