அன்பு
கோவிலுக்குள் இருக்கும் கல்மண்டபத்தில் தான் சக்தி இருக்கிறான் என்று ஊரிலுள்ள அனைவருக்கும் தெரியும் .ஆனால் அவனுக்குள் தான் கல்மண்டபம் இருகின்றதென்று அவனை அறிந்த பரிமளாவுக்குத்தான் தெரியும் .
******
'பரிமளா ....' என ஒரு முறை அவனது உதடுகள் துடித்தன .
அவன் பக்கத்திலிருந்த தூணை தொட்டான் . அதில் செதுக்கப்பட்டிருந்த பெண் உருவம் பரிமாளாவை ஞாபகப்படுத்தியது.அருகில் சென்று மெல்ல முகர்ந்து பார்த்தான் .பரிமளாவின் வாசம் வீசியது .அந்த தூணிற்கடியில் தலைவைத்துப்படுத்தான் பரிமளாவை நினைத்துக் கொண்டு.
அன்றொரு நாள் -
காட்டில் பிடித்து வந்த ஒரு முயல் குட்டியை பரிமளாவிடம் கொடுத்தான் சக்தி.
அது பரிமளாவின் மடியில் போய் அமர்ந்து கொண்டு பரிமளாவின் கை விரல்களை கடிக்கத்தொடங்கியது .
''இது எப்படி இருக்குது சக்தி ?''
''உன்னை மாதிரியே அழகா இருக்கு பரிமளா .ரெண்டு காது வெள்ளை வெளேர்னு முடி ,ரெண்டு பெட்டிப் பல்லு ,நீட்ட மீசைனு அழகோ அழகு ''
''அப்படியா ....நெசமாவா சொல்லுற ''ஆச்சர்யத்தில் அந்தக்குருட்டு விழிகள் விரிந்தன .
அடுத்தநாள் பரிமளா கல்மண்டபத்தில் அழுது கொண்டிருந்தாள் .அவன் கொடுத்த முயல்குட்டியை பரிமளாவின் பெரியம்மா குழம்பு வைத்து விட்டாளாம் .நேற்று முயல் சாப்பிட்ட கரட் துண்டின் சிறிய பகுதியை மார்போடு கட்டிக்கொண்டு '' சக்தி ...சக்தி ...''என்று விம்மி விம்மி அழுதாள்.முயலுக்கும் இவன் பெயர் தானாம் .
அது பெட்டை முயல் என்று பரிமளாவிற்கு அவன் சொல்லவில்லை.இப்போது சொல்லவும் முடியவில்லை.
******
அன்று அதிசயமாக வானம் இருட்டியிருந்தது .மழை வரும் நேரத்தில் பரிமளாவும் சக்தியும் கல்மண்டபத்திலிருந்து பேசிக் கொண்டிருந்தார்கள் .
''சக்தி ...''
''ம் ''
''உங்காத்தா ஒனக்கு பொண்ணு பாக்குறாங்களாமே...''
''ம்''
''இனிமே என்னைய பாக்க வரமாட்ட அப்படிதானே ...''
''ஏன் ...பரிமளா அப்படி சொல்ற ''
''நீ என்னைய பாக்க வாறது எல்லாருக்கும் தெரியும் .ஆனா நாளைக்கி ஒன்ன கட்டிக்கப் போரவளுக்குத் தெரிஞ்சா சும்மா இருப்பாளா ?''
''வேணும்னா நானே ஒன்ன கட்டிக்கவா ?''
சக்தி சொன்னதைக் கேட்ட பரிமளா விரக்தியாக சிரித்தாள் .அவள் சிரிப்பதை அர்த்தம் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான் சக்தி .
''சக்தி எனக்கு வயசு 32.இப்பத்தான் ஒனக்கு 17.ஒரு குருட்டு நொண்டிப் பொண்ண எந்த மாமியாரும் மருமகளா ஏத்துக்க மாட்டாங்கடா ''என்று சொல்லும் போதே அவள் கண்ணில் கண்ணீர்த் துளிகள் எட்டிப் பார்த்தன .
******
''ஏண்டி குருட்டு நொண்டிக் கழுத ...எம்புட்டு கொழுப்பிருந்தா எம் மவனுக்கு இந்த வீட்டில எடமில்லன்னு சொல்லுவ ....நாதாரி '' பரிமளாவின் பெரியம்மா போட்ட கூச்சலில் பரிமளாவின் ஓட்டு வீட்டில் ஊர் மக்கள் கூடத் தொடங்கினார்கள் .
'' ஆமா ...நான் தான் சொன்னேன் .இது என்னோட வீடு .என் ஆத்தாவும் ஐயாவும் கட்ன வீடு இதுல எந்த பரதேசிக்கும் எடமில்ல ...'' என்று பரிமளா கூருவதற்குள் பெரியமாவின் மூத்த மகன் கருப்பு சாமி ஓங்கி மிதித்தான் பரிமளாவை .
அடித்த அடியில் இடுப்பெலும்பு முறிந்தது போலிருந்தது பரிமளாவிற்கு.
இருந்தும் அந்த வலியெல்லாம் தாங்கிக் கொண்டு தட்டுத் தடுமாறி எழும்ப முயற்சிக்கும் போதே இன்னுமொரு உதை விட்டான் கருப்புசாமி .
''ஏண்டி ஒனக்கு அந்தளவுக்கு கொழுப்பேறி போச்சா ?..குருட்டு நொண்டிக் கழுத இருடி ஒனக்கு வைக்கிறேன் ஆப்பு '' என்று சரமாரியாக திட்டி விட்டு பெரியம்மாவும் அவள் மகன்களும் வெளியேறிவிட்டார்கள் அந்த ஓட்டு வீட்டை விட்டு .
******
''ரொம்ப வலிக்குதா ?'' பரிமளாவின் இடுப்பில் தைலம் தடவிக் கொண்டே கேட்டான் சக்தி .
அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் ''சக்தி ..''என்று அழைத்தாள் .
''ம் ..சொல்லு பரிமளா ''
''ஏண்டா யாருக்குமே என்மேல இல்லாத அன்பு ஒனக்கு மட்டும் ..''
''தெரியல பரிமளா '' என்று கூறிவிட்டு மருத்துவிச்சி கொடுத்த கசாயத்தை பரிமளாவிற்கு கொடுத்தான் .
அடுத்த நாள் -
ஊரே திரண்டு வந்தது பரிமளாவைப் பார்க்க .வாயில் நுரை தள்ளி குற்றுயிரும் குறையுயிருமாய் இருந்த பரிமளாவைப் பார்க்க விழுந்தடித்து ஓடி வந்தான் சக்தி .பக்கத்தில் பெரியமாவும் அவள் மகன்களும் என ஏகப்பட்டோர் அமர்ந்து அழுதார்கள் பொய்யாய் .
பரிமளாவுக்கு மட்டும் தெரியும் கசாயம் என்று விஷம் கொடுத்து விட்டார்கள் என்று .ஆனால் சொல்ல முடியவில்லை .சக்தியின் கண்களில் கண்ணீர் வழிந்தது .அவளது கைகள் ,சக்தியின் கண்களில் வழிந்த கண்ணீரை தட்டுதடுமாறி துடைத்தன .
உயிர் மூச்சை இழுத்து விட்டு ''சக் ..தி '' என்றாள் .
அதுதான் அவளின் இறுதிக் குரல் .
அழுதான் அழுதான் கண்ணீர் வற்றிப் போகும் வரை அழுதான் .அவன் வாயிலிருந்து ''பரிமளா '' என்ற வார்த்தையைத் தவிர எதுவுமே ஒலிக்கவில்லை.
******
அவன் அந்த தூணைக் கட்டிக் கொண்டான் .அழுதான் .அழைத்தான்.ஏதோவெல்லாம் எண்ணினான் .ஆனால் பரிமளா மட்டும் வரவில்லை அவளின் நினைவுகள் வந்து போயின .அவனுக்காக ,அவனின் அன்புக்காக .
*
பின் குறிப்பு :-
10 வருடங்களுக்கு முன் ஆனந்த விகடனில் ஒரு கதை வெளியானது.அந்த கதையை படித்த பாதிப்பில் எழுதியது இந்த சிறுகதை .
கதாபாத்திர பெயர்களையும் சில சம்பவங்களையும் மாற்றி அதன் வடிவத்தை வேறு விதத்தில் கட்டமைத்து எழுதியிருந்தேன்(எழுதப்பட்ட ஆண்டு -2004).
பெயர் மறந்து போன அந்த எழுத்தாளரிடம் (அவர் அனுமதியின்றி கதையை எடுத்து எழுதியதற்காக )மன்னிப்பு கேட்டுக் கொள்வதோடு ( இந்த கதைக்கு முதல் பரிசு கிடைத்தது) நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் .
நெகிழ வைத்த கதை
ReplyDelete:) நன்றி சகோதரி ...
Delete(எல்லாப் புகழும் பெயர் மறந்து போன அந்த எழுத்தாளருக்கே ...)