பெண்  சுயம்  ஒரு மாற்றுப் பார்வை 


''என் கையிலிருப்பது ஒரு பேனா .இதே மாதிரி தோற்றத்தில் இதே மாதிரி  மையளவில் இதே மாதிரி செயல் திறத்துடன் லட்சக்கணக்கான பேனாக்கள் உருவாக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு ஒவ்வொரு இடத்திலும்  உள்ளது .
இந்த மையில் நாம் என்ன எழுதிறோம் என்பதை பொறுத்து தான் அந்த பேனாவுக்கு அர்த்தம் கிடைகிறது .
இந்த பேனா மாதிரி தான் பெண் வாழ்க்கையும் .
பெண்கள் உலகம் முழுவதும் ஒரே மாதிரி உடல் உறுப்புக்கள் ,ஹார்மோன்கள், செயல்திறனுடன் இருக்கிறோம் .அதுவும் கோடிக்கணக்கில் .
அதில் எத்தனைப் பேர் அடையாளங்களாக இருக்கிறார்கள் ?
அர்த்தமுள்ள வாழ்வை வாழ்கிறார்கள் ?


பெண் சுயம் என்று நான் சொல்வது சுய அடையாளத்தை .தன்னை தானே செதுக்கி உயரங்களை சிகரங்களை  நோக்கி செல்கிற பெண்ணோட தேடல் வெளிதான் நான் பேசபோற சுயம் .

Wயோட மகள்,  Xஓட சகோதரி,  Yயுடைய மனைவி, Zஉடைய அம்மா இப்படிதான் பல பெண்கள் அடையாளம் காட்டப்படுகிறார்கள் .
வீட்டைத்தாண்டி அவர்களின் பெயர் இல்லை .ஏன் திருமணம் ஆனதற்கு  பிறகு திருமதி என்ற அடையாளத்திற்குள் அவள் பெயரே அவளுக்கு சொந்தமில்லை .
அதான் இனிஷியல்லயும் நம்ம பெயர் இல்ல .பரம்பரைலையும் நம்மக்கான அடையாளம் இல்ல .

என் கூட ஒரே படிச்சவங்க 160 பேர் 
உங்க லட்சியம் என்னனு கேட்டப்ப டாக்டர் லாயர் டீச்சர் இஞ்சினியர்,air hostess,scientist இந்த மாதிரி லட்சியங்களோட கைதூக்கினாங்க .இப்ப படிப்பு முடிஞ்சி 5 வருஷம் கழிச்சி பார்க்கிறப்ப, 
கல்லூரியில் 23 பேர் படிக்கிறாங்க (உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் )
வங்கி இன்சுரன்ஸ்  உட்பட நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் 40 பேர் .ஊடகத்துறையில நான் மட்டும் தான் பணிபுரிகிறேன் . மிகுதி இருப்பவர்களில் கிட்டத்தட்ட 80 பேரும் திருமதிகள்.
 ( 2 பெண்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டது).
படித்து முடிக்கும் வரை யாருமே குடும்பத்தலைவி ஆகபோகிறோம் என்று கைதூக்கவில்லை . ஆனால் விரும்பியோ விரும்பாமலோ  அவர்கள் வாழ்க்கை அதுதான் என்று முடிவாகிவிட்டது .

அது அவர்கள் வாழ்க்கை, அவர்கள் முடிவு என்று என்னால விட முடியல .காரணம் என் வாழ்க்கைல நான் சந்திச்ச 3 பேர் .

பெண் 1
ஒருநாள் நானும் உடன் படித்த தோழியும் சந்தித்தோம் .பேச்சின் நடுவே நீ சந்தோஷமா இருக்கியா ? உன் வேலை உனக்கு கஷ்டமில்லையா ? என்று கேட்டாள். சில கஷ்டங்கள் இருக்கு .சம்பளம் ரொம்ப கம்மிதான் .ஆனால் நான் சந்தோஷமா இருக்கேன் . இதுதான் என்னை சந்தோஷமா  வச்சிருக்கிற வேலைனு சொன்னப்ப அவள் முகம் வாடிவிட்டது.
fashion designerஆகுறது அவள் லட்சியம். வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள் என்பதால் அந்த கனவை சொல்லவில்லை . இன்று ஒரு நிறுவனத்தில் நல்ல வேலை. நல்ல சம்பளம் . ஆனால் சந்தோசம் மட்டும் இல்லையாம் .
நான் உதவி செய்வதாக கூறினேன் .மறுத்துவிட்டாள்.
''எனக்கு எப்படியும் இன்னும் ஒரு வருஷத்துல கல்யாணம் ஆகிடும் அதுக்கு பிறகு என்ன செய்ய முடியும் ? இதெல்லாம் நடக்காது'' என்று மறுத்துவிட்டாள்.

பெண் 2
நான் English Course படிக்கும் போது ஒரு அக்கா. அவங்க வாழ்க்கை பற்றி சொன்னங்க பரிட்சையில் நல்ல பெறுபேறு எடுத்து உயர் தரம் படிக்க ஆசையாக காத்திருந்த வேளையில் அப்பா திருமண ஏற்பாடுகள் செய்துவிட்டாராம் .எனக்கு நன்றாக படித்து உங்களை போலவே அரசாங்க வேலைக்கு சென்று  உங்களையும் அம்மாவையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது என் ஆசை .அதனால் இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என்று மறுத்திருக்கிறார் .
''நீ சம்பாதிச்சி நான் திங்குற அளவு என் நிலைம கேவலமா போகல ...கொஞ்சம் படிச்சதுக்கே இப்படி கதைக்கிற .இன்னும் படிச்சா உன்ன அடக்க முடியாது'' என்று கட்டாயப்படுத்தி  திருமணம் செய்து கொடுத்துவிட்டனர் .
திருமணம் ஆன 4 மாதங்களில் கர்ப்பிணியாகிவிடார் . முதல் குழந்தை பிறந்து 8 மாதங்களுக்குள் அடுத்த குழந்தை .மறுபடியும் கர்ப்பிணி ......

பெண் 3
அடுத்த பெண் நடுத்தர வயதுடையவர்.என் வகுப்பு மாணவியின் அம்மா .3 குழந்தைகள் 2வது குழந்தை மனவளர்ச்சி குன்றிய குழந்தை .செயல் திறன் அற்ற அந்த குழந்தைக்கு  சகல வேலைகளும் இவர் தான் செய்ய வேண்டும் .நாங்கள் 5 பேர் அவர்களது வீட்டிற்கு சென்றிருந்தோம் . பிள்ளைகளை கவனிப்பது , எங்களை உபசரிப்பது , கணவருக்கு உணவு தயாரிப்பது என்று பம்பரமாக சுழன்று கொண்டிருந்தார் .
அந்த தோழியின் தந்தை வீட்டுக்கு வருகிறார். உணவு மேஜையை பார்க்கிறார் . அடுக்கி வைக்கப்பட்டுள்ள உணவுத் தட்டில் ஈ ஒன்று அமர முயல்கிறது .பக்கத்தில் உணவு மூடும் கூடை இருக்கிறது .அவருக்கு கோபம் வருகிறது அந்த அம்மாவின் பேரை சொல்லி உரக்க கத்துகிறார் .பதறிப்போய் வெளியே வந்து பார்த்தால் ''உனக்கு அறிவில்ல சாப்பாட்ட தொறந்து போட்டா இலையான் மொச்சி சாப்பிட முடியுமா ? இந்த அசிங்கத்த நீயே தின்னு... கொஞ்சம் கூட பொறுப்பில்ல ....'' அந்த அம்மாவின் கண்கள் கலங்கிவிட்டது.கண்ணீரை சிந்தவிடாமல் அடக்கிக்கொண்டு கூடையை எடுத்து மூடி விட்டு சமையலறைக்கு சென்றுவிட்டார் . அந்த கூடை அங்கிளின் கைகளுக்கு மிக மிக அருகில் இருந்தது .எடுத்து மூடியிருக்கலாம் .வெளிமனிதர்கள் முன்னால் சொந்த மனைவியை திட்ட தேவையில்லை . 
சொல்லப்போனால் அவர் அந்த அம்மாவை அடிக்கவில்லை .சூடு வைக்கவில்லை .வரதட்சனை கொடுமை உட்பட எந்த கொடுமையும் செய்யவில்லை .நகை பணம் எல்லாம் கொடுத்து தான் இருக்கிறார் .ஆனால் அந்த அம்மா சந்தோஷமாக இல்லை என்பது மட்டும் உண்மை .

குடும்பம் விரும்பாது, சமுகம் ஏற்காது என்று தன் கனவுகளை இலட்சியத்தை வெளிப்படுத்தாத பெண் 
தன் ஆசைகளை சொல்லியும் அதற்கு அனுமதிக்காத சமுகத்தில் வாழ்ந்த பெண் 
திருமணத்திற்கு பிறகு தன்னையே தொலைத்து யாருக்காகவோ வாழ்கிற பெண் 
இவர்கள் மூவரும் உயர் நடுத்தரவர்க்க பெண்கள் ,அடிப்படைக் கல்வியறிவு உடையவர்கள் , படித்த குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்,இவர்களிடம் இல்லாத ஒரு விஷயம்- பெண் சுயம் . 
இது போல இன்னும் எத்தனைப் பெண்கள் நம்மத்தியில் ???



பெண் சிசுக்கொலை நடக்கும் நாடுகளை தவிர்த்து  பார்த்தல் ஆண்களை விட பெண்களோட எண்ணிக்கை பல நாடுகளில் அதிகம் என்று கூறுகிறார்கள் . ஆனால் ஆட்சிபிடத்தில் ஆளுமை திறனில் சாதனையாளர்களாக சிந்தனையாளர்களாக என்று பல பட்டியல்களில் பெண்களின் எண்ணிக்கை மிக குறைவு. அதுவும் கடைசி 100 ஆண்டுகளில் தான் அடித்து பிடித்து அந்த எண்ணிக்கையை பெண்கள் கொஞ்சம் அதிகரித்திருக்கிறனர்.
ஏன்?

ஒரு ஆணிற்கு பெரிய இலட்சியங்கள் இருக்கும் .அவன் எப்படியும் ஆசைப்படலாம் 
அதை அடைவதற்கு முயற்சிக்கலாம் திருமணம் செய்துகொள்ளலாம் அதனால் எந்த பாதிப்பும் இல்லை .
பெண்களுக்கு ஒரு குறுகிய வட்டத்தை தாண்டி கனவு காண வழியில்லை இலட்சியங்கள் வரையறுக்கப்பட்டவை.
அப்படியே ஆசைப்பட்டாலும் டீச்சர் , 5 மணிக்கு வீடு திரும்புகிற அரசுப்பணி போன்ற பெண்களுக்கே உரிய 'அடக்க ஒடுக்கமான' துறைகளை தேர்ந்தெடுத்தால் மட்டுமே திருமணத்துக்கு பிறகு அதை தொடரலாம் .

ஒரு பெண்ணோட சுயம் ஏன் அவசியம் ?
அவள் ஜெயிற்பதும் தோற்பதும் அவளது personal.
அவள் நினைத்தால் வேலைக்கு போவாள் இல்லாவிட்டால் வீட்டில் இருப்பாள் 
இதுல என்ன இருக்கு ?இதால என்ன மாறிடப் போகுதுன்னு நிறைய பேர் கேட்டிருக்காங்க 

நம்ம வாழ்க்கை என்பது நாம வாழ்றது மட்டுமில்ல அடுத்தவங்க வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டியா இருக்கிறது தான் உண்மையான வாழ்க்கை 
இன்னைக்கு எல்லோருமே Vote போடுறோம் .பெண்களுக்கு இடப்படுற மைல மட்டும் ஒரு விசேஷம் இருக்கு அது வெறும் மை இல்ல .'எமிலி டேவிஷன் '(Emily  Davison) என்ற பெண்ணின் இரத்தம் .
மேலைத்தேய நாடுகளில் தேர்தல் அறிமுகப்படுத்தப்ப பின்னர் பெண்களுக்கு மட்டும் வாக்குரிமை கிடைக்கவில்லை .எமிலி இது தொடர்பாக போரடினாங்க.ஆனால் எதுவுமே நடக்கல .பொறுத்து பொறுத்து பார்த்த எமிலி நேரடியா மன்னனை சந்திக்க முடிவெடுத்தாங்க.
 5 ம் ஜார்ச் மன்னன் குதிரைப்பந்தயங்களை வேடிக்கை பார்த்துகொண்டிருந்தான் .அங்கு சென்ற எமிலி, போராட்ட வாசங்களை ஏந்திக்கொண்டு அந்த குதிரைத்திடலில் ஓட்டிச்சென்று விழ அத்தனை குதிரைகளும் எமிலியை மிதித்து சென்றன .சம்பவ இடத்திலேயே எமிலி மரணித்துவிட்டார். எமிலியின் உயிர்த்தியாகம் மன்னர் மனதை மாற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் அதன் காலனித்துவ நாடுகளுக்கும் பெண்களுக்கு வாக்குரிமை கொடுக்கும் படி உத்தரவிட்டார் .
யாரோ போட்ட விதை இன்று மரமாகி நிழல் தருவது போல இன்று நாங்கள் அனுபவிக்கும் இந்த சுகந்திரம் யாரோ ஒரு பெண்ணின் போராட்டத்தாலும் உயிர்த்தியாகத்தாலும்  உருவானதுதான் .
அந்த பெண்களின் சுயம் தான் இன்றைய பெண்களின் சுகந்திரம் 

பாலியல் துன்புத்தல்கள் ,தொழில் சமநிலை இன்மை ,சட்ட ரீதியான பிரச்சினை உட்பட பெண்களுக்கு பல பிரச்சினைகள் இருக்கு .அத்தனை பிரச்சினைகளுக்கும் போராட ஆரம்பிக்கும் பெண்கள் முதலில் கட்டி எழுப்புவது அவர்களின் சுயத்தை தான் .
தான் யார் ? தான் எதற்காக வாழப் போகிறேன் ? என் அடையாளம் என்ன ? என்று பெண் உணர்கிற அந்த சந்தர்ப்பம் தான் பெண் சுயம் .
அதனால் தான் பெண் தன் சுய அடையாளத்தை உணரவேண்டும் கட்டியெழுப்ப வேண்டும் அதை நிலைக்க செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன் .

கனவுகள் இருந்தும் குடும்பத்துக்காக அதை வெளிப்படுத்தாத பெண்கள் தனக்கு தானே விலங்கு பூட்டிக் கொண்டவர்கள்.அவர்களுக்கு கல்வி அறிவு இருக்கிறது .பொருளாதார ஸ்திரத்தன்மை இருக்கிறது .கூடவே பயமும் போராட்டங்களையும் பிரச்னைகளையும் எதிர்கொள்ள முடியாத வலுவற்ற மனது உண்டு  .
உளி ஏற்காத கல் சிற்பமாகாது. கண்ணீரையோ எதிர்ப்பையோ தாங்க முடியாத பெண்கள் சாதிக்கிற பெண்களை மீதான ஏக்கத்திலேயே தங்கள் வாழ்வை முடித்துக் கொள்வார்கள் .
இதை தடுக்கணும் .தவிர்க்கணும் தனது எதிர்காலம் எது என்பதை தீர்மானிக்கிற பரீட்சைக்கு பின்னரான காலத்தில் சரியான வழிகாட்டுதல்களும் தன்னம்பிக்கையை உருவாகுகிற செயன்முறைகளையும் வழங்கியிருந்தால் ஒரு fashion designerஆன அவளை நான் நேர் காணல் செய்திருப்பேன் .
பள்ளிகளில் மாதம் ஒரு முறை  2 மணித்தியாலங்கள் தடைகளை மீறி சாதித்த பெண்களையும் அந்த பெண்களோட சாதனை பெண் சமூகத்தையே மாற்றியமைத்து பற்றி  நம் போன்ற பெண்கள் எடுத்து சொல்லலாம் . எங்கெங்கோ இருக்கிற நாம் சந்திக்கிற இந்த சந்திப்பு சாத்தியம் என்றால் இந்த சிறு செயல்திட்டம் சாத்தியமே ....

சுய அடையாளத்துக்காக அதை அடைவதற்காக நினைக்கும் போது ஏற்படும் தடைகள் அதை தாண்டி முன்னேற வேண்டிய பெரும் சவால் 
என் கனவு சினிமா .ஒரு screen writer ஆவது இலகுவல்ல .
இந்தியாவிலே அது போராட்டம் இலங்கையில் தமிழ் சினிமா என்ற துறையே இல்லை .சினிமா துறையை உருவாக்கி அதில் சாதிப்பது என்பது பாரிய சவால் .
என்னால் இரவில் பணிபுரிய முடியாது .திரைப்படங்கள் எடுக்கும் போது இரவு பகல் பாராது தான் பணிபுரிய வேண்டும் .வீட்டில் இரவில் பணியாற்ற அனுமதி இல்லை என்பதால் எனக்கு ஒரு இயக்குனரிடம் உதவியாளராக சேரமுடியவில்லை . தகுதியும் திறமையும் குறைந்த 2 ஆண்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது .
இரவு நேரப் பணிக்கு வீட்டில் அனுமதிக்க மறுத்தமை தப்பில்லை .
அது அக்கறை. பகலில் பாலியல் சீண்டல்களை அதிகமாக சந்திக்கிறேன் அப்படி இருக்கையில் இரவில் ???
நிர்பயா  சம்பவத்திற்கு பிறகு எந்தளவு நமக்கு போராட்டகுணம் அதிகரித்துள்ளதோ அதே  அளவு குடும்ப அங்கத்தவர்களுக்கு பயம் அதிகரித்துள்ளது .
என் கீழ் வீட்டில் குடியிருக்கும் தாய் தனது 18 வயது மகனை இரவில் வெளியே அனுப்புகிறார். நண்பரளோடு குடித்து கும்மாளமிட்டு பொழுதை கழிக்கப் போகிறார் என்பது அவருக்கு நன்கு தெரியும் .ஒரு ஆண் தவறிழைக்க கிடைக்கிற சுகந்திரம் ஒரு பெண் சாதிக்க கிடைப்பதில்லை . இப்படி ஆண்களுக்கு கிடைக்கிற அதீத சுகந்திரம் எங்களுக்கான உரிமையை பறிகிறது .
என் பொருளாதார நிலையை ஸ்திரப்படுத்திக் கொண்டு என் கனவுகளைநிஜமாக்க போரடிகொண்டிருகிறேன்.
ஒரு சின்ன பறவை , முட்கம்பிகள் சூழ்ந்த உடலை தன் சிறகுகள் அறுக்காமல் அகற்ற வேண்டிய கட்டாயம் போன்றது யார் மனதையும் சிதைக்காத பெண்சுய அடையாளத்தை நிலைநாட்டுகிற வெற்றி . 

ஒரு பெண் பணிபுரிகிற இடத்தில் பாலியல் தொந்தரவுகள் இடம் பெறுவது வழக்கம் . என் உடன் படித்த பெண், சமுக வலைத்தளத்தில் in a relationship என்று போட்டாள் அதற்கு காரணம் ஏற்கனவே காதலிப்பதாக கூறினால் ஆண்களின் தொல்லை அகலும் என்பதே ஆனால் அகலவில்லை குறைந்திருகின்றதாம். marketing போன்ற துறைகளில் உள்ள பெண்களை சக ஆண்கள் அவதூறாகப் பேசுவதை நானே கேட்டிருக்கிறேன் .

என் அலுவலகத்தில் புதிதாக வருபவர்களுக்கு வேலை சொல்லி கொடுக்க என்னிடம் தான் சொல்வார்கள் . ஒரு இளைஞனுக்கு  நான் வேலை சொல்லிக்கொடுத்தேன் . என் உயர் அதிகாரி சொல்வதை கேட்பவன் நான் சொல்வதை புறக்கணிப்பான் . இதனால் நிறைய பிழைகளும் அதை சரி செய்ய தாமதங்களும் ஏற்பட்டது .அவனது பிழையை சுட்டிக்காட்டி கேட்கையில் என்னை பார்த்து மோசமான சைகை செய்து கெட்ட வார்த்தையால் திட்டினான் .
நான் மேலதிகாரியிடம் சென்று புகார் கொடுக்க விசாரணை நடந்தது .
தான் அப்படி செய்யவில்லை என்று மறுத்து 
இறுதியாக அவன் என் மீது கொடுத்த புகார் என்ன தெரியுமா ? ''தான் ஒரு ஆண்  வயதில் மூத்தவன் ; ஒரு ஆணிற்கு விரல் நீட்டிப் பேசுபவள் பெண்ணே அல்ல ...பெண்ணுக்குரிய குணம் அல்ல ...தன்னை நான் அசிங்கப்படுத்தி விட்டேன் என்று கூறினான் .''
என் அனுபவம் ,திறமை ,அவனின் பிழை எல்லாவற்றையும் விட ஆணுக்கு பெண் அதிகாரம் பண்ணுவதும் விரல் நீட்டுவதும் தான் பிழை என்று சொன்னபோது பெரும் கோபம் வந்தது . அவனுக்கு ஒரு ஆண்  வேலை கற்று தருகையில் இப்படி நடந்தால் எதிர்த்து பேசியிருப்பனா ?
உண்மையை நிரூபிக்க முடியாத அந்த நாட்கள் எனக்கு நரக வேதனையளித்தது. ஆனால் அடுத்த 2 வாரங்களில் அவனுடன் இன்னொரு பெண் வேலை சொல்லிகொடுக்க முயல்கையில் அங்கும் இதே பிரச்னை.அங்கு பணிபுரிந்த அனைவரும் பெண்கள். எங்களில் யாரிடமும் பணிபுரிய இடம் கொடுக்கவில்லை அவனது ஆண்மை .விலகிசென்றுவிடான் .
மீசையும் ஆண்குறியும் ஆண்களை பெருமையடைய செய்கிறது 
மார்பும் பெண்ணுறுப்பும் பெண்களை அவமானப்படுத்தவே பயன்படுத்தப்படுகிறது .

வேகமாக வேலைகளை முடிக்கும் புத்திசாலிப் பெண்களை மேலதிகாரிகள் விரும்ப மாட்டார்கள் .தன்னை விட அவர்களுக்கு தெரியும் என்பதை ஏற்றுகொள்ள தைரியமில்லாதவர்கள்  அவர்களை செய்யும் கொடுமைகளை பெரிய பட்டியலே  போடலாம்.
விற்பனை முகவர்களாக வீடு வீடாக அலையும் பெண்களுக்கு பாத்ரூம் போக கூட முடியாது .பெண்கள் அதிகமாக இருக்கும் வீட்டில் அவர்கள் தயங்கி தயங்கி அனுமதி கேட்கும் போது கூனி குறுகி போவர்கள் .ஊடகத்துறை உட்பட பல தொழில் துறைகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம்பள வேறுபாடு இன்னும் இருக்கிறது .
வீதிகளில் பேருந்துகளில் தொடரும் பாலியல் சேட்டைகள் , அலுவலகம் முடிய வீட்டிலும் வேலை செய்யவேண்டிய நிலை இது போன்ற நிலையில் எப்படி நாங்கள் இலட்சியங்களை அடைவது என்று பலர் சோர்ந்து போவதுண்டு 

அப்பொழுதெல்லாம் என் கண்களுக்கு தெரிவது ஒரே ஒரு பெண் தான் 
சோம்லே மாம் (Somaly Mam).இவர் கம்போடிய பெண் . அங்கு நடந்த புரட்சியில் பெற்றோர்கள் கொல்லப்பட  பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டார்.  15 வயது கூட  நிரம்பாத சிறுமி .
அவரை போலவே பல சிறுமிகளை வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தினார்கள் 
ஒத்துழைக்க மறுத்த சிறுமிகளை கண் முன்னே கொன்றுவிட்டனர்.
பல கொடுமைகளோடு போராடியவர் ஒரு கட்டத்தில் தப்பித்து பிரான்ஸ் வந்தார் .இன்று பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட சிறுமிகளை படிக்க வைக்கும் அமைப்பின் நிறுவுனர் . பாலியல் கொடுமைகளிலிருந்து ஒரு பெண் மீண்டு வந்து மறுவாழ்வளிக்கும் நிலைக்கு வருவது சாதாரண காரியமல்ல ....
அவர் அனுபவித்த கொடுமைக்கு முன்னால் நாம் சந்திப்பது பொருட்டே அல்ல என்று தோன்றும் தடைகளை தாண்டி ஜெயிப்பது சுவாரஸ்யமே 

திருமணம் செய்யும் போது நம் கனவுகளை  பலிகொடுக்க தேவையில்லை உணர்வுகளை மதிக்கும் வாழ்க்கை துணை தான் தேவை என்பதில் உறுதியாக இருந்தால் திருமணத்திற்கு பின்னரும் பெண்கள் சாதிக்கலாம் 
எங்கள் அலுவலகத்தில் வேலைகாரியாக பணிபுரியும் பெண்மணி ஒரு முன்னாள் வங்கி முகாமையாளரின் மனைவி .அவர் நோய்வாய்ப்பட்டதால் வருமானக் குறைவு ஏற்பட்டு விட்டது .
அதனால் இந்த வேலைக்கு வருகிறார் . அம்மாவின் வேலை, மகளுக்கு மனவருத்ததையும் யாருக்கும் தெரிந்தால் அசிங்கமே என்ற பயத்தையும் தருகிறதாம் . மகளை அழைத்து தெளிவு படுத்தியபிறகு அவள் மனம் மாறியது .அந்த பெண்மணியிடம் கேட்டேன் 
இந்த வேலை உங்களுக்கு எப்படி இருக்கிறது என்று ?
''எனக்கு இந்த வேலை முழுதிருப்தி .வீட்டில் செய்வதை தான் இங்கும் செய்கிறேன் என் வேலையை எல்லோரும் பாராட்டுகிறார்கள்.என் மீது அன்பு காட்டுகிறார்கள் .மகள் படித்து முடிக்கும் வரை வேலை பார்ப்போம் என்று நினைத்தேன் .ஆனால் நான் சாகும் வரை வேலை செய்ய நினைக்கிறன் .''என்று சந்தோஷமாக சொன்னார் .வங்கி முகாமையாளரின் மனைவி என்று அடையாளப்படுத்துகையில் ஏற்படுத்தாத சந்தோஷமும் பெருமையும் இந்த துப்புரவுத் தொழிலில் அவருக்கு ஏற்பட்டுள்ளது .

நாம் எல்லோரும் பெண் உரிமை பற்றி அவள் அடையாளம் பற்றி பேசிகொண்டிருகிறோம். அது ஒரு பெரிய அரண்மனை போன்றது அதன் சில ஜன்னல்களையும் கதவுகளையும் சுத்தப்படுத்தியிருகிறோம்.நட்டுக்களை சரி செய்திருக்கிறோம் . சில பகுதிகளில் வண்ணங்களை மாற்றியிருக்கிறோம் அவ்வளவே இன்னும் முழுமையாக சரிப்படுத்தப்படவில்லை .
அதை சரி செய்வது நம் கடமை .
ஒவ்வொருவரும் ஒரு மரம் நட்டால் உலகின் பசுமையை பேணலாம் என்பது போல ஒவ்வொரு பெண்ணும் தனது சுய அடையாளத்தை  கட்டி எழுப்பினால் பெண் சமுக முன்னேற்றம் ஏற்படும் .
இது ஒரு அஞ்சலோட்டம் எல்லோரும் வேகமாக இணைந்து ஓடினால் மட்டுமே மாபெரும் வெற்றி சாத்தியம் .தனித்தனியாக  எம்முடைய சுயங்களை கட்டியெழுப்பி அடுத்தவருக்கு கைகொடுப்போம் நிச்சயம் பெரிய மாற்றம் ,பெண் சுயத்தால் ஏற்படும் .



மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடத்திய பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய – உரையாடலில் எனது உரை  :)


Comments

Popular posts from this blog