Baran 



தாஜ்மஹால் இந்த உலகின் காதல் சின்னம்
உலக காதலர்களின் ஆலயமாக கருதப்படுகிற இடம்
மிகப்பெரிய பேரரசனான ஷாஜகான்,  பெரும் செல்வத்தால்
மிகப்பெரிய மக்கள் கூட்டத்தின் உதவியுடன் கட்டிய அந்த நினைவு சின்னம் இன்றும் போற்றபடுகிறது.
அவருடைய காதல் கொண்டாடப்படுகிறது.ஷாஜகான் மட்டுமா இந்த உலகத்தில் காதலித்தார்?
அவர் மட்டுமா காதலிக்கு நினைவு சின்னம் கட்டினார்?
அவரின் காதல் மட்டும்தானா உயர்ந்தது ?
இல்லை எல்லாருக்குள்ளும் காதல் இருக்கிறது
ஒரு அரசனின் பிரம்மாண்டமான காதலுக்கு மத்தியில்
எளிய மனிதர்களுக்கும் காதல் இருக்கிறது என்பதை நாங்கள் யோசிப்பததில்லை 
அவர்களின் காதலும் அந்த காதலுக்காக அவர்கள் படும் கஷ்டமும் எங்களால் எப்பொழுதும் கவனிக்கப்படுவதே இல்லை 
நம்மால் கவனிக்கப்படாத ஒரு எளியவனின் காதல் கதை தான் Baran!

லத்தீப் கதையின்  நாயகன்.ஒரு கட்டுமானத்தளத்தில் தொழிலாளர்களுக்கு தேநீர் தயாரித்து கொடுப்பது,உணவு சமைப்பது ,பொருட்கள் வாங்கி வருவது போன்ற வேலைகளை செய்து வருகிறான் .ஒரு நாள் அவன் கடைக்கு சென்றுவிட்டு வரும் போது, அங்கு  வேலை பார்க்கும்  நஜாப் என்ற ஒரு ஆப்கான் தொழிலாளி கிழே விழுந்து அடிப்பட்டு துடிக்க மற்றவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்கள்.

சில நாட்களின் பின்னர்-
நஜாப் விபத்தில்  தன் காலை இழந்தது விட்டடார் என்பதால் அவரால் வேலை செய்ய முடியவில்லை. அவருக்கு பதிலாக அவரின் மகன் ரஹ்மத்துக்கு வேலை தர சொல்லி கேட்கிறார் நஜாப்பின் நண்பர் சுல்தான்.
முதலில் மறுக்கும் கட்டிட காண்ட்ராக்டர் நஜாப்பின் குடும்ப நிலையை எண்ணி அவர் மகன் ரஹ்மத்துக்கு வேலை தர சம்மதிக்கிறார்.
இளவயதான ரஹ்மத்துக்கு கடினமான கட்டிட வேலைகளை சரி வர செய்ய முடியாமல் போக, லத்திப் பொறுப்பில் இருந்த சமையலறை பொறுப்பு ரஹ்மத்துக்கும்  கட்டிட வேலைகள் லத்திப்பிற்க்கும் மாற்றி கொடுக்கப்படுகிறது.
தன் இலகுவான வேலையை பறித்துக் கொண்டதால் ரஹ்மத் மீது கோபம் கொள்கிறான் லத்திப்.
ரஹ்மத் கொடுக்கும் தேநீரும் உணவும் எல்லாருக்கும் பிடித்து போக எல்லாரும் ரஹ்மத்தை பாராட்டுகிறார்கள்.லத்தீப் மட்டும் அவன்  சமையலை சாப்பிட மறுக்கிறான்.சமையலறைக்கு சென்று அங்கிருக்கும் பொருட்களை அலங்கோலப்படுத்துகிறான்.அவனை ஒரு முறை கைநீட்டி அடித்துவிடுகிறான்.
தன் தொந்தரவுகளை எல்லாம் சகித்து போகும் ரஹ்மத்தை பின் தொடருகிறான்.உணவு மிஞ்சினால் அதை புறாக்களுக்கு கொடுத்து ரசிக்கும் ரஹ்மத்தை பார்கிறான்.அமைதி நிரம்பிய ரஹ்மத்தின் செயல்கள் அவனை கவர்ந்தாலும் உள்ளிருக்கும் கோபம்  அவனின் வெறுப்பை அகல விடாது செய்கிறது.
ஒரு நாள் -
ரஹ்மத்தின் சமையலறை திரைசீலையின் நிழல் வடிவமாக ஒரு உருவம் தெரிய புரியாமல் பார்கிறான் லத்தீப்.
தன் நீளமான கூந்தலை வாரும் ஒரு பெண்ணின் நிழலைக் கண்டு ஆச்சர்யமடைகிறான் லத்தீப்.
அன்று அவனுக்கு ஒரு உண்மை தெரிய வருகிறது
இதுவரை தான் வெறுத்து ஒதுக்கிய ரஹ்மத் ஒரு ஆண் அல்ல பெண்!
அவன் இதயம் தடம் மாறி துடிப்பதை உணர்கிறான்.
அவனுள் காதல் பிறக்கிறது.
ரஹ்மத் ஒரு பெண் ...ரஷ்ய தலிபான் பிரச்சனையால் ஆப்கானிஸ்தானிலிருந்து ஈரானுக்கு வந்து அகதி வாழ்க்கை வாழுபவர்களில் ஒருத்தி என்பதும் குடும்ப வறுமைக்காக ஆண் வேடமிட்டு உழைக்க வந்த அவளுடைய இயலாமை நிலையும் லத்திபிற்கு புரிகிறது.
தன் செய்கைக்காக மிகவும் வருந்துகிறான். காதல் வந்த தருணம் முதல் அவள் நலன் பற்றி மட்டுமே யோசிக்க ஆரம்பிக்கிறான்.

சினிமாவில் மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று உடல் மொழி. இதை அற்புதமாக கையாள்வதில் தேர்ந்தவர் மஜீத் மஜிதி.
(இந்த விஷயத்தை பற்றி தனி பதிவு போடுமளவுக்கு திரையில் அவர் கையாளும் உடல்மொழி பற்றிய விஷயங்கள் இருக்கின்றன )
இந்த படத்திலும் அந்த நேர்த்தியை நாம் காணலாம்.
ரஹ்மத் ஒரு பெண் என்று தெரிந்ததும் லத்திப்பின் உடல் மொழி மாறுகிறது.ஆரம்பத்தில் இருந்த கோபம்,வெறுப்பு,ஆவேசம் ,முரட்டுத்தனம் மாறி லேசான வெட்கம்,தயக்கம் ,அன்பு ,குற்ற உணர்ச்சி என்று பல பரிமாணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது லத்திப்பின் உடல் மொழி. லத்திப் மட்டுமல்ல ஒவ்வொரு கதாபாத்திரமும் வெளிபடுத்தும் உடல் மொழி துல்லியமாக கதை பேசுகிறது.
அந்த நேரத்தில் திடிரென்று  கண்காணிக்கும் அதிகாரிகள்  அங்கு வருகிறார்கள்.ஆப்கான் பணியாளர்களை கண்டால் அவர்களை சிறை பிடித்து விடுவார்கள் என்பதால், அங்கு உள்ள ஆப்கான் தொழிலாளிகள் எல்லாரும் ஓடி ஒளிகிறார்கள்.அவர்களில் ரஹ்மத்தை ஒரு அதிகாரி  கண்டுவிடவே பயந்து போன ரஹ்மத் ஓடத்தொடங்குகிறாள்.
ரஹ்மத்தை அதிகாரிகள் துரத்தி செல்வதை பார்த்த லத்தீப், அவர்கள் பின்னால் ஓடி அவர்களுடன் சண்டை இட்டு ரஹ்மத்தை தப்பிக்க விடுகிறான் .
அவள் அழுது கொண்டே தப்பி ஓடுகிறாள்.லத்திப்பை அதிகாரிகள் கைது செய்து அழைத்துப் போகிறார்கள் .
தன் நேசத்துக்குரிய பெண்ணை காப்பாற்றி விட்டோம் என்ற மனநிறைவில் அதிகாரிகளுடன் பயணிக்கிறான் லத்தீப்.

இந்த படத்துல மிக நுணுக்கமான முறையில் அரசியல் பேசியிருக்கிறார் இயக்குனர் மஜீத் மஜிதி .
ரஷ்ய தலிபான் பிரச்சனையால் ஆப்கானிஸ்தானில் வாழமுடியாத மக்கள் அகதிகளாக ஈரானுக்கு வந்து தங்கள் வாழ்க்கையை தொடருகிறார்கள்.
அவர்களுக்கு அந்த முகாம் தான் வாழ்க்கை.முகாமை விட்டு வெளியேறவோ வேறு இடத்தில் தங்கவோ அவர்களுக்கு அனுமதி இல்லை .அடையாள அட்டை இருந்தால் ஈரானில் தொழில் புரிய முடியும்.தொழில் செய்ய அந்த விஷேட அனுமதி தேவை.
ஆனால் வாழ்க்கைக்கு பணம் தேவையே ...அதனால் சட்டத்தை மீறி வெளியில் வந்து திருட்டுத்தனமாக வேலை செய்கிறார்கள்.
அவர்களின் வறுமையை சாதகமாக்கிய முதலாளிகளும் குறைந்த ஊதியத்தில் பணிக்கு அமர்த்துகிறார்கள்.
கண்காணிக்கும் அதிகாரிகளுக்கு பயந்து ஒவ்வொரு முறையும் ஓடி ஒளிந்து தங்கள் வாழ்க்கையை நடத்தும் கஷ்ட ஜீவியம் வேறு.
துயரமான இந்த அகதி வாழ்க்கையை இயக்குனர் திரையில் பதிவு செய்திருக்கிறார். எந்த விதமான பிரசார நெடியும் இல்லாமல் காதலோடு கூடிய (மறைமுக) அரசியலை அவர் திரைகதையில் நுழைத்த விதம் ஆச்சர்யப்பட வைக்கிறது .


கைதான லத்திப்பை விடுவித்து அழைத்து வருகிறார் கான்ட்ரக்டர் மெமோர்.மீண்டும் கட்டிட வேலைகள் ஆரம்பிகிறது .
ரஹ்மத் இல்லாத அந்த இடம் வெறுமையாய் இருப்பதை உணர்கிறான் லத்திப் . அவள் சென்ற இடங்களுக்கு சென்று அங்கிருக்கும் தனிமையை நுகர்கிறான்.
அவனால் எந்த வேலையிலும் முழுமையாக ஈடுபட முடியவில்லை .அவள் நினைவாக மாடிக்கு சென்று புறாக்களுக்கு உணவிடுகிறான்.
அங்கு விழுந்துகிடக்கும் அவளது தலைப்பின்னலை காண்கிறான் .அதை எடுத்து வைத்துக்கொண்டு அவளைப்பார்க்க அகதிகள் வாழும் பிரதேசத்துக்கு செல்ல ஆயத்தமாகிறான்.

பல இடங்களில் தேடி பார்கிறான் .ரஹ்மத் கிடைக்கவில்லை.நஜாப்பின் நண்பர் சுல்தானை சந்திக்கிறான் லத்தீப் .
அவரிடம் ரஹ்மத் பற்றி விசாரித்து அவள் பணிபுரியும் புறநகர் பகுதிக்கு செல்கிறான்.அவளுடைய நிஜமான பெயர் பரான் என்பதையும் அறிகிறான்.
மறைந்து நின்று தன் அன்புக்குரியவளைக் தேடுகிறான். கரை புரண்டு ஓடும் வெள்ளத்தின் மத்தியில் மரக்கட்டைகளையும் பாரிய கற்களையும் அகற்றும் அந்த கஷ்டமான பணியை பரான் செய்வதை பார்த்து மனம் வருந்துகிறான் .அவனால் அவள் நிலையை ஜீரணிக்க முடியவில்லை .
கண்கலங்கி செய்வதறியாது தவிக்கிறான்.
லத்தீப் இதுவரை காலமும் தான் உழைத்த பணத்தை மெமோரிடம் கேட்டு பெற்றுக்கொண்டு மீண்டும் பரான்  இருக்கும் ஊருக்கு வருகிறான்.
அத்தனை பணத்தையும் சுல்தானிடம் கொடுத்து எப்படியாவது நஜாப்பிடம் கொடுத்துவிடுமாறு சொல்கிறான்.ஆனால் அது தன் பணம் என்பதை அவன் கூறவில்லை.ஆனால் நஜாப், யாரோ முகம் தெரியாத ஒருவருடைய பணம் தனக்கு வேண்டாம் என்று வாங்க மறுத்துவிடுகிறார்.
சுல்தானுக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலை ஏற்படுகிறது . தன் மனைவியின் கண் மாற்று சிகிச்சைக்காக அந்த பணத்தை எடுத்துக் கொண்டு ஆப்கான் செல்கிறார். தன்னை மன்னிக்குமாறும் எப்பாடுபட்டாவது இக்கடனை திருப்பி தந்துவிடுவதாக கூறியும் லத்திப்புக்கு கடிதம் மூலம் தெரிவிக்கிறார்.
ஆரம்பத்தில் துயருற்றாலும் ஒரு நல்ல காரியத்துக்கு தானே தன் பணம் பயன்பட்டுள்ளது என்று தன் மனதை தேற்றிக்கொள்கிறான் லத்திப்.  
கால் உடைந்து கஷ்டப்படும் நஜாப்புக்கு கொஞ்சம் கொஞ்சமாக தான் சேர்த்து வைத்த பணத்தில் ஊன்றுகோல் ஒன்றை வாங்கி அவருடைய வீட்டில் வைத்து விட்டு யாருக்கும் தெரியாமல் வெளியேறுகிறான் லத்தீப் .

மஜீத் மஜிதியின் திரைப்படங்கள் சொல்லும் விடயங்கள் கோடானுகோடி வேதங்களை விட வலிமையானவை.
நல்லவர்களை மட்டுமே அவர் படங்கள் காட்சிபடுத்துகிறது.baran படத்திலும் எல்லோரும் நல்லவர்களே .
மெமோர் அன்பால் வேலை வாங்குபவர்.நஜாப் வறுமையிலும் தனக்கு உரிமை இல்லாத பணத்தை தொட மறுப்பவர்.
நட்புக்காக உதவும் உள்ளம் சுல்தானுக்கு உண்டு.குடும்பத்துக்காக தன் வாழ்வை பணயம் வைத்து கஷ்டப்படும் பரான் என்று ஒவ்வொரு கதாபாத்திரமும் அன்பும் மனித நேயமும் கொண்டவர்களாகவே வாழ்ந்துள்ளார்கள். 
நஜாப் கட்டுமான தளத்துக்கு வந்து மெமோரை சந்திக்கிறார் .ஆப்கான் செல்ல பணஉதவி கேட்கிறார் .
 கொடுக்க பணமில்லாத சூழ்நிலையில் மெமோர் இருக்க செய்வது அறியாமல் சென்று விடுகிறார் நஜாப்.அதை பார்த்த லத்தீப் அவருக்கு உதவ நினைக்கிறான் .இருந்த பணமெல்லாம் கொடுத்த பின்னர் அவனிடம் எதுவும் இல்லாத சூழ்நிலை .
இறுதியில் தன் வாழ்வுரிமைக்கான அடையாள அட்டையை விற்று பணம் திரட்டுகிறான். அந்த பணத்தை கால் உடைந்ததிற்கு நஷ்ட ஈடாக மெமோர் கொடுத்ததாக பொய் சொல்லி நஜாப்பிடம் கொடுக்கிறான்.

லத்தீப் செய்த உதவிகள் எதையும் தான் செய்ததாக சொல்லவே இல்லை.பிறர் மூலமாகவே கொடுக்கிறான்.
பரான் ஆப்கான் செல்லப் போவதை அறிந்து அதிர்சியில் குரல் நடுங்க தடுமாறும் இறுதி கட்டத்தில் கூட அவன் தன் காதலை சொல்லவில்லை.
எதிர்பார்க்காமல் வந்த காதல் எதையும் எதிர்ப்பார்ப்பதில்லை என்பதை உணர்த்துகிறது இந்த காதல் காட்சிகள் 
பணம் கிடைத்தால் எல்லோரும் ஆப்கான் செல்ல தயாராகிறார்கள் .லத்திப்பால் அந்த பிரிவை தாங்க முடியவில்லை .தன் உயிரிலும் மேலான காதலி பிரியப் போகிறாள் என்பதை அறிந்து வாடுகிறான். தன் வருத்தங்களை தனக்குளே புதைத்துக் கொண்டு ஆப்கான் செல்வதற்கு உதவி செய்கிறான்.பொருட்களை எடுத்து வைப்பதில் உதவுகிறான்.
அவனின் இதயம் முழுக்க காதல் நிரம்பி வழிந்தாலும் அதை சொல்ல வார்த்தைகள் அவனுக்கு கிடைக்கவில்லை.
அவள் தன் தன் கூடையை தவற விட அதிலுள்ள பொருட்கள் சிதறுகிறது.பரானும் லத்திப்பும் அதை பொறுக்கி கூடையில் போடுகிறார்கள்.
அப்பொழுது பரான் ஒரே ஒருமுறை லத்திப்பை பார்த்து புன்னகைக்கிறாள்  .
அந்த புன்னகைப்புக்கு பிறகு தன் முகத்தை பர்தாவால் மூடிக்கொண்டு வண்டியில் ஏறிவிடுகிறாள்.
பரான் ஒரே ஒரு தடவை லத்திப்பை பார்த்து புன்னகைக்கும் அந்த காட்சி ஆயிரம் கவிதைகளுக்கு ஒப்பான அற்புத காட்சி.
படம் முழுக்க பேசாத    பரானின் மௌனத்தின் அழகு அந்த ஒற்றை புன்னகையால் மேலும் பேரழகாகிவிடுகிறது 


பொதுவாகவே மஜீத் மஜிதியின் படங்களில் இறுதிக்காட்சி இயற்கை குறியீடுகளுடன் உயிரின் அம்சங்களுடன் அமைந்திருக்கும்.
இந்த படத்தின் இறுதி காட்சியும் அதுபோன்றே அமைந்துள்ளது 

தவிர்க்க முடியாத மென் சோகத்துடன் அவள் ஷு தடம் சேற்றில் பதிந்திருப்பதை காண்கிறான்.
அவள் சென்ற கால்தடம் சேற்றுக்குள் பதிந்திருக்க அதில் மழை நீர் பொழிந்து நிரப்ப ஆரம்பிறது.

பரான் என்ற பெயரின் அர்த்தம் மழை. அவன் மனதில் அவளின் நினைவுகள் மழையாய் பொழிகிறது என்பதை அழகியல் குறியீடாய் காட்டி கவிதையாய் நிறைவடைகிறது திரைப்படம்.

சொன்னால் தான் காதலா ? காதலை சொல்ல வார்த்தைகள் தேவை இல்லை வாழ்க்கை போதும் என்று கூறுகிறது திரைப்படம்.லத்தீப் மாதிரி  காதலுக்காக காதலிக்காக வாழ்வில் எத்தனையோ விடயங்களை செய்யும் எளிமையான ஷாஜஹான்கள் நம் பக்கத்தில் இருக்கிறார்கள்.
நாம் தான் அவர்களை கவனிப்பதே இல்லை ..நிஜமான காதலைப்போல அவர்களும் கவனிக்கப் படாமல் வாழ்கிறார்கள்.
எளியவர்களின் காதல் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வருகிறது அது எதையும் எதிர்ப்பார்ப்பதில்லை காதலைக் கூட !!! 



Comments

Popular posts from this blog

சட்டென நனைந்தது நெஞ்சம்

The Clue:4th Period Mystery