Traveling on one leg




எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றி தரவுகளோ தகவல்களோ  தெரியாமல் பார்க்கின்ற திரைப்படங்கள்
நம்மை நெருங்கி மனதில் ஆழ ஊடுருவி நுழைவது
ரசனையான அனுபவம்.

Traveling on one leg சமிபத்தில் அத்தகைய நுண் அனுபவத்தை தந்த திரைப்படம்.

1985 இல் ரோமானியா -ஜேர்மனி இரண்டு நாடுகளும்  அரசியல் ரீதியாக பிரிந்த நேரத்தில்
தன் இழந்த காதலை தேடி புறப்படும் பெண்ணின் அக உணர்வுகளை
படம் சித்தரிக்கின்றது.
 
இந்தப்படத்தை Avant-Garde படங்களின் காட்சிமுறை இப்படிதானே  என்ற எண்ணத்தோடு கடந்து விட முடியாது.
புற அழுத்தங்களால் சிதைவுறும் அக உலகத்தை காட்சிப்படுத்தல் அத்தனை எளிதல்ல. மனிதருக்கு மனிதர் சிந்தனை என்பது முற்றிலும் மாறுபட்டது.
நாடுகளுக்கு எல்லை கோடுகள் போட்டு பிரித்துவிடலாம்.
மனித மன ஓட்டங்களை எந்த வேலி கொண்டும் தடுத்துவிட முடியாது .

காதலும் ஏக்கமும் காமம் சார்ந்து மட்டுமே பயணிக்கும் என்ற ஒருதளப்பார்வை ஆழமற்றது.
அன்பையும் பற்றுதலையும் தேடி அலைகின்ற மனம் அதற்குள்ளே தனது
அடையாளத்தையும் தேடிக் கொண்டே இருக்கும்.
எதை நாம் அதிகம் நேசிக்கின்றோமே அதையே அதிகம் வெறுக்கவும் விலகவும் செய்வதன் பின்னணியில் சிதைவுறும் மனம் தவிர என்ன காரணம் இருக்கப் போகிறது ?

படங்களை கத்தரித்து மறு உருவம் செய்யும் அவளது செய்கைகள்
அக உலகத்தின் மாறுதல்களையே முன்னிறுத்துகின்றன.
எண்ணங்களை உருமாற்றுவதன் மூலம் தன்னை தன்னிடமிருந்தே மீட்க முயற்சி செய்யும் அக உலக குழப்பங்களை காண முடிகின்றது.

திரைப்படங்களின் Aspect ratio என்பது காட்சியின் தன்மையையும்  அதன் படைப்புலகத்தினையும் தீர்மானிக்கும் விடயங்களில் ஒன்று. இந்தப்படத்தின் aspect ratio வை மிக குறுகியதாக வைத்ததன் மூலம்
தேசங்களை  தபால் அட்டையில் ஒட்டப்பட்ட முத்திரையின் தோற்றத்திற்குள்ளே  உள்ளடக்கி  விடுவதை போல முத்திரை போன்ற  சட்டகத்துள் அடங்கிப்போன  அவளது உலகத்தை உணர்த்த
கட்டமைத்ததைபோன்ற  எண்ணம் எனக்கு உருவானது.

தனிப்பட்ட முறையில் என் மனதிற்கு நெருக்கமாகி ஏதோ ஒரு நிறைவான அனுபவத்தை தந்தது இந்த திரைப்படம்.
எப்போதும் நான் நம்புவதையே படமும் இறுதியில் உணர்த்தியது.

அன்பின் எல்லைக்கு  வெறுமை என்பதே மறுபெயர் .







Comments

  1. நண்பரே,

    தங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிவு இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ்US இல் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.
    https://www.tamilus.com

    – தமிழ்US

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி :) ... பகிர்கின்றேன்

      Delete

Post a Comment

Popular posts from this blog

கேள்விகளைத்தேடும் பதில்கள்!

The Shawshank Redemption