Vertigo





வாழ்க்கையில் நமக்கு எப்போதும் பயங்கள் இருந்துகொண்டே இருக்கும் . நிழல் போல தொடரும் பயங்களில் இருந்து வெளிவருவது எல்லோராலும் முடியாது . அந்த பய நிழலை தவிர்க்க வேண்டுமானால்
சில விடயங்களை இழந்தால் மட்டுமே சாத்தியம் .
பயத்தை பொறுத்தே நம் வாழ்வும் கட்டமைக்கப்பட்டு விடுகிறது .
இந்த தத்துவத்தை மர்மபயணத்தின் மூலமாக உணர்த்துகிறது Vertigo.

ஜான் ஸ்காட்டி(John Scottie)  மிகச்சிறந்த துப்பறிவாளன்; அனுபவசாலி; அவனது துறையில் அவனுக்கு ஈடுஇணை யாருமே இல்லை என்பார்கள். இந்த புகழ் நீடிக்க, காலம் அனுமதிக்கவில்லை .ஜானிற்கு ஒரு வினோத வியாதி உண்டு.
 ''Acrophobia'-உயரமான இடத்திற்கு செல்கையில் அந்த உயரம் காரணமாக பயம் கலந்த தலைசுற்றல் ஏற்படும். இதனால், ஜானின் தொழில் பாதிக்கப்படுகிறது.குற்றவாளி உயர்ந்த இடங்களை நோக்கி  செல்கையில் அவனால் பிடிக்க முடிவதில்லை. இருந்தும், தனது வியாதியை தைரியமாக எதிர்கொள்ள முயல்கிறான் .

அப்படி ஒரு நாள் ஒரு குற்றவாளியை துரத்தி செல்கையில், உயரம் அவனுள் பீதியை ஏற்படுத்த தலைசுற்றி கீழே விழ முயல அவனைக் காப்பாற்ற முயலும் போலிஸ் ஒருவரை இழக்கிறார் .
சக அதிகாரியின் மரணம் அவரை நெருட, கொஞ்ச நாள் மன அமைதி வேண்டி ஓய்வு பெற முடிவு செய்கிறார் .
இந்த செய்தியை அறிந்த கல்லூரி கால நண்பர் கெவின் (Gavin Elster)தனக்கு உதவுமாறு வேண்ட இருவருக்கும் சந்திப்பு ஏற்படுகிறது .
கெவின் ஒரு தொழிலதிபர்; தனது மனைவிக்கு பேய் பிடித்திருப்பதாகவும் அவளது வினோத நடத்தை தனக்கு பயத்தை தருவதாகவும் கூறுகிறார்.
நண்பனின் பேச்சைக் கேட்ட ஜான் முதலில் அதனை நம்பாது அலட்சியபடுத்துகிறான் . அதன் பிறகு நண்பனுக்காக சரி என்று சம்மதிக்கிறார். . அவர் மனைவியை பின்தொடர்கையில் தான் கெவின் கூறியது முற்றிலும்  உண்மை என்று புரிகிறது.

கெவினின்  மனைவி மெடலின் (Madeleine Elster) தினமும் காலை வீட்டிலிருந்து கிளம்பி பூக்கடைக்கு சென்று அங்கு ஒரு பூச்செண்டை வாங்குகிறாள் .
அதன் பிறகு ''Carlotta''வின் கல்லறைக்கு சென்று அதனை உற்றுப்பார்த்துக் கொண்டிருப்பவள் அருகிலிருக்கும் அருங்காட்சியகத்திற்கு சென்று  ''Carlotta''வின் படத்தை பார்த்துக்கொண்டே பல மணிநேரம் அமர்ந்திருப்பாள்.கார்லோட்டா படத்தில் வைத்திருக்கும் பூக்கள் தான்  மெடலின் கைகளிலும் இருக்கும் .அதே போன்ற கூந்தல் அலங்காரத்தை செய்து அதே மாதிரி அமர்ந்துகொண்டிருப்பாள் இது அவளது தினசரி வழக்கம் .


கார்லோடா .பேரழகி வறுமையால் வாடிய அவளை ஒரு பணக்காரன் திருமணம் செய்துகொள்கிறான் . காதலால் வாழ்க்கை அழகானதை எண்ணி மகிழ்கிறான் . ஆனால் அந்த மகிழ்ச்சி நிலைக்கவில்லை .ஒருநாள்
அவளது கணவன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு பிரிந்துசென்றுவிடுகிறான் . குழந்தை பறிபோன ஏக்கத்தில் மனநிலை பாதிக்கப்பட்டு வருவோர் போவோரிடமெல்லாம் குழந்தையை கேட்டு கதறி அழுதவள் தனிமையும் துயரும் தாங்காமல் ஒருநாள் மலையுச்சிக்கு சென்று தற்கொலை செய்துகொள்கிறாள் .
இதுதான் அவளது வாழ்க்கை வரலாறு .மெடலினும் கார்லோடாவின் பரம்பரையை சேர்ந்தவள் தான் .
அவளது வாழ்க்கை சாபம் அந்த சந்ததியைப் பீடித்ததால் அனைத்து பெண்களும் 26 வது வயதில் அவளைப்போலவே வாழ்ந்து தற்கொலை செய்துகொண்டனர் .அவளைப் போல இப்போது மெடலினும் தற்கொலை செய்துவிடுவாள் என்பது கெவினின் பயம் .அதற்கேற்ப மெடலினும்
விநோதமாக செயற்பட ஆரம்பித்ததை அறிந்துகொள்கிறான் ஜான் .

ஒருநாள் மெண்டலின் கடலில் விழுந்து தற்கொலை செய்ய முயல அவளைக் காப்பாற்றுகிறான் ஜான் .அன்றுமுதல் இருவருக்குள்ளும் நட்பு ஏற்படுகிறது .
அவளை அறியாமலேயே விநோதமாக நடந்துகொள்வதை புரிந்துகொண்ட ஜான் அவளைப் பழைய நிலைக்கு கொண்டுவர பெரிதும் முயற்சிக்கிறான் .
இந்த நிலையில் ஒருவரை ஒருவர் நேசிக்கத் தொடங்குகின்றனர்



அவள் வாழ்ந்த இடத்திற்கு மெடலினை ,ஜான் அழைத்து செல்ல அந்த தேவாலயத்தின் உச்சிக்கு சென்று தற்கொலை செய்ய முயல்கிறாள் .
அவளை பின்தொடர்ந்து செல்லும் ஜான் காப்பாற்ற முயல அவனது வியாதி தடுகிறது .உயரம் அவனுக்கு தலைசுற்றலை ஏற்படுத்த தட்டுதடுமாறி படியேறி செல்வதற்குள் மெடலின் உடல் கீழே விழுகிறது .
மெடலின் இறந்த அதிர்ச்சியும் தன்னால் காப்பாற்ற முடியவில்லை என்ற குற்ற உணர்ச்சியும் ஜானை பாதிக்கிறது .

வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் குழு ,ஜான் மீது தவறல்ல என்றும் மெடலின் மனநிலை பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்டாள் என்பதையும் 
உறுதிப்படுத்துகிறார்கள் .இயலாமையோடு நண்பனுக்கு ஆறுதல் கூறிவிட்டு இடம் பெயர்கிறான் கெவின் . ஆனால் ஜானிற்கு காதலின் துயரமும்
குற்ற உணர்ச்சியும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டே இருப்பதால் 
இயல்பாக வாழமுடியவில்லை .

ஒருநாள் ஜானிற்கு ஒரு இன்ப அதிர்ச்சி ஏற்படுகிறது . மெடலின் போன்ற தோற்றம் உடைய பெண்ணை சந்திக்கிறான் .அவள் பெயர் ஜூடி(Judy Barton)  என்பதை அறியும் ஜான் அவளோடு பேசி நட்புகொள்கிறான் .
மெல்ல மெல்ல நட்பு காதலாகிறது .
மெடலினைப் போலவே ஜுடியை மாற்ற முயல்கிறான். அதே போன்ற உடை, சிகை அலங்காரம் என்று தன்னை மாற்றுவதை ஜூடி விரும்பவில்லை . ஜுடியாகவே தன்னை ஏற்குமாறு ஜானிடம் கெஞ்சுகிறாள் .அந்த மாற்றங்களை மறுக்கிறாள் . அவளின் மறுப்பு  ஜானை துன்புறுத்தவே, அவன் மீதுள்ள காதலால் வேறுவழியில்லாமல் மெடலின் போல மாற முடிவெடுக்கிறாள் .

ஒருநாள் -
மெடலின் இறந்த இடத்திற்கே ஜூடியை அழைத்துச்செல்லும் ஜான் அவளை உயரே அழைத்துப் போகிறான். பயமும் தயக்கமுமாக  வர மறுக்கும் ஜூடியை கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்கிறான் .அங்குதான் மர்மம் வெளிப்படுகிறது.


மெடலின்- ஜுடி வேறு வேறு அல்ல ...இருவரும் ஒருவரே . கெவின்   மனைவியின் பேரிலுள்ள சொத்துக்களை அபகரிக்க திட்டமிடுகிறான் .
தனது மனைவி மெடலின் உருவமைப்பிலுள்ள ஜுடியை தேர்ந்தெடுத்து 
மனநிலை பாதிக்கப்பட்டதைப் போல நடிக்க சொல்கிறான் .இதற்கு மிக வலுவான சாட்சி வேண்டும் என்பதால் ஜானை தெரிந்தெடுத்து பின்தொடர சொல்கிறான் .
மெடலின் போல ஜுடி நடிக்க ஆரம்பிக்கிறாள் .
ஜான் -மெடலின் சந்திப்புக்கள் காதலில் முடிகிறது .
கெவின் மனைவியை கொன்று தேவாலயத்தில் இருந்து வீசி தற்கொலை என நம்ப வைத்து சொத்துகளோடு அயல் நாட்டில் சந்தோஷமாக கெவின் வாழ,துயரத்தில் துடிகிறான் ஜான் .
அவன் மீதுள்ள காதலால் நிபந்தனையை மீறி அவனை சந்தித்து உண்மையான ஜுடியாக காதலிக்கிறாள் .
ஜான் ஜுடியை மெடலினாக மாற்ற முயலும் சந்தப்பத்தில் ஜுடி, தனது குற்ற உணர்ச்சியால் அவதிப்படுகிறாள் 
செய்த தவறை எண்ணி போய் விடுவமா என யோசிக்கும் போதே ஜான் மீதான காதல்  தடுகிறது .ஜானிற்காக அவன் அன்பிற்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறாள் .
ஜான் ஜுடியை முழுமையாக நம்புகிறான் .
தனது காதல் தனக்கே கிடைத்த மகிழ்ச்சியில் சந்தோஷமாக வாழ்கையில் ஜுடியிடம் மெடலின் நகை இருப்பதை பார்த்துவிடுகிறார் .
அந்த நகை ஜுடிதான் மெடலின் ஆக நடித்தாள் என்ற உண்மையை புரியவைத்துவிடுகிறது 
கோபம் கொள்ளும் ஜான் தேவாலய மணிக்கூண்டின் உச்சிக்கு ஜுடியை அழைத்துச் செல்கிறார் .
ஜுடி எல்லா உண்மையையும் சொல்லி  அழ ஜானிற்கு ஜுடி மீதான கோபம் அவனது வியாதியை மறக்கடித்து விடுகிறது .
ஜானிற்கு உயரம் மீதான பயம் மெல்ல அகல, திடிரென்று கால் தடுமாறி மேலிருந்து விழுகிறாள் ஜுடி
தனது நெடுநாள் பயமும் ஜுடியும் சேர்ந்தே ஜானை விட்டு அகல்வதோடு  படமும் நிறைவுறுகிறது 




உலகத்தில் எனக்கு பிடித்த ஹாலிவுட் இயக்குனர்கள் என்றால் அது  2 பேர் மட்டுமே . அதில் முதன்மையானவர்  The Master of Suspense என்று புகழப்படும் Alfred Hitchcock.
இவருடைய படங்களை பற்றி கேள்விபட்டிருந்தாலும் எதையும் பல வருடங்களாக பார்த்ததில்லை .மிக சமிபமாகவே பார்க்க ஆரம்பித்தேன் .
ஒரு படம் தந்த போதை அவரின் அத்தனை படங்களையும் ஒரே மாதத்தில் பார்க்கவைத்துவிட்டது .அடுத்தவரின் வாழ்க்கை ,அதில் உள்ள ரகசியம், 
அதை அறியும் ஆவல் ,மனிதனின் ஆழமான பயம் என்ற தளங்களில் 
அமையும் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதம் .

இத்திரைப்படம் Pierre Boileau , Thomas Narcejacஆல் படைக்கப்பட்ட பிரெஞ்சு நாவலான The Living and the Dead (D'entre les morts)ஐ தழுவி எடுக்கப்பட்டது 
நாவலுக்கும் படத்திற்கும் பாரிய வேறுபாடு உண்டு .இரண்டாம் உலகப்போர் சமயத்தில் கதை நடப்பது போல நாவலில் இடம்பெறும் .
ஆனால் படத்தில் அவை இல்லை .நாயகன் நாயகி காதல் என்ற மைய கருவை மட்டுமே ஹிட்ச்காக் எடுத்துக்கொண்டு பலரை கொண்டு திரைக்கதை அமைத்துள்ளார் .


முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தவர் ஹிட்காக்கின் ஆஸ்தான நாயகிகளில் ஒருவரான Vera Miles.
சில காரணங்களால் பட உருவாக்கம் தாமதமாகவே அவரால் நடிக்க முடியாது போக நாயகியாக Kim Novak ஒப்பந்தம் செய்யப்பட்டார் .
நாயகன் James Stewart.ஹாலிவுட்டின் புகழ் பெற்ற நாயகன் .
ஹிட்ச்காக்கின் பல படங்களில் நடித்திருந்தாலும் இந்த படத்தில் தான் மாறுபட்ட உணர்சிகளை வெளிப்படுத்தும்  அருமையான வேடம் .

ஹிட்ச்காக்கின் ஏனைய படங்களை போல இல்லாது இந்தப்படம் சில வித்தியாசங்களை கொண்டிருந்தது.
சஸ்பென்ஸ்,பயம் ,திகில் மர்மம் என்பதை தாண்டி உணர்சிகள் காதல் தவிப்பு குற்ற உணர்வு மனப்போரட்டம் என்று எல்லா  தளங்களிலும் காட்சிகள் பயணிப்பதை பார்க்க முடியும் .

உலகின் சிறந்த படங்களுள் முதல் வரிசையில் இடம் பிடித்திருக்கும் vertigo. உலகின் பல சிறந்த இயக்குனர்களுக்கு பிடித்த படமாகவும் பலருக்கு இயக்குனராக வேண்டும் என்ற ஆசையை தோற்றுவித்த படமாகவும் அமைகிறது .

vertigo படத்தை தழுவி தான் M.G.Rன் கலங்கரை விளக்கம் படத்தின் கதை அமைந்தது   படத்தில்  இடம்பெறும் கார்லோடா கதையை பார்க்கும்போது  மணிசித்ரதாழ்-சந்திரமுகி படங்கள் ஞாபகம் வந்தது .
இந்த கதைதான் சற்று மெருகேற்றப்பட்டு மலையாளத்தில் வெளியாகி பல வருடங்கள் கழித்து தமிழில் சந்திரமுகியாக ரீமேக் செய்யபட்டதோ  என்று தோன்றுகிறது .

ஹிட்ச்காக்கின் படங்கள் திரைக்கதைநுட்பங்களை மட்டும் அல்ல தொழில்நுட்ப விடயங்களையும் திரையுலகத்திற்குதந்த படங்கள் 
இந்த vertigo  திரைப்படத்தில் முதன் முதலில் புதிய கமரா தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டது .
ஜானின் தலைசுற்றலை காட்சிபடுத்த dolly zoom என்ற  in-camera effect புதிதாக உருவாக்கப்பட்டது 
அதனால் இத்தொழில் நுட்பம்  "the Vertigo effect"என்று அழைக்கப்படுகிறது .

வெளியான போது கலவையான விமர்சனங்களை பெற்ற 
இத்திரைப்படம் . இப்போது காவியமாக கொண்டாடப்படுகிறது .




2015 ஜூன் மாத ஞானம் சஞ்சிகையின் 
உலக சினிமா தொடருக்காக எழுதப்பட்ட கட்டுரை
http://www.gnanam.info/yahoo_site_admin/assets/docs/G_181.21063825.pdf



Comments

Popular posts from this blog

சட்டென நனைந்தது நெஞ்சம்

Departures

The Clue:4th Period Mystery