இதே நாளில் ...

உலகின் கிழக்கு கடலின் ஒரு தீவில் வசித்த எனக்கும் மேற்கு கடலின் மறு தீவில் வசித்த உனக்கும் அறிமுகம் இதே நாளில் ..... துயரும் வலியும் பெருகிய தருணத்தில் நான் தனிமையும் அமைதியும் நிரம்பிய நிலையில் நீ பேரன்பின் பிணைப்பில் சந்தித்துள்ளோம். இந்த ஓராண்டில் உனக்கும் எனக்கும் வாழ்க்கை நிறையவே மாறியிருகின்றது. இருவரின் தேடல்களும் கனவுகளும் வேறுவேறு நமது உலகங்கள் எப்போதும் மாறுபட்டவை அதில் முரண்பாடுகள் எண்ணற்றவை உனக்கும் எனக்கும் பொதுவில், மனிதர்கள் நிறையவே வந்து போயிருகின்றார்கள் நமக்கான கண்ணீரும் புன்னகையும் சில பக்கங்களை அதிகரித்திருகின்றது நமக்குள் தீர்க்கப்படாத கேள்விகள் கோப்பையில் எஞ்சியிருக்கின்றன சண்டையிட்டு விவாதிக்க இன்னும் நேரம் மிச்சமிருகின்றது பயணிக்க வேண்டிய சாலைகள் காத்திருக்கின்றன நமக்குள் பகிர்தலின் ஆழமும் அன்பும் ஒரு எரிமலையின் தீகொண்ட நீர் போல சுரந்து தகிக்கின்றது எல்லா தேசத்தின் விடியல்களுக்காகவும் நட்சத்திரங்களை உறங்கவைக்க நமது மௌனத்தின் இசை மெலிதாக ஒலித்து பரவட்டும்