Nuit Blanche(Sleepless Night)

Nuit Blanche(Sleepless Night)



மனிதன் எப்போதும் சமுக பிராணி என்றாலும் குடும்பமாக வாழ்கையில் அவர்களுக்குள் எழும் உறவுச்சிக்கல், மனோரீதியாகவும் மரபணுரீதியாகவும் அணுகப்பட வேண்டியது .
உலகம் முழுவதும் குடும்ப அமைப்புகளை எடுத்துகொண்டால் பெரும்பான்மையான  தந்தை -மகன் பாசபுரிதல் ஒரே மாதிரியானதாகவே காணப்படுகிறது .
அவர்கள் இருவருக்குள்ளும் அன்பிருந்தாலும் வெளிப்படையாக கட்டிக்கொள்ள மாட்டார்கள் . ஏதோ தயக்கம், ஒட்டுதலற்ற தன்மை இருந்துகொண்டே இருக்கும் . ஏதோ ஒரு சந்தர்பம் அவர்களுக்குள் அன்பை உணர செய்யும் தருணமாக  அமையும். 
அந்த நேரம் வெளிப்படும்  கண்ணீரும் புன்னகையும்தான் இருவரின் அன்பிற்கு சாட்சி . இந்த உணர்வை நீரோடை போன்ற கதையோட்டம் கொண்ட படங்களில் பார்த்திருப்போம் .ஆனால்
வாழ்வா சாவா போராட்டத்தில் தந்தையும் மகனும் தங்களுக்குள் இழையோடும் பாசத்தையும் நேசத்தையும் உணர்ந்தால் ...?  அந்த தந்தை-மகன் கதைதான்   Nuit Blanche(Sleepless Night).


அதிகாலை நேரம் -
காரில் வரும் இருவர் முகமூடி அணிந்து கொள்கின்றனர் .
இன்னொரு காரினை துரத்திபிடித்து அதிலுள்ள இருவரையும் துப்பாக்கி முனையில் மிரட்ட அவன் ஒரு  Bagஐ  எடுத்து தருகிறான் .
அதை தரும் சாக்கில் முகமூடி அணிந்தவனை கத்தியால் குத்தி சாய்க்க
மற்ற நபர் அவனை சுட முனைகிறார் .இருவரும் தப்பியோடுகிறார்கள் .
முகமூடி அணிந்து வந்த இருவரும் Bagஐ எடுத்துகொண்டு காரில் ஏறி அதை  திறந்தால் உள்ளே  போதை பொருட்கள் (cocaine).
இருவரும் திருப்தியும் பதட்டமுமாக அங்கிருந்து காரில் கிளம்புகின்றனர் .


காரில் முகமூடி அணிந்து Bagஐ எடுத்த இருவரும் காவல் துறையை சேர்ந்தவர்கள் . ஒருவன் வின்சென்ட்(Vincent) மற்றவன் மானுவல்(Manuel).
கத்தியால் குத்துப்பட்டதன்  காரணமாக வின்சென்ட் இடுப்பு பகுதியில் தொடர்ந்து ரத்த கசிவு ஏற்படுகிறது . மருத்துவமனைக்கு செல்ல முடியாததால் தற்காலிகமாக அதற்கு மருந்துபோட்டுக்கொள்கிறான் .
வின்சென்ட்டின் மகன் தாமஸ் .  ஒட்டுதல் இல்லாத உறவு இருவருக்கும் . தனக்கு பிடித்த விடயங்கள் உட்பட எதுவுமே தந்தை அறிந்து வைத்திருக்கவில்லை, தன் மீது அக்கறையோ பாசமோ அவருக்கு இல்லை என்ற கோபம் தாமஸிற்குள் இருக்க,
மகன் தன்னை புரிந்துகொள்ளவில்லை என்ற வருத்தம் வின்சென்ட்குள் இருக்கிறது .

அந்திநேரம்  -
காவல் நிலையத்தில் இருக்கையில் வின்சென்ட்டை பார்க்க மனைவி வருகிறாள் .மகன் தாமஸ் இன்னும் வீடு திரும்பவில்லை என்று பதற , ''அவன் ஒன்னும் சின்னப்பிள்ளை இல்லை ;வந்துவிடுவான் நீ போ '' என்று அலட்சியமாக வின்சென்ட்  சொல்ல மனைவிக்கு கோபம் வருகிறது . இருவரும் சண்டை போட்டுக்கொள்கிறார்கள் .
இதற்குமேல் வின்சென்ட்டிடம் பேசி பிரயோஜனமில்லை என்று மனைவி கிளம்ப வின்சென்ட்டிற்கு தாமஸிடமிருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது .
எதிர்முனையில் '' உன் மகன் என்னிடம் தான் இருக்கிறான் .காலையில் எங்களிடமிருந்து எடுத்து சென்ற போதைபொருட்களை கொடுத்து விட்டு மகனை மீட்டுகொள். '' என்ற கட்டளை வருகிறது .

பொருளை கொடுக்காவிட்டால் மகனை கொன்று விடுவான் என்பதை உணர்ந்த வின்சென்ட் நண்பனிடம் சென்று Bagஐ கேட்க முதலில் மறுக்கிறான். இருவருக்கும் தகராறு ஏற்பட ஒரு கட்டத்தில் நண்பனின் நிலையை புரிந்துகொண்டு மானுவல் விலக, Bagஐ எடுத்துகொண்டு Night clubஐ நோக்கி கிளம்புகிறான் வின்சென்ட் .

மானுவல் Lacombeஐ சந்திக்கிறான் .வின்சென்ட்டுடன் இணைந்து கைப்பற்றிய போதை பொருள் பற்றியும் அதனை மகனுக்காக திருப்பிக்கொடுக்க போவதை பற்றியும் சொல்லி எரிச்சல்படுகிறான்.
இருவரும் இணைந்து திட்டமிடுகிறார்கள் .
''வின்சென்ட்டிடமிருந்து Bagஐ எப்படியும் எடுத்து விடுவோம் அத்தோடு அவனை சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டான், போதை பொருட்களை கடத்துபவர்களோடு தொடர்பிருக்கு என்று மாட்டிவிட்டால்..., அவனுக்கு சிறை நமக்கு பொருள் என சந்தோஷமாக வாழலாம் '' என்று திட்டமிடுகிறார்கள் .
Lacombe தனது உதவியாளரான Vignaliயிடம்  Night clubக்கு சென்று வின்சென்டினை பின்தொடரசொல்கிறான் .

Vignali வின்சென்ட்டை பின்தொடருகிறாள்.
கழிவறைக்குள் சென்று ஒரே ஒரு பொட்டலத்தை மட்டும் எடுத்துகொண்டு  Bagஐ பாத்ரும் மேற்கூரை உட்பகுதியில் ஒளித்துவிட்டு வெளியேறுகிறான் வின்சென்ட்.
அவனை பின்தொடர்ந்த Vignali கழிவறைக்குள் சென்று அந்த  Bagஐ தேடி
அதை பெண்களுக்கான கழிவறைக்கு எடுத்து சென்று அங்கிருக்கும் மேற்கூரை உட்பகுதியில் ஒளித்து வைக்கிறாள் .

Night club தலைவன் Marcianoக்கும் வின்சென்ட்கும் சந்திப்பு நிகழ்கிறது.
Bag எங்கே என்று கேட்க ஒரே ஒரு பொட்டலத்தை மட்டும் கொடுத்து
''பரிசோத்திதுக்கொள்; என் மகனை பார்க்க வேண்டும்  அவனை பார்த்த பிறகுதான் அனைத்தையும் தருவேன்'' என்று சொல்ல மகனை அழைத்து வருகிறார்கள்.
''இன்னும் கொஞ்ச நேரம் தான் உள்ளது.Feydek சரக்கை வாங்க வந்துவிடுவான்
அதற்குள் அனைத்தையும் எடுத்துவா'' என்று சொல்ல
வின்சென்ட் கழிவறைக்கு சென்று Bagஐ தேட
Bag அங்கு இல்லை .எங்கு சென்றது ?யார் எடுத்தார்கள் என்ற குழப்பம் ஒரு புறம். மகனை எப்படி காப்பாற்றுவது என்ற தவிப்பு இன்னொரு புறமாக செய்வதறியாத நிலையில் அடுத்து என்ன செய்யலாம் என்று சிந்திக்கிறான் .

தனது நண்பனை வர சொல்லி அழைத்துவிட்டு கிச்சனுக்குள் செல்பவன் ஊழியர்களை போலிஸ் என்ற அதிகாரத்தை கொண்டு மிரட்டி 
போதைபொருட்களை போல மாவை பொதி செய்து ஒரு Bagல் போட்டு அதன் ஜிப்பை திறக்கமுடியதவாறு இறுக்கி எடுத்து செல்கிறான் .

Bagஐ மறைத்துவைத்த இடத்தை அறிந்துகொண்ட Lacombeஅங்கிருந்து Bagஐ அகற்றிவேறு இடத்திற்கு எடுத்துசெல்கிறான். 
மேல்தளத்தில் உரிமையாளனும் போதை பொருட்களை வாங்க வந்திருக்கும் Feydek க்கும் இருக்கிறார்கள் .
வின்சென்ட் வந்து Bagஐ கொடுக்கிறான் .
அவன் ஜிப்பை திறக்க தடுமாறுகையில் CCTVயில் மானுவலை  காட்டி இந்த இடத்தை போலிஸ் சுற்றி வளைத்துவிட்டது. இங்கிருந்து கிளம்புங்கள் என்று அவர்களை அனுப்பிவிட்டு மகனை மீட்க முதல்தளத்திற்கு செல்கிறான்.
அங்கிருந்து காருக்குள் செல்லுபவர்கள் சரக்கை பரிசோதிக்க அது கொக்கைன் இல்லை வெறும் மா என்று புரிகிறது .உடனே உள்ளே சென்று Night club தலைவன் Marcianoவை  தாக்கி சண்டையிட இருவருக்கும் தங்களை வின்சென்ட் ஏமாற்றியது தெரிகிறது.
தாமஸை வேறு தளத்திற்கு இடம்மாற்றிவிட்டு 
வின்சென்ட்டை கொலைவெறியோடு இரண்டு குழுவினரும் தேடுகிறார்கள் .

தன்னை கொலை வெறியோடு தேடும் இருதரப்பு ,
சட்ட ரீதியாக கைது செய்ய இன்னொரு தரப்பு 
இப்படி மும்முனை தாக்குதலோடும் இரத்த கசிவால் பலஹீனமடையும் உடல்நிலை, மகனிற்கு ஏதும் ஆகிவிடுமோ என்ற பதட்டம் 
எல்லாவற்றையும் மீறி மகனை எப்படி வின்சென்ட் காப்பற்றினான் என்பதே படத்தின் விறுவிறுப்பான மிகுதிக் கதை .


ஒரே நாளில் நடக்கும் கதைகளை கொண்ட படங்களை நாம் பார்த்திருக்கிறோம் . இந்த படமும் அப்படிதான் ஆனால் மற்ற படங்களிலிருந்து வித்தியசப்படுத்திய அம்சங்கள் என்றால் 
திரைக்கதை ,இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு .
ஜீவனுள்ள ஒரு கதை. அதை சுற்றி பின்னப்பட்ட மிக மிக சுவாரஸ்யமான காட்சிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது திரைக்கதை .(திரைக்கதை ஆசிரியர்கள் Frederic Jardin மற்றும் Nicolas Saada)

அடுத்து ஒளிப்பதிவு 
படத்தின் பெரும்பான்மைக் காட்சிகள் நடப்பது இரவு விடுதியில் கதாபாத்திரங்கள் ஒவ்வொரு தளமாக மாறுகையிலும் அவர்களது உணர்வோட்டத்தையும் செயற்பாடுகளையும் முன்னிறுத்தி ஒளிப்பதிவு அமையப்பெற்றிருகிறது .
அங்கிருக்கும் பெருங்கூட்டத்தை கட்டுப்படுத்தி இயல்புதன்மையோடு படம் பிடிப்பது அத்தனை சாத்தியமல்ல . மிக சிறப்பாகவே தனது பணியை செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் Tom Stern

இரவுவிடுதியின் ஒவ்வொரு தளத்தையும் இசையால் வித்தியாசப்படுத்தி காட்டியிருப்பதும் அங்கிருக்கும் மனிதர்களை கொண்டு சிறு சிறு விடயங்களை உணர்தியிருப்பதும் கூடுதல் சிறப்பு .
போதை ,ஒரு பால் உறவு ,சுய இன்பம் ,பெண் மீதான வன்முறை , தொழில் போட்டி ,வெறுமை ,விரக்தி ,காமம் ,இயலாமை ,தோல்வி , சுய பெருமை என்று வெவ்வேறு உணர்வுகளோடு மனிதர்கள்  அங்கு வந்துபோகிறார்கள் . 

நாயகனின் நிலை கூட நல்லவனா கெட்டவனா என்ற குழப்பத்தோடு அமைக்கப்பட்டிருக்கும் .மனிதர்கள் அனைவரும் சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்பவே வாழ்கிறார்கள் என்பதை இறுதியில் 
Vignaliயிடம் உன்னை திட்டியதற்கும் உன் கைகளை காயப்படுத்தியதற்கும் மன்னித்துக் கொள் என்று சொல்லும் இடத்தில் உணர்த்துகிறார் இயக்குனர் Frederic Jardin

வின்சென்ட் கதாபத்திரத்தில் நடித்தவர் பிரபல பிரெஞ்சு நகைச்சுவை நடிகர் Tomer Sisley 
இந்த படத்தில் நகைச்சுவைக்கு இடமே இன்றி தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .கதையை கேட்டதுமே நடிக்க சம்மதித்ததோடு 
படத்தில் இடம்பெறும் ஆக்ஷன் காட்சிகளை இவரே வடிவமைத்துள்ளார் . அந்த சந்தர்பத்தில் எப்படி சண்டையிடுவான் என்று ரீதியில் யோசித்து 
அதற்கேற்ப நடித்தேன் என்று கூறுகிறார் .

வசூல் சாதனை செய்த இப்படம் ஹாலிவுட்டிலும் தமிழிலும் ரீ மேக் செய்யப்படுகிறது .தமிழ் மற்றும் தெலுங்கில் இதற்கான உரிமையை வாங்கியிருப்பவர் கமல்ஹாசன் . அந்த படத்திற்கு தூங்காவனம் என்று பெயர் சூட்டியுள்ளார் .



'தண்டனை சட்டம் , இறைமை பயம் மட்டும் இல்லாவிட்டால்
மனிதனைப் போன்ற ஒரு கொடிய விலங்கை
இவ்வுலகில் பார்க்க முடியாது....' என்பார்கள் .
இவை எல்லாமே நம் மிருகத்தன்மையை கட்டுபடுத்த முயன்றாலும் அதை நாம் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறோம் .
அன்பு பாசம் நேசம்  மட்டுமே நம்மை நமக்கு உணர்த்துகிறது .
உறங்காத இரவுகள் போலதான் இதை உணராத மனிதர்களும் ....!


Comments

Popular posts from this blog

The Clue:4th Period Mystery

சட்டென நனைந்தது நெஞ்சம்