CZ12
தமிழில் அதிரடி சண்டைக் காட்சிகள் கொண்ட படம் என்ற பெயரில் வெளியாகும் படங்களை பார்த்தால் எரிச்சல் தான் வரும் . கோமாளித்தனங்களை சண்டை என்றும் சவுண்ட் எபெக்ட்களுடன் வெட்டு குத்துகளை அதிரடி என்றும் கூறும் போது எரிச்சல் மேலிடாமல் என்ன செய்யும் ?
எப்பொழுது புருஸ்லி ,ஜாக்கி சான் படங்களை பார்க்க ஆரம்பித்தேனோ அப்பொழுதே எரிச்சல் நீங்கி சண்டை மீது ஒரு மரியாதையை கலந்த பற்று ஏற்பட்டு விட்டது .
ரத்தம் கொட்டும் வன்முறை இல்லாத சண்டையை ஜாக்கியின் படங்களில் பார்க்க நேர்ந்தது .
நகைச்சுவையுடன் அந்த காட்சிகள் நகர்ந்து செல்லும் விதம் நேர்த்தியாக இருக்கும்.
குறித்த காட்சியின் போது சண்டை போடும் சூழல்நிலையில் பக்கத்தில் இருக்குற பொருட்களை பயன்படுத்தி சண்டை போடும் அழகை ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சியில் பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறேன் .
ஜாக்கி டூப் போடுவதில்லை என்று தெரிந்த போது ஜாக்கி மீதான அன்பு அதிகரித்தது .
படம் முடிந்ததும் படத்துக்காக ஜாக்கி பட்ட கஷ்டங்களை பார்க்கும் போது மரியாதைக்குறிய நடிகனாக மாறிப் போனார் .
சிறுவயதில் ஜாக்கி படங்களின் சண்டைக் காட்சிகளை பார்த்து விட்டு பொருட்களை அதே போல தூக்கி வீசி உடைத்திருக்கிறேன் ;கை கால்களை ஆட்டி அடிபட்டுக்கொண்டுள்ளேன் .
எனக்கு மட்டுமல்ல ஜாக்கி படங்களை பார்க்கும் எல்லாருக்கும் இப்படியான அனுபவம் நிச்சயம் இருக்கும் :)
எத்தனையோ ஜாக்கியின் படங்களை பார்த்திருக்கிறேன் .கவலை இல்லாமல் கடக்கும் அந்த பொழுதுகள் சுவாரஸ்யமானவை .
CZ 12 ஜாக்கியின் இறுதிப்படம்
ஜாக்கிசான் படங்கள் என்றாலே அதற்கு தனி மரியாதை தனி வரவேற்பு இருக்கும்.அவரின் திரையுலக வாழ்வில் இறுதிப் படம் என்ற அறிவிப்புடன் வெளியானதால் படம் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது.
ஜாக்கி புராதன பொக்கிஷங்களை திருடி விற்பவர்.
அவர் பணிபுரியும் கம்பனி, உணமையான பொருட்களைப் போலவே போலிப் பொருட்களை செய்து ஏலத்தில் விற்று லாபமிட்டுகிறார்கள் .
சீன அரண்மனையில் போரின் போது எடுத்துவரப்பட்ட 12 சைனீஸ் சோடியாக் வெண்கல சிலைகளில் நான்கை மட்டும் வைத்திருக்கும் அந்த கம்பனி மிகுதியுள்ள சிலைகளை கண்டுபிடிக்க சொல்லி ஜாக்கியிடம் கூறுகிறார்கள்.
அதே சமயம் புராதன பொருட்கள் அந்தந்த நாட்டுக்குரிய பொக்கிஷங்கள் அதை உரிய நாட்டிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஒரு பெண் போராடுகிறாள் .
அந்த பெண்ணை வைத்தே ஜாக்கி தன் குழுவினருடன் எப்படி அந்த பொருட்களை கண்டுபிடித்தார் ? அதை தன் கம்பனிக்கு கொடுத்தாரா ?இல்லை அரசாங்கத்திடம் ஒப்படைத்தாரா என்பதே படத்தின் கதை
Screen Presence என்பது எல்லோருக்கும் வாய்த்துவிடாது.அது ஒரு வரம் .ஜாக்கிக்கு அந்த வரம் உழைப்பால் கிடைத்திருகிறது .வழக்கமான கதையில் வழக்கமான ஜாக்கி .ஆனால் ஒவ்வொரு சண்டைக் காட்சியிலும் நம்ப முடியாத அசைவுகள் .
அறிமுக காட்சியில் ஆட்டோமாட்டிக் ட்ராலி யாக மாறி அவர் போடும் சண்டைக்காட்சி அபாரம் .ஒவ்வொரு சண்டைக் காட்சியிலும் ஜாக்கி பிரமிக்க வைக்கிறார் .
இயக்குனர் ,தயாரிப்பாளர் ,பாடகர் என்று 15 பொறுப்புக்களை ஏற்றுள்ள ஜாக்கி இந்த படத்தோடு ஓய்வு பெறப் போகிறார் என்பதால் சகல விடயங்களையும் இந்த படத்தில் தந்து மிரட்டியிருக்கிறார் .இந்த வயதிலும் உடலை வளைத்து அவர் போடும் சண்டையை பார்க்கும் போது ஏக்கம் தான் வருகிறது .
laura weissbeckerநகைச்சுவைக்காக பயன்பட்டிருக்கிறார் .
simon ஆக நடித்திருக்கிறார் kwon sang woo .ஜாக்கியுடன் வரும் வேலை மட்டும் தான் இவருக்கு .மற்ற அனைவருமே தேவைக்கேற்ப வந்திருகிறார்கள் .படம் முழுக்க ஜாக்கி தான் .
ஜாக்கி தவிர்த்து ஒரு நல்ல விஷயமும் படத்தில் இருக்கிறது .ஒரு நாட்டின் பொக்கிஷங்கள் உரிய நாட்டுக்கே மீள் கையளிக்கப் பட வேண்டும் என்ற சமுக செய்தியை படம் கூறுகிறது .
உண்மைதான் ஒவ்வொரு அரசாங்கமும் அதை பின்பற்ற வேண்டும் .
CZ12- வழக்கமான கதை வழக்கமான ஜாக்கி ...
மறுபடியும் ஜாக்கி நடிக்க வருவார் என்ற எதிர்ப்பார்ப்பு எஞ்சியிருகிறது :)
நம்புவோமாக
Comments
Post a Comment